Friday, 1 January 2021

வயலின் பேசியதே - 13 (Final)

வீட்டிற்குள் நுழைந்த ரித்துவைக் கண்ட அவளது அன்னை,

“வா ரித்து! மாப்பிள்ளை எங்க?” என்றவளது ஆர்வம், வாடியிருந்த மகளின் முகத்தினைக் கண்டதும் வற்றிப்போனது. 

“பாப்பா… என்னமா ஆச்சு?”

தவித்துப்போனார், தந்தை. ஆனால், ரித்து பதில் கூறாமல், தனது அறையினுள் சென்று, கட்டிலின் மேல் படுத்துக்கொண்டாள்.


“இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? அவங்க வீட்டுக்கு போன் போட்டு என்ன ஆச்சுன்னு கேளுங்க…”

அரை மணி நேரமாக தவித்துக்கொண்டிருந்த ரித்துவின் அன்னை, பொறுமையிழந்து கணவனிடம் வலியுறுத்த,

“இரு, நம்ம பொண்ணு ஒன்னும் சொல்லாம அவங்கள என்னன்னு கேட்கறது?” என்று அவர் குழம்பி நின்றார்.


இமை மூடிக் கிடந்தவளின் விழியிலிருந்து நீர் வடிந்துகொண்டிருந்தது. அவளது காயப்பட்ட உள்ளம் மௌனமாய் அழுதுகொண்டிருந்தது. ராகவின் நினைவுகளும், அவன் மேல் கொண்ட நேசமும் உயிரை உருக்கியது. அவனது வயலினிலிருந்து பொங்கிப்பெருகும் இசை காற்றின் வழியே அவளின் செவிகளைத் தீண்டியது. நினைவுகளின் நாதம் என்று எண்ணியவளுக்கு, விடாது பொழிந்த இசை, நிகழ்ந்து கொண்டிருக்கும் நிஜம் என்று உணர்த்தியது.


திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவள், கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியே ஓடிவர, வீட்டு வாயிலில் நின்றபடி அவளுக்குப் பிடித்த வயலினை இசைத்துக் கொண்டிருந்தான், ராகவ். ஓடிச் சென்றவள் அவன் எதிரே நிற்க, வாசிப்பினை நிறுத்தியவன், அவள் முன்னே மண்டியிட்டு, வயலினைக் கீழே வைத்துவிட்டு இரு கைகளையும் விரித்தான். மன்னிப்புக் கோரி, அவனது விழிகள் நீர்மணிகளை உதிர்த்தன. அவனது கைகளைப் பற்றிக்கொண்டவள், அழுதபடி அவனைக் கண்டு சிரிக்க, மெல்ல எழுந்தவன் அவளைப் போல் கண்ணீரின் மத்தியில் சின்னச்சிரிப்பினைச் சிந்தினான்.


அவள் பார்த்துக்கொண்டிருக்க, அவள் இதழ் மலர அவன் ஏங்கி நின்றான். அவளது முகத்தினைக் கையிலேந்தியவன், ‘பேசு’ என்பது போல் தலையசைக்க, ‘மாட்டேன்’ என்று மறுத்து தலையசைத்தாள், இதழ்களைப் பூட்டியபடி. பதறியவன், ‘இல்லை நீ பேசு… நீ பேசணும்… நான் கேட்கணும்… என் மனசுல நினைக்கறது உனக்குப் புரியுதுல்ல? அதெல்லாம் நீ பேசு… நீ பேசறதைக் கேட்டு நான் சந்தோஷப்படணும்…’ என்று அவன் மன்றாட, “சரிங்க” என்றாள், மகிழ்ச்சி பொங்க. 


அவன் இதழ் பிரித்து ஏதோ சொல்லத் துடிக்க, அவனது நெஞ்சு மேலும் கீழும் எழுந்து அடங்கி மூச்சிரைக்க, கண்கள் கண்ணீரைக் கட்டவிழ்த்துவிட, அவனது முகத்தினைத் தனது கைகளில் ஏந்தியவள், “நிஜமாவா?” என்றாள், சன்னமான குரலில். அவன் அவளது கேள்வி புரியாமல் குழம்பி நிற்க, “இப்போ… இப்போ நீங்க ‘ஐ லவ் யூ’னு சொன்னீங்களே… நிஜமா என்னைப் பிடிச்சிருக்கா?” என்று அவள் வினவ, முகநாடி துடிக்கக் கலங்கியவன், அவளை இறுக்கி அணைத்தபடி, அவளது கழுத்து மடிப்பில் முகம் புதைத்து அழுதான். தனது காதலை வார்த்தைகளால் கொட்டித் தீர்க்க முடியாத தனது குறையை எண்ணி வெகு நாட்கள் கழித்து மேலெழுந்த வருத்தம், அவளின் புரிதலால் உடனே கரைந்து போனது. வாழ்விலே முதன்முறையாக  தனக்கு எவ்வித குறையும் இல்லை என்று அவனுக்குத் தோன்றியது. தனது மனமொழி அவளுக்கு புரிந்து விட்ட போது, வாய்மொழியின் அவசியம் அற்றுப் போனது. 


அவர்களைப் பார்த்தபடி நின்றிருந்த ரித்துவின் பெற்றோருக்கும் மகிழ்ச்சி தாளவில்லை. ரித்துவின் அன்னை கணவனைக் கண்டு தோள்கள் குலுங்க சிரிக்க, பல நாட்கள் கழித்து மனைவியிடம் கண்ட மகிழ்ச்சியால், நிம்மதி பேறு அடைந்தார் அவர்.



ஒரு வாரம் கழித்து…


அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய ராகவ், சிரித்துக்கொண்டே உள்ளே நுழைய, “வா டா! என்ன பல்ல காமிச்சுக்கிட்டே வர?” என்று வினவியபடி அவன் எதிரே வந்து நின்றாள், அவனது அன்னை.

“காலைல அவ கிட்ட அப்படி கோவிச்சுக்கிட்டு போன, இப்ப என்ன?” என்று மீண்டும் அன்னை அர்ச்சித்தாள். அவன் பதில் கூற முடியாமல் திருதிருவென முழித்தபடி நிற்க, 

“இப்படியே நில்லு பனைமரம் மாதிரி. போடா, அவ மாடி ஸ்டூடியோவை சுத்தம் பண்ணிட்டு இருக்கா” என்று அன்னை கூறியதும், உடனே அவளைத் தேடி ஓடிச்சென்றான்.


ஸ்டூடியோ அறையினுள் நுழைந்தவன், அங்கிருந்த வயலின்களைத் துடைத்துக்கொண்டிருந்த ரித்துவைக் கண்டான். சிரித்துக்கொண்டே அவளெதிரே சென்று நின்றவனைக் கண்டதும், அவள் கோபப்பார்வை ஒன்றினை வீசிவிட்டு முகத்தினைத் திருப்பிக்கொண்டாள். அவளது முகத்தினை அவன்புறம் திருப்பியவன், கண்களாலேயே மன்னிப்பு கோர, 

“காலைல லஞ்ச் எடுக்க பத்தே பத்து நிமிஷம் லேட் ஆனதுக்கு இப்படித்தான் கோபப்படுவீங்களா? டாட்டா கூட சொல்லாம கோவிச்சுக்கிட்டு போனீங்க, இப்ப எதுக்கு சிரிச்சுக்கிட்டு நிக்கறீங்க?” என்றாள், கோபம் குறையாமல். 


தனது கையில் வைத்திருந்த மல்லிகைப்பூவினை அவன் நீட்ட, அதனை வாங்கிக்கொண்டவள், கோபம் மறைந்து அவனைக் கண்டு சிரித்தபடி தலையில் சூடிக்கொண்டாள். அவளை அவன் இறுக்கி அணைக்க, அவனது கைகளைத் தளர்த்தியவள், 

“இந்த இடம் கோவில் மாதிரி… இங்க இதெல்லாம் கூடாது” என்று விலகிக்கொண்டவள், ஒரு வயலினை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள். 

“நீங்களும் உட்காருங்க” என்றவளை விசித்திரமாய் நோக்கியபடி அவன் அமர,

“நீங்க கோவமா காலைல ஆபிஸ் போயிட்டீங்கல்ல, அதான் உங்களுக்காக நான் சொந்தமா மியூசிக் கம்போஸ் பண்ணி வச்சிருக்கேன்” என்று அவள் கூறியதும் பதறி எழுந்தவன், ‘தயவு செஞ்சு என்னைக் கொள்ளாத’ என்க, 

“இன்னும் வாசிக்கவே ஆரம்பிக்கல, அதுக்குள்ளயே கிண்டல் பண்றீங்களா? சரி, நான் வாசிக்கல. ஆனா, நீங்க நைட்டு இங்கேயே படுத்துக்கோங்க. என்னைக்கு நான் வாசிக்கறத பொறுமையா கேட்கறீங்களோ அன்னைக்குத் தான் பெட்ரூம் உள்ள விடுவேன். தனியா படுத்தாத்தான் பொண்டாட்டியோட அருமை தெரியும்” என்றாள், திட்டவட்டமாக.

‘அய்யோ, வேண்டாம்… வேண்டாம்…’ என்று அவன் பதற,

“என்ன பதறுதா? அப்போ ஒழுங்கா உட்கார்ந்து கேளுங்க…” என்றாள், விடாப்பிடியாக.


அவள் வாசிக்க, கன்னங்களில் கை வைத்துக்கொண்டு வேறு வழியின்றி, அழாதகுறையாகக் கேட்டுக்கொண்டிருந்தான். வாசித்து முடித்தவள், அவன் முகம் சென்ற போக்கினைக் கண்டு,

“என்னங்க ரியாக்ஷன் இது? டெம்போ ஏத்தணுமா?” என்க, அவன் பார்த்த பார்வையிலேயே அமைதியாகிப்போனாள்.

“டெம்போ ஏத்திட்டா மட்டும் அப்படியே சூப்பரா வாசிச்சுடிவியானு தான கேட்கறீங்க? அதுக்கு நான் என்ன பண்ண? வயலின் வாசிக்க ஊருக்கே சொல்லித்தர்றீங்க எனக்கு சொல்லிக் கொடுக்க மாட்டேங்கறீங்க…” என்று சலித்துக்கொண்டாள்.

அவன் அவளை நெருங்கி வர, அவனை விலக்கிவிட்டு கதவின் அருகே ஓடி வந்து நின்றவள், 

“கிளம்புங்க முதல்ல. நான் காபி போட்டு தரேன். கொஞ்ச நேரத்துல க்ளாஸ்  பிள்ளைங்க வந்துடுவாங்க” என்க, அவனோ நின்ற இடத்திலிருந்து அசையாது இருந்தான்.

தயங்கித்தயங்கி அவன் அருகே வந்தவள், “போகாத’னு சொன்னா என்ன அர்த்தம்? கீழ அத்தை மாமா என்ன நினைப்பாங்க?” என்றாள்.  

அவள் கூறுவது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஆசை பார்வையால் அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

‘நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்…’ என்ற பாடலை ராகவின் தாய் கீழே பாடிக்கொண்டிருக்க, அழகாய் சிரித்துக்கொண்டவள்,

“மாடில பையன் ரொமான்ஸ் பண்ண, கீழ அம்மா பிஜிஎம் கொடுக்கறாங்க… வெரி குட் ஃபேமிலி” என்க, அவளை இழுத்து அனைத்துக்கொண்டவன், நெற்றியில் அழுந்த முத்தமிட்டான். அவனது  நெஞ்சின் மேல் அவள் சாய்ந்துகொள்ள, ‘குறையொன்றும் இல்லை, மறைமூர்த்தி கண்ணா, குறையொன்றுமில்லை கண்ணா! குறையொன்றுமில்லை கோவிந்தா!!’ என்று ராகவின் தாய் பாட, அனைவரின் மனமும் நிறைந்தது!!



வாழ்க வளமுடன்!


*** முற்றும் *** 


No comments:

Post a Comment