மாசில்லா நிலவு நீ
நீரில்லா முகில் நான்
கலங்கரை விளக்கம் நீ
கடலில் தொலைந்த ஓடம் நான்
வீட்டுமுகப்பின் துளசி நீ
ஊரெல்லையின் பனை நான்
எவரும் காணா விசித்திரம் நீ
குலைந்து போன சித்திரம் நான்
கோயிலின் உச்சிக்கலசம் நீ
உன் நிழலேந்தும் அடிவாரம் நான்
ஊர் மத்தியில் தாமரைக்குளம் நீ
ஊர் எல்லையில் வண்ணாஞ்சால் நான்
குழந்தையின் சிரிப்பு நீ
சிரிக்க மறந்த சித்தன் நான்
விழியில் விளையாடும் கண்மணி நீ
விழியோரம் வழிந்தோடும் நீர்த்துளி நான்
விடியல் பொழுதின் கதிரொளி நீ
மாலை மங்கும் அடிவானம் நான்
கொள்ளிடத்து காவிரி நீ
கரையில் வாழும் புங்கை நான்
வண்ணத்துப்பூச்சியின் சிறகு நீ
காய்ந்த இலைச்சருகு நான்
உயிர் தரும் மழைத்தாரை நீ
பாலையின் கானல் நீரலை நான்
பாரதியின் கவிதைகள் நீ
நேற்றையதின நாளிதழ் நான்
படைப்பின் உச்சம் நீ
பகுத்தறிவின் மிச்சம் நான்
புத்தரின் ஞான உளறல் நீ
பித்தனின் ஈனக்குமுறல் நான்
காலம் கடந்த காதல் நீ
காலம் மறந்த கவிதை நான்
ஜனனத்தின் உயிர்த்துடிப்பு நீ
மரணத்தின் பிரதிபலிப்பு நான்
No comments:
Post a Comment