ஆர்த்தியைக் கண்ட நொடியில் அவனது கவலைகள் கண்சிமிட்டும் நேரத்தில் தொலைந்து மறைந்தன. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பெரிய புன்னகையுடன், "வாங்க மாமா! வா ஆர்த்தி" என்றான்.
அவள் கடமைக்குக் கூடச் சிரிக்கவில்லை.
நலம் விசாரித்த பின்னர், "மாப்பிள்ளை, ஆர்த்தி சின்ன பொண்ணு, அவ எதும் தப்பு செஞ்சிருந்தா நீங்க மனசுல வச்சுக்காதீங்க" என்றார்.
"ச்ச ச்ச, ஆர்த்தி தங்கமான பொண்ணு மாமா. அவ மேல எந்தத் தப்பும் இல்லை. நான் தான் அவள கொஞ்சமா டென்ஷன் பண்ணிட்டேன்…" என்றான்.
'என்னது கொஞ்சமா?!' என்பது போல் அவள் பார்க்க, 'நான் ரொம்ப நல்லவன்' என்பது போல் அவன் பதிலுக்குப் பார்த்தான்.
"மாமா நீங்க கவலைப்படாதீங்க. இனிமேல் இப்படி எதுவும் நடக்காது. என் மனைவிய நான் இப்போ நல்லா புரிஞ்சுக்கிட்டேன். அப்படி ஒருவேளை அவ அங்க வந்தா அது தலை பிரசவத்துக்காகத்தான் இருக்கும்…" என்று அவன் நெளிந்துகொண்டே சொல்ல,
"ரொம்ப ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை" என்றவர், அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டார்.
மாமனார் கிளம்பியதும், அவன் அனைத்துப் பற்களும் மின்னியபடி சிரித்துக்கொண்டு நிற்க, அவளோ உதாசீனப் பார்வையால் அவனைக் கடந்து அடுக்களைக்கு உள்ளே சென்றாள். அடுக்களையை சுத்தம் செய்யத் தொடங்கினாள். அவன் அமைதியாக அவளையே நோக்கிக்கொண்டிருந்தான். பிறகு ஒவ்வொரு அறையாகச் சுத்தம் செய்து முடித்தாள். ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவன் அவளைத் தொடர்ந்திருந்தான். முதன்முறையாக மௌனத்தில் ஓர் இனிமையை உணர்ந்தான். அவள் அவ்வப்போது அவனைக் கண்டும் காணாமல் கடந்து செல்வதையெல்லாம் ஊடலின் பட்டியலில் சேர்த்துக்கொண்டான்.
அவன் எதிரே வந்து நின்றவள், “ஷாப்பிங் போகணும்” என்றாள் எங்கோ பார்த்தபடி. “போலாம் செல்லம்” என்றவன் மிடுக்காக உடைமாற்றிக்கொண்டு கிளம்பினான். காதல் டூயட்டுகள் அலற, காரில் அவளை அழைத்துக்கொண்டு சென்றான். சிறிது தூரம் சென்றதுமே, “இங்கே நிறுத்துங்க” என்றொரு சூப்பர்மார்கெட்டைக் காட்டினாள். அவள் ஒவ்வொரு இடைக்கழியாகச் சென்று பொருட்களை எடுக்க, அவனுக்கோ பொறுமை குறைந்துகொண்டிருந்தது.
“ஷாப்பிங் போகணும்னு சொல்லிட்டு, இந்தக் கடையிலேயே நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம்?” என்றான் பாவமாக.
அவனை முறைத்தவள், பொருட்களை சரிபார்த்துவிட்டு அவனை பணம் செலுத்துச் சொன்னாள்.
மீண்டும் கிளம்பிய கார், அருகே துணிக்கடை ஒன்றில் நின்றது.
“இது சின்ன கடையா இருக்கு ஆர்த்தி. நாம ஏதாவது ஷாப்பிங் மாலுக்குப் போகலாம்” என்றான் கெஞ்சலாக.
“அதெல்லாம் வேண்டாம்” என்றவள், கடைக்குள் சென்று மெத்தை விரிப்புகளை வாங்கினாள்.
காருக்குத் திரும்பியதும், “எதுக்கு செல்லம் புது விரிப்பு?” என்றான். அவனது கற்பனை குதிரை பல மைல்கள் ஓடிவிட்டதை அவனது அசடு வழியும் சிரிப்பில் உணர்ந்துகொண்டாள்.
“வீட்ல எல்லா விரிப்பும் பழசாயிருக்கு. அதுல படுத்தா பாட்டிக்கு இன்பெக்ஷன் ஆயிடும்” என்றாள்.
“பாட்டியா?” என்று அவன் நெற்றி சுருங்க,
“நாளைக்கு அத்தை, மாமா, பாட்டி எல்லாரும் ஊர்லேர்ந்து வராங்களே…” என்று விளக்கினாள்.
“நாளைக்கா?”
“ஆமாம். உங்களுக்குத் தெரியாதா?”
“காலைல அம்மா போன் பண்ணாங்க. உன்னைப் பத்திக் கேட்டா என்ன சொல்றதுன்னு தயங்கி போன எடுக்கல.”
“எனக்கு போன் பண்ணாங்க. ஒரு வாரம் இங்க வந்து இருக்கப்போறதா சொன்னாங்க…”
“அப்போ… அவங்களுக்காகத் தான் நீ வந்தியா? எனக்காக இல்லையா?” என்றான், சோகம் இழையோடிய குரலில்.
“பாட்டி உடம்பு சரியில்லாதவங்க. நமக்கு விவாகரத்தாகப்போறது தெரிஞ்சா தாங்கமாட்டாங்க. அது நடக்கும்போது அவங்களுக்குத் தெரிஞ்சா போதும். அதான் திரும்ப வந்துட்டேன்” என்றாள்.
“விவாகரத்தா??” என்று அதிர்ந்தவன், தன்னை சமன் செய்து கொண்டு, “அதை இந்த ஜென்மத்துல உனக்கு கொடுக்கமாட்டேன்” என்றான் திடமாக.
நீண்ட அமைதிக்குப்பிறகு,
“அவங்களுக்காகத்தான் திரும்ப வரணும்னு தோணுச்சா? எனக்காகத் திரும்ப வரணும்னு தோணலையா?” என்றான் மீண்டும்.
“நமக்கு கல்யாணம் ஆன மறுநாள் பாட்டி என்கிட்ட, ‘நீ இந்த வீட்டு மருமக இல்லை, மகாராணி’னு சொன்னாங்க. இப்போ வரைக்கும் அப்படித்தான் என்னை நடத்தறாங்க. பாட்டி மட்டுமில்ல, அத்தையும், மாமாவும் கூட என்னை அப்படித்தான் நடத்தறாங்க. அவங்க என் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்காங்கன்னு எனக்குத் தெரியும். அதே போல எனக்கும் அவங்க மேல ரொம்பப் பாசம் உண்டு. அப்போ எலி மருந்த பாயாசத்துல கலந்து கொடுக்கப்போறேன்னு சொன்னதெல்லாம் சும்மா உங்கள டென்ஷன் பண்ணத்தான். நான் செத்தாலும் அந்த மாதிரி பண்ணமாட்டேன். நீங்க நினைக்கற மாதிரி நான் ஒன்னும் வேஷம் போடல. என் பாசம் உண்மையானது…” என்றவள் அதற்குமேல் பேச முடியாமல், கைகளுக்குள் முகம் புதைத்து அழத் தொடங்கினாள்.
“ப்ளீஸ் அழாத ஆர்த்தி. நான் சொன்னதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு வருத்தப்படாத. நான் அன்னைக்கு பேசினது சும்மா ஒரு வாக்குவாதத்துக்காக. மத்தபடி, நீ அவங்க மேல எவ்வளவு பிரியமா இருக்கனு எனக்குத் தெரியாம இல்லை. போன் எடுத்தாலே பாட்டியும், அம்மாவும் உன்னைப் பத்தி மட்டும் தான் பேசுவாங்க. நான் உனக்கு துரோகம் பண்ணாலும் நீ அந்தக் கோவத்தை அவங்கக்கிட்டேர்ந்து மறைச்சியே… உண்மையாவே உன் மனசு சொக்கத்தங்கம் ஆர்த்தி…”
அவள் விடாது அழுதுகொண்டிருக்க, தாளமுடியாமல் அவளை இழுத்துத் தனது தோளில் சாய்த்துக்கொண்டான். சில நொடிகளில் தன்னை சமன் செய்துகொண்டவள், அவனிடமிருந்து விலகி தனது முகத்தினை துடைத்துக்கொண்டாள்.
“வருத்தப்படாத ஆர்த்தி” என்றவன், அவளை இழுத்து மீண்டும் தனது தோளில் சாய்த்துக்கொண்டான். அவள் விலகி அமர, மீண்டும் அவளை வம்படியாக இழுத்துத் தோளில் சாய்த்துக்கொண்டான். அவனது கைகளை விலக்கிவிட்டு, அவள் கதவினை ஒட்டிக்கொண்டு அமர, “வருத்தப்படாத ஆர்த்தி” என்றான். “நான் ஒன்னும் வருத்தப்படல” என்றவள், முகத்தினை திருப்பிக்கொண்டாள்.
“பொண்டாட்டி வருத்தப்படறது புருஷனுக்குத் தெரியாதா…” என்றவன், மீண்டும் அவளைத் தன் மார்போடு கட்டிக்கொண்டான். அவனிடமிருந்து விடுபட முயன்றவள், அவளைக் கட்டிக்கொண்டிருந்த அவனது கைகளைத் தளர்த்த முடியாமல் போக, “யோவ், விடுயா என்னை” என்க, உடனே பிடியை விலகிக்கொண்டான்.
“என்னமா இப்படி பொசுக்குன்னு என்னை ‘யோவ்’னு சொல்லிட்ட…”
“நீங்க நடந்துக்கிட்டதுக்கு வேற எதுவும் சொல்லாம விட்டேனேன்னு சந்தோஷப்பட்டுக்கோங்க…”
இரண்டு கைகளையும் எடுத்து தனது நெஞ்சின் மீது வைத்துக்கொண்டு, கண்களை மூடி, தலை சாய்த்து அமர்ந்திருந்தான்.
அவளும் அமைதி காக்க, சில நிமிடங்கள் கழித்து,
“ஆர்த்தி” என்றழைத்து அவளது கவனத்தை ஈர்த்தவன்,
“என்னை நீ கூப்பிட்ட ‘யோவு’
ஆனாலும் நீ தான் என் டாவு
நெஞ்சக்குள்ள காதல் நோவு
உன் நினைப்பு என்னை வாங்குது காவு…” என்றான்.
அவள் சிரிப்பதா, அழுவதா என்று புரியாமல் அவனைப் பார்த்திருக்க,
“என் கவிதை எப்படி?” என்றான்.
அவனைக் கூர்ந்து நோக்கியவள்,
“உங்கக் கண்ணாடிய கழட்டிட்டு, முடிய கொஞ்சம் நீளமா வளர்த்துவிட்டு, கவிதையோட கடைசி வரில ஒரு ‘டன்டனக்கா’, ஒரு ‘டனக்குனக்கா’ சேர்த்துக்கிட்டீங்கன்னா இன்னும் பிரமாதமா இருக்கும்…” என்றாள் எள்ளலோடு.
கடுப்பானவன், “நீங்க பெரிய எழுத்தாளர்… உங்கக் கவிதைக்கு முன்னாடி என் கவிதையெல்லாம் துக்கடா தான்” என்று கோபித்துக்கொண்டான்.
அவள் அமைதியாயிருக்க, காரினைக் கிளப்பிக்கொண்டு வெகு தூரம் சென்றவன், கடற்கரையின் அருகே சாலையில் வண்டியை நிறுத்தினான். இருள் சூழ்ந்திருக்க, எதிரே கடலலைகள் ஆர்ப்பரித்திருக்க, வெண்ணிலவு நடைபழக, அந்த மோகன நொடிகளில், அவளையே வசீகரமாய் நோக்கினான்.
“வீட்டுக்குப் போகாம எங்க வந்திருக்கீங்க?” என்றாள்.
“என் பொண்டாட்டி கூட, நிலா வெளிச்சத்துல ஒரு லாங் ட்ரைவ் போகணும்னு ஆசை. அதான்…” என்றவன் விடாது அவளை ஊடுருவி நோக்கினான்.
“நான் உன்னை எப்படியெல்லாம் காதலிச்சேன் தெரியுமா…” என்று குழைந்தான்.
“என்னை எங்க காதலிச்சீங்க… அந்த ஆம்பல் தானே உங்க காதலி…” என்றாள், சினம் சேர்ந்த குரலில்.
"ஹே ரெண்டு பேரும் ஒன்னு தான…" என்றபடியே அவளது கரத்தினைப் பற்றினான்.
"இல்லை…" என்றவள், தனது கரத்தினை விலக்கிக் கொண்டாள்.
"தொடக்கூட கூடாதா?"
"கூடாது…"
"ஏன்?"
“என் பெர்மிஷன் இல்லாம தொடக்கூடாது.”
"உன் பெர்மிஷன் மட்டும் போதுமா இல்ல செத்துப்போன உன் பாட்டி பெர்மிஷனும் வேணுமா?"
அவள் முறைக்க,
"நீ முறைக்கும் போது உன் கண்ணு அப்படியே வேல் மாதிரி கூரா இருக்கு" என்று சொல்லிக்கொண்டே பற்கள் அனைத்தும் தெரிய சிரித்தபடி அவன் அவளது தோளில் கை போட,
"கொஞ்சம் உங்க ஷட்டர க்ளோஸ் பண்ணிட்டு கைய எடுக்கறீங்களா?" என்றாள் கண்டிப்பாக.
தனது கையைக் கட்டிக்கொண்டவன், வாயையும் பூட்டிகொண்டான்.
"வீட்டுக்குப் போகலாம்…"
"என்ன செல்லம்… நிலா வெளிச்சம்… எதிரே கடல்… இராத்திரி நேரம்… இப்படியே ரொமான்டிக்கா பேசிட்டு இருந்தா எப்படி இருக்கும்?"
"போலீஸ் பிடிக்கும்…"
"ஒரு மனுஷன கொஞ்சமாவது லவ் பண்ண விடு… எப்படி போனாலும் முட்டுச்சந்தாவே இருந்தா நான் எங்க போறது…"
"என்னை வீட்ல கொண்டுபோய் விட்டுட்டு நீங்க எங்க வேணும்னாலும் போங்க…"
"ஏன் செல்லம்? ஏன்? எதுக்கு? எதனால?"
"எனக்கு தலை வலிக்குது அதனால…"
"கடவுளே " என்று முஷ்டியை மடக்கி தனது தொடையிலேயே குத்திக்கொண்டவன்,
"ஒரு நாள் நீயே என்னோட ரொமான்டிக் பேச்சுல மயங்கி, ‘இன்னும் கொஞ்சம் பேசுங்க, இன்னும் கொஞ்சம் பேசுங்க’னு சொல்லப்போறியா இல்லையான்னு பாரு…" என்றான்.
"தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க நான் அந்தக் கடல்ல போய் குதிச்சுடறேன்..." என்றவள் தலையில் கை வைத்து அமர்ந்துவிட, 'கிராதகி…' என்று உள்ளுக்குள் அவளை கோபித்துக்கொண்டவன், வீட்டிற்கு வண்டியைக் கிளப்பினான்.
மறுநாள் சந்தோஷின் பெற்றோர் மற்றும் பாட்டியின் வருகையை முன்னிட்டு வீட்டில் தடபுடலாக ஏற்பாடு நடந்துகொண்டிருக்க, அவர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்து வர சந்தோஷ் தயாரானான்.
"சீக்கிரம் கிளம்புங்க… என்னமோ பொண்ணு பார்க்க போற மாதிரி மணிக்கணக்காக கண்ணாடி முன்னாடி நிக்கறீங்க…"
"எல்லாம் உனக்காகத்தான் செல்லம்…"
"பிளீஸ் நேரமாச்சு…"
"இதோ இப்படி போய்ட்டு அப்படி வந்துடறேன்…"
"இப்படி போயிட்டு அப்படி வந்துட்டா அப்புறம் அவங்கள யாரு கூட்டிட்டு வர்றது?"
"அய்யோ பேபி மா, நான் டக்குனு போயிட்டு வந்துடறேன்னு சொன்னேன்…"
"பரவால்ல பொறுமையாவே போய்ட்டு வாங்க…"
"என் டார்லிங்க பார்க்காம என்னால இருக்க முடியாதே…"
"என்னால இருக்க முடியும்… பொருமையாவே வாங்க…"
"இந்த நாள் உன் டைரில குறிச்சு வச்சுக்கோ… ஒருநாள் நீயே ‘என்னை விட்டு போகாதீங்க அத்தான், பிளீஸ் அத்தான்’னு சொல்லுவ… நான் சொல்ல வைப்பேன்…"
அவள் தலையைப் பிடித்துக்கொண்டு சோபாவில் அமர,
"என்ன தலைவலியா? வந்துடுமே… புருஷன் பேசினாலே தலைவலி வந்துடுமே… இந்தப் பொண்டாட்டிங்களுக்கே இருக்கற நேஷனல் வியாதி…" என்றவன் வெளியே சென்று காரைக் கிளப்பினான்.
வாயிலில் வந்து நின்றவளைக் கண்டு மீண்டும் குழைந்தவன்,
"செல்லம்… வரும்போது மாமா உனக்கு மல்லிகப்பூவும், அல்வாவும் வாங்கிட்டு வரேன்…" என்றுவிட்டு மந்தகாசமாய் சிரித்திருக்க,
"அப்படியே பக்கத்து கடைல தண்ணி கேனுக்கு சொல்லிட்டு வந்துடுங்க…" என்று அவள் கூறியதைக் கேட்டதும் மந்தகாசம் மாங்காய் ஆனது.
"ஒரு மனுஷன் பேசுனா கேட்கணும்… ரொமான்ஸ ரசிக்கணும்…"
அவள் முறைத்துக்கொண்டு நிற்க,
"போய்ட்டு வந்து வச்சுக்கறேன்…" என்றவன் ஒருவழியாகக் கிளம்பிச் சென்றான்.
No comments:
Post a Comment