Monday, 4 January 2021

வயலின் பேசியதே - 10

“ரித்து என்னடி சொல்ற? அந்த ராகவ் திரும்ப ரி-என்ட்ரியா?”

படபடத்தாள், சுவாதி.

“ஆனா இந்த முறை செம மாஸ் என்ட்ரி…”

“ரித்து, என்னைப் பார்த்தா பச்சைப்புள்ள மாதிரி இல்லை? பாவம்டி நான்… நடந்ததை சொல்லிடு செல்லம்…”

“நேத்து சாயங்காலம் நான் ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்குப் போனா, இன்ப அதிர்ச்சியா ராகவோட அம்மாவும், அப்பாவும் பூ, பழம், சுவீட்டெல்லாம் தட்டு நிறைய வச்சு அம்மா, அப்பா கூட பேசிட்டு இருந்தாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல. என்னைப் பார்த்ததும் ராகவ் அம்மா முகத்துல அவ்வளவு சந்தோஷம். ‘ராகவ் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டான்’னு சொன்னாங்க. என்னால நம்பவே முடியல. ராகவ்க்கு புத்திமதி சொல்லி ஒருவழியா கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிட்டதா சொன்னாங்க. இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்லியிருக்காங்க.”

“என்னடி ஓவர் நைட்ல திரைக்கதை மாறிப்போச்சு?”

“என்னால இப்ப வரைக்குமே நம்ப முடியல…”

“வீட்ல ஆண்ட்டியும், அங்கிளும் உனக்கு மேல ஷாக் ஆகியிருப்பாங்களே?”

“ஆமாடி. அப்பாவுக்கு இன்ப அதிர்ச்சி தான். ஆனா, அம்மாவுக்கு, வெறும் அதிர்ச்சி மட்டும் தான்…”

“ஆண்ட்டி என்ன சொன்னாங்க?”

“ஒன்னும் சொல்லல… ஆனா அம்மாவோட முகத்துல தான் அவங்க மனசு தெரிஞ்சுடுமே… எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாயிடும்னு தோணுது சுவாதி…”

“கண்டிப்பா ரித்து... நீ கவலையே படாத… நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கறதைப் பார்த்து ஆண்ட்டி தான் முதல்ல சதோஷப்படப்போறாங்க…”

“எனக்கும் அதான் வேணும் சுவாதி…”

“ஆனா, எனக்கு ஐஸ் க்ரீம் வேணும்.”

“காலைலயேவா? ஆபிஸ் முடிஞ்சு சாயங்காலம் போகலாம்.”

“முடியவே முடியாது…”

அலுவலகத்தில் டைனோ இல்லாததால், வம்படியாக ரித்துவை அழைத்துக்கொண்டு கடைக்கு விரைந்தாள், சுவாதி.



கண்கள் காணும் கனவுகளில் 

வர்ணங்கள் பூசியவன் நீ தானே... 

நெஞ்சம் துடிக்கும் ஓசைகளில் 

இசையாய் நுழைந்தவன் நீ தானே…

தித்திக்கும் நிமிடங்கள் நாம் வாழ 

தவம் கோடி நானும் செய்தேனோ! 

முன்ஜென்ம உறவாய் நீ தொடர்ந்திருக்க 

முன்னூறு ஆண்டு காலம் காதலிப்போம்!!  



“வா ரித்து, வாங்க ஆண்ட்டி!!”

திருமண அழைப்பிதழ் கொடுத்து, அனைவரையும் திருமண விழாவிற்கு அழைப்பதற்கு ரித்துவும், அவளது தாயும், சுவாதியின் இல்லத்திற்கு வருகைத்தர, அவர்களை எதிர்கொண்டு வரவேற்றாள், சுவாதி.

“கல்யாண பத்திரிகை ரொம்ப அழகா இருக்கு மா…”

சுவாதியின் அம்மா, ரித்துவிடம் கூற,

“கவலையே படாதீங்க ஆண்ட்டி. இதை விட சூப்பரான பத்திரிக்கையை சுவாதி கல்யாணத்துக்கு அடிச்சுடுவோம்…” என்றாள் ரித்து, பணிவோடு.

“என்ன ரித்து நீ, என்னை ஒளவையார் ஆக்கி, அழகு பார்க்கணும்னு எங்க வீட்ல ஆசைப்படறாங்க, நீ என்னடான்னா கல்யாணம் அது இதுனு பேசற…”

சுவாதி கூற, வெளிப்படையாய்ச் சிரிக்காமல் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள், ரித்து.

“எப்படி பேசறா பார்த்தீங்களா? கல்யாணம்ங்கறது சாதாரண விஷயமா? பார்த்துப்பார்த்து அலசி ஆராய்ஞ்சு தானே நல்ல குடும்பமாத் தேடி கட்டிக்கொடுக்க முடியும்?” என்றாள் சுவாதியின் தாய், ரித்துவின் தாயிடம். 

“அது ஒண்ணுமில்ல ஆண்ட்டி, இப்ப இருக்கற காலகட்டத்துல விலைவாசியெல்லாம் எங்கேயோ இருக்கு. கல்யாணம் பண்றதும், வீட்டைக் கட்டுறதும் ஒன்னு. அதான் எங்க வீட்ல என்ன நினைக்கறாங்கன்னா, இப்ப ஒரு தடவை கல்யாணம் பண்ணிட்டு, திரும்ப அறுவது வயசுல இன்னொரு தடவை அறுபதாம் கல்யாணம் செஞ்சா ரெண்டு செலவு ஆகுமேன்னு, டைரெக்ட்டா அறுபதாம் கல்யாணத்துக்கு பிளான் பண்றாங்க. ஒரே செலவா போய்டும். இல்லைம்மா?”

மீண்டும் சுவாதி, அவளது அம்மாவை இடைமறித்து பதில் கூற, இம்முறை ரித்துவின் அம்மாகூட சிரித்துவிட்டாள்.    

“ரொம்பத்தான் கொழுப்பு உனக்கு” என்று மகளின் வாயை அடக்கிய சுவாதியின் அம்மா, “ஆனா ரித்து, உண்மையிலேயே நீ செய்யப்போறது மிகப் பெரிய காரியம்மா. சுவாதி உன் மாப்பிள்ளையைப் பத்தி சொன்னா. இதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும்…” என்று ரித்துவிடம் கூற, ரித்து பதில் கூற முடியாமல் தடுமாற, ரித்துவின் அம்மா முகம் வாடிப்போனாள். அதைப் புரிந்துகொண்ட ரித்து, உடனே விடைபெற்றுக்கொண்டு அவ்விடம் விட்டு புறப்பட்டாள். 


நெருங்கிய உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு ரித்து வீடு திரும்ப, அவளது கைப்பேசி சிணுங்கியது.

“சொல்லு சுவாதி…”

“ரித்து, காலைல அம்மா பேசினதை மனசுல வச்சுக்காத. ஆண்ட்டி ரொம்ப டல் ஆயிட்டாங்க. சாரிடி…”

“ப்ச் அவங்க எதுவும் தப்பா சொல்லல. நானும் எதுவும் தப்பா நினைக்கல…”

“அதுக்கில்லடி…”

“சுவாதி, என் சொந்தக்காரங்க தெரிஞ்சவங்க எல்லாருமே என்னென்னமோ பேசி காயப்படுத்தறாங்க. ஆண்ட்டி சொன்னதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. தேவையில்லாம நீ வருத்தப்படாத…”

“எப்படி நீ இதெல்லாம் தாங்கிக்கற?”

“ஏன்னா, என் கைல இருக்கறது வைரக்கல்லுன்னு எனக்குத் தெரியும். அடுத்தவங்க கண்ணுக்கு அது உப்புக்கல்லா தெரிஞ்சா, அது என் தப்பில்லையே…”

“சரியா சொன்ன ரித்து… நீ கடைசிவரை இப்படியே இரு… இந்த உலகம் ஏதாவது பேசிட்டு தான் இருக்கும். நாம காதுல வாங்கக்கூடாது.”

“அதே தான். நீ வருத்தப்படாம போய் தூங்கு. நான் செம டயர்டா இருக்கேன். நானும் தூங்கப்போறேன்.”

அழைப்பினைத் துண்டித்த பிறகு தனது கைப்பேசியில் சேமிக்கப்பட்டிருந்த ராகவின் புகைப்படத்தைக் கண்டு ரசித்தபடியே உறங்கிப்போனாள்.

     

கண்களில் கனவுகளும், நெஞ்சினுள் ஆசைகளும் சுமந்து கொண்டு, அவள் ஏங்கி நின்ற திருமண நாளும் வந்தது. ஆயுட்கால உறவிற்கான அச்சாரம் போடப்படும் பொன் நாள் ஆகையால், திருமகள் பொன்மகளாய் அலங்கரிக்கப்பட்டாள்.


திருமண மண்டபத்தில் அனைவரும் பரபரப்பாக இருக்க, 

“ஆண்ட்டி, எப்படி இருக்கீங்க?” என்று முகம் மலர்ந்து சிரித்தபடி பெண் ஒருவள், ரித்துவின் தாயின் முன் வந்து நின்றாள். அவளது கையைப் பற்றியபடி இளையவன் ஒருவனும் அவளருகே நின்றிருக்க, மற்றொரு கையில் கைத்தடி ஒன்றினைப் பற்றியபடி அவள் நின்றிருந்தாள். அவள் ரித்துவின் சிறு வயது தோழி என்று கண்டதும் ரித்துவின் தாய்க்குப் புரிந்துபோனது. 

“நல்லா இருக்கேன் மா. வா மா!!”

“கல்யாணப் பொண்ணு எங்க ஆண்ட்டி?”

“தயாரிகிட்டே இருக்கா…” என்றபடி ரித்துவின் அம்மா, மணமகள் அறையை சுட்டிக் காட்ட,

“நான் போய் பார்க்கறேன் ஆண்ட்டி…” என்றவள் தத்தித்தத்தி நடக்க, உடன் அழைத்துச் சென்றான் அவளது கணவன். அவர்கள் இருவரும் செல்வதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த ரித்துவின் தாயின் மனதில், ஒருவித நிறைவு பொங்கியது. அவர்கள் இருவரும் சிரித்துக்கொண்டு செல்வதும், மனைவியின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் கணவன் வேகம் தளர்த்தி உடன் செல்வதும், அனைவருக்கும் புரியும்படி அவர்களின் மத்தியில் அப்பட்டமாய்ப் பொங்கிய காதலும், அவளின் மனதில் குவிந்திருந்த பயத்தினை அகற்றி, புது நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்தது.


தோழியைக் கண்ட ரித்து பெரும் மகிழ்ச்சி கொள்ள, அவளை ஆசையாகக் கட்டிக் கொண்டாள்.

“நீ வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்டி” - ரித்து.

“உன் கல்யாணத்துக்கு நான் வராமலா?”

“சோ ச்வீட்… உன் ஹஸ்பண்ட் வந்திருக்காருல்ல?”

“வந்திருக்கார். வெளியே ஹால்ல உட்கார்ந்திருக்காரு…”

“தேங்க்ஸ்டி” என்றவள், அவளை சுவாதிக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.


“அதிருக்கட்டும், வாத்தியாரு என்ன சொல்றாரு?” என்றாள் அவள்.

“வாத்தியாரா?” - புரியாமல் முழித்தாள், ரித்து.

“உன் வயலின் வாத்தியாரைச் சொன்னேன்…”

“போடி” என்று செல்லமாய்க் கோபித்துக்கொண்டு ரித்து முறைக்க, தோழிகள் சிரிக்க, ரித்துவும் கோபம் மறந்து உடன் சிரித்தாள்.

அவளை மணமேடைக்கு அழைத்துச் செல்ல அவளது தாய் அறையினுள் நுழைய, சிரித்துக்கொண்டிருக்கும் மகளைக் கண்டதும் கண்களில் ஈரம் கொண்டாள்.

மகளின் அருகே சென்றவள், மணப்பெண் கோலத்தில் நின்றிருந்த குலமகளைக் கண்டு பூரித்துப்போனாள். உச்சி முதல் பாதம் வரை தனது செல்ல மகளைக் கண்டவள், அவளது நெற்றியில் முத்தமிட்டாள்.

“அம்மா…”

“ரித்து, உன்னை இந்த அலங்காரத்துல பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்குடாமா. மனசுல இருந்த கவலையெல்லாம் பஞ்சா பறந்துபோச்சு. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். மனசு நிறைஞ்சு சொல்றேன், நீ நல்லா இருப்ப டா. நூறு வருஷம் நல்லா இருப்ப” என்றாள், உளமார.

கண்கள் கலங்கக் கொண்ட ரித்து, தனது தாயினைக் கட்டிக் கொண்டாள்.


பெண்ணவள் நடைபழகி மணவறையில் வந்தமர, அவளை நோக்கியபடி அமர்ந்திருந்த மன்னவன் மெலிதாய் அவளைக் கண்டு சிரிக்க, சிலிர்த்துப்போனது அவளது தேகம். அவன் அவளது கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்க, பொங்கிய ஆனந்தத்தில் சில துளிகள் கண்ணீராய் அவளது விழிவழியே வடிந்தது. அவன் முகம் கண்டாள். அவனும் அவளது திருமுகம் கண்டான். அவன் மனதில் என்ன இருந்ததோ, தெரியவில்லை, ஆனால் இவள் மனதில் நடுக்கடலின் அமைதியும், இமயமளவு இன்பமும் நிறைந்திருந்தது. அதனோடு, ‘இனி அவன் எனக்கானவன்’ என்று அகந்தையும் பிறக்க, சிரித்துக்கொண்டே தலைக்கவிழ்ந்து கொண்டாள். உற்றார் உறவினர் ஆசிகளோடும், வாழ்த்துகளோடும் ரித்து - ராகவின் ஜென்மபந்தம் இனிதே ஆரம்பமானது.

No comments:

Post a Comment