Sunday, 29 October 2017

தவறவிட்ட உறவு

‘அம்மா’ - ஆயிரம் அர்த்தம் உள்ள, அழகான மந்திரச் சொல். நாம் வளரும்போது ஆலமரமாய், வளர்ந்தபின்பு ஆலயமாய், வாழும்காலம் முழுதும் அஸ்திவாரமாய் இருப்பவள் - அம்மா!

பேருந்தில் பயணக்கின்றேன். என் அம்மா மரணப்படுக்கையின் இறுதி நொடிகளை எண்ணிக்கொண்டிருக்கிறாள். நெஞ்சுக்கூட்டில் கசியும் உயிரின் எச்சத்தைக் கண்களில் தேக்கிவைத்துக்  காத்துக்கொண்டிருக்கிறாள். நான் வந்திடுவேன், அவளை ‘அம்மா’ என்று அழைத்திடுவேன் என்று நம்பிக்கொண்டிருக்கிறாள்.

இருபது ஆண்டுகளுக்கு முன், நான் ஐந்து வயது பிள்ளையாய் இருந்தபொழுது, இவளை என் அப்பாவிற்கு மணமுடித்துவிட்டு, காலஞ்சென்றாள், என் பாட்டி. பிறந்தபொழுதே, என்னைப் பெற்றவளைத் தொலைத்தவன் நான். என்னை வளர்த்த பாட்டி, எமதர்மன் வருவதை முன்னமே அறிந்தவள் போல், என் அப்பாவைக் கட்டாயப்படுத்தி மறுமணம் செய்துவைத்தாள்.

என் அப்பா! மிகவும் உன்னதமான உத்தமர். அவரை எண்ணும்போது, என் மேனி சிலிர்க்கும். வயதின் வேகத்தில், சுரப்பிகளின் தூண்டலில், காதலெனும் மாயையில் தன் வாழ்வைத் தொலைத்தவளை, மானத்தை இழந்தவளை ரட்சித்து, மறுவாழ்வு கொடுத்தவர், என் அப்பா. இருளடைந்த வாழ்வில், நம்பிக்கை ஒளியாய் என் அப்பா அவளுக்குத் தோன்றினார்.
அவள், என் அப்பா மீது கடல் போல் பாசம் கொண்டிருந்தாள். அது காதல் இல்லை. ஒரு விதமான பக்தி. எனக்குத் தெரிந்தவரை, ஒரு நாள் கூட, ஒரு நொடி கூட, அந்த பக்தி கடுகளவும் குறைந்ததில்லை. என் அப்பாவும்  கண்ணியம் குறையாமல், மரியாதை தேயாமல் அவளை நடத்துவார்.

அவளுக்கு நான்தான் உயிர். தன் சொந்தப்பிள்ளை போல் அவ்வளவு அன்பு வைத்திருந்தாள். அவளுக்குப் பிள்ளை இல்லை என்பதால் அல்ல. பிள்ளை இருந்திருந்தாலும், நானே செல்லப்பிள்ளையாய் இருந்திருப்பேன். ஆனால் நானோ, கொடூரமான மனம் கொண்டிருந்தேன். ‘சித்தி’ என்றாலே, ‘அரக்கி’ என்று முடிவு செய்திருந்தேன். அவளைக் கண்டபோதெல்லாம், ஏதோ ஒருவித வெறுப்பு என்னுள்ளே பற்றியெறியும். அவள் பாசத்தைப் பொழிவாள், நான் விஷத்தைக் கக்குவேன். காரணமே இல்லாமல் கோபித்துக்கொள்வேன். அவள் வயதுக்குக் கூட மரியாதை தந்ததில்லை. பலரும் பலவழிகளில் என்னைத் திருத்திட எத்தனித்தும், பலனில்லை. இன்று வரை, ஒரு முறை கூட ‘அம்மா’ என்று அவளை அழைத்ததில்லை. ‘ஏய்’, என்று தான் அழைப்பேன்.

நான் ‘அம்மா’ என்று அழைக்கவில்லை என்கிற ஏக்கம் அவள் முகத்தில் எப்பொழுதும் படர்ந்திருக்கும். ஒரு முறை என்னிடம் கேட்டாள், “அம்மா என்று சொல்லேண்டா!”. வந்ததே பிரளயம் போல் ஒரு கோபம், பூகம்பம் போல் ஒரு அகம்பாவம். சாப்பிட்டுக்கொண்டிருந்த வெள்ளித் தட்டை, வீசி எறிந்தேன். சுவரெல்லாம் சோற்றுப்பருக்கை வழிந்தது. அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. வெள்ளித்தட்டு, ஒரு புறம் நசுங்கியது. அன்று மாலை, எதுவுமே நடக்காததுபோல் இருந்தாள். என் அப்பாவிடம், தான் தெரியாமல் வெள்ளித்தட்டை நசுக்கிவிட்டதாகப் பொய்யுரைத்தாள். என் அப்பாவும் நெளிவு எடுக்க, ஆசாரியிடம் சென்றார். ஆனால், இவை யாவும் எனக்கு ஒரு துளி குற்ற உணர்வு கூட தரவில்லை. இன்று எண்ணிப்பார்க்கையிலே, நூறு முறை தூக்கில் தொங்கிடத் தோன்றுகிறது. இப்படி ஆயிரம் ஆயிரம் கதைகள் உண்டு.
பள்ளிப்படிப்பு முடிந்த கையோடு நகரம் வந்தேன், கல்லூரிப்படிப்பு தொடர. பெரிதாய்ப் படித்து, பட்டம் பெற்று, உலகாளும் எண்ணமெல்லாம் இல்லை. அவளை விட்டொழிந்தால் போதுமென்ற ஒரே தேவை மட்டும் தான். முதலில் மிகவும் குதூகலமாக இருந்த உள்ளம், மெல்ல மெல்ல வெறுமையாய்ப் போனது. ஏதோ ஒரு முகத்தை மட்டும் தேடியது. உற்றார், உறவினர், நண்பர், ஏன், என் அப்பாவைக் கூடத் தேடவில்லை. இவள் முகம் காண ஏங்கியது உள்ளம். ஆனால், என் தலையின் உச்சியில் வழிந்த திமிரு, அவ்வப்போது என் இதயத்தை அடக்கி ஆண்டது.

படிப்பு முடித்து பணியில் அமர்ந்தபின், முதல் முறையாக, அவளை எண்ணும்போதெல்லாம் ஒரு குட்டி குற்றவுணர்வு பிறந்தது. ஆனால், அதை ஒதுக்கிவைக்கப் பழகிக்கொண்டேன். அவளை விட்டு விலகி ஓட நினைத்தேன். இன்று, அவள் என்னைவிட்டுப் பறந்துபோகப்போகிறாள்.

படுக்கையில், வாடிய முகத்தோடு, வதங்கிய தேகத்தோடு, நொந்த மனதோடு கிடக்கிறாள். ஒளிக்குறைந்த கண்களைத் திறந்து என்னைப் பார்த்தாள். உடனே, முகத்தில் ஒரு தெளிவு பிறக்க, ஒரு புன்னகைப் பூத்தாள். என் இதயம் இரண்டாகப் பிளந்தது. கண்கள் ஈரமானது. “அம்மா!” என்று அழைத்தேன். அவள் கண்களில் பெரிய நீர்பெருக்கு. அவளது புன்னகை விசாலமானது. அசைவுகள் ஓய்ந்துபோனது. அவள் உயிர் விலகிப்போனது. இவ்வுலகில், எனக்கென்றிருந்த ‘அம்மா’ என்ற உறவு, முடிந்துபோனது. இனி ஆயிரம் முறை நான் அழைத்தாலும், என் அம்மாவின் காதுகளுக்கு அது கேட்கப்போவதில்லை!

No comments:

Post a Comment