காலை, அலுவலகத்திற்குத் தயாராகி வந்த ரித்து, தனது அம்மாவைத் தேடி அடுக்களைக்குள் சென்றாள். அடுப்பில் ஏதோ கொதித்துக்கொண்டிருக்க, தன்னை மறந்து கண்கள் கலங்கிய நிலையில் அவளது தாய் நின்றிருந்தாள்.
“அம்மா…”
ரித்து, அம்மாவின் கையைப் பற்றினாள். தலையுயர்த்தி மகளைக் கண்டவள் முகநாடி துடிக்க மீண்டும் கலங்கத் தொடங்கினாள்.
“அம்மா, இப்போ எதுக்கு அழறீங்க?”
“நான் ஏன் மா அழப்போறேன்? உன் தியாகத்தை நினைச்சு ராத்திரியிலேர்ந்து தாரைத் தாரையாய்க் கண்ணீர் கொட்டுது. ரொம்ப சந்தோஷம் ரித்து, பூரிச்சுப் போய் நிக்கறேன்…”
தனது ஆதங்கத்தை மொத்தமாக மகளின் தலையில் கொட்டினாள்.
“அம்மா…”
“என்னால உன் விருப்பத்துக்கு சம்மதிக்க முடியாது…”
வெட்டும் வார்த்தை கூறியவள், தனது கரத்தினைப் பற்றியிருந்த மகளின் கையைத் தட்டிவிட்டு வரவேற்பறையில் சென்று அமர்ந்துகொண்டாள்.
வழிந்த விழிநீரைத் துடைத்தபடி வந்த ரித்து, அழுதுகொண்டிருந்த அம்மாவிற்கு சமாதானம் கூறாமல் கவலையாய் உடன் அமர்ந்திருந்த தந்தையைக் கண்டாள்.
“அப்பா…”
“பாப்பா, இங்க வந்து உட்காரு மா…”
தந்தையின் பரிவு அவளுக்கு ஆறுதலாக இருந்தது.
“உன்னைக் காயப்படுத்தணும்னு நாங்க சொல்லல. அம்மா சொல்ற மாதிரி, நீ எதுக்கு உன் வாழ்க்கையைத் தியாகம் பண்ணனும்னு நினைக்கற? ஒரு வயசு வேகத்துல இப்படித் தோணும். நல்லா இருக்கும்னு கண்மூடித்தனமான நினைப்பு வரும். ஆனா, ப்ராக்டிகலா இதெல்லாம் சரி வராது மா…”
மெலிதாய் சிரித்துக்கொண்டவள், அவளது புகைப்படங்களும், சிறு வயது முதல் வென்ற பரிசுகளும், பதக்கங்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி அலமாரியின் முன் சென்று நின்றாள்.
“அப்பா, இங்க இருக்கற மெடல்ல இந்த ஒன்னு மட்டும் தான் நீங்க எல்லார்கிட்டயும் காட்டி பெருமைப்படுவீங்க” என்றபடி, அங்கிருந்த ஒரு பதக்கத்தினைக் கையில் எடுத்தாள்.
“சின்ன வயசுல ஸ்கூல்ல ஒரு தடவை ரன்னிங் ரேஸ் வச்சாங்க. என் பிரெண்டுக்கு கால் சரியா நடக்க வராது. அவளும் ரேஸ்ல கலந்துக்கிட்டா. போட்டி ஆரம்பிச்சதும் எல்லாரும் ஓடிப்போயிட்டாங்க. அவ தத்தித்தத்தி நடந்து வந்தா. நான் அவளோட கையைப் பிடிச்சுக்கிட்டு கூட நடந்து வந்தேன். நானும் அவளும் தான் கடைசியா அந்தப் போட்டியை முடிச்சோம். ஜெயிச்சவங்கள விட, தோத்துப்போன எங்களுக்குத் தான் எல்லாரும் கை தட்டினாங்க. இதோ இந்த மெடல எனக்குக் கொடுத்தாங்க. அப்பா, நடக்கமுடியாத என் பிரெண்டுக்கு நான் உதவி செய்ததா நீங்க எல்லார்கிட்டயும் சொல்லுவீங்க. ஆனா, அது அப்படி இல்லை பா. அந்த நேரத்துல, அந்தப் போட்டியோ, ஜெயிச்சா கிடைக்கப்போற பரிசோ, பாராட்டோ எனக்கு முக்கியமா படல. என் பிரெண்டு மட்டும்தான் எனக்கு மிகவும் முக்கியமா பட்டா. அவளோட எப்பவுமே நான் சிரிச்சுட்டே இருப்பேன். நிறைய ஜோக் சொல்லுவா. இன்டெர்வல் விட்டா எல்லாப் பிள்ளைங்களும் விளையாட ஓடிடுவாங்க. ஆனா, நாங்க மட்டும் க்ளாஸ்ல கதை பேசி சிரிச்சுக்கிட்டு இருப்போம். என் வாழ்க்கையில அவளோட நான் படிச்ச அந்த சில வருடங்களை என்னால மறக்கவே முடியாது. தினம்தினம் சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வர்ற அளவுக்கு சந்தோஷமா இருந்த நாட்கள். அவ இன்னமும் அப்படியேத்தான் இருக்கா. அஞ்சு நிமிஷம் போன்ல பேசினா கூட அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அன்னைக்கு என்னைச் சுற்றியிருந்த உலகம் எனக்கு முக்கியமாப் படல. என் தோழியும், எங்களுக்குள்ள இருந்த நட்பும் தான் எனக்குப் பெருசா இருந்தது. இப்பவரைக்கும், நான் அதே மனநிலையில தான் இருக்கேன். ஆனா, அடுத்தவங்க விருப்பத்துக்கும், வாழ்க்கைக்கும் இந்த உலகம் ஒரு டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் (terms and conditions ) கொடுத்து, கேள்வி கேட்காம ‘ஐ அக்ரி’ (I agree ) னு கையெழுத்து போடச் சொல்லுது. ஹ்ம்ம்… அப்பா, நான் உங்க கிட்டயும், அம்மா கிட்டயும் என் ஆசையைத்தான் சொன்னேன். அடம்பிடிக்கல. நீங்க என்ன சொன்னாலும் கேட்கறேன். ஆனா, மறக்க, கொஞ்ச கால அவகாசம் வேணும்…”
நிதானமாய் பேசிய மகளிடம், மறுதளிக்க அவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை.
“நான் ஆபிசுக்கு கிளம்பறேன் மா…”
அவள் கூறிக்கொண்டு கிளம்பிய பிறகும், சில நிமிடங்கள் அவர்கள் அசைய மறந்து அமர்ந்திருந்தனர்.
கடிவாளம் கொண்டு மனதினை அவள் அடக்க முயற்சிக்க, அதுவோ, முடியாதென்று மல்லுக்கட்டி, அவனது நினைவுகளில் முக்குளித்தது.
“வணக்கம் சார்!”
வீட்டு வாயிலில் நின்றிருந்த ரித்துவின் பெற்றோரைக் கண்டு, யாரென புரியாமல் ராகவின் தந்தை யோசனையாய் நின்றிருக்க,
“கல்யாண விஷயமா வந்திருக்கோம்” என்று ரித்துவின் தந்தை விளக்கியதும், உடனே வீட்டினுள் அழைக்கப்பட்டு உபசரிக்கப்பட்டனர்.
தங்களைப் பற்றிய விவரங்கள் கூறிய ரித்துவின் தந்தை, மகளின் புகைப்படத்தை ராகவின் பெற்றோரிடம் கொடுத்தார்.
‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?!’ என்று ராகவின் அம்மா யோசனையாயிருக்க, வீட்டினுள் நுழைந்தான், ராகவ்.
அவனது தீர்க்கமான முகம் ரித்துவின் பெற்றோரைக் கவரத் தவறவில்லை. ‘வணக்கம்’ என்றபடி அவர்களின் எதிரே வந்தமர்ந்தவனின் பணிவு அவர்களுக்குக் கண்டதும் அவன் மீது நன்மதிப்பை ஏற்படுத்தியது.
“கல்யாண விஷயமா பேச வந்திருக்காங்க பா…” என்று அவனின் அம்மா கூற, பெரிதாய் ஆனந்தமும் இன்றி, வேண்டா வெறுப்புமின்றி அமைதியான முகபாவத்தோடு அமர்ந்திருந்தான்.
“பொண்ணு என்ன படிச்சிருக்கா?”
ராகவின் தந்தை வினவ, அவனின் அம்மா, ரித்துவின் புகைப்படத்தை அவனிடம் நீட்டினாள். புகைப்படத்தினைக் கண்டதும் அவளை அடையாளம் கண்டுகொண்டவன், நெற்றி சுருங்கி யோசனையாகிப்போனான்.
“பொண்ணு M.Com படிச்சிருக்கா…” என்று கூறிய ரித்துவின் தந்தை, ராகவனைக் கண்டு, “நீங்க ரெண்டொருதரம் பாப்பாவை, ஐ மீன், ரித்துவைப் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கறேன். உங்களோட பழகினதில்லை ஆனா, உங்க மியூசிக் ரொம்பப் பிடிக்கும்னு சொன்னா. உங்க நல்ல குணத்தைப் பத்தி நிறையவே சொல்லியிருக்கா…” என்று கூறிக்கொண்டிருக்க, ராகவனின் முகமோ இறுகத் தொடங்கியது.
“உங்கப் பொண்ணு பேசுவாளா?”
வியப்பாகிப்போனார், ராகவனின் தந்தை. உடன் ஆச்சர்யமாய் ராகவனின் தாயும் பார்த்துக்கொண்டிருக்க,
“பேசுவாளே…” என்று தயங்கித்தயங்கி கூறியவர், “ஒரு தடவை அவ பிரெண்டோட இங்க வந்து வயலின் கிளாஸ் பத்தி விசாரிச்சுட்டு போனதா அவ சொன்னா… உங்களுக்கு நியாபகம் இல்லையா?” என்றார் ராகவனின் தாயிடம்.
“அப்பவே நினைச்சேன், எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’ன்னு…”
திடீரென ராகவனின் தாயின் முகத்தில் சொல்லொணா பூரிப்பு பொங்கியது.
“சின்ன பிள்ளைங்க ஏதோ விளையாட்டா இங்க வந்துட்டு போயிருக்காங்க. ஆனா, தன்னோட விருப்பத்துல என் பொண்ணு ரொம்பவே தெளிவா இருக்கா…”
“என் பிள்ளையைப் பத்தி தெரிஞ்சும் உங்கப் பொண்ணு இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கான்னா, உண்மையிலேயே பாராட்டியே ஆகணும்…” என்று அவனின் தாய் கூற, அவனோ வெடுக்கென எழுந்து அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டான்.
அவனது இச்செயல் அனைவருக்கும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் கொடுத்தாலும், “ரொம்ப டயர்டா இருக்கான் போல…” என்று ஒருவாறு சமாளித்த அவனது தாய், கதவினைத் தட்ட, கதவு திறக்கப்பட்ட வேகத்தில் அவனது கோபம் அனைவருக்கும் புரிந்தது. உள்ளே சென்ற அவனது தாயைத் தொடர்ந்து அவனது தந்தையும் செல்ல, கலங்கிய கண்களை ரகசியமாய்த் துடைத்துக்கொண்ட மனைவிக்கு சமாதானம் கூற முடியாமல் கனத்த இதயத்தோடு மௌனத்திருந்தார், ரித்துவின் தந்தை.
சில நிமிடங்கள் கழித்து வெளிப்பட்ட ராகவின் அப்பா,
“ஒண்ணுமில்ல… இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு நினைக்கறான்…” என்று இம்முறை அவர் சமாளித்தபடி வந்தமர்ந்தார். சற்று தள்ளி போடப்பட்டிருந்த உணவு மேஜையில் வந்தமர்ந்த ராகவின் அம்மா, அவ்வப்போது கண்களைத் துடைத்தபடி அமர்ந்திருந்தாள்.
“அது… மாடில மியூசிக் சென்டர் கட்டி ரெண்டு மூணு வருஷம் தான் ஆகுது. ராகவ் தான், அவன் வேலை செய்யற இடத்துல லோன் போட்டு அதைக் கட்டினான். அந்த லோன் முடிஞ்சதும் இப்பத்தான் சமீபத்துல ஈ.எம்.ஐ.ல பைக் வாங்கினான். அதுக்குள்ள கல்யாண செலவெல்லாம் கொஞ்சம் கஷ்டம்னு நினைக்கறான். இப்போதைக்கு வேண்டாம்னு சொல்ற பையன கட்டாயப் படுத்த முடியாதில்லையா?”
ராகவின் தந்தை சூசகமாய் மகனின் விருப்பமின்மையைக் கூறியதை உணர்ந்து கொண்ட ரித்துவின் பெற்றோர், மேற்கொண்டு எதுவும் பேசாது விடைபெற்றுக்கொண்டனர்.
No comments:
Post a Comment