“சுவாதி, அன்னைக்கு நான் ஆட்டோகிராஃப் வாங்கப்போன போது ஸ்டேஜ் பக்கத்துல ராகவ் நின்னுட்டு இருந்தார். அவர் பக்கத்துல யாரோ ஒருத்தர் என்னமோ பேசிட்டு இருந்தாரு. ராகவ் தலையை ஆட்டி ஆட்டி அதைக் கேட்டுட்டு இருந்தார். நான் தயங்கித்தயங்கி அவங்க எதிரில போய் நின்னேன். ராகவ அவ்வளவு பக்கத்துல பார்த்ததும் எனக்கு கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு. அவர் என்னைப் பார்த்து சிரிச்சாரு. ரொம்ப சந்தோஷமா இருந்தது. அப்புறம் சைகை பாஷையில ஏதோ கேட்டாரு. எனக்கு ஒண்ணுமே புரியல. ‘சாரி, நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியல’னு சொன்னேன். உடனே அவருடைய முகம் சுருங்கிப் போச்சு. தலைகுனிஞ்சு திரும்பவும் ஏதோ சைகை காட்டிட்டு விலகிப் போயிட்டாரு. நான் எதுவும் தப்பா பேசிட்டேனோன்னு பயந்து கூட நின்னுட்டு இருந்த இன்னொருத்தரைப் பார்த்தேன். ‘நீங்க எங்களோட வாய் பேச முடியாதோர், காது கேளாதோர் சங்கத்தின் புதிய உறுப்பினர்னு நினைச்சு எப்போ எங்க சங்கத்துல சேர்ந்தீங்கன்னு ராகவ் கேட்டாரு. அப்புறம் நீங்க பேசினதும், உங்கள வாய் பேச முடியாதவர்னு நினைச்சதுக்காக மன்னிப்பு கேட்டுட்டு போறாரு’னு சொன்னாரு… ஒரு நிமிஷம் கலங்கிட்டேன். ‘அப்போ ராகவால பேச முடியாதா?’னு கேட்டேன். ‘இல்லமா, அவரால பேச முடியாதுனு சொல்லிட்டாரு…’"
பேயறைந்தார் போல் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தாள், சுவாதி.
"சுவாதி, என்னடி ஆச்சு உனக்கு? ஏன் இப்படி இருக்க?"
"ரித்து, அவரால பேச முடியாதா?"
"ம்ம்…"
"இவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்ட சொல்லவே இல்லை? அதனாலதான், ‘ஃபோன் பண்ணி ராகவ் கிட்ட பேசிக்கறோம்’னு நான் அவங்க அம்மா கிட்ட சொன்னபோது என் கையை அழுத்தினியா? எப்படி இதை நீ என்கிட்ட சொல்லாம விட்ட?”
“இதுல என்னடி இருக்கு?”
“என்ன இருக்கா? லூசாடி நீ? உனக்கு என்ன குறைச்சல்? வீட்டுக்கு ஒரே பொண்ணு. அம்மா, அப்பா உன் மேல உயிரையே வச்சிருக்காங்க. வசதிக்கும் குறைச்சல் இல்லை. உனக்கு எதுக்குடி இந்த மாதிரி பையன்? குழப்பமே வேண்டாம். அவனை மறந்துடு. இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா, நான் உன்னைக் கூட்டிட்டே போயிருக்க மாட்டேன்.”
“சுவாதி…”
என்றும் கண்டிரா சினத்தினைத் தோழியின் முகத்திலும், குரலிலும் கண்டாள், சுவாதி.
“உனக்கென்ன மனசுல பெரிய தியாகச் செம்மல்னு நினைப்பா?”
தோழியின் சினத்தினைப் பொருட்படுத்தாது வினவினாள்.
“இதுக்குமேல நீ ஒரு வார்த்தை பேசின, பிரெண்டுன்னு கூட பார்க்காம அறைஞ்சுடுவேன் சுவாதி…”
“ரித்து…”
“என்னென்னமோ பேசற? அவரால பேச முடியலைன்னா என்ன இப்போ? எந்த விதத்துல அவர் குறைஞ்சு போயிட்டாரு? நான் ஒன்னும் என்னை தியாகியா நினைக்கவே இல்லை. என் மனசுக்குப் பிடிச்சவரை கல்யாணம் செய்துக்கணும்னு நினைக்கறேன். அவ்வளவுதான். அவரால பேச முடியலைன்னா என்ன இப்போ? வேலைக்கு போய் சம்பாதிக்கறாரு. நிச்சயம் பொண்டாட்டி, புள்ளைய நல்லா வச்சுப்பாரு. வயலின் சொல்லிக்கொடுக்கிறார். எவ்வளவோ சேரிட்டி ஷோ நடத்தறார். இதை விட வேற என்ன வேணும்?!”
“அதில்லடி…”
“ஏன், அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னால சந்தோஷமா வாழ முடியாதா? காதல்ங்கறது வாயத் தொறந்து பேசி வர்றதில்லை. வாழ்ந்து பார்த்து வர்றது. நிச்சயம் நாங்க அன்னியோன்யமா இருப்போம்னு எனக்குத் தோணுது. அவரோட குறையை நான் ஒரு பொருட்டாவே நினைக்கல. தெரியாமத்தான் கேட்கறேன், கல்யாணம் முடிஞ்சு ஒருவேளை கட்டிக்கிட்டவருக்கு ஏதோ ஒரு ஆக்சிடெண்ட்ல கையோ, காலோ போயிடுச்சுனா, ‘உங்கக்கிட்ட குறை இருக்கு, இனி உங்களோட வாழமாட்டேன்’னு சொல்லிட்டு விட்டுட்டு வந்துடுவோமா? இல்லைல? அங்கத்தையும் தாண்டி அகத்தைத் தொடறதுதான் காதல்.”
ரித்துவின் வாதம் சுவாதியின் நிலைப்பாட்டினை மாற்றியது.
“என்னை மன்னிச்சுடு ரித்து. உன்னைக் காயப்படுத்தணும்னு நான் இப்படி பேசல. என் மனசுல தோன்றியத யோசிக்காம பேசிட்டேன். நம்மள சுத்தி நடக்கற விஷயங்கள் அப்படி பேச வச்சிடுச்சு. எங்க வீட்டையே எடுத்துக்கோயேன். அநாதை இல்லத்துக்கும், முதியோர் இல்லத்துக்கும் காசு கொடுப்பாங்க. கண்ணு தெரியாதவங்க ரோட்டைக் க்ராஸ் பண்ண உதவி பண்ணுவாங்க. ஆனா, போன வாரம் என் பெரியம்மா பொண்ண பெண் பார்க்க வந்த மாப்பிள்ளைக்குக் கண்ணு கொஞ்சம் ஸ்குய்ன்ட் ஐஸா (squint eyes) இருக்குனு சொல்லி வேண்டாம்னு சொல்லிட்டாங்க. இத்தனைக்கும், அவர் நல்லா படிச்சு, நல்ல வேலைல இருக்காரு.”
“இப்போ என்னடி சொல்ல வர? குறையிருந்தா அவங்களுக்குக் கருணை கொடுத்தா போதும், காதலைக் கொடுக்க வேண்டாம்னு சொல்றியா?”
“சத்தியமா இல்லைடி. முட்டாள்தனமான மனநிலையைச் சொன்னேன். ரித்து, ராகவ விரும்பி கல்யாணம் செய்துக்கறதுன்னு முடிவு பண்ணிட்டியா?”
“முடிவுன்னு சொல்ல முடியாது. ஆனா, அந்த எண்ணம் நாளுக்கு நாள் வலுவாகிட்டே போகுது.”
“ரித்து, வீட்ல என்ன சொல்லுவாங்க?”
“என்னை முழுசா புரிஞ்சு வச்சிருக்காங்க. நிச்சயம் என் உணர்வை மதிப்பாங்கன்னு தோணுது.”
“அப்புறம் என்ன குழப்பம்?”
“அன்னைக்கு என்னைப் பார்த்ததும் சிரிச்சவர், என்னால பேச முடியும்னு தெரிஞ்சதும் அப்படியே முகம் சுருங்கிப்போயிட்டாரு. என் முகத்தைப் பார்க்கல. மன்னிப்பு கேட்டார். மன்னிப்பு கேட்கற அளவுக்கு அவர் எந்தத் தவறும் பண்ணல. என்னால பேச முடியாதுனு அவர் நினைச்சதுல எந்தத் தப்பும் இல்லை. அப்புறம் ஏன் அவர் முகத்துல அவ்வளவு வருத்தம்னு புரியல. அவர் தள்ளி நின்னு ரெண்டு பேர் கூட சைகை பாஷைல பேசிக்கிட்டு இருந்தாரு. அந்த இடத்தை விட்டு நான் வரும்போது அவரைத் திரும்பிப் பார்த்துக்கிட்டே வந்தேன். மொத்தமா அந்த இடத்துலயே நாலஞ்சு பேர் தான் இருந்திருப்பாங்க. நான் திரும்பிப்திரும்பி பார்க்கறத அவங்க எல்லாருமே ரெண்டொருதரம் பார்த்தாங்க. ஆனா அவர் எதேச்சையா கூட கண்ணை என் பக்கம் திருப்பல. இதுக்கு என்ன அர்த்தம்னு புரியல. எதுக்காக என்னை அவர் அவாய்ட் பண்ணாருன்னு புரியல… யோசிச்சு யோசிச்சு, ரொம்பக் குழம்பிப் போயிருக்கேன், சுவாதி…”
“சத்தியமா இதுக்கு என்ன சொல்றதுன்னே தெரியலடி. நீ என்னென்னவோ சொல்ற. என்னென்னவோ யோசிக்கற… ஒண்ணுமே புரியலடி… ஆனா, நீ சந்தோஷமா இருக்கணும். அதான் எனக்கு வேணும்.”
சுவாதியின் கைகளைப் பற்றிக்கொண்ட ரித்து, இதமாய் சிரித்தாள்.
Super epi sis! Eagerly waiting for next episode - g3
ReplyDeleteThank you pa 🙂 ezhudhitte iruken 🙂🙂
Delete