Saturday, 1 December 2018

உயிருள்ள சுருக்குப்பை!

மூப்பிடம் கைதாகி - நரை
சூடி, கோல் ஊன்றி
அழையா விருந்தாளி 
எமனை எதிர்நோக்கி
விடுதலை பெற காத்திருக்கும்
உயிருள்ள சுருக்குப்பை!

ஆட்டம் ஆடும் வரை
ஓட்டம் ஒடுங்கும் வரை
சட்டைப்பை நிறையும் வரை
பூமிக்கு பாரமில்லை

நடை தளர்ந்து
ஓய்ந்து அமர்ந்தாள்
கட்டிலின் கால்களும்
கேலி பேசும்
கைகள் நடுங்க
கண்ணொளி மறைய
தானே தனக்கு
பாரமாகிப் போகும்

பிள்ளைகளின் ஒதுக்கம்
உறவுகளுக்கு ஒவ்வாமை
சீர் குலைவின் ஒப்புவமை
தனிமையின் ஒப்பனை

"யார் தந்தது எமனுக்கு
'தருமன்' என்ற பட்டத்தை?
மாற்று குறையாதவன் தருமன்!
கடமைத் தவறாதவன் தருமன்!
கிழப்பருவம் எய்தி, நான்
கிடப்பதன் அர்த்தம் என்ன?
அள்ளிச் செல்லாமல், எமனும்
எங்கோ அலைவதும் என்ன?"

வாழ்வு சிறக்கக் கல்வி
இளமை இனிக்கக் காதல்
பெயர் சொல்ல பிள்ளை
வறுமை ஒழிக்க செல்வம்
பசியில் சோறிட வேண்டும்
மட்டானால் தேனும் கசக்கும்
வாழ்வின் தேவைகள் வேண்டும்போது
தட்டினால் ஆர்வம் தீரும்
நேரத்தே வராது போனால்
மரணமும் மரியாதை இழக்கும்!!

No comments:

Post a Comment