Ad Text

Saturday, 21 October 2017

என்னவென்று சொல்வேனடி?!

மாலைநேரத்து மோகனமே
என் மடிமேல் கிடக்கும் சீதனமே
ஆனந்தக் கூத்தாடும் என் மனதை
என்னவென்று சொல்வேனடி?!

காதல் நோயுற்று நான் கண்ட
சில சில இன்பதுன்பங்களையும்
பல பல துன்பஇன்பங்களையும்
என்னவென்று சொல்வேனடி?!

எட்டி நின்றே உனை ரசித்து
மலரோடும் காற்றோடும் உறவாடி
உயிரில் தீட்டிய காதல் காப்பியங்களை
என்னவென்று சொல்வேனடி?!

காதல் முதிர்ந்து என்னை முட்டித்தள்ள
ஒவ்வொரு அணுவும் வீரம் கக்க
உன்னிடம் காதல் பிரகடனம் செய்ததை
என்னவென்று சொல்வேனடி?!

‘ஒருவழியாகக் காதலை சொன்னாயே’
என்று கூறி நீ சிரிக்க
புரிந்தும் புரியாமலும் நான் விழிக்க
என்னவென்று சொல்வேனடி?!

என் வாழ்வில் வந்த மோகனமே
இப்பொழுது மடியில் தவழும் சீதனமே
ஆனந்தக் கூத்தாடும் என் மனதை
என்னவென்று சொல்வேனடி?!

No comments:

Post a Comment