Friday, 27 October 2017

காணாமல் போன உள்ளம்

கண்ணாடி முன் நிற்கின்றேன்
என் செருக்கு சிலிர்க்கப் பார்க்கின்றேன்
மூர்த்தி சிரிதாயினும்
கீர்த்தி மிகையான ஆண்மகன்!
பளீரென்ற முகம்
படர்ந்த தோள்கள்
அய்யோ!
இதென்ன நெஞ்சிலே பெரும் பள்ளம்?
என்ன இழந்துவிட்டேன்??
எங்கே தொலைத்துவிட்டேன்??
அடடே!
என் உள்ளத்தைக் காணவில்லை!
எவ்விடம் விழுந்ததோ?!
எங்கே உருண்டோடியதோ?!
வந்த வழியெல்லாம் தேடிச்செல்வோம்
நிச்சயம் கண்டெடுத்து வீடு வருவோம்

இந்த சாலையில் முதலில்
தேடுதல் வேட்டை தொடங்கிடுவோம்
இங்கு இல்லை!
அந்த ஏரிக்கரையினிலே….
அங்கும் இல்லை!
ஒற்றைவழிப்பாதையிலே…
அங்கும் இல்லை!
தடாகச் செடியிடையே…
இல்லவே இல்லை!
தென்னைமரத் தோப்பினிலே…
ம்ஹும் இல்லை!
கோயிலின் மதிலருகே…
இல்லையே!
குலத்தங்கரையினிலே…
இல்லை! இல்லை!
மலையடி குகையினிலே…
மலையின் உச்சியிலே…
வரப்பின் மத்தியிலே…
வாய்க்காலின் வழியினிலே…
அடக்கடவுளே!
எங்குமே இல்லையே!
எங்குதான் சென்றதோ,
பொல்லாத உள்ளம்
பார்க்கப் பிடிக்கலையே
நெஞ்சின் பள்ளம்

ஓய்ந்துபோன கால்கள்
ஓய்வெடுக்க முடிவெடுத்தேன்
ஆலமர மேடையின்மேல்
ஆசுவாசமாய் அமர்ந்துவிட்டேன்
மூளை தளராமல்
கசக்கிப்பிழிந்து யோசிக்க
ரத்தம் வடிந்த நெஞ்சை
மெல்ல மெல்ல நீவிவிட்டேன்

என்ன ஏதோ ஒளிப்பிழம்பு!!
யாரங்கே காத்திருப்பது??
அருகில் சென்று பார்த்தால்
அழகாய் ஒரு தேவதை!
அவள் உள்ளங்கையில் என் உள்ளம்
பறந்துபோனது என் வேதனை

ஓ!
இவள் என் காதல் தேவதையல்லவா?!
காதல் நோயுண்ட உள்ளம்
தானே தன் வழித்தேடி
இவளிடம் கொண்டது தஞ்சம்

அடி பெண்ணே!
உன்னிடமே வைத்துக்கொள்
இந்த பாழாய்ப்போன உள்ளத்தை
என் நெஞ்சுக்குழி போதும்
அது அள்ளித்தரும் உன் நினைவை!!

No comments:

Post a Comment