Sunday, 18 February 2018

வெள்ளை நிற வயலட் பூக்கள்!!

இதோ என் கண் முன்னே விரிந்திருக்கிறது, வயலட் நிற பூக்களின் தோட்டம். பூக்களின் வாசமெல்லாம் ஒன்று திரண்டு, என்னை தரையினின்று மெல்ல உயர்த்துகிறது, முகிலினம் போல். கண்களை மூடிக்கொண்டு, அந்த வாசத்தின் ரூபத்தை உணர கைகளால் துளாவுகின்றேன். அந்த வாசக்குவியல், என் கழுத்து மடிப்பில் கிச்சுகிச்சு மூட்டி, என் சுவாசத்தில் பதுங்கிக்கொண்டு, என் உள்ளத்துக் கதவினை தகர்த்துவிட்டு, உள்ளே சென்றது. சென்றதோடு நில்லாமல், என் உயிரின் அடித்தளம் வரை வருடிவிட்டு, அணுக்களில் அதன் துளிகளைக் கலந்துவிட்டது. கண்களை மூடி நிற்பதால், பகலும் தெரியவில்லை, இரவும் தெரியவில்லை. இரவில் நிலவு என்னை உலுக்கியபோது, கண்களைத் திறக்கிறேன். ஓடிச்சென்று என் கூட்டுக்குள் பதுங்கிக்கொண்டேன். இதோ என் ஜன்னலின் அருகே நிற்கின்றது பால்நிலா. என் முகம் காணவா?? சிவந்திருக்கும் என் கன்னங்களைக் கண்டு அது பரிகாசம் செய்திடும். நான் அறிவேன்!

மஞ்சளை அள்ளிப் பூசிக்கொண்டேன், கன்னத்துச் சிகப்பு மறையும் வரை. பொன்மேனியாள், மஞ்சள் பூசிக்கொண்டு தகதகவென ஜொலிக்கின்றேன். இப்பொழுது நிலவின் எதிரே சென்று நிற்கிறேன். என்னைக் கண்டு “பேதையடி நீ” என்று சிரிக்கிறது அந்த குறும்பு நிலவு. என்னவென்று புரியவில்லை. “உன் கன்னச்சிவப்புகள் பொங்கி, உன் தோள்களின் மேல் சிந்திக்கிடக்கின்றன... அதை மறந்துவிட்டாய்!” என்றது. அவசர அவசரமாக அந்த சிகப்புத் துகள்களை நான் தட்டிவிட, அவையெல்லாம் பறந்து வந்து என் கன்னங்களில் ஒட்டிக்கொண்டன. என் தடுமாற்றத்தைக் கண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்த வெண்ணிலா, “அழகியடி நீ!” என்று கூறி, எந்தன் இதழ்களில் முத்தம் வைத்தது.

தினமும் இதே அரங்கேற்றம். அந்த வயலட் மலர்கள் என்னை பகலில் அழைக்க, இந்த நிலவு என்னை இரவில் துரத்த, எனக்குள் என்னை விழுங்கும் மலர்கள் மலரத் தொடங்கின. அவ்வப்போது வீசிச்செல்லும் வாடைக்காற்று, அந்த மலர்களுக்குத் தண்ணீர் தெளிக்க மறக்கவில்லை. என் இதழோரப் புன்னகை தான் அனைத்திற்கும் ஒரே பதில். என் ஒற்றை பதில்!

இதோ ஓடிச் செல்கிறேன், அந்த வயலட் மலர்களின் தரிசனத்திற்கு. வனத்தின் நடுவே நிற்கிறேன், ஆனால் மலர்கள் எல்லாம் எங்கே? ஒன்றைக் கூட காணவில்லை. வாசம் மீண்டும் என்னைத் தீண்ட, அதன் வழியே தவழ்ந்து செல்கிறேன். சட்டென ஏதோ என் கழுத்தில் விழ, ஒரு நிமிடம் உயிர் நீங்கி திரும்பியது. அந்த சில்மிஷப் பூக்கள் ஒன்று கூடி மாலையாகி, இதோ என் தோள் மேல்!! இரண்டு மலர் பந்துகள் எங்கிருந்தோ பறந்து வந்து, என் உள்ளங்கைகளைப் பற்றி, என்னை ராட்டினம் போல் சுற்றின. எனது சிரிப்பொலி வான் முட்டி மீண்டது. அந்த பூவனம் முழுதும் என் காலடி ஓசைகள். என்னை, ஒளிந்துகொண்டு ரசிக்கும் பட்டாம்பூச்சிக் கூட்டம் என்ன முணுமுணுக்கின்றன!! ஓ! சிறகடிக்கும் என் விழியைக் கண்டு பொருமலோ! ஜொலிக்கும் என் நிறம் கண்டு பொறாமையோ!! அனைத்து அழகையும் நான் அப்பிக்கொண்டு நிற்கிறேன். “சபிப்பதை விட்டு, என் காதோடு கதைகள் பேசுங்கள்… கேட்கிறேன்!”

என் கழுத்தில் இருந்த மாலை மெல்ல இறங்கி, என் கால்களைச் சுற்றிக்கொண்டது. “அய்யோ விடுங்களேன், நகர முடியவில்லை.” மண் பார்த்து நொந்த என் விழிகள், உயர்ந்து விண் பார்க்க பயணித்தபோது, இடையே கண்ட உருவத்தில் என் விழிகள் பதிந்து போயின. அவன் தான்! அரூபமாய் என்னுள் சுற்றியவனின் ஸ்வரூபம்!! மலர் மாலை என் கால்களினின்று விலக, நான் கூறும்முன்னே, விடு பட்ட என் கால்கள் விரைந்தன அவனிடம்.

கண்கள் மூடி, கைகள் பரப்பி, விண்ணை நோக்கி நிற்கின்றான். நானோ நாணத்தால் அவன் முன்னே சென்று நில்லாது, அவன் பின்னே தயக்கத்தோடு மயங்குகிறேன். நொடியில் கண் விழித்து, என்னை திரும்பி நோக்கினான். அவனது முகம்… அந்த கந்தர்வ முகம்… என்னுள்ளே மலர்ந்த மலர்கள் ஒவ்வொன்றிலும் மின்னுகிறது. மாயவன்! என்னை ஆட்கொள்ளவந்த, என் மாயவன்!! என் சிந்தையை முடக்கி, சிந்தனைகள் பிறக்கும்முன்னே என்னை முழுதும் ஆட்கொண்டுவிட்ட என் மாயவன்!!!

என்னை துரத்தும் நிலவிற்காக நான் கால் நோகக் காத்திருந்தேன். உலா முடித்து மெல்ல வந்தது என்னிடம். “எனது இதழ்கள் இனி உனக்கல்ல” என்று கண்டித்தேன். மனம் வருந்தி, முகம் கருத்தது அந்த வெண்ணிலவிற்கு. “போடி” என்றுவிட்டு, விண்ணிலே ஏதோ ஒரு முகிலின் பின்னே மறைந்துகொண்டது. என்னுள் அவிழ்ந்த வாடா மோகன மலர்கள், அவனின் பிம்பத்தை என் கண்கள் நோக்கும் திசையெங்கும் ஒட்டிவைத்தன. கன்னங்கள் சிவக்க, இதழ்களும் சிவக்க, என் பொன்னிறம் செந்நிறமானது.

மறுநாள் காலை ஓடோடிச் சென்றேன், உறங்கிக்கிடக்கும் சூரியனை எழுப்பிவிட. அவன் எழுவதாய் இல்லை. குளிர்ந்த குளத்து நீரை அவன் மீது வாரி இறைக்க, முனகிக்கொண்டே எழும்பினான். உடனே பூ வனத்திற்கு விரைந்தேன். எனது சின்னஞ்சிறு வயலட் தோழிகள், குறும்பாய் என்னை நோக்க, என் நாணத்தை என்னுள் புதைத்து, அவனையே தேடி நின்றேன். அதோ! அங்கே நிற்கிறான். அவனது வனத்தில் நிற்கிறான். அவனின் வனம் முழுதும் செந்நிற பூக்கள். அதன் நடுவிலே, வெள்ளை மன்மதன் - என் மாயவன். என்னை நோக்கி, இரு கைகளையும் விரிக்கின்றான். நொடியில் பறந்து சென்று, அவன் நெஞ்செலும்புகளுக்குள் முகம் புதைத்தேன். அவன் நெஞ்செங்கும் என் முகம் ஏந்திய மோகன மலர்கள். பல பொழுதுகள், பல இரவுகள், பல பருவங்கள் அங்ஙனமே நின்றிருந்தோம்.

என்னை விலகி நின்றவன், அவனது கண்களால் என் கண்களை நோக்கியபடி கந்தர்வ மணம் புரிந்தான். செந்நிறப் பூக்களை அவன் கைகளில் ஏந்தி, என் மேலே தூவினான். அந்த மலர் மழையில் நனைகையிலே, உயிரும் கூட குளிர்ந்தது. கண்களை மூடிக்கொண்டு அந்த நொடியை உணர்வுகளில் இசைத்திருந்தேன். மீட்டிக்கொண்டிருந்த வீணையின் நரம்புகள் பட்டென பிய்ந்து போக, கண்களைத் திறந்து மாயவனைத் தேடி நின்றேன். எங்குமில்லை அவனின் முகம். ஓடினேன் அவனது வனத்திலே. செம்பூக்கள் மறைந்து, குருதி படிந்த நெருஞ்சி முட்கள் துளிர்த்தன. பசிகொண்ட பருந்தும், விஷம் கொண்ட பாம்பும் வஞ்சத்தோடு என்னை நோக்க, என் பாதங்களில் ரத்தம் கசிவதையும் பொறுத்து, அந்த முட்கள் மேலே ஓடோடிச் சென்று என் வனத்துள் நுழைந்தேன். என் நெஞ்சத்து வாடா மலர்கள் கருகி சாம்பலாகின. அந்த சாம்பலின் துகள்கள் காற்றெங்கும் கலந்திருக்க, எனது பூந்தோழிகள், வெள்ளை நிற வயலட் பூக்கள் ஆகினர்.

No comments:

Post a Comment