தாரகைகளைத் தழுவ
கைகளும் இல்லை
ஓடி விளையாட
கால்களும் இல்லை
தவழ்ந்து தவழ்ந்து
மிதக்கின்றாய்
இவ்வுலகே உன் உலகமென
வாழ்கின்றாய்
கோடானுகோடி
அகவையாயும்
இன்றும் உயிர்களைக்
கவர்கின்றாய்
மேனியிலே
மாசுபடர்ந்தும்
மனித மனங்களை
ஈர்க்கின்றாய்
உன் முழு வனப்பைப்
பார்க்கையிலே
கடல்கூட பெருமிதத்தில்
பொங்கும்!
நீ வாராமல்
போகையிலே
உலகே துக்கத்தில்
முடங்கும்!
அழகழகாய் வளர்வதிலும் மெதுமெதுவாய்த் தேய்வதிலும்
உன் மோகன ரூபம்
சௌந்தர்யமே!
இதயத்தைச் சுண்டி
இழுத்திடுமே!
நீ மட்டும் இல்லையென்றால்
கவிக்குப் பொருளில்லை
கவிதைக்குக் கருவில்லை
காதலுக்குத் தூதில்லை
கதைகள் புனைய வழியில்லை
ஆதவன் ஒளியை
இரவல் வாங்கி
ஆதிக்கம் செலுத்துவாய்
இரவெல்லாம்!
ஆதிசிவன் தலையில்
பிறையாய் அமர்ந்து
ஞானவொளி அருள்வாய்
உயிர்க்கெல்லாம்!!!
Migavum arumai
ReplyDeleteநன்றி :)
Delete