Sunday, 21 January 2018

என் தோழி!!

சில நாட்களாக, மனதில் ஏதோ ஒன்று, நெருடி மறைகிறது. அவளின் முகம்!! என் இனிய தோழியின் முகம்!! அவள் நினைவு வரும்பொழுதெல்லாம் முதலில் என் மன வானில் தெரிவதெல்லாம் அவளின் சிரிப்பே. அவளது குரல் கூட செவிகளைத் தீண்டுகிறது. அவளைக் கண்டு ஆறேழு வருடங்கள் இருக்கும். அவளோடு பேசி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவளின் நினைவுகள் மட்டுமே பசுமையாய் என் மனதில் தோன்றி மறைகின்றன.

கல்லூரியில் படித்த காலத்திலேயே, பிரச்சனைகள் அவள் மடியில் நிரந்தரமாக சம்மனம் போட்டு அமர்ந்துகொண்டு, அவள் கழுத்தை தினமும் நெறித்த வண்ணம் இருக்கும். ஆனால், ஒரு நாளும் அவள் சிரிக்க மறந்ததில்லை. அவளை எல்லி நகையாடியோர் பலர் உண்டு. ஆனால், என்னை யாரேனும் ஒரு வார்த்தை சொன்னால், அத்தோடு அவர்கள் இவளிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகிடுவர்.

அவளின் குதூகலம், என்றும் அடுத்தவருக்கும் தொற்றிக்கொள்ளும். மன வாட்டத்தை மறந்து, வாய் விட்டுச் சிரித்த நினைவுகள், என்னை இப்பொழுதும் கண்கலங்கவே செய்கின்றன! கல்லூரியில்,ஆண்களோடு எப்படிப் பழகவேண்டும், பலரின் பொய் முகம், உண்மை முகத்திற்கும் உள்ள வேறுபாடு, எது அக்கறை, எது கருணை, எது பாசாங்கு என்று பல விடயங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தவள்.

கதைப் புனைவதில் அவளுக்கு நிகர் அவளே. மிகப்பெரிய பெண் திரைப்பட இயக்கனராக வரவேண்டும் என்பதே அவளின் கனவாக இருந்தது. அவளின் கதைகளும், அதன் கருவும், மனதனின் முன்னேற்றத்தைச் சார்ந்தே இருக்கும். அவள், அவளின் படைப்புகளைப் பற்றி சொல்லச் சொல்ல, மெய் சிலிர்த்துவிடும். நான் இன்று கதை, கவிதை என்று ஆர்வம் கொண்டதற்கு, அவளும் ஒரு முக்கிய காரணமே!

தொழில்நுட்பம் பூதாகரமாகி, விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த காலத்தில், வாட்சப், பேஸ்புக் என்பதன் உதவியால் பக்கத்துவீட்டுக்காரர் முதல் உலகின் மறு கோடியில் வாழும் நண்பன் வரை, அனைவரோடும் தொடர்பு கொள்ளக்கூடிய இந்த காலத்தில், அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது கசப்பான, ஏற்க முடியாத உண்மையே.

அன்று, சங்கடங்கள் ஏதேனும் என் வாழ்வில் எட்டிப்பார்த்தால், முதலில் அவள் நினைவு தான் வரும். அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு அவளிடம் இருக்கும். இன்றும் அப்படியே. எந்த ஒரு மன சங்கடம் எழும்போதும் முதலில் வருவது அவள் நினைவே. அவளை அழைத்து சில நிமிடங்கள் உரையாடிட மனம் ஏங்கும். ஆனால், அவள் எங்கிருக்கிறாள், எங்கே சென்றாள் என்று எனக்கு மட்டுமல்ல, மற்ற நண்பர்களுக்கும் தெரிந்திருக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

இன்று எனது படைப்புகளை படித்துவிட்டு அனைவரும் பாராட்டும் பொழுது பேரின்பமாய் உள்ளது. அதைக் கண்டு பூரித்துப்போக என் தோழி இல்லை. அவளை இன்னும் தேடிக்கொண்டிருக்கேன். யாராவது அவளைப்பற்றிய தகவல் சொல்வாரா என்று முயற்சி செய்கின்றேன். ஆனால் இது வரை பலன் இல்லை. அவள் இன்றாவது என் மின்னஞ்சல்களுக்கு பதில் கூற மாட்டாளா, வேறு யாரேனும் அவளைப் பற்றி தகவல் கூற மாட்டாரோ  என்று தினமும் எதிர்ப்பார்க்கிறேன்.

வகுப்பில் முதல் வரிசையில் நானும், அவளும், மற்றொரு தோழியும் அமர்ந்துகொண்டு செய்யாத சேட்டைகள் கிடையாது. காரணமே இன்றி, மூச்சடைத்து செத்துவிடும் அளவிற்கு சிரிப்போம். ஒருவரை ஒருவர் பரிகாசம் செய்துகொண்டு, இன்பமாய் நகர்ந்தன அந்நாட்கள். இன்று நான் அவளை இழந்து புலம்பப்போகிறேன் என்று, அன்று நான் அறிந்திருக்கவில்லை.

நம்மையும் அறியாமல், காலப்போக்கில் பலரை நம் வாழ்வில் மறந்துவிடுகிறோம். பிறகு எங்கு தேடியும் அவர்கள் கிடைப்பதில்லை. ஆனால், நம்முள் அவர்கள் விட்டுச்சென்ற தாக்கம் அளவிடமுடியாததாகிவிடுகிறது. நம் வாழ்க்கைத் தடத்தையே சிலர் அழகாய் மாற்றிவிட்டு, மாயமாகி விடுகின்றனர்.

இப்பொழுது என் எதிர்பார்ப்புகள் சுருங்கிவிட்டன. அவளோடு பேச வேண்டாம். அவள் முகவரியோ, தொடர்பெண்ணோ வேண்டாம். ஆனால், அவள் எங்கோ ஒரு மூலையில் நிம்மதியாக, ஆரோக்கியமாக  வாழ்கிறாள் என்று சாட்ச்சிப்பூர்வமான செய்தி ஒன்று கிடைத்தாலே போதும். அவளுக்காக என்றும் என் பிரார்த்தனைகள் தொடரும்!!

No comments:

Post a Comment