Saturday, 2 January 2021

வயலின் பேசியதே - 12

இரண்டு வாரங்களாக வீட்டிற்குள்ளே சுற்றிச்சுற்றி வந்த ரித்துவிற்கு, எங்காவது சென்று வர எண்ணம் தோன்றியது. அலுவலகம், இசைப்பயிற்சி, அசோசியேஷன் வேலைகள் என்று எப்பொழுதும் பரபரப்பாக சுற்றிக்கொண்டிருக்கும் ராகவுடன் சிறிது நேரம் செலவிட வேண்டும் என்பதே அவளது பிரதான தேவையாக இருந்தது. அவனிடம் பேசிப்பழகாமல் எத்தனை நாட்களுக்கு விலகி நின்றே வாழமுடியும் என்றொரு ஆதங்கமும் அவளுள் தகிக்கத்தான் செய்தது. 


ஞாயிறு மதியம் உணவு முடிந்து, சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் வகுப்பிற்காக அவன் சில இசைக் குறிப்புகளை எழுதிக்கொண்டிருக்க,

“என்னங்க இன்னைக்கு என்னை எங்கயாவது கூட்டிட்டு போங்க” என்றபடி அவன் எதிரே வந்து நின்றாள்.

அவன் ‘முடியாது, க்ளாஸ் இருக்கு’ என்றுவிட்டு தனது பணியைத் தொடர,

“அதெல்லாம் முடியாது, நாம இன்னைக்கு நிச்சயம் வெளியே போகத்தான் வேணும்” என்றாள்.

‘அம்மா கூட போ’ என்று அவன் சைகை காட்ட, 

“அது எனக்குத் தெரியாதா? எனக்கு உங்கக்கூடத்தான் போகணும். க்ளாஸ் எல்லாத்தையும் கேன்சல் பண்ணுங்க” என்றவள் வம்படியாக நிற்க, அவன் அவளைக் கண்டு முறைத்துவிட்டு மீண்டும் எழுதுவதைத் தொடர்ந்தான்.

பொறுமையிழந்தவள், அவன் எழுதிக் கொண்டிருந்த தாளினை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே ஓடி விட, பின் தொடர்ந்தவன், ‘கொடு’ என்று  சைகை செய்தபடி கோபத்தின் உச்சத்தில் நின்றிருந்தான்.


“என்னமா நடக்குது இங்க?” என்று கேட்டுக்கொண்டே அவளருகே வந்து நின்ற அத்தையிடம்,

“அத்தை, இவர் எப்போ பார்த்தாலும் பிஸியாவே இருக்காரு. இன்னைக்கு என்னை எங்கயாவது கூட்டிட்டு போகச் சொல்லுங்க. இன்னைக்கு மட்டுமில்ல, ஒவ்வொரு வாரமும் ஞாயித்துக்கிழமை மதியம் மேல இவரு வீட்ல தான் இருக்கணும். க்ளாஸ் எடுக்கக்கூடாது. வேற எங்கயும் போகக்கூடாது. அப்படியே போகணும்னா என்னை எங்கயாவது அழைச்சுட்டுப் போகணும்” என்றாள், திட்டவட்டமாக.

“ஒழுங்கா அவனை அவன் வேலையைப் பார்க்க விடு ரித்து.”

“அத்தை நீங்களும் இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?”

“இங்கப்பாரு மா, நீ உங்க வீட்ல வசதியா இருந்திருக்கலாம். வாரக் கடைசியில ஹோட்டல், பீச்சுன்னு சுத்தறது உனக்கு ரொம்ப சாதாரண விஷயமா இருக்கலாம். இங்க அப்படியெல்லாம் இல்லை மா. அன்னைக்குத்தானே நம்ம குடும்ப நிலவரத்தைச் சொன்னேன். பொறுப்பான பொண்ணுன்னு நினைச்சேன். ஆனா நீ, நான் நினைச்ச மாதிரி இல்லை. உங்களுக்கெல்லாம் காதல், கல்யாணம் இதெல்லாம் ஒரு பொழுது போக்கு - இல்லை? அவன் உனக்கு புருஷன், நாய்க்குட்டி இல்லை. வந்த பத்து நாள்ல இத்தனை கண்டிஷன் போடற? வாய் பேசாத பிள்ளைன்னு உனக்கு இரக்கமே இல்லையா? கைப்பாவையா உனக்கு ஒருத்தன் தேவைப்பட்டது. இவன் வாய் பேசமுடியாதவன் தானே. நாம நம்ம இஷ்டத்துக்கு இருக்கலாம்னு நினைச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட. ‘இவ்வளவு லட்சணமா, வசதியா, எந்த குறையும் இல்லாத பொண்ணு எதுக்கு இவனைக் கல்யாணம் செய்துக்க நினைக்கறா’னு எனக்கு அப்பவே தோணுச்சு. இவனும் அதையேத்தான் கேட்டான். இப்பத்தான் எல்லாம் புரியுது. உன் இஷ்டத்துக்கு இருக்கணும்னா அது நீ உன் வீட்ல தான் இருக்கணும். இங்க இருக்க முடியாது” என்று குரலுயர்த்தி அத்தை கத்தி முடிக்க, கண்களில் நீர் வழிய முக நாடி துடிக்க நின்றிருந்தாள், ரித்து. தன்னை சுதாரித்துக்கொண்டு மெல்ல பேசத் தொடங்கினாள்.

“அவ்வளவுதானா அத்தை? இப்ப அவரு ஓய்வில்லாம உழைச்சு காசு சேர்க்கணும். அதான் உங்களுக்கு வேணுமா? அவரென்ன உங்கக்கிட்ட கடன் பட்டிருக்காரா, அதைத் திருப்பி அடைக்க? அவருக்காக நீங்க செலவு பண்ணதுக்கு அவர் பொறுப்பாளியா? நீங்க செலவு செய்ததெல்லாம் சம்பாதிச்ச பிறகு தான் அவர் வாழ முடியும்னா அப்போ எப்ப அவரு வாழ்வாரு? இந்த வயசுல பொண்டாட்டி கூட நாலு இடம் போகாம, அரை மணி நேரம் அம்மா அப்பா கிட்ட உட்கார்ந்து பேசாம, நண்பர்கள், உறவுகளை சந்திக்காம, வேற எந்த வயசுல இதெல்லாம் செய்வாரு? உங்க வலி எனக்குப் புரியாம இல்லை. ஆனா, எல்லா வலிக்கும் அவர்தான் காரணம்னு ஏன் அவரைக் குத்திக்கிட்டே இருக்கீங்க? 


உங்கள பாடவேணாம்னு அவர் சொல்லல. அவருக்காக நீங்க உங்களுக்குப் பிடிச்ச பாட்டை விடணும்னு எந்த அவசியமும் இல்லை. நீங்க விரும்பற ஒரு விஷயத்தை ஒதுக்கி வைக்கறது உங்களுக்கு வலிய கொடுத்தா, தன்னால தானே அம்மாவுக்கு இவ்வளவு மனவேதனைனு அவருக்கு குற்ற உணர்வை, தாழ்வு மனப்பான்மையைக் கொடுக்குது. நீங்க உங்களையும் வேதனைப்படுத்திக்கிட்டு, அவரையும் காயப்படுத்தறீங்க. நீங்க இயல்பா, சந்தோஷமா இருந்தா அதைப் பார்த்து அவரு ரெண்டு மடங்கு சந்தோஷப்படுவார்.


எதுக்கு இவரைக் கல்யாணம் செய்துக்கிட்டடேன்னு கேட்டீங்கள்ல? அவர்கிட்ட அவரோட இசை பிடிச்சது; அவர் முகத்துல இருக்கற அமைதி பிடிச்சது; ஆனா ரோட்ல நின்னு பாட்டுப்பாடற பொண்ண எல்லாரும் தப்பா நெருங்க நினைச்சபோது, இவர் அந்தப் பொண்ண மீட்டு இன்னைக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்திருக்காரே, அந்த ஒரு விஷயம் தெரிஞ்சதும் தான் எனக்கு அவர் மேல் நூறு சதவிகிதம் நம்பிக்கை வந்தது. என்ன ஆனாலும், தன்னை நம்பி வந்தவளை நல்லா வச்சுப்பாருனு நம்பிக்கை வந்தது.            


இப்படிப்பட்ட புள்ள கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும். கடவுள் அருளால கல்யாணம் செய்துக்கிட்ட நானும் ரொம்பவே கொடுத்து வச்சிருக்கணும். நூறு பவுன் நகை வச்சிருக்கிறது பெருசில்ல. நாலு பேரை வாழ வைக்கறது தான் பெருசு!!


தெரியாமத்தான் கேட்கறேன், வாய்பேச முடியாதுன்னா இரக்கப் படணுமா? ஏன் இரக்கப்படணும்? அவருக்கும் மத்தவங்களுக்கு என்ன வித்தியாசம் இருக்கு அவரை மட்டும் எப்பவுமே ‘ஐயோ பாவம்’னு நான் நினைக்க? எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியல. அவரால பேச முடியாதது எனக்கு ஒரு பொருட்டே இல்லை. மாமா பார்க்குற பார்வையை வச்சே அவங்க கோபப்படறது உங்களுக்குப் புரியுதுல்ல? மாமா கேட்காமலே தினமும் அவருக்கு வேண்டியதை செய்ய உங்களால முடியுதுல்ல? அதேபோல எனக்கும் அவர் முகத்தைப் பார்த்தே அவரோட மனசு புரியுது. அவருடைய கோபம், வருத்தம், சந்தோஷம், பெருமிதம்னு எல்லா உணர்வும் அவர் சொல்லாமலே எனக்குப் புரியுது. அதெல்லாம் எனக்கு மட்டும் புரிஞ்சா போதும்... புரிதல் வந்துட்டாலே அங்க பேச்சுவார்த்தை தேவையே இல்லை.


நான் உங்கள மட்டும் குறை சொல்லல. சுத்தியிருக்கற எல்லாரையும் தான் சொல்றேன். கல்யாணம் முடிஞ்சதும் அவர் முதல்ல என்கிட்ட சொன்னது என்ன தெரியுமா அத்தை? ‘நான் வாய்பேச முடியாத பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கணும்னு நினைச்சேன்’னு சொன்னாரு. எனக்கு ஒரு விஷயம் புரியல, பேச முடியற நான் ஒசத்தி, பேச முடியாத பொண்ணுனா மட்டமா? எனக்கும், மத்த பொண்ணுங்களுக்கும் என்ன வித்தியாசம்? எல்லாருமே சமம் தான். ‘தன்னால பேச முடியாதுங்கறது மிகப் பெரிய குறையாகவும், தன்னைப் போல குறைபட்ட இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்து வாழ்க்கைத் தர்றது தான் உத்தமம்’னு அவரோட மனசுல எண்ணத்தை விதைச்சது யாருனு தெரியல. என்னை ஏதோ வித்தியாசமா பார்க்கறார். ‘நானும் சராசரி ஆம்பள. இவளும் சராசரி பொண்ணு. இனி கஷ்டத்தை நஷ்டத்தைப் பகிர்ந்துக்கிட்டு எல்லாரும் போல சந்தோஷமா இவளோடு வாழணும்’னு ஏன் இவருக்குத் தோணமாட்டேங்குது? 


ஒன்னு தெரியுமா அத்தை, நீங்க மட்டுமில்ல, எல்லாருமே என்னை ‘தியாகி’னு சொல்றதே எனக்கு அருவருப்பா இருக்கு. நான் தியாகி இல்லை, முழுக்கமுழுக்க சுயநலவாதி. மனசுக்குப் பிடிச்சவரை எப்படியாவது கல்யாணம் செய்து சந்தோஷமா வாழணும்னு, என்னைப் பத்தி மட்டுமே யோசிச்ச சுயநலவாதி. 


எனக்கு அவர் மேல கோவம் வந்தா நான் சண்டைபோடுவேன். பதிலுக்கு அவரும் கோபப்படணும், சண்டைபோடணும். அவர் என்னைக் கோவிச்சுக்கறது எனக்குப் புரியும். நான் ஆசைப்பட்டு இதை வாங்கிக்கொடுங்க, அதை வாங்கிக்கொடுங்கன்னு கேட்பேன். அவர் முடியும், முடியாதுன்னு சொல்லணும். நான் அடம் பிடிப்பேன். அவர் முரண்டு பிடிக்கணும். நான் பாசமா இருந்தா, உலகத்துல உள்ள எல்லா அன்பையும் அவர் எனக்குத் தரணும். நான் சிரிச்சு பேசினா, அவர் ரசிக்கணும். இதெல்லாம் எங்களுக்குள்ள இருக்கவேண்டிய புரிதல். வேற யாருக்கும் இதெல்லாம் புரிய வேண்டாம். அவரு இரக்கப்பட வேண்டியவர் இல்லை. அண்ணாந்து பார்க்க வேண்டியவர். 


எனக்கு புத்திமதி சொல்லாம எல்லாரும் மாறுங்க.”


பேசிமுடித்து மூச்சு வாங்க அவள் நின்றிருக்க, அவள் கூறியதைக் கேட்டு பதில் பேசமுடியாமல் விக்கித்து நின்றிருந்தனர், ராகவின் பெற்றோர். அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ராகவும் அறையினுள் சென்று தனது இருக்கையில் அமர்ந்துகொண்டான். ஒரு சொம்பு தண்ணீர் பருகியவள், தனது அறைக்குள் சென்று தனது கைப்பையினை எடுத்துக்கொண்டு அறை வாயில் வரை வந்தவள், மீண்டும் ராகவின் அருகே சென்று,

“நான் ஊமையா பிறக்காம போனது, என் தப்பு இல்லீங்க…” என்றுவிட்டு மறுநொடி அவ்விடம் விட்டு விலகினாள்.


“அம்மாடி, எங்க மா போற?” என்று பதறியபடி ராகவின் பெற்றோர், வாயிற் கதவு வரை சென்றவளை வழிமறித்து நிற்க, 

“நான் கோவிச்சுக்கிட்டு எங்கயும் போகல. மனசுக்கு என்னமோ மாதிரி இருக்கு. ரெண்டு நாள் எங்க வீட்ல இருந்துட்டு வரேன்” என்றவள், வெளியே எதிர்ப்பட்ட ஆட்டோவினை வழிமறித்து நிறுத்தி, அதில் ஏறி மறைந்து போனாள்.


“டேய் ராகவ், இப்படி சிலை மாதிரி உட்கார்ந்திருக்கியே டா? அவ கோவிச்சுக்கிட்டு போய்ட்டா டா. எழுந்து வாடா” என்று அவன் அருகே அவனது தாய் வந்து அழுத பின்னே நினைவிற்கு வந்தவன், அவள் சென்றுவிட்டதை உணர்ந்தான். எழுந்து வாயிலுக்கு ஓட, இரும்புக் கதவருகே நின்றுகொண்டு அவள் சென்ற திசையை நோக்கிக்கொண்டிருந்த தந்தையைக் கண்டான். அவனைக் கண்டவர், தலைக் கவிழ்ந்து உள்ளே செல்ல, முதன்முறை தனது தந்தையின் கலங்கிய விழிகளைக் கண்டான். 


தனது அறையினுள் வந்தமர்ந்தவன், எதிரே மேஜையின் மீது கிடந்த வயலினைக் கண்டான். அவள் இறுதியாய்க் கூறிச்சென்ற வார்த்தைகள் அவனது காதில் ரீங்கரித்தன.

No comments:

Post a Comment