அவன் களிமண் கடவுள். அவனது விரல்களின் சொல் கேட்டு, களிமண் சகதி பானைகளாய் ஒய்யார வளைவுகளோடு செழித்து நிற்கும். எத்தனை பானைகள் வடித்தாலும் ஒவ்வொன்றும் மற்ற ஒன்றோடு ரெட்டைப் பிறவியாய் பிசிறு வேறுபாடின்றி ஒன்றுபோல் இருக்கும். சிறிய வகை ஒன்று, பெரிய வகை ஒன்று - இரண்டே வகைகளின் ஜித்தன். அன்னையின் ஜாடையில் பிள்ளையைப் போல், சிறிய பானைகள், பெரியவைகளின் பால பருவம்.
இவனும் களிமண் கடவுள் தான். இவனது விரல்கள் இவன் சொல் கேட்பது அரிது. பானைகளை வடிக்கிறான்... வடிக்க முயல்கிறான்… ஏனோ ஒவ்வொன்றும் விநோதமாக வடிவெடுத்து நிற்கிறது, கண்களை மூடிக்கொண்டு இடக் கையால் தீட்டிய ஓவியம் போல்.
அவனது பானைகள் ஐந்து காசு என்றாலும், அள்ளிச் செல்ல ஜன அலை மோதும். தரத்தில் ஒத்திருந்தாலும் இவனது நெளிந்த பானைகள் இரண்டு காசு தான். பேரம் பேசினால் ஒரு காசு தள்ளுபடி செய்வான்.
எவனோ ஒருவன் வந்தான். அவன் வீட்டு திண்ணையில் சென்றமார்ந்தான். அலட்டிக்கொண்டான் அவன். தனது மூட்டைகளை எடுத்துக்கொண்டு இவன் வீட்டு திண்ணைக்கு இடம் பெயர்ந்தான். அரைக் குவளை கஞ்சி கொடுத்தான் இவன். என்றும் போல் இன்றும் பரந்தாமனை எண்ணிக்கொண்டு உறங்கிப்போனான், நாளையாவது சந்தையில் நெளிந்தவைகளுக்கு வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு.
விடியற்காலை. அவன் எழுந்தான், சந்தையில் கடை விரிக்க, பானைகளை எடுத்துச் சென்றான். இவன் எழுந்தான். பராந்தாமனை எண்ணினான். திண்ணையில் உறங்கும் வழிப்போக்கனுக்காக இரவு பத்திரப்படுத்திய தனது பங்கு கஞ்சியை எடுத்துவந்தான். காலி திண்ணை வழிப்போக்கன் அவன் வழி சென்றுவிட்டதைக் கூறியது. நெளிந்த பானைகள் ஒவ்வொன்றும் வானவில் வர்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு சிரித்தபடி, வழிப்போக்கனின் நன்றியைக் கூச்சலிட்டன. அவனது பானைக்கூட்டத்தில், முதல் பானை விற்றது பத்து காசிற்கு, இறுதிப்பானை விற்கப்பட்டது இருவது காசிற்கு. மடியில் சில்லறை குலுங்க, இவன் சிரித்துகொண்டு வந்தான், பரந்தாமனை எண்ணியபடி!!
No comments:
Post a Comment