அழகிய சிறு வீடு
எனக்கென்று ஒரு கூடு
வியர்வையின் பெருங்குவியல்
எதிர்காலப் பூப்பந்தல்
நீண்டகண்ட பிரபஞ்சம்
அதில்,
சிறிதாய் எனக்கொரு தஞ்சம்
இன்றைய நிலையின் கண்ணாடி
எனது,
நாளைய விதியின் அச்சாணி!
மாளிகையின் மிச்சம்
மிச்சத்தின் எச்சம்
எச்சத்தில் ஒரு-கூறு
அதுவே என் வீடு!
என் வரலாற்றை ஏடுகளில் கோர்த்துவைப்பேன்
எனது கனவுகளைத் தூண்களிலே
சேர்த்துவைப்பேன்
முதுகொடியும் பணிச்சுமை பகலினிலே
முற்றத்தில் நிலாக்குளியல் இரவினிலே
மண்ணைக்கவ்வும் ஆண்டியாய் வீதியிலே
மகுடம் சூடா அரசனாய் என் வீட்டினிலே
இன்ப சாகரத்தில் ஓடம்
துன்ப விமோச்சன கூடம்
இஷ்ட தெய்வங்களின் மாடம்
துஷ்ட மதி கெடுக்கும் தடாகம்
அவளோடு சொர்கங்கள் காணுமிடம்
மனதின் சஞ்சலங்கள் தீருமிடம்
பிறந்த பிள்ளைக்குப் புது உலகம்
மறைந்த முன்னோருக்கு நினைவகம்!!
காலன் அள்ளிச் சென்றாலும்
உற்றோர் என்னை மறந்தாலும்
காலம் கடந்தும் வாழ்ந்திடுமே
என் பெயரை இவ்வீடு தாங்கிடுமே!!
No comments:
Post a Comment