Tuesday, 30 January 2018

யாரோ நான்?!

கடலின் நடுவே
கவிழ்ந்த படகின் மேல்
மல்லாக்கப் படுத்து
விண்மீனை ரசிக்கின்றேன்

சோலையில் புதருள்
சூழ்ந்த முட்களை விலக்கி
கையில் ரத்தம் வடிய
ரோஜாவிற்கு முத்தம் தருகின்றேன்

புகைக்கும் எரிமலை மேல்
விறுவிறுவென ஏறிச்சென்று
விசாலமான நிலத்தைக் கண்டு
வியப்பில் மூழ்கித் திளைக்கின்றேன்

நாற்புறமும் வெள்ளம் நிறைய
வீட்டுக் கூரையின் மூழ்கா விளிம்பில்
உலர்ந்த என் மேல் சட்டையை
நாய்க்குட்டிக்குக் கம்பளியாக்கினேன்

பத்தி, பூ மணக்கும் இழவு வீட்டில்
காது கிழிய ஒப்பாரி ஒலித்தும்
சலனமின்றி உறங்குபவனைக் கண்டு
பொறாமைப் பெருமூச்சு விடுத்தேன்

யாரோ நான்?!
சிந்தை கலங்கிய பித்தனோ!
பித்தம் கலைந்த சித்தனோ!
அனைத்தும் கடந்த ஞானியோ!
வாழ்வை ருசிக்கும் போகியோ!

No comments:

Post a Comment