Tuesday, 5 January 2021

வயலின் பேசியதே - 9

 “சுவாதி, எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்க? என்னடி நீ…”

“இங்கப்பாரு ரித்து, இந்த ராகவ் அத்தியாயம் உன் வாழ்க்கைல முடிஞ்சு போச்சு. அப்படியும் நீ காலைலேர்ந்து அவனோட அம்மாவ நினைச்சு வருத்தப்படறது எனக்கு சுத்தமா பிடிக்கல. இருந்தாலும் உனக்கு ஒரு மன ஆறுதலுக்காக நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கேன். கடைசியா அவங்கக்கிட்ட என்ன பேசணும்னு நினைக்கறியோ பேசிட்டு வா. இதோட எல்லாம் முடிஞ்சிடுச்சு ரித்து. இதுக்குமேலையும் என்னால உன்னை சோகமே உருவா பார்க்கமுடியாது.”

திட்டவட்டமாகக் கூறிமுடித்தாள், சுவாதி.

“வேண்டாம் சுவாதி போலாம்…”

ரித்து தயங்க,

“சரி நீ இங்கயே காத்திரு. உனக்காக நான் அவங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு வந்துடறேன்…” என்ற சுவாதி, அவளது பதிலை எதிர்பார்க்காது வாயிலில் இருந்த இரும்புக் கதவினைத் திறந்துகொண்டு உள்ளே விரைந்தாள்.

“இரு சுவாதி, இருடி…” என்று அவளைக் கெஞ்சியபடி ரித்து விரைய, அதற்குள்ளாக வாயிற்கதவினைத் தட்டியபடி வீட்டு வாயிலில் சென்று நின்றாள், சுவாதி.


கதவினைத் திறந்த ராகவின் தந்தை,

“யாருமா?” என்க, சுவாதியின் அருகே தயங்கித்தயங்கி வந்து நின்ற ரித்துவைக் கண்டுகொண்டார்.

“உள்ள வாமா, நீயும் வா…” என்றவர் உள்ளே செல்ல, பதட்டத்தோடு நின்றிருந்த ரித்துவைக் கண்ட சுவாதி, ‘வா உள்ள’ என்று கண்களால் மிரட்டல் விடுத்தபடி உள்ளே நுழைந்தாள். 

வரவேற்பறை சோபாவில் படுத்திருந்த ராகவின் அம்மா, அவ்விருவரையும் கண்டவுடன் எழுந்து அமர, அவரது நிலையைக் காண சகியாமல் தலைக்கவிழ்த்துக்கொண்டாள், ரித்து. முகம் வெளிறி, கேசம் களைந்து, முகம் வீங்கி பரிதாபமாக இருந்தவளைக் கண்ட சுவாதிக்கும் உள்ளூர பச்சாதாபம் ஏற்பட்டது.

“உட்காருங்க மா…” என்று திணறித்திணறி கூறியவள், நெஞ்சைப் பற்றிக்கொண்டு இரும, அவளைக் கைத்தாங்களாய்ப் பிடித்தபடி அருகே சென்றமர்ந்தாள், ரித்து.


“நேத்து ராத்திரியிலேர்ந்து அவளுக்கு உடம்புக்கு முடியல” என்றபடி ராகவின் அப்பா அவளுக்கு நீர் வழங்கினார். சற்று ஆசுவாசமானவள் ரித்துவின் முகம் கண்டு சிரிக்க, கலங்கிய கண்களைத் தலைக் கவிழ்ந்து மறைத்தபடி, 

“ஆண்ட்டி, என்னால உங்க எல்லாருக்கும் மனக்கஷ்டம். நீங்க ரொம்ப வருத்தப்பட்டீங்கன்னு அப்பா சொன்னாங்க. அதான் மன்னிப்பு கேட்க வந்தேன். என்னை மன்னிச்சுடுங்க ஆண்ட்டி…” என்றாள், குரல் தழுதழுக்க.

அவளது முகநாடியைப் பற்றி முகத்தனை உயர்த்திய ராகவின் தாய்,

“நீ எதுக்குமா மன்னிப்பு கேட்கற? அதுக்கு எந்த அவசியமும் இல்லைமா. அவன் தலையெழுத்து அவ்வளவுதான்னா அதுக்கு யாரு என்ன பண்ண முடியும்? தனக்கு ஒரு நல்ல வாழ்க்கை தானா தேடி வருதேன்னு கூட அவனுக்குப் புரியல. உனக்கு ஒன்னு தெரியுமா மா, நான் ஒரு வருஷமா அவனுக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்கேன். சொந்தக்காரங்க எல்லாருமே எவ்வளவு என்னைக் காயப்படுத்தியிருக்காங்க தெரியுமா? பொண்ணு கேட்டு போனா, இப்படிப்பட்ட பையனுக்கு பொண்ணு கேட்டு வர்றியே உனக்கு மனசாட்சியே இல்லையானு கேட்கறாங்க. உனக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தா, இந்த மாதிரி ஒரு பையனுக்கு கட்டிக்கொடுப்பியான்னு கேட்டு நெஞ்சுல நெருப்பள்ளி கொட்டறாங்க. ஏன் அவனுக்கு எந்தக் குறையுமில்லாத ஒரு நல்ல பொண்ண கட்டிவைக்கணும்னு நான் ஆசைப்படக்கூடாதா? எல்லாருடைய ஏச்சையும், பேச்சையும் கேட்டு நான் நொந்துபோயிருக்கற நேரத்துல தெய்வமா பார்த்து அனுப்பி வச்ச மாதிரி, உன் அப்பா வந்தாங்க. நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா? ஆனா, இவன் முடியாதுனு ஒத்தக் கால்ல நிக்கறான். ஒரு அம்மாவா நான் படற வேதனை அவனுக்குப் புரியவே மாட்டேங்குது. நேத்து ராத்திரியிலிருந்து அழுதழுது நான் ரொம்ப ஓய்ஞ்சுபோயிட்டேன்மா…” என்று கொட்டித்தீர்த்தாள்.   

“நீங்க கவலைப்படாதீங்க மா…” என்ற ரித்து அதற்குமேல் என்ன கூறுவது என்று புரியாமல், 

“நான் கிளம்பறேன் ஆண்ட்டி…” என்றுவிட்டு எழ, எதிரே அறையின் வாயிலில் ராகவ் நின்றுகொண்டிருப்பதை அவள் அப்பொழுதே உணர்ந்தாள். அவள் நோக்கிய திசையில் சுவாதியும் தலைத்திருப்பிப் பார்க்க, அவன் முகம் கண்டதும் கோபத்தில் வெடுக்கென தலையைத் திருப்பிக்கொண்டாள். 

கலங்கி நிற்கும் தோழியின் கைகளைப் பற்றிக்கொண்ட சுவாதி, “நாங்க வரோம் ஆண்ட்டி… என் பிரெண்டுக்காக நானும் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்…” என்றுவிட்டு, உடனே அவ்விடத்தை விட்டு அழைத்துச் சென்றாள். 



உன்னைக் கண்ட நொடிகளில்

ஏதோ ஓரு தருணத்தில்

தவறவிட்ட மனதினை

தேடித்தேடி அலைகின்றேன்...


நீ பேசிய இசையெல்லாம்

எனக்கான பூபாளமாய்

நான் தொடுத்த நேசத்தைக்

கையிலேந்தி நிற்கின்றேன்...


நீ பார்க்காமல் பார்த்ததும்

சொல்லாமல் சொன்னதும்

மலராத உறவு தன்னை

மொட்டிலே கருக்கியது...


நீர் சூழ்ந்த நிலமாய்

உன் நினைவு சூழ்ந்து நான் கிடக்க

கண்மூடி, மனம் பூட்டி

எனைக் கடந்து போனதென்ன?!!



“ரித்து, ஏறத்தாழ ஒரு மாசம் ஆச்சு… இன்னும் பழசை மறக்கலையா?”

சிரித்துக்கொண்ட ரித்து,

“மறக்கமுடியல, ஆனா, எதையும் நினைக்கறதில்லை சுவாதி…”

“ரொம்ப நாள் ஆச்சு… ஐஸ் க்ரீம் சாப்பிடலாமா ரித்து?”

“இன்னைக்கு என்ன விசேஷம்?”

தோழியைக் கண்டு பரிகாசமாய் சிரித்தாள், ரித்து.

“விசேஷம் தான். ஒரு சந்தோஷமான செய்தி சொல்லணும்…”

“சுவாதி, என்ன புதிர் போடற? என்ன விஷயம்…”

“தெரிஞ்சா நீயும் சந்தோஷப்படுவ…”

“என்னடி சொல்ற? வீட்ல உனக்கு மாப்பிள்ளை பார்க்கறதா சொன்னியே… கல்யாணம் எதுவும் முடிவாயிடுச்சா?”

சுவாதியின் முகத்தினைக் கூர்ந்து நோக்கினாள்.

“ச்சச்ச… அதுக்கெல்லாம் எவனாவது இவ்வளவு சந்தோஷப்படுவானா?”

“அப்புறம்?”

“கிளையண்ட் மீட்டிங்க்காக நம்ம டைனோ ஒருவாரம் ஊருக்குப் போகப்போறதா என்னோட உளவாளி இப்பத்தான் சொன்னான். அதான் உன்கிட்ட உடனே சொல்ல ஓடிவந்துட்டேன்…”

சுவாதி கூறிய பதிலை சற்றும் எதிர்பார்த்திராதவள் தோள்கள் குலுங்கச் சிரிக்க, உடன் சுவாதியும் சிரிக்க, வெகு நாட்கள் கழித்து தோழிகள் இருவரும் சிரித்து ஓய்ந்தனர்.


மறுநாள் காலை உற்சாகமாக அலுவலகத்திற்குள் நுழைந்த ரித்து, நேரே தோழியிடம் சென்று,

“சுவாதி…” என்று அழைத்தபடி, அவளது கன்னங்களைக் கிள்ளி ஒரு இனிப்புப் பெட்டியினை நீட்டினாள்.

அவளை விசித்திரமாய் நோக்கிய சுவாதி, “டைனோ ஊர்ல இல்லேன்னா, உனக்கு இவ்வளவு சந்தோஷமா? சுவீட்டெல்லாம் கொடுக்கற? இதெல்லாம் தவறுங்க…” என்க, முகம் மலர்ந்து சிரித்தவள்,

“மை டியர் சுவாதி, என் சந்தோஷத்துக்குக் காரணம் டைனோ இல்லை, ராகவ்!!” என்றாள்.

“ராகவா?” என்ற சுவாதி, புரியாமல் வாய்பிளந்து நிற்க,

“அதே அதே…” என்றபடியே அவளது வாயினுள் ஒரு இனிப்புத் துண்டினைத் திணித்தாள், ரித்து.


No comments:

Post a Comment