நாள் முழுதும் திருமண பரபரப்புகள் ஓய்ந்து, இரவு முகூர்த்தத்திற்கு தயாராகிய ரித்துவிற்கு, உள்ளுக்குள்ளே புதுவித தவிப்புகள் சிறகடித்தன. ராகவின் இல்லத்தில் பலரும் குழுமியிருக்க, உணவு மேஜையின் அருகே நின்றிருந்தவளின் கண்களுக்கு, சற்று தள்ளி சோபாவில் அமர்ந்திருந்த ராகவ் மட்டுமே தெரிந்தான். சிக்கனமான புன்னகையோடு, பிறர் கூறுவதை அவன் கேட்டுக்கொண்டிருக்க, அவளது இதழும் அவன் சிரிக்கும் சென்டிமீட்டர் அளவே சிரித்திருந்தது. உள்ளங்காலில் ஏதோ குறுகுறுக்க, ஒரு காலின் மீது மற்றொன்றை வைத்து அழுத்திக்கொண்டவள், கை விரல்களை இறுகக் கோர்த்துக்கொண்டாள்.
“நேரமாகுது… பிள்ளைங்களுக்கு ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று பெரியவர் ஒருவர் கூற, புதுமணத் தம்பதிகள் அனைவரின் முன்பு வணங்கி நின்றனர். முதலில் ராகவ் தனது அறைக்குள் சென்றுவிட, பாலினைக் கையிலேந்தி ரித்து பின் சென்றாள்.
அவன் அருகே சென்று நின்றவள், பாலினை அவனிடம் நீட்ட, ‘வேண்டாம்’ என்று தலையசைத்ததும் அருகே மேஜையின் மீது வைத்துவிட்டு, அமைதியாய் நின்றிருந்தாள்.
‘உட்காரு’ என்று அவன் சைகை காட்ட, சற்று இடைவெளிவிட்டு அமர்ந்துகொண்டவளின் முகத்தில் ஆயிரமாயிரம் சந்தோஷ ரேகைகள்.
பெருமூச்செடுத்தவன், அவளிடம், ‘என்னை எப்படி உனக்குப் பிடிச்சுது?’ என்றான். வெறுப்பிற்கு விளக்கமுண்டு, விருப்பத்திற்கு ஏது விளக்கம்?!!
அவள் நாணப் புன்னகை சிந்தியபடி, “தெரியல… ஆனா… ரொம்பப் பிடிக்கும்…” என்றாள்.
அவனது திருமுகத்தை அவள் பார்த்துக் கொண்டிருக்க, அவனோ, ‘என்னை மாதிரி வாய் பேசமுடியாத பெண்ணைத்தான் கல்யாணம் செய்துக்கணும்னு ஆசைப்பட்டேன், ஆனா அம்மா தான் கட்டாயப்படுத்தி இதுக்கு சம்மதிக்க வச்சாங்க’ என்று சைகை காட்ட, அவளது மொத்த மகிழ்ச்சியும் வற்றிப்போனது. அவள் அதிர்ச்சியில் அசையாது அமர்ந்திருக்க, அதை உணராமல், ‘நான் பேசறது உனக்குப் புரியுதா? என்னோட சைகை உனக்குப் புரியுதா?’ என்றான் வேண்டாவெறுப்பாக.
நிதானத்திற்குத் திரும்பியவள், “புரியுதுங்க. நான் கல்யாணத்துக்கு முன்னாடி சைன் லாங்குவேஜ் (Sign Language ) கத்துக்கிட்டேன்…” என்றாள் உயிரோட்டமற்ற குரலில்.
அவன் வேறு புறம் முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருக்க,
“உங்களுடைய உதவுற குணம் எனக்கு நல்லாத் தெரியும். நம்ம கல்யாணம் நடந்ததால எதுவும் மாறிடப் போறதில்லை. உங்களோட சேர்ந்து நானும் உதவறேன்” என்று இவள் கூற, அவளது முகத்தினைக் கண்டவன் அவள் கூறியதற்கு எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாமல், ‘அந்தப் பக்கம் படுத்துக்கோ’ என்று சைகை செய்ய, அமர்ந்திருந்தவள் உடனே எழுந்துகொண்டாள். அவன் ஒருபுறம் படுத்துக்கொள்ள, இவள் மறுபுறம் படுத்துக்கொண்டாள்.
மனதில் உள்ள காதலை முதன்முறை அவன் முகம் பார்த்து, அவனிடம் கூறவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. திருமணத்திற்கு முன் தனிமையில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைக்காமல் போனதில் வருத்தம் கொண்டிருந்தவளுக்கு, அதன் காரணியான அவனது விருப்பமின்மை எனும் உண்மை, அவளது மனதை அறுத்தது. ‘ஏன் ராகவ் என் மேல எந்தவித ஈர்ப்பும் இல்லாம இருக்கீங்க? பேசக்கூட விருப்பமில்லையா? என் மனசுல உள்ளதை உங்கக்கிட்ட சொல்லணும்னு தானே காத்துட்டு இருந்தேன்… ரொம்ப ஈஸியா என்னை எட்டி நிறுத்திட்டீங்க… பரவால்ல, ஆயுசுக்கும் என் கூடத்தானே வாழப்போறீங்க… போகப் போக புரியும்…’
திருமணம் முடிந்து மூன்று நாட்கள் கடந்திருந்த நிலையில், காலையில் தயாராகி உணவு மேஜை நாற்காலியில் வந்தமர்ந்தான், ராகவ்.
“என்னடா ராகவா நீ? அதுக்குள்ள வேலைக்குக் கிளம்பிட்ட? லீவு இருக்குனு சொன்னியே?”
வினவியபடி அம்மா வந்து நின்றாள்.
‘நேரமாகுது, டிஃபன் எடுத்து வைங்க’ என்று அவன் தன் தாயிடம் சைகை செய்ய, தட்டு வைத்து பரிமாறத் தொடங்கினாள், ரித்து.
“ஏன்மா நீயாவது அவனைக் கேட்க மாட்டியா?”
“பரவால்லீங்க அத்தை…” என்றவள், தனது சின்னச்சிரிப்பில் வாட்டத்தை மறைத்துக்கொண்டாள்.
அமைதியாய், ராகவன் அருகே மற்றொரு நாற்காலியில் அமர்ந்த அவனது அன்னை,
“ஏன்மா நீ எப்போ வேலைல திரும்ப சேரணும்?” என்றாள், ரித்துவிடம்.
“நான் ஒரு மாதம் லீவு போட்டிருக்கேன் அத்தை…”
“அப்படியா… சரி சரி… நீ வேலைக்குப் போயி சம்பாதிச்சுக் கொடுக்கணும்னு நான் நினைக்கல. ஆனா, நாலு காசு சேர்த்து வச்சுக்கிட்டா நல்லது தானே. ஊர்ல நிலமெல்லாம் இருந்தது. இவனுக்கு சின்ன வயசுல ட்ரீட்மெண்டுக்காக எல்லாம் வித்து செலவு பண்ணிட்டேன். மிச்சம் இருக்கறது இந்த வீடும், என் கைல கழுத்துல இருக்கற இந்தப் பத்து பவுனும் தான்.”
“அத்தை…”
“இல்லை மா, உனக்கு வீட்டு நிலவரம் தெரியணும்னு சொன்னேன். மாமாவும் ரிட்டையர் ஆயிட்டாங்க. பென்ஷன் கிடையாது. நீங்க ரெண்டு பேரும் தான் இனிமேல் சம்பாதிச்சு நாலு காசு சேர்க்கணும்.”
“சரிங்க அத்தை…”
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க, அமைதியாய்ப் புகைந்து கொண்டிருந்தவன் வெடுக்கென எழுந்து, ‘நீங்க இழந்ததெல்லாம் திரும்ப சம்பாதிக்க எனக்குத் தெரியும், வேற யாரும் சம்பாதிச்சு எனக்குக் கொட்டவேண்டாம்’ என்று தாயிடம் கோபப்பட்டவன், ‘நீ இனி வேலைக்குப் போக வேண்டாம்’ என்று சம்பந்தமே இல்லாமல் ரித்துவிடமும் தனது வெறுப்பினை கொட்டிவிட்டுச் சென்றான். அவனது கோபத்தைக் கண்டு சற்றே பயந்தவள், அவனைத் தொடர்ந்து வாயிலில் சென்று நிற்க, அவளிடம் கூறிவிட்டுச் செல்ல வேண்டும் எனும் சிறு கரிசனத்தையும் மறந்து, வண்டியைக் கிளப்பிக்கொண்டு சென்று மறைந்தான். கண்களில் நீர் பொங்க நின்றிருந்தவள், ‘நான் யாரோ எவளோ’வா? இருக்கட்டும் உங்களை வச்சுக்கறேன்’ என்று எண்ணிக்கொண்டவள், கண்களைத் துடைத்துக்கொண்டு தனது இயல்பிற்குத் திரும்பினாள்.
வார இறுதியில் மதிய உணவு முடிந்து ராகவின் பெற்றோர் இளைப்பாறிக் கொண்டிருக்க, ‘சென்னிக் குளநகர் வாசன் தமிழ் தேறும் அண்ணாமலை தாசன்…’ எனும் பாடலை முணுமுணுத்தபடி அவள் வீட்டினை சுத்தம் செய்துகொண்டிருக்க, கணினியில் காரியமே கண்ணாய் அமர்ந்திருந்தவனின் கவனத்தை அவளது கானம் ஈர்த்தது.
“அடடே, நீ பாட்டெல்லாம் பாடுவியா மா?” என்றார், ராகவின் தந்தை, ஆச்சர்யமாய்.
“இல்லை மாமா. கத்துக்கணும்னு ஆசை. ஏனோ கத்துக்க முடியாமலே போயிடுச்சு.”
“அப்படியும் நீ நல்லா பாடறியே…”
“தேங்க்ஸ் மாமா, நம்ம வீட்ல அந்தக் காலத்து ஆடியோ கேஸட்லேர்ந்து டிவிடி வரை இவ்வளவு இருக்கு. உங்களுக்கும் சங்கீதம்னா ஆர்வமா மாமா?”
“ம்ம், கேட்கப் பிடிக்கும். ஆனா என்னைவிட உன் அத்தைக்கு ரொம்பவே பிடிக்கும். அவ முறையா கர்நாடக சங்கீதம் படிச்சிருக்கா. அந்தக் கேசட்டுல அவ பாடி ரெகார்ட் பண்ணதும் சிலது இருக்கு.”
ஆச்சரியமான ரித்து, “அப்படியா அத்தை? நீங்க சொல்லவே இல்லை என்கிட்ட. எனக்காக ஒரு பாட்டுப் பாடுங்களேன்” என்றாள் அத்தையிடம், அசையாசையாய்.
“இல்லமா, நான் பாடறதை விட்டு ரொம்ப நாள் ஆச்சு…”
“அப்படி சொல்லாதீங்க அத்தை, ரெண்டு வரி எனக்காகப் பாடுங்களேன்…” என்று விடாப்பிடியாக ரித்து நிற்க, கண்கள் கலங்கியபடி எழுந்து நின்றவள்,
“நான் தான் பாட முடியாதுனு சொல்றேன்ல, அப்புறமும் எதுக்கு என்னைக் கட்டாயப் படுத்தற? என் பிள்ளை பேச முடியாம தவிக்கும்போது என்னைப் பாட்டு பாடி கொண்டாடச் சொல்றியா? என்னைக்கு அவனால பேச முடியாதுனு எல்லா டாக்டரும் கை விரிச்சுட்டாங்களோ, அன்னைக்கே என்னோட பாட்டும் நின்னு போச்சு. நீ பாடுவ, ஏன்னா என்னோட வலி உனக்குத் தெரியாது. என் வலி எனக்கு மட்டும் தான் தெரியும்” என்று பொரிந்துத் தள்ளியவள், தனது அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள்.
“அவ ஏதோ உணர்ச்சிவசப்பட்டு அப்படி பேசிட்டா, நீ மனசுல வச்சுக்காதமா” என்ற ராகவின் தந்தை, மனைவியை சமாதானம் செய்ய அறைக்குள் சென்றுவிட, தனது அறைக்குள் கலங்கிய விழிகளோடு நுழைந்தாள் ரித்து. மேஜை மீது தலை வைத்து சாய்ந்தபடி, அருகே வைக்கப்பட்டிருந்தது வயலினை மெதுவாய் மீட்டிக்கொண்டிருந்த ராகவைக் கண்டாள். மேலும் சில துளிகள் அவளது கன்னத்தில் வடிந்தன, ஆனால் இம்முறை அத்தைக்காக அன்றி அவனுக்காக வழிந்தன.
No comments:
Post a Comment