Sunday, 4 February 2018

பெண்டுலம் மனம்

விமானப் பயணிகளின் ஓய்வு அறையின் இறுதியில் போடப்பட்டிருந்த சோபாவின் உச்சகட்ட எல்லையில் வந்து அமர்ந்தேன். ஏதோ ஒரு சலசலப்பு. வெளியே அல்ல, உள்ளே. தறிகெட்டு மனம் ஓடிக்கொண்டிருந்தது. ‘என்ன விஷயம்?’ என்று கேட்டிட ஆசைதான். எதற்கு வம்பு. என்னோடு அவன் பேசிப் பல காலங்கள் ஆகிவிட்டது. அடிக்கடி அழுவான், எப்போதாவது சிரிப்பான். என்னவென்றால், என் மூஞ்சியில் காரி உமிழ்வான். என் முகம் அவனுக்கு மறந்தே போயிருக்கும். எனக்கும் தான்… எப்பொழுதும் முதுகைக் காட்டி உட்கார்ந்திருப்பவனை, என்ன சொல்வது. சமாதானங்கள் பேசிப்பேசி, அவனிடம் அவமானப்பட்டது தான் மிச்சம். ஏனோ! அமர்ந்திருப்பவன், அடிக்கடி காலைச் சுருக்கி, கையை தலைக்கு வைத்துப் படுத்துக்கொள்பவன், இன்று ஏன் இப்படி திக்கு தெரியாமல் ஓடுகிறான்! ‘என்ன தான் ஆச்சு, சொல்லித் தொலையேண்டா’ என்று அவன் உச்சியில் கொட்டு வைக்க வேண்டும் போல் இருந்தது. அய்யய்யோ! நான் சொன்னதைக் கேட்டுவிட்டான். எங்கே எனது கைக்குட்டை? யாரும் பார்க்கும் முன்னே, என் முகத்தை மூடிக்கொள்கிறேன். இவன் எச்சிற் அர்ச்சனையைத் தொடங்கப் போகிறான்.


இல்லை… இன்று என் முகத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கிறான். அவன் கண்கள் குளமாகி இருக்கின்றன. என் கண்களும் ஈரமானது. அவன் இதழ்கள் ஏதோ சொல்கின்றன. கேட்கவில்லை. ‘அடேய்! உரக்கச் சொல்’
“அ… அ… அவள்…” என்று அலறினான். என் காதுகளின் ஜவ்வுகள் கிழிந்து, என் விழி முன்னே அவை ஊஞ்சலாடின.


நான் அவனையே பார்த்திருந்தேன். அவன் முகம் மெல்ல மெல்ல சினம் கொண்டது. அருவி என அவன் விழியில் நீர் வழிந்தது. தனது தலையால் என் நெஞ்சை தொம், தொம் என்று முட்டத் தொடங்கினான். எனக்கு இருமல் வந்தது. அவன் முட்டுவது நிற்கவில்லை. மூச்சடைத்தது. அவன் மேலும் முட்டினான். அவன் மண்டையோடு பிளந்து, ரத்தம் கசிந்தது. என் நெஞ்செங்கும் ரத்த வாடை. என் கண்கள் சொருகின. “சரி, சரி, சரி” என்று சமரசம் பேசினேன். முட்டுவதை நிறுத்திவிட்டு, எம்பி எம்பி குதித்தான். அவன் முகமெங்கும் புன்னகை.


சுற்றும் முற்றும் பார்க்கிறேன், என்ன வென்று. அந்த நீளமான ஓய்வறையில் என்ன இருக்கும்? யார் இருப்பார்? எதுவும் இல்லை! பல முகங்கள் உண்டு, ஆனால் பழகிய முகம் எதுவும் இல்லை. அந்த அறையை சோதனை செய்த கண்கள், இறுதியாய் நான் அமர்ந்திருக்கும் சோபாவின் மறுமுனையை, ‘இந்த இடத்தையும் ஏன் விட்டு வைப்பானேன்’ என்று கூறிக்கொண்டே, நோட்டம் விட்டது. என்னுள்ளே குதித்துக்கொண்டிருந்தவன், மல்லாக்கப் படுத்துக்கொண்டு, வாய்விட்டுச் சிரிக்கிறான். அவன் கண்களில் நீர். துடைத்துக்கொண்டு, என் காதுகள் பிளக்கும் அளவிற்கு சிரிக்கிறான். “அவள்” என்று மென்மையாய்க் கூறிக்கொண்டே சிரிக்கிறான்.


என் விழிகள் அவள் மேல் ஒட்டிக்கொண்டன. என் உருவம் உறைந்து போனது. என் சுவாசம் உள்ளே சென்று, வெளியே வருவது மட்டுமே என் காதுகளுக்குள் கேட்டது.


அவள், சோபாவின் மறு கோடியில், எனது புறம் பார்த்தபடி, தலைசாய்த்துத் தூங்கிக்கொண்டிருக்கிறாள். அவளைத் தவிர மற்றனைத்தும் அங்கே சூனியமானது. ஒலிகளெல்லாம் அடங்கிப்போயின. ஒளிக்கற்றைகள் அவள் பின்னே சூழ்ந்துகொண்டன.


கண்களில் பெருகிய வெந்நீர், என் மீசையின் குளிரை நீக்கி, வெப்பம் கூட்ட விரைந்தன. என் தலையை, மேலே பார்த்தபடி, சோபாவின் மீது சாய்த்து வைத்தேன். அவளின் முகம் எங்கும் தோன்றியது. என் உள்ளே, அவன் அதற்குள் அவளின் படத்தை வரைந்துவிட்டு, என் கண்களுக்கு விருந்து படைத்தான். பத்து மீட்டர் நைலான் கயிற்றால் என் கழுத்தை, இறுக்கிக் கட்டியது போல் இருந்தது.


மெல்ல அவள் புறம் திரும்பினேன். அமைதி அவள் முகத்தில் துளி துளியாய் சிதறிக்கிடந்தது. என்னையே அறியாமல், எனது இடக்கையை சோபாவின் சாய்வுப்பகுதியின் விளிம்பின் மேல் வைத்தேன். மெல்ல மெல்ல என் கை நீண்டது. மெல்ல மெல்ல என் விரல்கள் மடங்கியது. முடிந்த மட்டும், என் கை நீண்டு நின்றது. முடங்கிய விரல்களிலிருந்து, இரண்டு மூன்று சென்டி மீட்டர் தொலைவில், “அவள்”.


என்னுள் அவனோ, ‘பொறுக்கி கையை எடு! இல்லை கொன்றுவிடுவேன்’ என்று ஒரு கத்தியைக் காட்டி மிரட்டுகிறான். எத்தனை முறை என்னை புறக்கணித்திருப்பான். இப்பொழுது நான் அவனை அசட்டை செய்தேன். என் விரல்கள் நீண்டன. அவள் முகத்தின் அருகே, சுருண்டிருந்த கூந்தல் கற்றை, விரல்களின் நுனியால் ஒரு முறை தொட்டுப்பார்த்தேன். என் தலை மேலே, வெண் மேகங்கள் ஒன்று கூடி, வானவில் வர்ணங்களில் மழைத் தூவி, என்னை நனைத்தன. முழுதும் நனைந்து சிலிர்த்துப் போனேன். இவ்வளவு நேரம் உறைந்திருந்த என் காலின் கட்டை விரல், மெல்ல அசைந்து கொடுத்தது.


அவள் மெல்ல தலை அசைக்க, கால் நொடியில் என் கை சுருண்டுக்கொண்டு என் மடி மீது பதுங்கியது. மழையோ நின்று விட்டது! கை சுருங்கிய வேகத்தில் என் தலையை கவிழ்த்துக்கொண்ட நான், மீண்டும் மழையில் நனைய ஆவல் கொண்டு, அவளைக் காண கண்களைப் பணித்தேன். அவள் விழித்திருந்தாள். அமைதி சொட்டிய அவள் முகத்தில், இப்பொழுது அருவருப்பு கொட்டுகிறது.


நான் அவள் முகத்தைக் கடைசியே கடைசி என்று நினைத்துக்கொண்டு பார்த்த நொடியில், அவள் முகத்தில் ஏக்கமும், தவிப்பும் வழிந்தோடின. எங்களின் பொம்மைக் கல்யாண நாடகத்திற்கு, அந்த கருப்புக் கோட்டு, கண்ணாடி அணிந்தவர், அந்த சிகப்புக் கட்டிடத்துள் முற்றுப்புள்ளி வைத்தபொழுது, பேரானந்தத்தையும் தாண்டிய பரமானந்தம் என்னுள். அன்று தான் என்னுள் இவனும் கடைசியே கடைசியாய்ப் பேசியது. மெல்ல மெல்ல புரிந்தது, எனது பரமானந்தம் எல்லாம் பகல் வேஷம். பச்சோந்தித்தனம்.


இன்று அவள் விழி வழியே, கோபக்கனலினை உருண்டைகளாக்கி, என் மேல் வீசுகிறாள். அவள் வீசிய பந்துகளெல்லாம் என் இதயத்துள் இறங்கின.


அவள் எழுந்து தனது கைப்பையை எடுத்துக்கொண்டு விரைகிறாள். அவள் செல்லச் செல்ல, என் கண்களில் நீர் கோர்த்து, என் விழிக்கு அணை கட்டியது. சதிகார கண்ணீர்! அணையை தகர்த்துவிட்டுப் பார்க்கிறேன், அவள் இல்லை. காற்றிலே மாயமான மாயம் என்னவோ! அவள் வீசிய அனல் கங்குகள், மலமலவென தீப்பற்றி என் மேனி எங்கும் பரவி, பற்றி எரிந்தது. மழையில் நனைந்த ஈரப்பதம், ஆவியாகி கண்முன்னே மறைந்தது.


எரியும் என்னை தூக்கிக்கொண்டு, எனது விமான அழைப்பென்று மூளை கூறியதைக் கேட்டுக்கொண்டே, விமானத்துள் என் இருக்கையில் சென்று அமர்ந்தேன். பூமி பிளந்து, நான் மட்டும் புதைந்து போக மாட்டேனோ!!


உள்ளே அவன், மூலையில். முடங்கிக்கொண்டான். சுவற்றில் ஏதோ சித்திரம் வரைகிறான். அவளின் சித்திரம் தான். கருப்பு ஜீன்ஸ், டி ஷர்ட், விரித்த தலை என்றிருந்தவளுக்கு, நெற்றிச்சுட்டி வரைந்து கொண்டிருக்கிறான். பைத்தியக்காரன். எதையோ தேடுகிறான். என்ன அது?
“ஓ! இந்த சிகப்பு மையைத் தான் தேடினாயோ! உனக்கு எதற்கடா அது?”
என்னைப் பார்த்து அழுகிறான்! பிறகு அவளின் நெற்றியில், நெற்றிச்சுட்டியின் கீழே, ஒரு வட்டம் வரைந்து, சிகப்பு மை பூசினான். அவளுக்குப் பொட்டு வைத்து ரசித்தவன், குடுவையில் மீதமிருந்த சிகப்பு மையை கையில் ஊற்றி, தன் முகத்தில் பூசிக்கொண்டு, எதிர் முனையில் படுத்துக்கொண்டு அழுகிறான். அழட்டும். அவனை சாந்திப்படுத்த என்னால் இயலாது. அழட்டும். நெருப்பில் மடிந்து கொண்டிருக்கிறேன். குளிர் காயும் அவனுக்கு எதற்கு சமாதானம்? முட்டி மோதி என்னை திரும்பச் செய்து, அமிலத்துள் மூழ்கி முத்தெடுக்கச் சொன்னவன் தானே. அழட்டும்.


எழுந்து வந்து என் முன்னே மீண்டும் நிற்கிறான். மீண்டும் சிரிக்கிறான். முகத்தைத் துடைத்துக்கொண்டு, மீண்டும் நெஞ்சினை முட்டினான். வேண்டாம்! இம்முறை நான் பார்க்க மாட்டேன், என்று கண்களை மூடிக்கொண்டேன். ‘அடேய் பைத்தியக்காரா கண்களைத் திற’ என்று அலறிக்கொண்டு முட்டினான்.


எரியும் உடல், பயத்தில் நடுங்க, கண்களைத் திறந்தேன். எனக்கு முன்னே, நடைப்பாதையின் அந்தப் பக்கம் இருந்த இருக்கையில், அவள். “வேண்டாம்! வேண்டாம்!” - நான் கத்துகிறேன்.
“அவளே தான்” - என்னுள் அவன் ஆனந்த நர்த்தனம் ஆடுகிறான்.


முடிவில்லா தண்டவாளத்தில், சக்கரம் கட்டிய பலகையின் மேல் அவள் அமர்ந்திருக்கிறாள். என் கைகள் அவளைத் தீண்ட, நீண்டன. சக்கரங்கள் சுழல, அவள் விரைகிறாள். நான் ஓடுகிறேன். நீட்டிய கைகள் நீட்டிய படி, ஓடுகிறேன். அவளின் நெற்றிச்சுட்டி குலுங்கியது. அவளின் சிகப்புப் பொட்டு ஜொலித்தது. அவள் சம்மணமிட்டபடி, குலுங்கிக்குலுங்கிச் சிரிக்கிறாள். என் விசும்பலைக் கண்டு ரசிக்கிறாள். அவளின் சிரிப்பு எங்கும் எதிரொலிக்க, எங்கிருந்தோ ஒரு பூ மாலை அவள் கழுத்தில் வந்து விழுந்தது. அது திருமண மாலை. அவள் கன்னங்கள் சிவந்தன. நான் ஓடுகிறேன். அவளின் வேகத்திற்கு ஈடு செய்ய முடியவில்லை. அங்கே ஒரு மலை மேலே, மெல்ல எழும்பிய அவளின் சக்கரப்பலகை, மலையின் பின்னே மறைந்தது. அவள் மறைந்ததால் மனம் நொந்து, என் கால்கள் நின்றன. என்னருகே மரத்தில் ஏதோ ஒன்று தொங்க, அவளை விழிகள் தேட, அந்த தொங்கிக்கொண்டிருந்த ஒன்றை என் கைகள் இழுத்தது. பற்கள் நரநரவென கடிக்க, என் கைகள் அதை சின்னாப்பின்னமாக்கியது. என் கையில் ஏற்பட்ட காயம் என்னை திரும்ப வைத்தது. நான் சிதைத்தது என்னுடைய மணமாலையை. அந்த மாலையின் பூக்கள், என் கால்களைச் சுற்றி மடிந்து கிடந்தன. அவற்றைக் கண்டு, என் இதழ்கள் ஒப்பாரிப் பாடின. திடீரென நிலம் பிளந்து, அந்த பூக்கள் புதைந்தன. என் உள்ளங்காலில் ஏதோ கிச்சுக்கிச்சு மூட்ட, நீண்ட வேரொன்று தோன்றி, பூமியின் அடியில் கைகளைப் பரப்பித் துழாவியது. நான் சிரிக்கிறேன். கிச்சுக்கிச்சுகள் என்னை சிலிர்க்க வைத்தன. அவளின் வேரின் நுனியைப் பற்றிக்கொண்டு வாருங்கள், என்று கூறிவிட்டு, அண்ணாந்து பார்க்கிறேன், வானவில் மழை தேடி.


சேருமிடம் வந்ததென, விமான பணிப்பெண் என்னை எழுப்ப, என் அவளைக் கண்ட படியே அமர்ந்திருந்தேன். அவள் கூந்தலின் இடுக்கு வழியே தெரிந்த அவளின் கன்னங்களில், என் முகம் தெரிகிறதா என்று யோசிக்கிறேன்.


அனைவரும் இறங்கிவிட்டனர். மீண்டும் அவளைத் தொலைத்துவிட்டேன். ஆனால், ஏனோ பதட்டம் என்னை இம்முறை களவாடவில்லை. வெளியே வந்து நிற்கிறேன். இதோ என் முன்னே அவள். என்னுள்ளே அவன் உறங்கிப்போய்விட்டான். நல்ல உறக்கம் போல. மூன்றாண்டுகளின் தூக்கத்தை ஈடு செய்கிறான்.


அங்கே, யார் அவன்? அவனோடு ஏன் என்னவள் பேசுகிறாள்? எனது வேர்கள் மெல்ல என் கால்களைச் சுற்றின. அய்யோ! என் முகம் மிளிரும் அவளின் கன்னத்தில், அவன் முத்தமிடுகிறான். தடுக்க எத்தனிக்கிறேன். ஆனால் என் வேர்கள் என் இடுப்பு வரைச் சுற்றிக்கொண்டன. “காப்பாற்று, காப்பாற்று” என்று என்னுள் இருப்பவனை அழைக்கிறேன். அவன் எங்கே? எங்கே சென்றான்? கண்ணாமூச்சி ஆடுகிறான்? எங்கே அவன்?
என் வேர்கள் என் முகம் வரை எழுந்தது. அது வேர் இல்லை. மலைப்பாம்பு! வேர்கள் மலைப்பாம்பென உரு மாறிவிட்டது. அந்த பாம்பு, என்னை விழுங்க வாய் திறக்கிறது. அந்த முகம், அந்த பாம்பின் முகம், என்னுள் இருப்பவனின் முகமன்றோ?! “அடேய் நீயா?” என்று என் கேள்வி முடியும் முன், நான் விழுங்கப்பட்டேன்.


--- முற்றும்---

4 comments:

  1. சபரிணி10 February 2018 at 02:27

    வித்தியாசமான சிந்தனை. அருமையான பதிவு.

    ReplyDelete