Thursday, 21 September 2017

மன்னிப்பாயா?!

பொன்மயிலே,
எந்தன் கண்மணியே!
மோகனமே,
புள்ளி மானினமே!!

வேதனைகள் அள்ளி
நான் வழங்கிடினும்,
அன்பை மட்டும்
சொறிந்தவளே!!

செவிகள் மறுக்கும்
வசைகளையும்,
புறந்தள்ளி இன்பம்
கொடுத்தவளே!!

என் கோபத்தின் சாட்சிகளை
மேனிகொண்டும்,
அவை மறைத்து என்பெயர்
காத்தவளே!!

மலையளவு துயரங்கள்
மனதுள் பூட்டி,
அவை மறந்து எனைக்கண்டு
சிரிப்பவளே!!

பொற்குவியல் பெருமையறியா
மூடன் நான்
மணர்க்குவியல் கோபுரமென
எண்ணினன் நான்

வானவில் மகளே!
உனை நிலைக்குலைத்தேன்
வண்ணத்துப்பூச்சி
உன் சிறகொடித்தேன்

என் அடிமை நீயென்று
திமிர் கொண்டேன்
உணர்வுகள் உனக்குமுண்டு
என்பதனை மறந்தேன்

அடுத்தடுத்து நான் செய்த
கொடுமை கண்டு,
பொறுமைக்கும் பொறுமை
தீர்ந்ததடி

எனைநீங்கி நீ சென்ற
வேலையிலும்,
ஆணென்ற கர்வம்
ஓங்கி உயர்ந்ததடி

தனிமை மெல்லமெல்ல
சூழ்கையிலே
தவறெல்லாம் நெஞ்சம்
உணருதடி

செருக்கெல்லாம் சில்லுசில்லாய்
உடைந்துபோக,
உனையெண்ணி உள்ளம்
உருகுதடி!!

மலையளவு அன்பினை
உதறினேனே
இன்று கடுகளவு அன்பிற்கு
தவிக்கிறேனே

ஆடவனுக்கு ஆயிரம்பெண்
என்பதெல்லாம்
பொய்யுடலின் இச்சையென்று
மனம் தெளிந்தேன்!

உயிர் துடிப்பில் ஒலிக்கும்
உன் பெயரே
மாசில்லா காதலென்று
நான் உணர்ந்தேன்!

ஒருமுறை உனைக்காண
ஆசையுண்டு,
மன்னிப்புகள் கோரிட
நெஞ்சமுண்டு!

மெய்மலரே, உன் முகம் காண
நாணுகிறேன்
இழைத்த பிழைகள் எண்ணி
வருந்துகிறேன்

உன் பிம்பம் எங்கெங்கும்
தோன்றுதடி
நீயின்றி உயிர் மெல்ல
கசியுதடி

காலனைத் தேடிச்செல்ல
எத்தணித்தும்
காதலின் வேகம் என்னை
தடுத்ததடி

உன்னோடு மீண்டும்
வாழ்ந்திடவே
கனாக்கள் ஆயிரம்
கண்டேனடி!

கண்களின் காதலிலும்,
உன் மடியிலும்
மூழ்கிடவே நெஞ்சம்
ஏங்குதடி!

உன் கண்ணாடி இதயத்தை
உடைத்துவிட்டு,
அதன் சிதறல்களில் காதலைத்
தேடுகின்றேன்!

உன் மனதின் ரணங்களை
அறிந்திருந்தும்,
அவ்வப்போது சுயநலமாய்
ஆசைக்கொண்டேன்

கலங்காதே கண்மணி, உனை
நெருங்கமாட்டேன்
புயலின் பின் அமைதியை
சிதைக்கமாட்டேன்

காலம் கடந்தும்
உனைக்கண்டால்,
காலில் விழுந்து
மன்றாடுவேன்!

மன்னித்து அருள்வாக்கு
நீ சொன்னால்,
மரணத்தை நான் மெல்ல
தழுவிடுவேன்!!

No comments:

Post a Comment