Friday, 15 May 2020

அன்புடன் ஆம்பல் - 1




கணினியின் முன் அமர்ந்திருந்தவனின் மனம் அலுவலகப் பணியில் கவனம் கொள்ளாது, அவளது நினைவுகளில் தொலைந்திருந்தது. உள்ளங்கைகளால் முகத்தினை அழுந்தத் துடைத்தவன் மின்னஞ்சல்களை மீண்டும் சரிபார்த்தான். அவளிடமிருந்து மின்னஞ்சல் ஒன்றினை குழந்தைத்தனமாய் எதிர்பார்த்துக் கிடந்தான், நிச்சயம் எந்தத் தகவலும் வராது என்று தெரிந்திருந்தும். தனது மனதின் அபிலாஷைகளைக் கூறும் காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்தவன், அதற்கான தருணத்திற்கு ஏங்கியிருந்தான். அவனது ஏக்கத்திற்கு எரியூட்டும் விதமாய் அவளுடனான சம்பாஷனைகள் மனதில் தோன்றின. அத்தனையும் நெஞ்சினுள் கல்வெட்டென பாய்ந்துக் கிடப்பதை எண்ணி சிரித்துக்கொண்டான்.  

“கவிதைகளில் ஒருவரின் மனம் புரியுமா?! குணம் தெரியுமா?!” என்றான், அவளிடம் ஒருமுறை.
“கவிதைகள் மதி கொண்டு எழுதப்படுபவை அல்ல… மனம் கொண்டு… மனமே கவிதைகளின் கருவறை…” என்றாள் அவள். 
“உங்கள் கவிதைகள் உங்களது மனதிற்கான முன்னுரையா?”
சில நிமிடங்கள் சிந்தித்தவள்,
“ஆம்… முன்னுரை தான்! ஒரு புத்தகத்தின் முன்னுரையை வாசித்தால் பின்வரும் பக்கங்களில் என்னென்ன இரகசியங்களும், சிக்கல்களும், குழப்பங்களும், தத்துவங்களும் புதைந்து கிடக்கின்றன என்பதனை ஒருவாறு ஊகிக்க முடியும். அதுபோலவே நானும். என் மனக் கிடங்கிலும் அன்புகள் அடைகாக்கப்பட்டுள்ளன, இரகசியங்கள் பதுக்கப்பட்டுள்ளன...” என்றாள்.
அவள் கூறியது அவனது மனதில் ஆழப்பதிந்துவிட்ட ஒன்றாகிப்போனது. 
‘அந்த இரகசியங்களை அவள் என்னிடம் கூற வேண்டும்… என்னிடம் மட்டுமே கூற வேண்டும்… அவளது மனதின் ஆழத்தில் நங்கூரமென நான் நிலைகொண்ட பின் அவளே நிச்சயம் உரைப்பாள்…’ என்று எண்ணிக்கொண்டான். 

ஒருவார காலமாகிவிட்டது அவளோடு பேசாது. ஒரு மாமாங்கம் கடந்ததைப் போல் தோன்றியது அவனுக்கு. கடிகார முட்களை விரட்டியடித்துக்கொண்டிருந்தான். பத்து நாட்கள் குலதெய்வ வழிபாட்டிற்காக ஊருக்குச் செல்வதாகக் கூறியிருந்தாள். ஏழு நாட்கள் முடிந்துவிட்டிருந்தன. இன்னும் மூன்று நாட்களின் காத்திருப்பை எண்ணி அயர்ந்து கொண்டான். 

உலகிற்கு கதிரவனின் உதயமும், அஸ்தமனமும் ஒரு நாளினைக் குறிக்கும் என்றால், அவனது உலகிற்கு அவளது காலை வணக்கமே சூரியோதயம்; இரவு வணக்கமே சந்திரோதயம். அவளது கவிதைகளைப் படித்தான்… மீண்டும் மீண்டும் படித்தான்… அவளது மனதினையும் படிக்க முயன்றான். அவளது எழுத்துக்கள் உள்ளூர செய்த வேதியல் மாற்றத்தால் காதலி மீது மட்டுமல்ல, காதல் மீதும் அவனுக்குக் காதல் வந்தது.               

     
உனது மனதினுள் 
என்னை நீ சிறையெடுக்க 
நான் என்ன தவறு செய்யவேண்டும்? 


அவனுக்கு மிகவும் பிடித்த இம்மூன்று வரிகளை அடிக்கடி தன்னுள்ளே கூறிக்கொண்டான். கவிதைக் காதலிக்கு உலகின் தலை சிறந்த கவிதைத் தொகுப்புகளைப் பரிசளிக்க எண்ணினான். ஆனால் காதலியின் கவிதைகளைத் தவிர மற்றவை எதுவும் ருசிக்கவில்லை. அவளது எழுத்துப்பிழைகளைக் கூட ரசிக்கப் பழகிவிட்டவனுக்கு, இலக்கியங்கள் அனைத்தும் தேவையற்றதாகிப் போனது.


பிறர் கையில் ஆயுள் ரேகை
எனது கையில் காதல் ரேகை
என்னுள்ளே காதல் நீளும் வரை
எனது ஆயுளும் நீண்டிருக்கும்…


அவள் எழுதியிருந்த இக்கவிதையை வாசித்த பின்பு தனது உள்ளங்கைகளைக் கண்டான். அவனது ஆயுள் ரேகையை மிக நேர்த்தியாக அவனது கையில் பிரம்மன் வரைந்திருப்பதைக் கண்டான். ‘இது காதல் ரேகைனு என்னைப் படைச்ச கடவுளுக்கும் தெரிஞ்சிருக்கு. அதான் இந்த ஒரு ரேகையை மட்டும் இவ்வளவு தெளிவா, பிசிறில்லாம அழகா வரைஞ்சிருக்காரு…’ என்று எண்ணிக்கொண்டான்.

அவளது சிந்தனைகளிலும், எழுத்திலும் தொலைந்திருந்தவனின் கவனத்தை ஈர்த்தது கைப்பேசி. அம்மாவின் அழைப்பினை தாமதிக்காது ஏற்றான்.
“அம்மா, எப்படி இருக்கீங்க?”
“சந்தோஷ், நலம் விசாரிக்கற நிலைமையில இப்போ நாம இல்லை. உடனே புறப்பட்டு ஊருக்கு வா…”
அம்மாவின் கவலை தோய்ந்த குரலில் கலவரமானவன்,
“என்ன அம்மா என்ன ஆச்சு? ஏன் இப்படி பேசறீங்க? எல்லாரும் நல்லா இருக்கீங்களா இல்லையா?” என்று தனது பரிதவிப்பினை கேள்விகளாய் அடுக்கினான். 
“பதறாம அம்மா சொல்றத பொறுமையா கேளு, சந்தோஷ். பாட்டிக்கு திடீர்னு காலைல நெஞ்சு வலி வந்துடுச்சு. ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கோம். நீ உடனே கிளம்பி வா…”
“பாட்டிக்கா? என்னமா ஆச்சு பாட்டிக்கு?”
அவனது குரல் தழுதழுக்க, கண்கள் ஈரம் கொண்டன.
“ஹார்ட் அட்டாக்குனு டாக்டர் சொல்லிட்டாங்க. நீ உடனே கிளம்பி வா. அப்பா ரொம்ப மனசொடிஞ்சு இருக்காங்க. எனக்கும் பயமா இருக்கு…”
“பாட்டிக்கு ஒன்னும் ஆகாதுமா…”
“ஆகாது டா… கும்பிடற தெய்வம் நம்மள கை விடாது. இருந்தாலும் நீ வந்தா எங்களுக்கு தைரியமா இருக்கும்…”
“உடனே கிளம்பி வரேன்மா…”
“சந்தோஷ், கார் எடுத்துட்டு வராத. இந்த நேரத்துல நீ வண்டி ஓட்ட வேண்டாம். பஸ்ஸோ, ட்ரெயினோ பிடிச்சு வந்துடு.”
“வந்துடறேன் மா, நீங்க தைரியமா இருங்க. நான் வண்டி ஏறிவிட்டு போன் பண்றேன்” என்றவன் தனது தாய்க்கு தைரியம் கூறிவிட்டு கோயம்பேடு பஸ் நிறுத்தத்திற்கு விரைந்தான்.          

சந்தோஷ் பிறந்தது, வளர்ந்தது தஞ்சை என்றாலும் பன்னாட்டு நிறுவனத்தில் பணியமர்ந்தது சென்னையில். பெற்றோர் பெற்றெடுத்திருந்தாலும் அவனை அரவணைத்து, அன்பு காட்டி, அறிவுரை ஊட்டி வளர்த்தது பாட்டியே. ஒற்றை பேரப்பிள்ளை என்பதால் அறிவுரையோடு, பால், நெய், தயிர் மற்றும் அவனுக்கு மிகவும் பிடித்த பால்கோவா ஆகியவையும் சற்றே கூடுதலாக ஊட்டிவிடப்பட்டதால் கண்ணாடி போட்ட செரெலாக் பேபி ஆகிவிட்டான் இந்த சந்தோஷ். இலவச இணைப்பாக செல்லத் தொப்பையும் அவனோடு வளர்த்துவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் ஊர் திரும்பும் பொழுது, அவனுள் ஏகப்பட்ட சந்தோஷங்கள் கொட்டிக்கிடக்கும். ஒவ்வொரு வாரமும் தவறாமல் தனது காரினை எடுத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பிவிடுவான். தனது பாட்டியை அழைத்துக்கொண்டு திருச்சி ஸ்ரீரங்கநாதரை வழிபடுவது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஸ்ரீரங்கம், திருவானைக்கா, மலைக்கோட்டை என்று சில சமயங்களில் நாள் முழுதும் நண்பர்களைப் போல் பாட்டியும், பேரனும் சுற்றிக்கொண்டிருப்பர். முதல் சம்பளம் வாங்கியதும், அத்துனை பணத்திலும் பாட்டிக்கு மட்டும் சென்னையிலிருந்து பட்டுச் சேலைகள் வாங்கி இருந்தான். “பாட்டி, இதுதான் என் முதல் சம்பளம்” என்று கூறி புடவைகளைப் பாட்டியின் கையில் கொடுத்துவிட்டு அவரது காலில் விழுந்து வணங்கியது இன்றும் அவனது நினைவில் பசுமையாய் இருந்தது. முதல் முறை பெற்றோரோடு பாட்டி சென்னைக்கு வந்திருந்தபோது, ஊர் சுற்றிக்காண்பிக்க தனது மேலாளரிடம் கெஞ்சிக் குட்டிக்கரணம் அடித்து குழைந்து சிரித்து ஒரு வார காலம் விடுப்பு பெற்றான். முதல் முறை சென்னை மெரினா கடற்கரைக்கு விஜயம் செய்த பாட்டியிடம் அந்தக் கடல் அளவு ஆனந்தம் கண்டான். 
“கடவுளோட படைப்புல நான் ரொம்ப வியக்கிறது கடலும், மலையும் தான் சந்தோஷ்” என்றார், பாட்டி. 
“ஏன் பாட்டி?” என்றான் அவன் ஒன்றும் விளங்காமல். 
“மலை மாதிரி மனுஷனோட குணம் இருக்கணும். கடல் மாதிரி அவனோட சினம் இருக்கணும்” என்றார். 
“கடலளவு கோபப்படுணுமா பாட்டி?” என்றான் கேலியாய். 
“அப்படி இல்லை டா. மலை என்பது உயரத்தைக் குறிக்கும். ஒரு மனுஷனோட குணம் மேன்மையா இருந்தாத்தான் அவனும் மேன்மையானவன் ஆவான். மழை வர  மலைகள் ஒரு காரணமா இருக்கு. அதுபோல மேன்மையானவர்களால பலர் வாழ்வு செழிப்பாகும். அதே போல, கடல் என்பது ஆழத்தைக் குறிக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு மனிதனின் கோபம் ஆழத்தில் இருக்கோ அவனது மனமும், அதில் முளைக்கும் எண்ணமும் கடற்பரப்பு போல விசாலமா இருக்கும்” என்றார். 
அன்றிலிருந்து ஒவ்வொருமுறை அவன் கடற்கரைக்குச் செல்லும்போது பாட்டியின் உபதேசமே அவனது நினைவிற்கு வரும்.      

இரவு நெருங்க ஊர் திரும்பியவன், உடனே தனது பாட்டி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு விரைந்தான். ஒருபுறம் அழுதழுது ஓய்ந்திருந்த தந்தை, முகம் வீங்கி நிலைகுத்திய பார்வையோடு ஏதோ எண்ணத்தில் மூழ்கியிருக்க, விசும்பிக்கொண்டிருந்த அவனது தாயே அவன் வந்துவிட்டதை உணர்ந்து எழுந்து மகனருகே ஓடோடிச் சென்றாள்.
“பம்பரமா வேலை செய்யற பாட்டி எப்படி படுக்கையில கிடக்கறாங்க பார்த்தியா?”
அவசர சிகிச்சைப் பிரிவின் கண்ணாடி வழியே மரணத்தின் வியூகத்தில் சிக்கிக்கொண்டுள்ள பாட்டியைக் கண்டான். ஆத்மார்த்தமான அன்பினைப் பொழிவதில் அவருக்கு நிகர் அவரே. இன்றுவரையான அவனது வாழ்வின் அதிகப்படியான நிமிடங்களில் அவனது பாட்டியே நிறைந்திருக்கிறார். வார இறுதிகளில் ஊர் திரும்பும் பேரனுக்காக வீட்டின் வாயிற் கதவின் அருகே மணிக்கணக்காகத் தவம் கிடப்பவர், இன்று தன்னிலை மறந்து துயில் கொண்டிருக்கிறார். 

கண்களைத் துடைத்துக்கொண்டு தனது தந்தையை அவன் காண, அவர் அசைவின்றி அமர்ந்திருந்தார். பற்பலத் துயரங்களைக் கடந்து வந்த பாட்டியின் வாழ்க்கைப் பாதையைக் கண்கூட கண்டவர். பல கதைகள் அவர் கூற கண்ணீருடன் அவன் கேட்டுக்கொண்ட தருணங்கள் அவனது நெஞ்சில் நிழலாடின. 
“அப்பா…”
அவனது அழைப்பு தந்தையின் செவி தீண்டவில்லை.
“அப்பா…” 
மீண்டும் அழைத்தவன் அவரது தோளினை மெல்ல உலுக்க, நினைவிற்குத் திரும்பியவர், “சந்தோஷ்…” என்றுவிட்டு மௌனமாய் கண்கள் கலங்கினார். தந்தையின் மனமும், அதில் தகிக்கும் ரணமும் அறிந்தவனாய், அவனும் மௌனம் கொண்டான். அவனது தோளில் தந்தை தலை சாய்த்துக்கொள்ள, இவன் உள்ளே உடைந்துபோனான். ஆஜானுபாகுவாக வலம் வரும் தந்தை இன்று பெற்றவள் நிலையெண்ணி ஐந்து வயது பிள்ளை போல் அழுதிருப்பதைக் கண்டு அவரை சமாதானம் செய்திட முடியாமல் வார்த்தைகளைத் தொலைத்துவிட்டு, தவித்திருந்தான்.

மருத்துவமனையில் அமைதி சூழ்ந்திருக்க, நகரம் இரவினை போர்த்தியிருக்க, ஊஞ்சலாடிய நினைவுகளில் தொலைந்தவனாய் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே உறங்கிப்போனான், சந்தோஷ். 

“சந்தோஷ், எழுந்திரு…”
அம்மாவின் அழைப்பில் கண் விழித்தவன், முகத்தினை அழுந்தத் துடைத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தவன், “பாட்டி எப்படி மா இருக்காங்க?” என்றான்.
“பாட்டி கண்ணு முழிச்சுட்டாங்க… முகம் கழுவிட்டு வா, உன்னை பார்க்கணும்னு சொல்றாங்க…”
“அப்படியா? வாங்கம்மா…” என்று அவன் எழ,
“முதல்ல முகம் கழுவி, தலை கோதி, சட்டையை சரி பண்ணிட்டு வா… உன்னை இந்தக் கோலத்துல பார்த்தா அவங்களால தாங்க முடியாது…”, என்று இடைமறித்தாள், அன்னை.
இரண்டு நாட்கள் முகச்சவரம் செய்யாமல் விட்டாலே, ‘ஏன் இந்தச் சோகம்?’ என்று மனம் வருந்துவார் பாட்டி. அவனது தாய் கூறியதுபோல், முகம் கழுவி, கேசத்தையும், உடுப்பையும் சீர் செய்துவிட்டு விரைந்தான்.

பாட்டியின் அருகே சென்று நின்றவன், சுருக்கங்கள் படர்ந்திருந்த அவரது வலக்கையினை எடுத்து தனது கைகளுக்குள் வைத்துக்கொண்டான். மெல்ல கண் விழித்த பாட்டி சந்தோஷைக் கண்டதும் அமைதிப் புன்னகை சிந்தினார். 

“பாட்டி…”
அவனது கைகளை தனது வலுவிழந்த கையினால் இறுகப்பற்றியவர், நிம்மதி புன்னகை சிந்தினார். 
“எனக்கு ஒண்ணுமில்ல சந்தோஷ்…” என்றவர், “ஊர்லேர்ந்து வந்த பிள்ளைய வீட்டுக்கு அனுப்பி தூங்க சொல்லாம எதுக்கு மா இங்க தங்க சொன்ன? காலைல நாலு மணிக்கெல்லாம் எதுக்கு மா எழுப்பின? அவன் முகமே எவ்வளவு ஓஞ்சு போயிருக்கு பாரு…” என்றார் மருமகளிடம்.
பாட்டியின் அன்பில் நெகிழ்ந்தவன், உடைந்து அழத்தொடங்கினான். 

No comments:

Post a Comment