Friday, 8 May 2020

அன்புடன் ஆம்பல் - 7




ஆர்த்தியுடனான சின்னச்சின்ன பிணக்கங்களால், வீட்டில், ‘தான் உண்டு தன் வேலை உண்டு’ என்று இருக்கப் பழகிக்கொண்டான், சந்தோஷ். அன்று ஞாயிற்றுக்கிழமை. மதியம் உணவருந்தியவன் கைப்பேசியில் ஆம்பலிடமிருந்து ஏதேனும் செய்தி வந்துள்ளதா என்று ஆராய்ந்தான். சில மாதங்கள் கடந்து விட்ட நிலையில், இன்று வரை ஓர் தகவலும் வராததால் சற்று கலக்கமுற்றான்.

‘தாங்கள் நலமா?' என்றொரு மின்னஞ்சல் அனுப்பினான்.
'நான் நலம். சில தனிப்பட்ட காரணங்களால் என்னால் உங்களுக்கு பதிலளிக்க முடியவில்லை. உங்களின் அனைத்து மின்னஞ்சல்களையும் வாசித்துவிட்டு, பிறகு பதிலளிக்கிறேன். விரைவில், தினமும் சிறிது நேரம் ஒதுக்கி எழுத்தில் மீண்டும் கவனம் செலுத்தவுள்ளேன். அதுவரை பொறுமை காக்கவும். நன்றி!' 
அவன் மின்னஞ்சல் அனுப்பிய அடுத்த அரை மணி நேரத்தில் அவளது நீண்ட பதில் கிடைக்கப்பெற்றதை அவனால் நம்ப முடியவில்லை. வெகு நாட்கள் கழித்து மகிழ்ச்சியின் உச்சியில் திளைத்திருந்தான். மீண்டும் மீண்டும் குறைந்தது நூறு முறையேனும் அவளது செய்தியை வாசித்தான். வார்த்தைகள் அனைத்திலும் தேன் சுரந்தது. அவனது மனம் அன்றலர்ந்த மலரைப் போல இலகுவானது. 

என்றும் அவனது மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்குவது அவனுக்கு மிகவும் பிடித்த பால்கோவா. வெகு நாட்கள் கழித்து அவளது மின்னஞ்சலைக் கண்டவுடன், பால்கோவா சாப்பிட வேண்டும் என்றொரு அவா எழுந்தது அவனுள். அறையை விட்டு வெளியே வந்தவன், நேரே அடுக்களைக்குச் சென்றான். 
ஆர்த்தியிடம் தயங்கிச் சென்று,
"எனக்கு... பால்கோவா சாப்பிடணும் போல இருக்கு" என்றான்.
"அதுக்கு?" 
அவள் யோசனையாய் நோக்க,
"எனக்கு கொஞ்சம் செஞ்சு கொடு ப்ளீஸ்…" என்றான்.
"நான் பாத்திரம் கழுவிட்டு இருக்கேன்."
"சரி சரி… ஒன்னும் அவசரம் இல்லை… பொருமையாவே செஞ்சு கொடு…" என்றவன் துள்ளிக்கொண்டு வரவேற்பறை சோபாவில் சென்றமார்ந்தான்.

பத்து நிமிடங்கள் கழித்து அவன் எதிரே வந்து நின்றவள், "மூணு தெரு தள்ளி ஒரு மளிகைக் கடை இருக்குல்ல, அங்க ரெண்டு பாக்கெட் பால் வாங்கிட்டு வாங்க. இந்நேரத்துல அங்க மட்டும்தான் பால் கிடைக்கும்" என்றாள்.
"நானா?"
"ஆமா நீங்க தான்."
"என் பாட்டி கிட்ட பால்கோவா கேட்டா, கொல்லைல இருக்கற மாட்டுல பால் கறந்து உடனே கிண்டி சுடச்சுட கொடுப்பாங்க."
"அப்படியா?" என்றவள், பின்புறம் பார்த்தாள்.
"ஏங்க இந்த வீடு வாங்கும்போது கொல்லைல மாடு இருக்கா இல்லையானு செக் பண்ணி வாங்கமாட்டீங்களா? இப்பப் பாருங்க, பால் கறக்கலாம்னு பார்த்தா அவசரத்துக்கு ஒரு ஆடு கூட இல்லை…" 
‘தெரியாத்தனமா இவ கிட்ட பால்கோவா கேட்டுட்டேன்’ என்று அயர்ந்து கொண்டவன், 
"அதைச் சொல்லல, இந்த வெயில் நேரத்துல என்னை கடைக்குப் போகச் சொல்றியே… அதுக்கு சொன்னேன்…"
முன்புறம் பார்த்தவள், 
"ஆமாம் ரொம்ப வெயிலா இருக்கு" என்றவள், அறைக்குள் சென்று தொப்பி மற்றும் குடையை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள். 
"இப்போ வெயில் உங்கள தாக்காது. தைரியமா போய்ட்டு வாங்க!!" என்றாள்.
பால்கோவா ஆசை அவனை ஆட்டிப்படைத்ததால் வேறு வழியின்றி கிளம்பிச் சென்றான்.

"இந்தா பால்" என்று நீட்டினான் அவளிடம். வெயிலில் சென்று வந்த களைப்பில் சோர்ந்து அமர்ந்தவனை,
"முதல்ல எழுந்திறீங்க" என்றாள்.
"என்ன ப்ளூ ஆவின் வாங்கிட்டு வந்திருக்கீங்க. இதுல பால்கோவா நல்லா வராது. இதைக் கொடுத்துட்டு ஆரஞ்சு கவர் வாங்கிட்டு வாங்க" என்றாள்.
"இதை முன்னாடியே சொல்லியிருக்கலாமே?!"
"நான் தான் சொன்னேனே..."
"எப்போ சொன்ன?"
"நீங்க கிளம்பும்போது பணத்தை உங்கக் கைல கொடுத்துட்டு சில்லறை சரியா இருக்குனு சொன்னேனே."
"அப்படினா?"
"அப்படினா ஆரஞ்சு கவர் பால் வாங்கியிருந்தா மீதி சில்லறை இருந்திருக்காதுனு அர்த்தம்."
"அதை நேரடியாவே சொல்லியிருக்கலாமே"
"இங்க பாருங்க, இப்பத்தான் நான் கொஞ்சம் ப்ரீயா இருக்கேன். பால்கோவாக்கு நேரம் இருக்கு. அப்புறம் எனக்கு நேரம் கிடையாது. உடனே போய் ஆரஞ்சு கவர் மாத்திட்டு வாங்க" என்றாள்.
பால்கோவா மீது கொண்ட பேராசையால், மீண்டும் கடைக்குச் சென்று அவள் கூறியதை இம்முறை சரியாக வாங்கி வந்தான்.

அவன் பால் பாக்கெட்டுகளை நீட்ட, "நான் மாவு சலிச்சுட்டு இருக்கேன், நீங்க அந்த பித்தளை குண்டான அடுப்பில வச்சு கொஞ்சம் பால் ஊத்துங்களேன்" என்றாள்.
அவனும் செய்தான்.
"நான் மாவு சலிச்சு முடிக்கும் வரை பாலை விடாம கிண்டுங்க. இல்லேனா அடிப்பிடிச்சுடும்" என்றாள்.
அதற்கும் சரி என்றுவிட்டு அவள் கூறியதைச் செய்தான்.
"நான் துணி காய வைக்கணும். அந்தக் கிண்ணத்துல உள்ள சக்கரையைக் கொட்டி அடிபிடிக்காம கிண்டுங்க" என்றாள்.
‘ஒரு மணி நேரம் கிண்டிட்டோம். இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவா. அப்புறம் ரெஸ்ட் தானே’ என்று எண்ணிக்கொண்டவன், அவள் கூறியதற்கு ‘சரி’ என்றுவிட்டு சர்க்கரைகளைத் தூவினான். அரைமணி நேரம் ஆகியும் மாடிக்குச் சென்றவள் இன்னும் காணவில்லையே என்று அவன் யோசித்திருக்க, 
"நேரங்கெட்ட நேரத்துல இந்த எதிர் வீட்டு மாமி பேச்சுல பிடிச்சுக்கிட்டாங்க" என்று சலித்துக் கொண்டவள், பால்கோவாவைப் பார்த்தாள்.
"சரியா வந்திருக்கு. இன்னும் பத்து நிமிஷம் கிண்டிட்டு இறக்கிடுங்க" என்றுவிட்டு சென்றுவிட்டாள்.
'அடியே, ஒரு ஹெல்ப் செய்யப்போக மொத்த பால்கோவாவையும் கிண்ட விட்டுட்டியே’ என்று கண்கள் கலங்கியவன், ஒரு வழியாக அடுப்பினை அணைத்து, சுடச்சுட பால்கோவாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துவைத்தான்.

கைவலி தாங்க முடியாமல் வரவேற்பறைக்கு வந்தவன், அங்கே அவள் காற்று வாங்கியபடி ஆசுவாசமாக அமர்ந்திருப்பதைக் கண்டு ஆத்திரம் கொண்டான்.
"போனாப்போகுதுனு ஹெல்ப் பண்ண நினைச்சா, மணிக்கணக்கா என்னை இப்படி கிண்ட விட்டுட்ட?" 
"இப்போ தெரியுதா ஒரு பால்கோவா செய்யறது எவ்வளவு கஷ்டம்னு மிஸ்டர்.சந்தோஷ்? இவரு திடீர்னு பால்கோவா கேட்பாராம், நாங்க மாட்ட புடிச்சு பால் கறந்து கிண்டி கொடுக்கணுமாம்… உங்களுக்கு கை வலிக்கற மாதிரி தான உங்க பாட்டிக்கும் வலிச்சிருக்கும்…" என்றாள்.
"என் பாட்டி எனக்கு ஆசை ஆசையா செஞ்சு கொடுப்பாங்க."
"அவங்க செய்வாங்க. நான் எதுக்கு செய்யணும்? உங்க சோம்பலையே பார்செல் பண்ண சொல்ல வேண்டியது தானே?"
"என்னது சோம்பலா?"
"அதான் உங்க சொம்புடன் சோம்பல் - அவளைச் சொன்னேன்."
அவன் பதில் பேச முடியாமல் திணறி நிற்க,"என்னை சமாளிக்கவே முடியல இல்லை?!!" என்றாள், நக்கலாக.

மூவ் மற்றும் அம்ருதாஞ்சனத்தை சம அளவில் கலந்து, அதனை வலக்கை முழுதும் தடவியபடியே நடந்தவற்றை எண்ணிப்பார்த்தான். தன்னிடம் அவள் வஞ்சம் தீர்த்துக் கொள்கிறாள் என்பதனை அவன் நன்கு உணரத் தொடங்கினான். அவளிடம் பேசுவதற்கு முன் நான்கு முறை யோசித்துவிட்டு பேசினான். இருப்பினும், அவ்வப்போது அவன் துவைத்து தொங்க விடப்பட்டான்.

காலையில் அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தவனின் கவனத்தை ஈர்த்தது கைப்பேசி அழைப்பு.
"ஹலோ…"
"ஹலோ சந்தோஷ் எப்படி இருக்க?"
"நல்லா இருக்கேன் மா, நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க? என்ன விஷயம்?"
"நாங்க நல்லா இருக்கோம் டா. ஒன்னுமில்ல நீ இப்போ சும்மா தானே இருப்பனு போன் பண்ணேன்."
"அம்மா நான் ஆஃபிசுக்கு கிளம்பிட்டு இருக்கேன்."
"அடேய்..  என்கிட்டயேவா? பரபரனு ஓயாம வேலை செய்யறது ஆர்த்தி. நீ என்னமோ ரொம்ப சலிச்சுக்கற…"
"அம்மா…"
"பாவம்டா அவ. எவ்வளவு வேலை செய்யறா! நீ கொஞ்சம் ஒத்தாசை பண்ணு."
"ம்ம்… அப்புறம்?"
"டேய், இந்த மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சதுக்கு நீ அவளுக்கு கோவில் கட்டணும்..."
"அதனால என்ன, கட்டிட்டா போச்சு. ஒரு அம்பது ஏக்கர் நிலம் விலைக்கு வந்தா சொல்லுங்க, வாங்கிப் போட்டு பெருசா ஒரு கோவில கட்டிடுவோம்."
"கிண்டலா டா உனக்கு? ஒரு நாள் நிச்சயம் கோவில் கட்டத்தான் போற பாரு" 
தாயிடம் பேசி முடித்தவன் அழைப்பினைத் துண்டித்துவிட்டு, ‘அம்பது ஏக்கர்ல நான் கோவில் கட்டறேனோ இல்லையோ இவ நிச்சயம் எனக்கு சமாதி கட்டிடுவா’ என்று எண்ணிக்கொண்டே அவன் அடுக்களைக்குச் செல்ல,  அவளோ கையில் ஒரு கத்திரிக்காயை வைத்துக்கொண்டு கண்ணில் நீர் வர குலுங்கிக்குலுங்கி சிரித்துக்கொண்டிருந்தாள். 
‘என்ன ஆச்சு இவளுக்கு? ரொம்ப முத்திடுச்சா?!' என்று அவளை வியந்தபடியே அவள் எதிரே சென்று நின்றான். 
இவனைக் கண்டவள் ஒருவாறு தன்னைக் கட்டுப்படுத்தினாள். 
"கத்திரிக்காயில என்ன காமெடி?"
"ஒன்னுமில்ல"
"இல்ல எனக்குத் தெரிஞ்சாகணும்” 
அவன் அடம் பிடிக்க,
"கத்திரிக்காய்க்கு கண்ணாடி மாட்டினா எப்படி இருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன். சிரிப்பு தாங்க முடில…" என்றாள் சிறிதும் அசராமல்.
‘கத்திரிக்காய்க்கு எதுக்கு கண்ணாடி?' என்று ஆழ்ந்து சிந்தித்தபடியே அவன் கீழே குனிய, அப்பொழுதே தான் உடுத்தியிருந்த சட்டையின் நிறத்தைக் கண்டான்.
"நான் கத்திரிப்பூ கலர்ல சட்டை போட்டா உடனே கத்திரிக்காய் மாதிரி இருக்கேன்னு கிண்டல் பண்றியா?" என்றான் கோவமாக.
"ச்சச்ச… நீங்க எந்தக் கலர் சட்டை போட்டாலும் கத்திரிக்காய் மாதிரித்தான் இருக்கீங்க" என்றவள், அவன் கையில் தட்டினைக் கொடுத்து, "சாப்பிடுங்க!! இட்டிலியும், கத்திரிக்காய் கொஸ்த்தும்" என்றாள்.
கொஸ்த்தில் வெந்து நொந்திருப்பது கத்திரிக்காய் இல்லை தான் தான் என்பதை அத்தருணத்தில் உணர்ந்தான்.
மனம் உடைந்தவனாய்,
"கணவனே கண் கண்ட தெய்வம்னு வாழற பெண்கள் உள்ள நாட்டுல பிறந்துட்டு இப்படி என்னைக் கிண்டல் பண்ற?" என்றான் ஆதங்கமாய்.
"கணவனே கண் கண்ட… என்னது?"
"அது… தெய்வம்னு நினைக்கலனாலும் மனுஷனாவாவது நினைக்கலாம்ல?!"
"முடியாது... கணவனே கண் கண்ட கத்திரிக்காய்னு... ஐ மீன்…"
"போதும்… புரிஞ்சுடுச்சு" என்று அவளை இடைமறித்தவன், தனது தட்டினை எடுத்துக்கொண்டு அமைதியாய் சென்று அமர்ந்துகொண்டான்.
அதன் பிறகான நாட்களில் யோசித்துப் பேசுவதைக் காட்டிலும் பேசாமல் இருப்பதே நல்ல யோசனையாக அவனுக்குப் பட்டது.

சாதுர்யமாக ஒவ்வொரு நாளையும் கடத்தியவன் இரவுகளில் வெகு சீக்கிரம் உறங்கத் தொடங்கினான். முடிந்தளவு விழித்திருக்கும் நேரங்களில் மிகவும் ‘அலெர்ட்’டாகவும் இருக்கக் கற்றுக்கொண்டான். அன்றிரவு ஆழ்ந்த சயனத்தில் அவன் உறங்கிக் கொண்டிருந்த பொழுது ‘ஹி...ஹி...ஹி…’ என்றொரு சிரிப்பொலி கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தான். தலைவிரி கோலமாய் மங்கிய ஒளியில் அமர்ந்திருந்த ஒரு உருவத்தை கண்டு அலறினான்.
“அய்யோ இப்ப எதுக்குக் கத்தறீங்க?” என்றாள், அவள்.
“நீ தானா?! நான் ஏதோ கொல்லிவாய்ப் பிசாசுனு நினைச்சேன்…” 
“என்னைப் பார்த்தா பிசாசு மாதிரி இருக்கா?” 
“நடுராத்திரி முடிய விரிச்சு போட்டுகிட்டு போன பார்த்துட்டு உட்கார்ந்து இருக்க? ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன். எதுக்கு அப்படி சிரிச்ச?” 
“நான் ஒரு நல்ல கதை படிச்சிட்டு இருந்தேன். செம காமெடி, சிரிப்பு தாங்காம சிரிச்சேன். இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?” 
“ஒரு மனுஷன் தூங்கும்போது ‘கிகிகி’னு சிரிச்சா தெரியும்” என்றவன் அப்படியே உறங்கி இருக்கலாம். ஆனால், ஆர்வம் தாங்காமல், 
“ஆமா என்ன கதை படிக்கிற?” என்றான். 
அவனை முறைத்தவள், 
“இது கண்டிப்பா அந்த வௌவாலோட கதை இல்லை” என்றாள்.  
“என்னது வௌவாலா?” 
“ஆமா…” 
“இப்ப எதுக்கு தேவையில்லாம அவள பத்தி இப்படி பேசுற?” 
“அப்படித்தான் பேசுவேன்…” 
“அவ ரொம்ப நல்ல பொண்ணு” 
“அப்ப நாங்கெல்லாம் என்ன நொல்ல பொண்ணா?” 
‘இதை நான் வேற என் வாயால சொல்லணுமா’ என்று மனதினுள் எண்ணியவன் அவளை முறைக்க, 
“இப்போ கூட ஒண்ணும் கெட்டுப் போய்டல. உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க நல்ல நல்ல கதை எல்லாம் லிங்க் அனுப்புறேன். படிச்சுப் பாருங்க. எல்லாமே சூப்பரா இருக்கும். ஆனா, ஒரு கண்டிஷன்" என்றாள்.
“என்ன கண்டிஷன்?” என்றான் முறைப்புடன். 
“அந்தக் கதை எழுதினவங்கள கடலை போட்டு கரெக்ட் பண்ண நினைக்கக்கூடாது.” 
“என்னை பத்தி என்னடி நினைச்சுட்டு இருக்க? எழுதறவங்களயா தேடிப் புடிச்சு கரெக்ட் பண்றது தான் என் வேலையா? ஒண்ணு நல்லா தெரிஞ்சுக்கோ. என் மனசுல அப்பவும், இப்பவும், எப்பவும், என் ஆம்பல் மட்டும்தான்” என்று அவன் கூற, 
“அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?” என்றாள்.
“என்ன கேள்வி இது? அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகல.” 
“ஆனா, உங்களுக்குத்தான் கல்யாணம் ஆயிடுச்சே?!” 
“அது... அது... கட்டாயத்துல நடந்தது.” 
“இந்த விஷயத்தை அந்த சோம்பல் கிட்ட சொல்லிட்டீங்களா?” 
“தேவையில்லாம அவளை கிண்டல் பண்ணாத. அவ கிட்ட இன்னும் சொல்லல. விவாகரத்து கிடைச்சு, இந்தப் பிரச்சனைகள் எல்லாம் முடிஞ்சதும் அவகிட்ட கண்டிப்பா எல்லா உண்மையும் எடுத்துச்சொல்லி அதுக்கப்புறம் தான் எங்க கல்யாணம் நடக்கும்.” 
“கட்டின பொண்டாட்டி கிட்டயே நான் இன்னொருத்தியை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்ற முதல் ஆள் நீங்களாத்தான் இருப்பீங்க மிஸ்டர்.சந்தோஷ்.” 

அவன் அறிந்தவரை அவள் கோபம் கொண்ட தருணங்களில் மட்டுமே அவனைப் பெயர் சொல்லி அழைப்பாள். அப்பொழுதும் அவனது அபத்த பேச்சைக்கேட்டு அவள் பெரும் சினம் கொண்டுள்ளாள் என்பதனைப் புரிந்து கொண்டவன், “இருட்டுல படிக்காம ஒழுங்கா லைட்டப் போட்டுப் படி. கண்ணு கெட்டுப் போய்டும்” என்று ஒருவாறு சமாளித்து விட்டு அறையைவிட்டு வெளியே வந்து, சோபாவில் படுத்து உறங்கிப் போனான். 

No comments:

Post a Comment