Sunday, 3 May 2020

அன்புடன் ஆம்பல் - 12



நாட்கள் உருண்டோட, அவளைச் சுற்றிச்சுற்றி வந்த போதிலும் அவளது கோபங்கள் குறைவதாகத் தெரியவில்லை என்று உணர்ந்திருந்தான். அலுவலகப் பணியையும் மறந்து அவளது நினைவுகளில் திளைத்திருந்தவன் அவளது முறைப்பையும், இவனை வாயடைக்கச் செய்யும் துடுக்கையும் எண்ணி காதல் வயப்பட்டான். அவளை எப்படி சமாதானம் செய்வது என்று அவன் ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருக்கையில், அவனது கைப்பேசியில் செய்தி ஒன்று வந்து விழுந்தது.

“ஹலோ…”
“ஹலோ செல்லம், நான் தான் பேசறேன்…”
“சொல்லுங்க…”
“புதுக்கதை ஆரம்பிக்கப்போறன்னு சொல்லவே இல்லை?!”
“இதுக்குத்தான் போன் பண்ணீங்களா?”
“என்ன இப்படி சொல்லிட்ட?! நோட்டிபிகேஷன் வந்ததும் கடகடன்னு படிச்சு முடிச்சுட்டேன். முதல் எபிசோடே சூப்பரோ சூப்பர்…”
“தேங்க்ஸ்…”
“அடுத்த எபிசோட் எப்ப போடுவ?”
“உங்களுக்கு ஆபிஸ்ல வேலை இல்லையா?”
“ஏன் இல்லாம… தலைக்கு மேல வேலை இருக்கு. இருந்தாலும் எல்லாத்தையும் ஓரங்கட்டிட்டு நீ எழுதினதை படிச்சேன்…” 
“அப்படியெல்லாம் நீங்க படிக்கவேண்டாம்… உங்க வேலைய பாருங்க...”
“ப்ச்… எல்லாம் பார்த்துக்கலாம்… நீ சொல்லு…”
“என்ன சொல்லணும்?”
“ஹீரோவும் ஹீரோயினும் நிச்சயம் முடிஞ்சு பேசிப் பழகி எக்கச்சக்க லவ்வோட கல்யாணம் பண்ணிக்கறாங்க. பர்ஸ்ட் நைட் ரூம்குள்ள அவ போறா. அவன் சிரிக்கிறான்… அப்புறம் என்னனு சொல்லிடு செல்லம்… அடுத்த எபிசோட் நீ எழுதற வரை என்னால வெயிட் பண்ண முடியாது… ப்ளீஸ் சொல்லேன்…
“அடுத்து, மறுநாள் காலைல அவ எழுந்து…”
“நிறுத்து நிறுத்து… அவளும் அவனும் ரூம்குள்ள போனாங்களே, அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு? அதுக்குள்ள அடுத்த நாள் கதையை சொல்ற?”
“ப்ச்… என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு? போன வைங்க…”
“அய்யோ டார்லிங், கட் பண்ணிடாத, தெரியாம உணர்ச்சிவசப்பட்டு அப்படி பேசிட்டேன்… நீ மேற்கொண்டு சொல்லு செல்லம்…”
“மறுநாள் காலைல எழுந்ததும் அவ குளிச்சு முடிச்சு அவனை எழுப்புவா… அவன் எழுந்ததும் ‘எனக்கு முறுகலா தோசை ஊத்திக்கொடு, நான் இப்போ குளிச்சிட்டு வந்துடறேன்’னு சொல்லுவான்…”
“அய்யய்ய… சரியான லூசுப்பயலா இருப்பான் போல… எவனாவது தூங்கி எழுந்ததும் தோசை கேப்பானா?”
“சரி நான் பேசல…”
“அய்யோ செல்லம் கோவிச்சுக்காத… பொழைக்கத் தெரியாத புள்ளையா இருக்கானேனு டென்ஷன் ஆயிட்டேன்… நீ சொல்லு என் புஜ்ஜி மா…”
“அவ கிச்சன்ல தோசை சட்னி எல்லாம் ஆர்வமா தயார் செஞ்சிட்டு இருப்பா. அவன் கிச்சனுக்குள்ள வருவான். கிச்சன் கதவு அவளுக்கு பின்புறம் இருந்ததால அவன் வந்ததை அவ கவனிச்சிருக்க மாட்டா. அவனும் பூனை மாதிரி சத்தமே இல்லாம மிதுவா அடிமேல அடிவச்சு, அவ பின்னழக ரசிச்சுக்கிட்டே வருவான்…”
“அடடடடா… கற்பனை பண்ணாலே செமயா இருக்கு… எப்போ செல்லம் இந்த சீன் நம்ம வீட்ல நடக்கப்போகுது?”
“ஓகே பை…”
“சாரி செல்லம் சாரி சாரி… நீ சொல்லு…”
“ஒன்னும் வேண்டாம்…”
“நான் தான் சாரி சொல்லிட்டேன்ல… ப்ளீஸ் பேபி…”
“ம்ம்… அவன் நடந்து வருவான். இவ அடுப்புக்கு முன்னாடி நின்னுக்கிட்டு தோசை கல்ல பார்த்துட்டு இருப்பா. அவளுக்கு புருஷன் ஆசைப்பட்டு கேட்ட தோசை நல்லா வரணுமேன்னு படபடப்பா இருக்கும். இவன் பின்னாடியே வந்து அவளைத் தாவி கட்டிப்பிடிக்க வரும்போது, அவ எண்ணெய் எடுக்க டக்குனு நகர்ந்துடுவா. அவன் தவறி சூடா இருக்கற தோசைக் கல் மேலயே விழுந்துடுவான். அடிச்சு பிடுச்சு ஆஸ்பத்திருக்கு போனா, ‘அவன் வாய் வெந்துபோய் கோயம்பத்தூர் வரை கோணிக்கிச்சு. இனிமேல் அவனால கிஸ்ஸே பண்ண முடியாது’னு டாக்டரும் கை விரிச்சுடுவாரு. அவ்வளவுதான் அடுத்த எபிசோட்.”
“அடியே கதையாடி இது? நக்கல் பண்றியா? கோயமுத்தூர் என்ன அதைத்தாண்டி கோணிக்கிட்டாலும் நாங்க கிஸ் பண்ணுவோம். கதை சொல்றாளாம் கதை.”
“அது ஒன்னும் இல்லீங்க. உங்கள நினைச்சு எழுதினேனா அதான் இப்படி ஆயிடுச்சு…”
“ஆகும்டி ஆகும்… பொண்டாட்டி நினைப்பாவே இங்க ஒருத்தன் இருக்கேன். உனக்கு கிண்டலா இருக்குல்ல?”
“ஷூ ஷூ…”
“என்ன ஷூ ஷூ…”
“உங்களயில்ல… இங்க ஒரு காக்காவ…”
“எந்தக் காக்கா, கண்ணாடி போட்டு, கத்திரிக்காய் மாதிரி இருக்கற அண்டங்காக்காவா?”
“ஆமாங்க… கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கு. எப்படிங்க கண்டுபிடிச்சீங்க?”
“எனக்குத் தேவை தான் இதெல்லாம்… பை…” 
அவன் கோபித்துக்கொண்டாலும் அவள் மீதான காதல் குறையவில்லை.

அன்று மாலை வீடு திரும்புகையில் அவனையும் மீறிய விசித்திர ஆனந்தம் அவனது நெஞ்சமெங்கும் பரவிக்கிடந்தது. அவன் கண்களில் தெரிந்ததெல்லாம் காதலர்களும், இளஞ்சோடிகளும் மட்டுமே. ஒரு முறை இதயத்தைத் தொட்டுப் பார்த்தான். அவள் முகம் மனக்கண்ணில் தோன்றியது. சிக்னலில் காத்திருக்கையில் எதிரே ஒர் கடையில் வணக்கம் கூறிக்கொண்டு நின்றிருந்த பெண் பொம்மையைக் கண்டதும் அதிலும் அவள் முகமே தெரிந்தது. வண்டியை கடையருகே நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.

பிடித்த பாடலை முணுமுணுத்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தவன் மிகப் பெரிய புன்னகை ஒன்றை சுமந்தபடி அவள் எதிரே சென்று நின்றான். அவள் பார்க்க, அவனும் பார்க்க, அவள் முறைக்க, அவனோ சிரிக்க, அவள் விலக, அவன் தடுக்க… ஏதேதோ வித்தைகள் காட்டினான். 

"கொஞ்சம் தள்ளுங்க…" என்றாள்.
அவனோ கண் சிமிட்டாது அவளையே பார்த்திருந்தான்.
பொறுமை இழந்தவள், "இப்போ எதுக்கு இப்படி பார்க்கறீங்க?" என்றாள்.
"நோக்கு வர்மம்…"
"என்ன?"
"ரெண்டு டேபில் ஸ்பூன் காதல், ஒரு டீஸ்பூன் ஆசை, ஒரு சிட்டிகை காமம் - இவை மூன்றும் கலந்த பார்வையாலே உன் உள்ளத்தைக் களவாடப் போகின்றேன்."
"ஓ!"
"என்ன ஓ??"
"ஒன்னுமில்ல… உங்க முகம் போன போக்க பார்த்து வயிறு தான் சரியில்லையோனு நெனச்சேன்…"
கைகளை எடுத்து நெஞ்சில் மேல் வைக்கச் சென்று, வேண்டாம் என்று எண்ணி, தலை மீது வைத்துக்கொண்டான்.

"கொஞ்சம் தள்ளுங்க…"
"ஒரு நிமிஷம் இரு…" என்றவன் ஒரு பையை அவளிடம் நீட்டினான். 
"உனக்காகத்தான் ஒரு சூப்பர் புடவை வாங்கிட்டு வந்திருக்கேன். ஒரு தடவை கட்டிக் காட்டேன்" என்றான்.
அவளது கனத்த இதயத்தை அவள் முகம் பிரதிபலிக்க, அவன் விலகி நிற்க… அவன் வாங்கித் தந்த புடவையைப் பிரித்துக்கூட பார்க்காமல் பீரோவில் வைத்துவிட்டு அடுக்களைக்குச் சென்றாள்.
“என்ன ஆர்த்தி இது? இன்னும் எத்தனை நாளைக்கு நீ என்னை விட்டு விலகியே இருக்கப்போற?”
அவனது கவலையில் ஒருவித தீவிரம் இருந்தது.
“உங்களுடைய காதல் முழுக்க ஆம்பல் தான். நான் இல்லை.”
“இது என்ன முட்டாள்தனமான பேச்சு?”
“முட்டாள்தனம் தான். திரும்பவும் கேட்கறேன். ஒருவேளை நான் வேற ஆம்பல் வேற’னு இருந்திருந்தா, என்ன பண்ணியிருப்பீங்க?”
அவன் பதில் கூற முடியாமல் தவிக்க, அவளோ அவனது வாய் வார்த்தைக்கு காத்திருந்தாள்.

ஆழ்ந்த பெருமூச்சு விட்டவன், அவளை இழுத்துத் தன் நெஞ்சோடு கட்டிக்கொண்டான். மறுநொடி வெடுக்கென விலகி நின்றவள், 
“இன்னொரு முறை இப்படி நடந்துக்கிட்டா, மறு நிமிஷமே நான் இந்த வீட்டை விட்டு போய்டுவேன்” என்றாள் ஆக்ரோஷமாக.

இரவெல்லாம் அவளது வினாவிற்கு பதில் தேடினான். கீழே படுத்திருப்பவள் உறங்கிவிட்டாளா என்று எழுந்து சென்று பார்த்தவன், அவளிடமிருந்து சற்று விலகி அமர்ந்துகொண்டான். 
“நீ வேற ஆம்பல் வேற’னு இருந்திருந்தா நான் என்ன பண்ணியிருப்பேன் ஆர்த்தி?” என்று அவளிடமே வினவினான். அவள் உறக்கத்தில் புரண்டு படுக்க அவன் எழுந்து கட்டிலின் மேலே படுத்துக்கொண்டான்.

மறுநாள் காலை கண் விழித்தவன், அங்கே ஆர்த்தி இல்லாததைக் கண்டு அடித்துப்பிடித்து அடுக்களைக்கு வந்தான். முன்தினம் அவள் கட்டியிருந்த புடவையைக் கையில் வைத்துக்கொண்டு நிற்பவனைக் கண்டு எதுவும் பேசாமல் முகத்தினைத் திருப்பிக்கொண்டாள்.
“ஆர்த்தி, நேத்து நைட்டு என் மேல ரொம்ப கோவமா இருந்த. அன்னைக்கு மாதிரி இன்னைக்கும் போய்டுவியோன்னு பயந்து…”
“அதுக்காக இப்படித்தான் என் புடவை முந்தானையை உங்க அரைஞாண் கயிறுல முடிச்சு போட்டு வைப்பீங்களா?” என்று பொறிந்துத் தள்ளினாள். 
“ராத்திரி முழிச்சுட்டு தான் இருந்தேன். ஒருவேளை விடயற்காலைல தூங்கிட்டேன்னா என்ன பண்றதுனு யோசிச்சேன். அப்போ இந்த ஐடியா வந்தது…”
“இப்படி கட்டிவச்சா போக முடியாதா? கட்டியிருக்கற புடவையை கழட்டிட்டு வேற புடவை மாத்திட்டு கிளம்ப எத்தனை நேரம் ஆகப்போகுது?”
“சாரி ஆர்த்தி. நேத்து நீ தொடக்கூடாதுனு சொல்லிட்ட. உன் பக்கத்துல படுத்துக்க தயக்கமா இருந்துச்சு. அதான்…”
“இப்படி எத்தனை நாளைக்கு காவல் இருப்பீங்க?”
“என் ஆயுசுக்கும்…”
அதற்கு மேல் அவனோடு பேசிட விரும்பாமல் அவள் பின்புறம் சென்று துணி துவைக்கும் கல்லின் மீது அமர்ந்துகொள்ள, அவன் தலை தொங்கி தனது அறைக்குள் புகுந்துகொண்டான்.

சிறிது நேரம் கழித்து அலுவலகத்திற்கு கிளம்பி வந்தவன், அவள் அருகே சென்று, 
“உனக்கு என்னை பிடிக்கலனு புரியுது. நீ என்னை ஒதுக்கும்போது தான், நான் உன்னை உதாசீனப்படுத்தின போது உனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்னு புரியுது. நான் எப்படி என் வாழ்க்கையைப் பத்தி மட்டும் யோசிச்சு சுயநலமா இருந்தேனோ, அதே போல நீயும் உன் வாழ்க்கையைப் பத்தி யோசிச்சு முடிவெடுக்கறதுல எந்தத் தப்பும் இல்லை. நீ எனக்காகவோ, பெத்தவங்களுக்காகவோ, இல்லை உடம்பு சரியில்லாம இருக்கற பாட்டிக்காகவோ யோசிக்காம உனக்காக மட்டும் யோசிச்சு முடிவு எடு. என்னை விட்டு விலகிப்போனாத்தான் நீ சந்தோஷமா இருப்ப அப்படினா, தாராளமா…” அவனது நெஞ்சு அடித்துக்கொள்ள, அதையும் மீறி, “தாராளமா போ” என்றவன் விறுவிறுவென அவ்விடம் விட்டுச் சென்று, வண்டியைக் கிளப்பிக்கொண்டு அலுவலகத்திற்கு விரைந்தான்.

அவள் தனது விருப்பப்படி பிரிந்து செல்லலாம் என்று வார்த்தைகளால் எளிமையாகக் கூறிவிட்டாலும் அவனது மனம் அவனோடு வாராமல் வீட்டில் அவளது கொலுசுகளுக்கிடையில் சிக்கிகொண்டிருந்தன. 'அவள் சென்றுவிட்டாள் வாழ்க்கை என்னவாகும்?’ எனும் துயர் மிகுந்த கேள்வி அவனது இதயத்தை மெல்ல துளைக்கத் தொடங்கியது. அவளது கோபங்கள் இவனது சாபங்கள் ஆகிவிட்டதை கண்ணில் தெரியும் நிர்மூலமான எதிர்காலம் பட்டவர்த்தனமாக பறைசாற்றியது. அன்று போல் இன்றும் அதற்குள்ளாக சோர்ந்து விடாமல் அவளது மனதை மாற்ற மேலும் முயற்சித்திருக்க வேண்டுமோ என்று எண்ணிக்கொண்டான். ஏதேதோ எண்ணியெண்ணி காலை முதல் தவித்துக்கொண்டிருந்தவனுக்கு அலுவலகத்தில் இருப்பு கொள்ளவில்லை. கடிகாரம் மணி நான்கு என்றது. அவள் என்ன செய்துகொண்டிருப்பாள் என்று யோசித்தான். உடனே அவளோடு பேசவேண்டும் என்று அவா எழ, அவளைக் கைப்பேசியில் அழைத்தான். அழைப்பு ஏற்கப்படாமல் போனது. மீண்டும் அழைத்தான். ‘சுவிட்ச்ட் ஆஃப்’ என்றது. அவனது கண்கள் அனிச்சையாய் கலங்கின. அதற்கு மேல் இருப்பு கொள்ளாமல் உடனே வீட்டிற்கு விரைந்தான். வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம் அவளுக்கு முயற்சித்தும் கைப்பேசி அணைக்கப்பட்டிருந்தது. அவன் அஞ்சியது போல் அவள் அவனை விட்டு விலகிச் சென்றுவிட்டாள் என்றே அவனது மனம் பதைபதைத்தது. வீட்டிற்கு வந்தவனை வரவேற்றது பூட்டப்பட்டிருந்த வாயிற் கதவு. 
"என்னப்பா வாசல்லையே நிக்கறீங்க?" என்று எதிர் வீட்டு மாமி குரல் கொடுத்தாள்.
அவன் பதில் கூறும் முன், "ஆர்த்தி இல்லையா? வீடு பூட்டியிருக்கா? வேற சாவி இருக்கா இல்லையா உங்ககிட்ட? எங்க போனானு தெரியல. நானும் காலைலேர்ந்து ஆர்த்திய பார்க்கவே இல்லை" என்றாள்.
மறுநொடி அவனது கார் விரைந்தது.


No comments:

Post a Comment