Saturday, 28 October 2017

நான் பிணம் பேசுகிறேன்

இங்கே ஒரு மனிதன் மரணித்து,
ஒரு மணிநேரம் சென்றுவிட்டது!
என்ன செய்கின்றனர்
என் அருமை குடும்பத்தினர்?
எங்கே போனாள்
என் தர்மபத்தினி லட்சுமி?!
எங்கே போனான்
என் தவப்புதல்வன் குமரன்?!


இதோ வந்துவிட்டாளே,
என் அருமை காமாட்சி!
அய்யோ! இல்லை இல்லை!
என் அருமை லட்சுமி!
நல்லவேளை,
அவளுக்குக் கேட்கவில்லை!!!


என்னை இந்த உலுக்கு
உலுக்குகிறாள்!?
பேயறைந்தவள் போல்
நிற்கிறாள்
நான் ஒன்றுமே இவளைச்
செய்யவில்லையே!
செத்த பின்னும் அந்த வீரம்
எனக்கில்லையே!!


என் செல்லமகன்,
கணினி குமாரும் வந்துவிட்டான்
தனக்குத் தெரிந்த
மருத்துவப் பரிசோதனை முடித்துவிட்டான்
ஏதோ யோசித்தபடி,
வேகமாய் வெளியே சென்றவன்
உண்மையான மருத்துவரை
அழைத்துக்கொண்டு வந்துவிட்டான்


பலே! பலே!
ஒரு மணி நேரத்திற்குள்
ஏற்பாடுகள் ஆகிவிட்டது
உறவுக் கூட்டமும்
வரத் தொடங்கிவிட்டது


அழாதே காமாட்சி!
அய்யோ!
ஆவியாகியும்,
அறிவு வரவில்லை!!
அழாதே லட்சுமி!!
தலைவலி வந்துவிடும்
அதுசரி,
உன் தலைவலியின் உருவம் நான்
இனி உனக்குத் தலைவலி வருவானேன்?


அன்பு மகனே,
கணினி குமாரு!
அழுதுவிடடா!
உணர்வுகளை அமுக்காதே அழுகிப்போகும் மனம்
வேதனையைக் கொட்டிவிடு
அமைதியாகும் நிதம்


என் அன்பு மகள் வந்துவிட்டாள்
பதறி அடித்துக்கொண்டு
என் பேரப்பிள்ளையோடு
என் அழகு மகள் வந்துவிட்டாள்


உன் கண்ணின் நீர்த்துளி
கன்னம் தாண்டும் முன்னே
கைநீட்டித் துடைப்பேனே!
இன்று தாரைத் தாரையாய்
வழியும் நீரைக்கண்டு
மனம் நொந்து நின்றேனே!
கடவுள் எனக்கு வரம் கொடுத்தால்,
உனக்குப் பிள்ளையாய்ப் பிறப்பேனம்மா
எப்பொழுதும்போல் ‘அம்மா’ எனக்கூவி,
உன் நிழலிலேயே கிடப்பேனம்மா!!


இதோ வந்துவிட்டார், மாப்பிள்ளை!!!
திமிரு கொண்ட இளங்காளை,
இன்று தன்மையாய்ப் போனதென்ன?!
மாப்பிள்ளை முறுக்கெல்லாம்
அவர் சட்டைப்பையில் முடங்கியதென்ன?!
இத்தனை நாள்
என்னை வறுத்தெடுத்ததற்காக வாட்டமா?
இல்லை
இனி வறுக்கமுடியாதென்கிற ஏக்கமா?
பரவாயில்லை,
அனைவரையும் மன்னித்த நான்,
உங்களை மன்னிக்கமாட்டேனா,
என் மகளுக்காக?


வந்துவிட்டான்,
என் பங்காளி வந்துவிட்டான்!!!
என்னடா இது!
ஐந்து ரூபாய்க்குப் பக்கோடா பொட்டலம் வாங்கிவராதவன்
இன்று,
ஐநூறு ரூபாய்க்குப் பூமாலை வாங்கிவந்துள்ளான்
ஊருக்கு முன் வேஷம்
உள்ளுக்குள்ளே துவேஷம்


அதென்ன, காற்றிலே ஏதோ காதல் ராகம்?!
ஓ! கதவோரம் காதல் கிளிகள்
அடேய்! இழவு வீட்டிலும்
உங்கள் இம்சை தாங்கமுடியலையே


அட!
இந்த ‘ஒப்பாரி’க் கிழவி வந்துவிட்டாளா?
ஒவ்வொரு துக்க வீட்டிலும்,
அடுத்த சங்கு உனக்கென்றிருந்தேன்
இன்று எனக்கு சங்கு ஊதயிலே,
அழுவாச்சி பாட்டெடுக்க வந்துவிட்டாய்!
எல்லோரையும் வழியனுப்பிவிட்டு
இறுதியாய் மெல்ல வா!!


ஒருமுறை இவ்வுடலுள் செல்வோமா?
கண்களைத் திறந்து பார்ப்போமா?
வேண்டாம்! வேண்டாம்!
அதிர்ச்சியில் அனைவரது
நாடி நரம்பெல்லாம் உறைந்துபோகும்
என்னோடு துணைவர
சில பிணங்கள்கூட விழுந்துபோகும்
ஹாஹாஹா… ஹாஹாஹா
அப்படி ஒன்று அரங்கேறினால்
சிரித்தே மீண்டும் செத்திடுவேன்


இறுதி ஊர்வல நேரமானது
சிறப்பாய் என் அலங்காரமும் முடிந்தது
கொல்லிச் சட்டியைத் தொட்டவுடனே
குமுறிக் குமுறி அழுகிறானே,
என் செல்லக்குக்குட்டி
கணினி குமாரு!!


இறுதியாய்ப் பார்க்கிறேன்...
நான் வாழ்ந்த வீடு,
என் மனைவி, மக்கள்,
உறவுகள், நட்புகள்,
ஆசையாய் வளர்த்த நாய்க்குட்டி
என் தவறுகளை அனைவரும்
மன்னிக்க வேண்டும்
உங்கள் யார்மீதும் எனக்கு
வருத்தம் இல்லை
முழுமையான வாழ்க்கை
அமைதியான முடிவு
நிம்மதியான நித்திரை
ஆனால்,
ஒரே ஒரு குறை,
காமாட்சி மட்டும் வரவே இல்லை!!!

No comments:

Post a Comment