யாருமில்லா நடைப்பாதையில்
ராகசியமாய் என் கை சேரும்
உன் விரல்களும்
பலரின் மத்தியில்
அவ்வப்போது எனைத் தீண்டிச் செல்லும்
உன் விழிகளும்
எனக்கென்று சிறப்பாக
நீ சமைத்துவரும் பலகாரப் பொட்டலங்களும்
மாதத்தின் ‘அந்த’ நாட்களில்
காரணமின்றி கோபம் கொண்ட ஊடல்களும்
கோபம் களைந்தபின்னே
என் தோள்சாய்ந்து நடத்தும் சமாதானங்களும்
பேசிப்பேசி ஓய்ந்தபின்னே
என் உள்ளங்கையில் நீ வரைந்த கோலங்களும்
எத்தனை எத்தனை நினைவுகளடி
நினைக்க நினைக்க உருகுதடி
ஒன்றன்பின் ஒன்றாய்த் தெரியுதடி
கண்களில் நீரும் பெருகுதடி
என் வாழ்வில் ஒளிசேர்க்கும்
பெண்சூரியன் நீயடி
என் உயிரின் பொருளாகும்
தூயஜீவன் நீயடி
இன்பங்களை அள்ளித்தந்து
என்னருகே உறங்குகின்றாய்
என்னவள் என்று செருக்கேறி
உனை ரசித்தபடி கிறங்குகின்றேன்
காதோரம் நரை விழுந்தும்
காதல் மேலும் ஓங்குதடி
என் ஆவிக்குத் தீ வைத்தாலும்
என் காதல் மட்டும் அழியாதடி!!
No comments:
Post a Comment