Friday, 31 July 2020

சீரக மிட்டாய் - சட்டையும், சீலையும்

 



அழுதபடி உறங்கிப்போனவள் தூங்கி எழுகையில் மணி நான்கு என்று காட்டியது. அரக்கப்பரக்க முகம் கழுவி, சேலையை சரி செய்து, பள்ளியிலிருந்து பிள்ளைகளை அழைத்துவர அவள் அறைக் கதவைத் திறக்க, வெளியே இரண்டு பிள்ளைகளும் அப்பாவோடு கார்ட்டூன் பார்த்தபடி கேக்கயும், வெஜிடபிள் பப்சையும் முழுங்கிக்கொண்டிருந்தன. மெல்ல நகர்ந்து அடுக்களைக்குள் செல்ல, மேடையின் மேல் அவளுக்காகவே காத்திருந்தது மல்லிகையும், அல்வாவும். பின்னிருந்து அணைத்தவன், அவள் கழுத்து மடிப்பில் முத்தம் வைத்து, "இனிமே காலைல டென்ஷன்ல உன்னை கண்டபடி திட்டமாட்டேன்" என்றான். காலையில் நடந்த யுத்தத்தை மறந்து சிரித்தவள், "தெரியாம உங்க சட்டையோட என் சீலைய மெஷின்ல போட்டு சாயமேறிடுச்சு, இனி அப்படி நடக்காது " என்றாள்.

சீரக மிட்டாய் - முதல் சம்பளம்





"எங்கமா உன் புருஷன்?" என்றான், முகம் கழுவியபடியே.
"அப்பா ரூம்ல படுத்திருக்காருடா" என்றாள், ஒரு துவாலையை நீட்டியபடி.
தாயின் கையைப்பற்றி இழுத்துச்சென்றவன், தந்தையையும் வம்படியாய் மற்றொரு கையில் பிடித்து இழுத்துக்கொண்டு பூஜை அறைக்குள் நுழைந்தான்.
"அப்பா, வெளியில யூ ஹேட் மீ, ஐ ஹேட் யூ'வா இருந்தாலும் மனசுக்குள்ள யூ லவ் மீ, ஐ லவ் யூ தான். புடிங்க என்னோட முத மாச சம்பளத்தை" என்றுவிட்டு சம்பளக் கவரை தந்தையின் கையில் திணித்தவன், சாஷ்டாங்கமாய் பெற்றோரின் காலில் விழுந்து வணங்கினான்.


Thursday, 30 July 2020

சீரக மிட்டாய் - ராஜ தந்திரம்!!




"மன்னா… மன்னா… பக்கத்து நாட்டு மன்னர் நாளை நம் மீது போர் தொடுக்க உள்ளாராம். காலை எழுந்து காளிக்கு படைத்துவிட்டு, படைகளைத் திரட்டிக்கொண்டு இங்கு வரவுள்ளதாக ஒற்றன் செய்தி அனுப்பியுள்ளான்."
"பயம் வேண்டாம் அமைச்சரே, நமது ஊர் எல்லையில் மத்தியானந்தா என்றொரு சாமியார் உள்ளார், அவரை மட்டும் அழைத்து வாருங்கள். வெற்றி நமக்கே!!"
"மன்னா?"
"அடேய் அமைச்சா, அந்த சாமியார் கூறினால் காலையில் உதிக்க வேண்டிய சூரியன் மதியம் உதிப்பானாம். அதனாலேயே அவருடைய பெயர் மத்தியானந்தா. நாளை மதியம் அந்த அண்டை நாட்டு ஹல்க் ஹோகன் எழுந்து, பல் துலக்கி, பால் பாயாசம் நைவேத்தியம் செய்துவிட்டு, படைகளைத் திரட்டி வருவதற்குள் நாம் அவனின் கோட்டையை சுற்றி வளைத்து, அவனை சிறையெடுத்துவிடுவோம்."
"ஆஹா மன்னா, என்ன ஒரு ராஜ தந்திரம்!!"

Tuesday, 28 July 2020

சீரக மிட்டாய் - டைகர்

 



ஆர்.பி. நகர், குறுக்குத் தெருவில் தீயணைப்பு வீரர்கள் வரும் முன்னே, குடிசைகள் அனைத்தையும் முழுங்கிவிட்டு, தாண்டவமாடியது, கட்டுக்கடங்கா பெருந்தீ. 

பொன்னாத்தாளின் கண் முன்னே அவளது குடிசை மெல்ல மெல்ல தீக்கிரையாகிக் கொண்டிருக்க, பட்டென அவள் கைப்பிடியை விடுத்து குடிசைக்குள் ஓடினான், அவளது ஒரே மகன், ராசய்யா.

துடிதுடித்துப்போனவள் குடிசையை நோக்கி ஓட, சுற்றம் அவளை தடுத்து நிறுத்தியது.

கடவுளென வந்த தீயணைப்புப் படை ரட்சகர்கள், நீர் பொழிந்து தீயினை அணைத்தனர்.

பொன்னாத்தாளின் குடிசைக்குள்ளே, ஒரு மூலையில் நனைந்தபடி ராசய்யா முடங்கியிருக்க, அவனது சின்னஞ்சிறு விரல்களில் அடைகாக்கப்பட்டிருந்தது, டைகர் நாய்க்குட்டி.

சீரக மிட்டாய் - குறுஞ்செய்தி




கடந்த அரை மணி நேரத்தில் நூறாவது முறையாக, தன்னவள் அனுப்பிய குறுஞ்செய்தியைப் படித்தவனுக்குக் கட்டுக்கடங்கா சந்தோஷம் பொங்க, வண்டியை விரட்டு விரட்டென விரட்டி, வீடு வந்து சேர்ந்தான். 

வழக்கமாக வீடு திரும்பும் நேரத்தை விட இன்று முன்னமே வந்தவனைக் கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்தவள், அவனது மோகனப் பார்வையில் நாணி, மேஜையின் அருகே சென்று நின்றுகொண்டாள்.

உடையைக் கூட மாற்றிடத் தோணாமல், அவளை விழியால் வருடியபடியே மேஜையில் வந்தமர்ந்தவனின் ஆவலை உணர்ந்தவள், நொடி தாமதிக்காது அவனது தட்டில் உணவைப் பரிமாறினாள்.

'தினமும் ரவை உப்புமா தானா என்று அலுத்துக்கொள்ளும் என் அன்பு கணவருக்காகக் காத்திருக்கிறது நளபாகம்!!' என்று அவள் அனுப்பிய குறுஞ்செய்தியை மீண்டும் ஒருமுறை படித்தவனுக்கு, கண்கள் குளமானது.

விழி தப்பிய நீர் மணிகள், சிந்திச் சிதறி தொலைந்து போயின, தட்டில் பரிமாறப்பட்ட சேமியா உப்புமாவில்… 

- அர்ச்சனா நித்தியானந்தம்

Monday, 27 July 2020

சீரக மிட்டாய் - பூமராங்




"சார், ரெண்டு நாள் என்னோட ஓவியங்களை உங்க கேலரில பார்வைக்கு வைக்க வாய்ப்பு கிடைச்சா, என் வாழ்க்கையே தல கீழ மாறிடும்… ப்ளீஸ்…"

மன்றாடுபவன் மீது இரக்கப்பட்டு, அந்த அரங்கத்தின் தலைமை நிர்வாகியிடம் அழைத்துச்சென்ற அரங்கத்தின் மேலாளர், "உங்களுக்கு ரெண்டு நிமிஷம் தான் அப்பாய்ண்ட்மெண்ட்" என்றார்.

"வாக்கு கொடுத்துட்டேன்னு சொல்லி கண்ணு தெரியாத உன்னை என் தலையில வலுக்கட்டாயமா கட்டி வச்சா, வேற வழியில்லாம நான் அனுசரிச்சு குடும்பம் நடத்துவேன்னு  எங்கப்பா நினைச்சாரு. என் ஓவியங்கள ரசிக்கத் தெரியலனாலும் பரவால்ல, ஆனா பார்க்கக் கூட முடியாத நீ எனக்குத் தேவையில்லை. இன்னும் ரெண்டு நிமிஷத்துல இந்த விவகாரத்து பேப்பர்ல கையெழுத்து போட்டுட்டு, வீட்டை விட்டு போ" என்று பத்து வருடங்களுக்கு முன் அவளிடம் அவன் கூறியது, இன்று அவளை அரங்கத்தின் தலைமை நிர்வாகி இருக்கையில் கண்டதும் நினைவிற்கு வந்தது.

Sunday, 26 July 2020

சீரக மிட்டாய் - பரிசம்




"ஏலே பாண்டி, உன் அக்கா மவ, என் அழகு ராசாத்தி, இந்த வீட்டு மகராசி செண்பகம் வயசுக்கு வந்துட்டாளாம்…" என்று தாயாரின் குரலைக் கேட்டதும் வயக்காட்டில் வேலையாய் இருந்தவன், போட்டது போட்டபடி விட்டுவிட்டு பரிசம் போட வரிசைக் கட்டிக்கொண்டு, அக்கா வீட்டிற்கு சொந்த பந்தங்களோடு கிளம்பிச் சென்றான்.

முறை மாமன் தான் என்ற போதும், ஒரு முறை கூட ஏறெடுத்தும் பார்க்காதவள், ஓர் வார்த்தை கூட பேசாதவள் மீது, ஏனோ அவனுக்குக் கிறுக்கு!!

"ஏலே மாப்ள, தை பொறந்து கல்யாணத்தை வச்சுகவமா?" என்றார், செண்பகத்தின் தந்தை.

"இந்தா மாமா, உனக்கு மட்டுமில்ல இந்த ஊர் சனத்துக்கும் சொல்லிக்கறேன், ஊர் பழக்கம் வழக்கம்னு சொல்லிக்கிட்டு எவனும் கல்யாணப் பேச்சு எடுக்கக்கூடாது. செண்பகம் என்னென்ன படிக்கணும்னு ஆசைபடுதோ, அத்தனையும் படிச்ச பிறகு தான் எல்லாம்…" என்றவன், மிரட்டும் தோரணையில் அரிவாளை நடுக்கூடத்தில் வீசியெறிந்துவிட்டு அவளை நோக்க, முதன் முறை தலை நிமிர்த்தி மாமனைக் கண்டு சிரித்தாள், செண்பகம்.

Saturday, 25 July 2020

சீரக மிட்டாய் - பைத்தியம்





பைத்தியம் - நான் கடந்து சென்ற ஒவ்வொரு மனிதனும், என்னைக் கடந்து செல்லும் ஒவ்வொரு மனிதனும், எனக்கு இட்ட செல்லப் பெயர்.

இன்று, நமது அரசு எனது புத்தகத்திற்கு ஏதோ ஒரு பரிசு வழங்கப்போவதாக அறிவித்துள்ளதாம். நான் பரிசுக்காக எழுதுபவன் அல்ல, பசிக்காக… எழுத்துப் பசி!!

ஞானி - நான் கடந்து சென்ற ஒவ்வொரு மனிதனும், என்னைக் கடந்து செல்லும் ஒவ்வொரு மனிதனும், "இன்று முதல்" எனக்கு இட்ட செல்லப் பெயர்.

இங்கே யார் பைத்தியம்? யார் ஞானி?

Friday, 24 July 2020

சீரக மிட்டாய் - ரசனைகள்




குளிர் தென்றல் என் கன்னம் வருடிட, ஒய்யாரியாய் உலவிடும் பௌர்ணமி நிலவினை ஜன்னல் வழியே நான் ரசித்திருக்க, அவளோ மெத்தை விரிப்பை மாற்றிக்கொண்டிருக்கிறாள்.

காலை நாளிதழில் படித்து ரசித்த கவிதையை மாலை வீடு திரும்பியதும் வாசிக்கத் தேடியெடுக்க, கவிதையின் அருகே அன்றைய செலவுகளைப் பட்டியலிட்டுக் கூட்டி சரிபார்த்திருக்கிறாள், அவள்.

இந்த ஆயிரம் காலத்துத் திருக்கோயில் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களைக் கண்டு இமைக்கவும் மறந்து நான் மண்டபத்திலேயே நின்றிருக்க, அவளோ மூலஸ்தானத்தின் அருகே கண்களை இறுக மூடிக்கொண்டு பிரார்த்தித்து நிற்கிறாள்.

கடற்கரை மணலில் அமர்ந்து கொண்டு 'தண்ணீர் தேசத்து' கலைவண்ணனையும், தமிழ் ரோஜாவையும் நான் நினைவு கூர, அவளோ கடலலைகளைத் துரத்திக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறாள். 

ஏதோ ஒரு எண்ணத்திலும், செயலிலும் கூட ஒன்றுபடாமல் முற்றிலும் முரண்பட்ட மனிதர்களாய் நாங்கள் இருப்பினும், இன்றும் பிரமிப்பு குறையாமல் நான் புதிதாய் ரசித்திருப்பதும் அவளைத் தான், அவளது முக்கியப் பட்டியலில் என்றும் முதலிடம் எனக்கே தான், நாங்கள் இருவரும் ஒத்துப்போகும் ஒற்றைப்புள்ளி… ஒற்றை பெரும்புள்ளி காதல் மட்டுமே தான்!!



Thursday, 23 July 2020

சீரக மிட்டாய் - சாமி இருக்கா?




"நீ என்னா சொன்னாலும் சாமியுமில்ல, பூதமுமில்ல…" என்று ஆணித்தனமாகக் கூறினார் அந்த நாத்திகவாதி.

"உன்னை இப்படி யோசிக்க வைக்கிறதும், பேச வைக்கிறதும் சாமி தான்…" என்று சிரித்து வைத்தார் ஆத்திகவாதி.

"அடபோப்பா… எல்லாத்துக்கும் அறிவியல் விளக்கம் இருக்கற மாதிரி, சாமினு ஒன்னு இருக்கறத அறிவியல் பூர்வமா நிரூபிச்சாத்தான் ஏத்துப்பேனே ஒழிய, இவனுக்கு சாமி இதை பன்னிச்சு, அவனுக்கு அதை பன்னிச்சுன்னு சொன்னா நான் நம்பத் தயாரா இல்லை."

வேகமாய்ப் பாய்ந்து ஒரு மோட்டார் வண்டி வந்துகொண்டிருக்க, அதை கவனிக்காது செல்ல முற்பட்ட ஆத்திகனின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்திய நாத்திகன், "யோவ், வண்டி வரது கூட தெரியாம இப்படி நடக்கிறியே, நான் மட்டும் புடிச்சு தடுக்கலேனா நீ சொர்கத்துல இருக்கற உன் சாமிக்கிட்ட போய் சேர்ந்திருப்ப…"

அவரைக் கண்டு சிரித்த ஆத்திகன், "யோவ், நான் தான் சொன்னேன்ல சாமி இருக்கு, அது எல்லா நேரத்துலயும் காப்பாத்தும்னு…"


Wednesday, 22 July 2020

சீரக மிட்டாய் - அன்பாய் ஒரு புன்னகை

 



கழுத்தில் புதுத்தாலி மஞ்சள் மணக்க, புதுப்பெண் பொலிவு முகத்தில் ஜொலிக்க, அவனது அலமாரியை சுத்தம் செய்துகொண்டிருந்தவளின் கண்ணில் பட்டது அப்பெட்டி. உள்ளே எம்பராய்டரி செய்யப்பட்ட கைக்குட்டையும், வாழ்த்து அட்டைகளும், சாக்கலேட் தாள்களும், பரிசுப் பொருட்களும் என, அவளிடம் அவன் சொல்லாமல் விட்ட அவனது முன்னால் காதலையும், காதலியையும் போட்டுடைத்தது.


அறைக்குள் நுழைந்தவன் அவள் கையிலிருந்த அவனது ரகசியக் காதல் பொக்கிஷங்களைக் கண்டு திடுக்கிட்டு நிற்க, அவளோ நிதானமாய் அவனைக் கண்டு புன்னகைத்தாள்.


அப்பெட்டிக்குள் அடைகாக்கப்பட்டவைகளை மீண்டும் அடுக்கியவள், அதை அதனிடத்திலேயே வைத்தாள்.


அவன் நம்பமுடியாமல் பார்த்திருப்பதைக் கண்டவள், "இந்தப் பெட்டியில உள்ளத அழிச்சுடலாம், ஆனா உங்க மனசுல உள்ளத அழிக்க முடியாது. உங்க மனசு முழுக்க நான் நிறைஞ்சதும், நீங்களே இந்தப் பெட்டிய வேண்டாம்னு தூர எறிஞ்சிடுவீங்க" என்றுவிட்டு, மீண்டும் அன்பு குழைத்த புன்னகையைச் சிந்தினாள்.



Tuesday, 21 July 2020

சீரக மிட்டாய் - அவளான அது!!




"அடியே, போனாப்போகுதுன்னு உன்னை இந்த வீட்ல வச்சிருந்தா, எல்லா வேலையும் நீயே இழுத்துப்போட்டு செய்யாம, நான் சொல்றவரைக்கும் என் வாய பார்த்துட்டே நிப்பியா? போ, இந்த வெள்ளை சட்டைய தும்பப்பூ கணக்கா துவச்சு போடு" என்று எரிந்துவிழுந்தவன், கையில் பாட்டிலோடு தொலைக்காட்சியின் முன் சென்றமர்ந்தான்.


இரவு பதினோரு மணிக்கு துணியை வெளுத்து காய வைத்தவள், சோர்ந்து தரையில் விழுந்தாள். 


"ச்ச, ஒரு நாளைக்குக் கூட முழுசா பாட்டரி நிக்க மாட்டேங்குது" என்று புலம்பியபடியே இயந்திர மனுஷியை சார்ஜரில் போட்டவன், "இது மெஷினா இருக்கப்போக நாம எவ்வளவு கோபப்பட்டாலும் கம்முன்னு இருக்கு. இல்லாட்டி அவள மாதிரியே இதுவும் என்னை விவாகரத்து பண்ணிட்டு, விட்டுட்டு போயிருக்கும்" என்று பெருமூச்சுவிட்டான்.


Monday, 20 July 2020

சீரக மிட்டாய் - ஸ்ருதி தப்பிய சுப்ரபாதம்




உச்சஸ்தாயியில் ஸ்ருதி பிசகாக அவள் பாடும் சுப்ரபாதமே அவனது தினசரி அலாரம். 

சில நாட்களாகவே இரண்டு வரிக்கு ஒரு முறை எட்டிப்பார்த்தது வறட்டு இருமல்.

'இந்த முப்பது வருஷ சம்சார வாழ்க்கையில இவளுக்கு க்ளாஸ் எடுத்தே காலம் போயிடுத்து' என்று அயர்ந்துகொண்டவன், 'டாக்டரப் போய் பார்க்கணும்னு தனக்கா தோணித்துனா போய் வைத்தியம் பண்ணிக்கட்டும்' என்று ஸ்ருதி தப்பிய சுப்ரபாதத்தைக் கடந்து செல்வது போல், வறட்டு இருமலுக்கும் காதுகளைப் பூட்டிக்கொள்ள பழகிக்கொண்டான்.

காலை நடைப்பயிற்சி முடித்து வீடு திரும்பியதும் ஜரூராக அவன் முன் ஆஜராகும் ஃபில்டர் காபி அன்று வராததைக் கண்டு அடுக்களைக்குள் சென்றவன் கண்டது, மயங்கிய நிலையில் கீழே சரிந்து கிடந்த அவளைத் தான்.

இன்று, அலாரம் சத்தத்தில் விழித்துக்கொண்டவனுக்கு இனி என்றுமே ஸ்ருதி தப்பிய சுப்ரபாதம் அவனை எழுப்பப்போவதில்லை என்ற நிதர்சனம், இதயத்தின் ஓரத்தில் சுருக்கென குத்தியது.


Sunday, 19 July 2020

சீரக மிட்டாய் - மல்லிகைப்பூ


 


வெகு நாட்கள்… இல்லை மாதங்கள்… இல்லை கடைசியாக நான் இதைச் செய்தது எப்பொழுது என்று யோசித்துத் தெளியுமுன்னே, நெகிழிப்பையில் திணிக்கப்பட்ட மல்லிகைப்பூவை என் கையில் திணித்தாள், பூக்காரி.

திருமணமான புதிதில் என் கையில் மல்லிகையைக் கண்டாள், அவள் இதழில் மோகனப்புன்னகை தவழ, இலவச இணைப்பாய்  கன்னங்களும் சிவந்து போகும்.

ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த சிரிப்பினையும், சிகப்பினையும் காண எந்தன் கண்கள்… இல்லை இதயம்… இல்லை, இரண்டுமே ஏங்கின.

வாயிற்கதவைத் திறந்தவள் ஒரு கையில் இருந்த சாப்பாட்டுக்கூடையினை வாங்கிக்கொண்டு, மற்றொரு கையில் பதுவிசாக நான் வைத்திருந்த மல்லிகையை வாங்கி கூடைக்குள் திணித்தபடி, "அக்கா வந்திருக்காங்க" என்றுவிட்டு செல்ல, அவளது இன்ப அதிர்ச்சிக்கு மாறாக எனக்கு துன்ப அதிர்ச்சிகள் தோன்றி, வளர்ந்து, மரித்தும் போயின. 

மல்லிகைச் சரத்தினை நறுக்கி, அக்கா, அக்கா மகள்கள், என் மகள் என்று அனைவருக்கும் பங்கிட்டுக்கொடுத்தவள், அன்று காலை கோவிலில் கொடுத்த இரண்டு அங்குல கதம்ப சரத்தை தலையில் சூடிக்கொண்டே என்னைக் கண்டு நான் ஏங்கிய மோகனப்புன்னகையைச் சிந்த, ஆறுதல் அடைந்தோம் அவளை நெருங்க முடியாமல் போன நானும், மல்லிகையும். 


Saturday, 18 July 2020

சீரக மிட்டாய் - கண்ட நாள் முதலாய்…


 


இமைக்காமல், சலைக்காமல் இவளையே பார்த்துக்கொண்டிருந்த அவனது விழிகளுக்குள், தவனைமுறையில் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தாள். 

தினமும் சபித்துக்கொண்டு அவள் பயணிக்கும் பேருந்து, சில நாட்களாக சுந்தர விமானமாக மாறியதோடு, இவளது பருவத்தின் பயிர்களுக்கு நீரூற்ற, காதல் புஷ்பங்கள் பூத்துக்குலுங்கின. 

அவன் இறங்கிய பின்னே இரண்டு நிறுத்துங்கள் கழித்து இறங்குபவள், இன்று அவனைத் தொடர்ந்தாள். 

நான்காக மடிக்கப்பட்டிருந்த கோலினை பையிலிருந்து எடுத்து விரித்தவன், மெல்ல மெல்ல எட்டு வைத்து பார்வையற்றோர் சங்கக் கட்டிடத்துள் நுழைவதைக் கண்டவள், திடுக்கிட்டு அதிர்ச்சியில் உறைந்தாள். அவளது நினைவுகளில் அவனது விழிகள் நிழலாடியது.

அவ்விடமே காத்திருந்து அவனை மீண்டும் கண்டவள், அவன் கையிலிருந்த கோலினை வாங்கிக்கொண்டு, அவனது விரலோடு விரல் சேர்த்தவள், கைகள் கூடிய பின்னே தன் காதலை உரைத்தாள், காதலும் கைக்கூடவேண்டுமென்ற பரிதவிப்போடு.


Friday, 17 July 2020

சீரக மிட்டாய் - மாமியார் வீடு


 


அன்று அவள் என்னோடு வாக்குவாதம் செய்தபடி நடக்க, நானும் விடாது அவளது கோபத்தின் உயரத்தை அளந்து பார்க்கும் ஆர்வத்தில் வில்லங்கமான பதில்களையே முன்வைத்தபடி நடந்தேன். நான் சுதாரிப்பதற்குள் அவள் சாலையைக் கடக்க எத்தனிக்க, அதிவேகமாய் விரட்டி வந்தது அந்த லாரி… நான் அவள் கையைப்பற்றி என்னிடம் இழுத்திருக்கலாம்… அல்லது அந்த லாரி க்ரீச்சிட்டு பத்து சென்டிமீட்டர் இடைவெளியில் நின்றிருக்கலாம்… ஆனால்… ஆனால், இரண்டுமே நடந்தது!! 


என் கையை உதறியவள், லாரி ஓட்டுனரை, என்னை முறைப்பது போல முறைத்துவிட்டு, சாலையைக் கடந்து, பேருந்தில் ஏறி அவள் அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டாள். 


விபரீதமாக வேறேதோ நடந்திருக்கும் என்று நீங்கள் நினைத்திருக்க வாய்ப்புண்டு. 


நானும் அப்படித்தான்… நானும் அப்படித்தான் நினைத்தேன் என்று நீங்கள் ஊகித்திருந்தால்… அதற்கு வாய்ப்பில்லை ராஜா!! ஏனென்றால் என் மரியாதைக்குரிய மாமனாரும், மதிப்பிற்குரிய மைத்துனரும், காக்கிச்சட்டை 'கன'வான்கள்... இப்பொழுது என் மனைவியை சமாதான செய்து அழைத்துவர என் மாமியார் வீட்டிற்கு, அதாவது என் மனைவி பிறந்து வளர்ந்த வீட்டிற்கு (மீண்டும், நீங்கள் நினைத்தது கிடையாது) சென்றுகொண்டிருக்கேன்.