மழையில் நடந்து செல்கிறேன். எங்கிருந்தோ வந்த நீ குடையொன்று நீட்டுகிறாய்!! இதுவரை உளர்ந்திருந்த ‘நான்’, இப்பொழுது உன் குடைக்குள்ளே முழுதும் நனைகின்றேன். போதும், விலக்கு உன் குடையை! எனது தோழியின் பரிகாசத்திற்கு, நான் என்ன பலி ஆடா? இல்லை, உன் விழி வழியும் அமுதத்திற்கு நான் தான் வடிகாலா? முழுதும் நனைந்தது நான் மட்டுமே. என் கண்களுக்குள் கனல் கங்குகள் இன்னும் புகைந்து கொண்டுதான் இருக்கின்றன. உன் மீது எறிந்திடவா?
இன்றும் வந்து நிற்கின்றாய். நேற்று ஊதா நிறக்குடை. இன்று பச்சை நிறம். நாளையும் வருவாயோ! என்ன நிறம் முடிவு செய்துள்ளாய்?! எனது கண்கள் அக்னிப் பந்துகளை இப்பொழுது தயார் நிலையில் வைத்துள்ளன. உன் மீது ஏவுகிறேன். பிடித்துக்கொள். என்ன ஆயிற்று? குடைகளில் பொத்தல்களா? இனியும் இச்சாலை வழி வராதே.
அடப்பாவி! இன்றும் வந்து நிற்கிறான். ஒன்றுக்கு இரண்டாக குடைகள் வேறு. பலே! பலே! என்ன, வாய் பிளந்து நிற்கிறான்? சிந்தித்தபடியே தலை கவிழ்ந்து பார்த்தால், என் இதழ்கள் சிரித்துக்கொண்டிருக்கின்றன. அட சதிகார செவ்விதழ்களா… உங்களுக்குத் தேனும், பாலும் கொடுத்தது இதற்குத்தானா?? அய்யோ, இனி எப்படி அவனை பார்ப்பேன்?!
விரிந்த குடைக்குள் நின்றுகொண்டு, இவன் நனைந்து கொண்டிருக்கிறான். முட்டாள் மன்மதன்!!! ஓடிவிடவா? நின்று கிடக்கவா? என்ன சத்தம்?! அவன் தான் என்னை நோக்கி வருகின்றான். இதழே, இப்பொழுதாவது என் பேச்சைக் கேளேன். விழியே, எங்கே உனது அனல் உருண்டைகள்? ம்ம்… எடுத்து வீசு… ஹ்ம்ம், நீங்களும் துரோகிகள் வர்க்கம் தானா? பனிப்பூவை அவன் மீது வீசிவிட்டு, அனல் குழம்பை என் காலடியில் ஊற்றுகிறீர்கள். என் கால்கள் நடுங்குகிறது. உங்களை இனி நம்பப்போவதில்லை. உங்களை (கண்களை) இறுக மூடப்போகிறேன். மூடிவிட்டேன். என்னது கையில் ஏதோ திணித்துவிட்டு, எங்கு செல்கிறான்? கண் விழித்துப் பார்த்தால், குடையை என்னிடம் கொடுத்துவிட்டு நடந்து செல்கிறான். ஏனடா உன்னோடு அழைத்துச் செல்ல மாட்டாயா? உன் குடைக்குள் எனக்கு இடம் இல்லையா? அழுகிறேன், போ!
மீண்டும் அதே இடத்தில் நிற்கிறேன். அவன் இல்லவே இல்லை. உன் விழி வீச்சைக் கண்டிட, ஆசை கொண்டுள்ளேன். ஆசை அல்ல, பேராசை! பேய் போல உருமாறி என்னை தின்னும், பேராசை. அந்த பேயிடம் இருந்து மீட்டுவிடடா. வந்து நிற்பாயா? நீ தந்த குடைக்குள் பதுங்கட்டுமா? நீ வரும் வரை உனது குடையே சரண். என்ன மாயம் இது! குடைக்குள், நேற்று நான் சிந்திய கண்ணீர் முத்துகள் தோரணமாய்த் தொங்குகிறது. அதைக் கூட சேமித்து வைத்தாயா? அட, மாயக்காரா… வித்தைக்காரா… ஜாலக்காரா… என் இனிய முட்டாள் மன்மதா!
ஏதோ ஒரு உருநிழல். திரும்பிட பயம். இருப்பினும் திரும்பினால் அவன்! போடா… இங்கு தான் ஒளிந்துகொண்டு என்னை பார்த்தபடி நின்றிருந்தாயா? எனது தவிப்பு உனக்கு தேனமுதோ! என்ன, கண்ணீர் முத்துக்களைப் பிடிக்க கை நீட்டுகிறாயா? இந்தா என் துப்பட்டாவை வைத்துக்கொள். இதுதான் உனக்கு நான் கொடுக்கும் தித்திக்கும் தண்டனை… ஆயுள் முழுதும்!!
No comments:
Post a Comment