Saturday, 13 January 2018

நெஞ்சம் இரங்காதோ!!

நெஞ்சுக்கூட்டைப் பிளந்து கொண்டு
யாரவள் உள்ளே இறங்கியது!!
கஞ்சக்கருமியின் பொக்கிஷம் போல்
என் இதயமும் அவளைப் பதுக்கியது

வெள்ளம் சூழ்ந்த நிலத்தினை போல்
என் உயிரும் அவளுள் மூழ்கியது
அய்யோ! இது என்ன என்ன?!
மூளையும் கலங்கி குழம்பியது

கண்கள் செய்த குற்றத்திற்கு
கட்டுடல் முழுதும் தண்டனையோ
கொஞ்சும் வண்ணக்கிளியே நீ
என் மனதைக் கொத்தித் தின்பதேனோ?

சிறிய கருவிழிப் பார்வைகள்
காட்டாறு போல எனை வீழ்த்தியதே
நீ சிந்தும் மெல்லிய புன்னகையால்
என் உயிரும் துகள்களாய்ச் சிதறியதே

வஞ்சிக்கொடி உன் வனப்பினால்
வஞ்சம் வைத்து பழிதீர்த்தாய்
கெஞ்சும் எந்தன் அன்பிற்கு
உன் நெஞ்சம் தான் இரங்காதோ??!!

No comments:

Post a Comment