வீட்டு வாயிலில் வண்டியை நிறுத்திவிட்டு, ஆழ்ந்த பெருமூச்செடுத்து, தனது மனைவியை நோக்கினார் ரித்துவின் தந்தை.
"என்ன ஆச்சு உனக்கு? ஏன் ஒண்ணுமே பேச மாட்டேங்கற? இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? நம்ம பொண்ணுகிட்ட நடந்ததையெல்லாம் எப்படி சொல்றதுன்னு கவலையா இருக்கு… நீயும் அதை நினைச்சுத்தான் கவலைப்படறியா?"
"எனக்கு 50% தான் வருத்தம். 50% சந்தோஷம் தான்…"
"சந்தோஷமா?"
"ஆமா சந்தோஷம் தான். அவ பிறந்ததிலிருந்து எப்படியெல்லாம் வளர்க்கணும்னு கனவு கண்டேனோ, அதை விட அதிகமா எப்படி கட்டிக்கொடுக்கணும்னு கனவு கண்டேன். இன்னைக்கு சின்னபுள்ளத்தனமா அவ ஆசைப்பட்டா பரவால்லனு வாங்கிக்கொடுக்க அவ விளையாட்டு சாமான் கேட்கல, தன் வாழ்க்கையோட விளையாடப் பார்க்கறா."
கண்கள் குளம் கட்ட, பொங்கும் ஆதங்கம் குரலிலும் முகத்திலும் தெறிக்க, பதிலளித்தாள்.
"நீயா நம்ம பொண்ணு விருப்பத்துக்கு எதிரா இருக்க?"
"ஆமா, நானே தான். நான் சராசரி ஆசைகள் இருக்கற சராசரி அம்மா தான். என்னால இப்படித்தான் யோசிக்க முடியும். நான் பேசறது தப்பாவே இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு இந்த உலகத்துல என் பொண்ணைத் தவிர எதுவுமே முக்கியம் இல்லை…"
"எனக்கு மட்டும் அக்கறையில்லையா? நான் தீர விசாரிச்சு, போதாத குறைக்கு டிடெக்டிவ் ஏஜென்ஸி மூலமாவும் உறுதி செஞ்சுட்டு தானே முடிவு எடுத்தேன். அந்தப் பையன் தங்கமான பையன்னு தான எல்லாரும் சொன்னாங்க?! நம்ம பொண்ணோட சந்தோஷத்துக்கு முன்னாடி அந்தப் பையனோட குறை பெருசா தெரியல…"
"உங்க பார்வை வேற, என் பார்வை வேற… என்னை சமாதானம் செய்ய முயற்சி செய்யாதீங்க…"
"ஹ்ம்ம்… உன்னை சமாதானம் செஞ்சு என்ன ஆகப்போகுது? அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே… என் குழந்தை ஆசைப்பட்டதை என்னால நிறைவேத்த முடியல…"
புலம்பியபடி அவர் இறங்கி வீட்டினுள் செல்ல, கண்களைத் துடைத்துக் கொண்டவள், சற்றே தெளிந்த முகத்தோடு பின்தொடர்ந்தாள்.
"அப்பா…"
ஆசையாசையாய் அவர்களின் எதிரே வந்து நின்றாள், ரித்து.
மகளின் தலைக் கோதியவர்,
"ஐ ஆம் சாரி டா பாப்பா…" என்றார் முகம் வாடி.
"அப்பா…"
பொங்கும் கண்ணீரை அடக்கிக்கொண்டு அவரது முகத்தினைப் பார்த்திருந்தாள், ரித்து.
நடந்தவற்றை ஒளிவுமறைவின்றி அவர் கூறி முடிக்க, கட்டுப்பட்டிருந்த கண்ணீர் கரைபுரண்டது.
"என்னை மன்னிச்சுடுங்க அப்பா… உங்களையும், அம்மாவையும் நான் ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன்…”
“என்னடா பாப்பா, எங்கக்கிட்ட மன்னிப்பு கேட்கற? ஒன்னு மட்டும் நியாபகத்துல வச்சுக்கோ, என்னைக்குமே உன்னால எங்களை கஷ்டப்படுத்தவே முடியாது.”
தந்தையின் நெஞ்சின்மேல் அவள் சாய்ந்துகொள்ள, அவளது கையைப் பற்றிய அவளது தாய்,
“நீ எதுக்கு ரித்து அழற? உனக்கு ஜம்முனு நாங்க மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைக்கறோம். எல்லாமே நல்லபடியா நடக்கும்…” என்று கூற,
“சரி மா, ஆனா எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க ப்ளீஸ்…” என்றவள், கண்களைத் துடைத்துக்கொண்டு தனது அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள்.
***
“என்னடி ஆச்சு நேத்து? அம்மாவும், அப்பாவும் ராகவ் வீட்டுக்கு போனாங்களா? நான் போன் பண்ணா நீ எடுக்கவேயில்லை. எனக்கு ஒரே மண்டை குடைச்சல்…”
அலுவலகத்தினுள் நுழைந்த ரித்துவை, வழிமறித்து நின்றாள் சுவாதி. ரித்து சிரிக்க முயன்று முகம் வாடி நிற்க,
“என்னடி ஆச்சு? ஏன் இப்படி இருக்க?” என்ற சுவாதிக்கு, கவலை உருண்டை தொண்டைக்குழியை அடைத்தது.
“அவங்க வீட்ல விருப்பம் இல்லனு சொல்லிட்டாங்களாம். ராகவ்க்கு விருப்பம் இல்லையாம். ரொம்ப கோபப்பட்டிருக்காரு. அவங்க அம்மா ஒரு ஓரத்துல உட்கார்ந்து ரொம்ப நேரம் அழுதுட்டு இருந்தாங்களாம். ராகவோட அப்பா ஏதேதோ பேசி சமாளிச்சு, பையனுக்கு விருப்பம் இல்லைனு சொல்லிட்டாரு.”
அதிர்ந்துபோனாள், சுவாதி.
“லூசாடி அவன்? அவனுக்கு என்ன மன்மதன்னு நினைப்பா?”
“சுவாதி…”
“நீ சும்மா இரு ரித்து. ஏதோ நல்ல பையன்னு நினைச்சா இப்படியா நடந்துப்பான். உன்னைக் கல்யாணம் செய்துக்க அவன் ரொம்பப் புண்ணியம் செய்திருக்கணும். வேண்டாம்னு சொல்லியிருக்கானே, மாங்கா மடையன்...”
“சுவாதி ப்ளீஸ்…”
“ரித்து, அவன் குறையை மனசுல வச்சு நான் அப்படி சொல்லல. அவன் குணத்தைப்பத்தி தான் பேசறேன். உன்னை எப்படி அவன் வேண்டாம்னு சொல்லலாம்?”
“அவர் மனசுல என்ன இருக்கோ… ஒருவேளை… ஒருவேளை தாழ்வுமனப்பான்மையால அப்படி நடத்துக்கிட்டாரோனு தோணுது…”
“இப்படியே எதையாவது யோசிச்சு உன்னை நீயே ஏமாத்திக்கோ…” என்றவள் கடுங்கோபத்தோடு தனது இருக்கைக்கு சென்றுவிட, ரித்து தனது பணியில் கவனம் செலுத்த முயன்றாள்.
“காலைலேர்ந்து இப்படித்தான் இருக்க?”
மாலை அலுவலக நேரம் முடியும் தருவாயில், மீண்டும் தோழியின் முன் வந்து நின்றாள், சுவாதி.
“என்னடி சொல்ற?”
நெற்றி சுருங்கி அவளை நோக்கினாள், ரித்து.
“காலைலேர்ந்து ஏதோ யோசனையிலேயே இருக்க. இன்னைக்கு முழுக்க நீ வேற எதுலயும் கவனம் செலுத்தல… அதான் எல்லாம் முடிஞ்சுபோச்சே… இன்னும் அதைப்பத்தி யோசிக்க என்ன இருக்கு?”
“நான் அதை யோசிக்கல… என்னால அவங்க குடும்பத்துல தேவையில்லாத மனவருத்தம். அன்னைக்கு ராகவோட அம்மா நம்மகிட்ட எவ்வளவு ஆசையா நடந்துக்கிட்டாங்க. இன்னைக்கு அவங்க அழ நான் காரணமாயிட்டேன்…”
“உன் மேல என்ன தப்பு?”
“நீ என்ன சொன்னாலும் என்னால தான் இதெல்லாம் நடந்தது. ராகவ் அம்மாவ நினைச்சுத்தான் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. நான் அழவச்சுட்டேன்…”
ரித்துவின் கைகளை பற்றிய சுவாதி,
“எல்லாமே சரியாயிடும்… நீ கிளம்பு. என் ஸ்கூட்டில ஒரு ரவுண்ட் போயிட்டு உன்னை பஸ் ஸ்டாப்ல இறக்கிவிடறேன். வீட்டுக்குப் போய் நிம்மதியா சாப்டுட்டு தூங்கு…” என்க, ‘சரி’ என்றாள் ரித்து.
வண்டியின் பின்புறம் அமைதியாய் ரித்து அமர்ந்திருக்க, அவளைக் கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டே வந்த சுவாதி, வண்டியை சாலையோரம் நிறுத்திவிட்டு,
“ரித்து, வருத்தப்படாத… நாம ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா?” என்றாள், பரிவாக.
“ராகவ நினைச்சு ஒருபக்கம் வருத்தம்னா, அவரோட அம்மாவை நினைச்சு இன்னொருபக்கம் ரொம்பவே வருத்தமா இருக்கு சுவாதி…”
“என்ன சொல்ற ரித்து?”
“அவங்க ரொம்ப அழுதுட்டாங்கன்னு அப்பா சொன்னதிலிருந்து மனசே சரியில்லை. ஒரு வாய்ப்பு கிடைச்சா நடந்ததுக்கெல்லாம் சேர்த்து வச்சு மன்னிப்பு கேட்டுடுவேன். என் மனசை உருத்திக்கிட்டே இருக்கு சுவாதி…”
பதில் கூறாமல் வண்டியைக் கிளப்பிய சுவாதி, கண்ணாடி வழியே, தன்னை மறந்து யோசனையாய் அமர்ந்திருந்த தோழியைக் கவனித்தபடியே வண்டியை செலுத்தினாள்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் வண்டி நிற்க,
“இறங்கு ரித்து…” என்று சுவாதியின் குரல் கேட்டு நிலைக்குத் திரும்பியவள், தலையுயர்த்தி பார்க்க, அவர்கள் ராகவின் வீட்டின் முன் நின்றிருந்தனர்.
No comments:
Post a Comment