Friday, 7 August 2015

கனவு

விடியற்காலை. சூரியன் மெல்ல எட்டிப் பார்க்கும் தருணம். அன்றலர்ந்த மலர் போல, விழித்தெழுந்தாள் கோதை.  வாசலில் அழகிய வர்ண கோலமொன்று வரைந்தாள். தனது பெயரைப்போல, கண்ணனின் கோதையாய் காட்சி அளித்தாள். அவளின் கருநீளக் கூந்தலும், அதில் தவழும் மல்லிகையும், தாழம்பூ குங்குமமும், மஞ்சள் வர்ண சேலையும், கலகலக்கும் வளையல்களும், கொஞ்சும் கொலுசும், ஷக்தி ரூபமாய் ஜொலித்தாள்.

கீர்த்தனைகள் சில பாடி, கடவுளை வணங்கினாள். தனது பூரண வாழ்கைக்கு நன்றிகளைக் கூறுவதைத் தவிர, அவளிடம் கோரிக்கைகள் ஒன்றும் இல்லை. 

அமைதியாய் தூங்கும் தனது கணவனை, எட்டி நின்று ரசித்தாள். கண் விழித்தவன், அவளை அருகில் வரச்சொல்லி சிமிஞை செய்தான். நாணமுற்று அவள் விலகிச்  சென்றாள். 

பெருமாளின் பாற்கடல் அமுதத்தினை, கைகளில் அப்பிக்கொண்டாளோ என்னவோ, அவள் படைக்கும் உணவு, அவ்வளவு சுவை. தனது குழந்தைகளை அலங்கரித்துப் பள்ளிக்கு அனுப்பினாள். கணவனையும் அன்போடு வழி அனுப்பினாள். வீட்டுப் பணிகள் முடிந்து சற்று கண்ணயர்ந்தாள்.

"ஏய் எழுந்திரு", என்று கூறி தலையில் ஒரு கொட்டு விழ, திடுக்கிட்டு எழுந்தாள் கோதை. " என்ன பகல்லயே தூக்கம் வேண்டி இருக்கு? ஒடம்பு பெருத்து, பொழப்பு கெடவா? லிப்ஸ்டிக்க தூக்கலா போட்டுகினு மொத ரூம்க்கு போ. கஸ்டமர் வேய்டிங்கு. ம் சீக்ரம்", என்று கர்ஜித்துவிட்டுச் சென்றாள் ராணி அக்கா.

கவிதையாய் இனித்தவை எல்லாம், வெறும் கனவு தான் என்று உணர்ந்தாள். தன்னை அலங்கரித்துக்கொண்டு, அந்த அறைக்குச் சென்றாள், தனது தற்காலிகக் கணவனை சல்லாபிக்க.

No comments:

Post a Comment