Wednesday, 16 November 2016

முதல் காதல்!

நெற்றியில் வந்தமரும் மழையின் 
முதல் துளி போல்,
நட்டு வைத்த செடியில் மலர்ந்த 
முதல் மலர் போல்,
பெற்றெடுத்த பிள்ளையின் 
முதல் ஸ்பரிஸம் போல்,
மிகவும் ரம்யமானது,
முதல் காதல்! 

சுற்றும் உலகம் நின்று போகும் 
பகலில் சந்திரன் வந்து போகும்
மழையில் உடல் வெந்து போகும்
வெயிலில் குளிர்ந்து உறைந்து போகும்

பூக்களின் பாஷை புரிந்து போகும்
தூது பல நிலவு கொண்டு போகும்
குயில்களும் செய்தி சொல்லி போகும்
கண்களுக்குள் நட்சத்திரம் மின்னி போகும் 

பட்டாம்பூச்சிகள் தோள்களின்மேல் அமர்ந்து போகும்
வயிற்றுக்குள் குண்டுகள் சுழன்று போகும்
நாடிநரம்புகள் தளர்ந்து போகும்
அவ்வப்போது மூச்சே நின்று போகும்

இதயம் கீழிறங்கி மண்மேல் போகும்
கால்கள் உயர்ந்து விண்மேல் போகும்
மேகங்கள் தலைமேலே கடந்து போகும்
பூமியும் பஞ்சணையாய்  மாறிப் போகும்

பல கோடி நிலவுகள் வந்து போகும்
பற்பல யுகங்கள் கடந்து போகும்
தூக்கமும் பசியும் மறந்து போகும்
தேன்கூட துவர்ப்பாய் கசந்து போகும்

கண்கள் திறந்தபடி கனவு வந்து போகும்
சிலசமயம் உள்ளே அழுதபடி மனம் நொந்து போகும்
கண்ணாடி முன் ஒத்திகைப்பார்த்து காலம் போகும்
இறுதியில்,
நெஞ்சின் ஓர் மூலையில்,
அக்காதல் புதைந்து போகும்!!!

No comments:

Post a Comment