அன்று அவன் அலுவலகத்திலிருந்து சற்று முன்னதாகவே வீடு திரும்பியிருந்தான். ஐயாயிரம் மைலுக்கு அப்பாலிருந்து வந்த ஒளியும்/ஒலியும் அழைப்பில் தன்னை மறந்து சிலாகித்துக்கொண்டிருந்தார், அப்பா. மூன்று பேர் அமரக்கூடிய சோபாவில் நடுநாயகமாய் அமர்ந்திருப்பார், எப்பொழுதுமே. அலுவலகம் செல்லும் நேரம் தவிர, வீட்டில் அவர் வசிப்பது அங்கு தான்.
தனது கையில் வைத்திருந்த காகிதத்தை வருடிப்பார்த்தவன், தனது அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்தான். வரவேற்பறையின் மூலையில் போடப்பட்டிருந்த உணவு மேசையின் பக்கவாட்டுச் சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தை அவன் நின்று நிதானித்துப் பார்த்ததில்லை. இன்று ஒரு சிறிய மகிழ்ச்சியின், எளிய கொண்டாட்டமாய் அவன் அன்னையின் முகத்தைக் கண்டு புன்னகைத்தான்.
“அப்பா, அம்மா எங்க?”
கைப்பேசியில் கேள்வி வந்து விழ,
“வந்துட்டேன் வந்துட்டேன்…” என்று குரல் கொடுத்துக்கொண்டே அப்பாவின் அருகே வந்தமர்ந்தாள், அவள். அவளும் அவனுக்கு அம்மா தான்! லண்டனிலிருந்து அழைத்தது அவனுக்குத் தங்கை தான். ஆனால், தங்கைக்கு எப்படியோ?! அவன் தெரிந்து கொள்ள முயன்றதில்லை.
அவனது அரைமணி நேரக் காத்திருப்புக்குப் பின் ஒளியும்/ஒலியும் நிறைவடைந்து, அவன் மீது தந்தையின் பார்வை விழுந்தது.
கடிகாரத்தைப் பார்த்தவர், “என்னடா சீக்கிரம் வந்துட்ட?” என்றார்.
அவனது அம்மாவாக இருக்க வேண்டியவள், அவனை ஒரு பொருட்டாகக் கூட எண்ணாமல் கைப்பேசியை நோண்டிக்கொண்டிருந்தாள்.
பழகிவிட்ட ஒன்றிற்கு அவனிடம் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
தந்தையின் எதிரே வந்து நின்றான். கையிலிருந்த காகிதத்தை நீட்டினான். பிரித்துப் படித்தவரின் புருவங்கள் உயர்ந்தன. கைப்பேசியை நோண்டிக்கொண்டிருந்தவளின் கவனம், கணவனின் முக பாவனைகளின் மீது திரும்பியது.
“என்னப்பா திடீர்னு லண்டன் போற?”
கணவன் கூறியதைக் கேட்டு புருவம் உயர்த்தியவள், இம்முறை கவனத்தைக் கடிதத்தில் பாய்ச்சி, ‘லண்டன்’ எனும் வார்த்தையை மீன் பிடித்தாள்.
“ப்ராஜெக்ட்டுக்காக ஆபிஸ்ல போகச் சொல்லியிருக்காங்க.”
“லெட்டர்ல ஆறு மாசம்னு போட்டிருக்கு?!”
“ஆறு மாசம்னு சொல்லியிருக்காங்க. அது முன்ன பின்ன ஆகலாம்.”
“எப்போ கிளம்பணும்?”
“இன்னும் மூணு வாரத்துல…”
உள்ளே எழுந்து சென்றவள் தண்ணீர் நிரப்பிய பாட்டிலுடன் அறைக்குள் புகுந்துகொண்டாள். தட்டில் மூடிவைக்கப்பட்டிருந்த மூன்று சப்பாத்தியும் ஒரு கரண்டி அளவு குறுமாவும் அவனது கால் வயிற்றினை நிரப்ப, கிச்சனில் தாராளமாக வைக்கப்பட்டிருந்த குடத்து நீரை மூன்று சொம்பு அளவிற்குப் பருகிவிட்டு, மாடியிலிருக்கும் தனது அறைக்குச் சென்றான். பதினொன்றாம் வகுப்பிலிருந்து அவன் அந்த அறையில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான். அவனோடு மர டேபிள் ஒன்று, வயர் பின்னிய நாற்காலி ஒன்று, பழைய மர அலமாரி ஒன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. உடையை மாற்றிக்கொண்டவன், உதறி விரித்த பாயில் உயிரிழந்த தலையணையைத் தலைக்கு வைத்து உறங்கிப்போனான்.
அலுவலகத்திற்குக் கிளம்பி கீழே வருவான். மேசை மீது மூடி வைக்கப்பட்டிருந்த இரண்டு மூன்று இட்டிலி, தோசை வகையறாக்களை விழுங்குவான். வறண்டு, சில்லிட்டு, தடித்து, தீய்ந்து… எப்படியிருந்தாலும் அதை விழுங்குவன். பூஜை அறைக்குள் தீபாவளி பொங்கலன்று மற்றும் செல்வதோடு சரி. மற்றபடி உண்டு முடித்து, தட்டினை அலம்பிவைத்துவிட்டு, இரண்டு சொம்பு நீர் குடித்துவிட்டு கிளம்பிவிடுவான். கிளம்பும் முன் பெற்றவளின் முகத்தை ஒரு முறை பார்ப்பதோடு சரி. கையெடுத்து வணங்கியதில்லை; கண்ணீர் வடித்ததில்லை; வேண்டுமென்று வேண்டியதில்லை. அவனுடைய உரையாடல் அனைத்தும் அவனது ஒற்றைப் பார்வையில் சுருங்கிக்கொண்டுவிடும். உருவமாய் இருக்கும் தாய்க்கு பிள்ளையின் பார்வை புரியும்போது, அருவமாய் இருப்பவள் அவன் மனதைப் படிக்காமலா இருப்பாள்! நடப்பவை அனைத்திற்கும் பூதசாட்சி அவள்!
அன்று அவன் உண்ண அமர்ந்ததும், "எத்தனை பெட்டி எடுத்துட்டு போகலாம்?" என்றாள் அவனுக்கு அன்னையாக வந்தவள், எங்கோ பார்த்தபடி.
"ரெண்டு பெட்டி. ஒவ்வொண்ணும் பதினைஞ்சு கிலோ."
அவளுக்குத் தேவையான தகவலை மட்டும் கொடுத்தான், தலை கவிழ்ந்தபடி.
‘அம்மா!’ எனும் சொல்லே அவனது அகராதியில் புழக்கத்தில் இல்லாத வார்த்தையாகிப் போனது. ஐந்து வயது பிள்ளை தாயை இழந்த துக்கத்தில் வாடியிருக்க, ‘பிள்ளைக்காக’ என்று சொல்லி மறுமணம் செய்துகொண்டார் தந்தை. ‘அம்மா’ எனும் வெற்றிடம் தொலைந்துபோன மகிழ்ச்சி அப்பிள்ளைக்கு. ஈராண்டுகள் செல்ல, தான் தமையன் ஆகிவிட்ட திளைப்பில், பஞ்சுப்பொதியென தாயின் அருகே படுத்திருந்த பிஞ்சின் கால் விரல்களைத் தொட்டுப்பார்த்தான். சொப்புவாயை சப்பு கொட்டிக்கொண்டு, குமிந்து கிடந்த விழி விரித்து அண்ணனைப் பார்த்தது, அக்குழந்தை. அதன் நாசியினை அவன் தொட நினைத்து விரல் நீட்ட, வெடுக்கென தட்டிவிட்ட புதுத்தாய், ‘இனி இந்த ரூமுக்குள்ள வராதே’ என்று விரட்டினாள். இருப்பினும் ‘அம்மா… அம்மா…’ என்று அவளைச் சுற்றி வந்தவனை, இனி எப்பொழுதும் தன்னை ‘அம்மா’ என்று விளிக்கக்கூடாது என்று கண்கள் உருட்டி மிரட்டினாள். அவளது அகராதியில், ‘அம்மா’ எனும் சொல், தனது மகளுக்காகப் பிரத்யேகமாய் ஒதுக்கப்பட்ட ஒன்றாகிப் போனது. தன்னை மறந்து அவன் அவ்வாறு விளித்த சமயங்களில் பூசைகள் நடந்தன. அவனது இல்லம் அவனுக்கு அந்நிய தேசமாகிப் போனது. அவனது அப்பா இருந்தும் இல்லாமல் போனார்.
“நாளை மறுநாள் காலைல எத்தனை மணிக்கு பிளைட்டு?”
வினவினாள் அவனது சித்தி - பெற்றவளின் உடன் பிறந்தவள்.
அவன் தாராளமாகப் பேசுவது அவளோடு மட்டுமே.
“விடியற்காலை ரெண்டு மணிக்கு, சித்தி. லுஃப்தான்சா. மூணு மணி நேரத்துக்கு முன்னமே ஏர்போர்ட் போயிடுவேன்.”
“நானும் சித்தப்பாவும் வரோம்… இந்நேரம் என் அக்கா இல்லாம போயிட்டாளே… என் புள்ளை ஒரு வயசுலயே ஓடறான், பேசறான், சிரிக்கிறான், டான்ஸ் ஆடறான்னு ஒவ்வொரு விஷயத்துக்கும் பூரிச்சு போவா. அவ இருந்திருந்தா நீ லண்டன் போறத சொல்லிச்சொல்லி ரொம்பப் பெருமை பட்டிருப்பா. ஹ்ம்ம்…”
அம்மாவைப் பற்றி சித்தி கூறியதும், அவனது கண்களில் ஈரம் தேங்கி நின்றது. அவனது தாய் அவனைக் கொண்டாடிய நினைவுகளை பலமுறை சித்தி கூறக் கேட்டிருக்கிறான். அவ்வாறான கொண்டாட்டமின்மையால், தான் இந்த உலகில் முக்கியமற்ற ஆன்மா என்றே எண்ணியிருந்தேன்.
அமைதியாக இருந்தவனின் உள்ளத்து அனலை உணர்ந்தவளாய்,
“தேவையான துணியெல்லாம் எடுத்து வச்சுட்டியா?” என்று மௌனத்தைக் கலைத்தாள்.
“எடுத்து வச்சுட்டேன் சித்தி…”
“அப்புறம் அவளோட பொண்ணு லண்டன்ல தான இருக்கா?”
“தங்கச்சியா? ஆமா சித்தி…”
“என்ன ‘தங்கச்சி’யா? அவ உன்னை புள்ளையா நினைச்சதில்ல. அவ பொண்ணு உன்னை ‘அண்ணா’னு கூப்பிட்டு பேசினதில்ல. இதுல உனக்கு எங்கிருந்து உறவு வந்துச்சு…”
“எனக்கிருக்கற உறவு இவங்க தான சித்தி…”
“காலாகாலத்துல உனக்கு கல்யாணம் பண்ணிட்டா உனக்குன்னு ஒருத்தி வந்துடுவா.”
“அதையும் அவங்க தான சித்தி செய்யணும். அம்மா அப்பாவா, அவங்க ரெண்டு பேரும் தான சித்தி முன்னாடி நின்னு என் கல்யாணத்தை நடத்தணும். இல்லைனா, வரப்போற பொண்ணுக்கும், அவ குடும்பத்துக்கும் என் மேல எப்படி மரியாதை வரும்.”
“நீ ஏன் கவலை படற? இவ்வளவு நாளா நீ பட்டதுக்கெல்லாம் சேர்த்துவச்சு நல்ல பொண்ணு கிடைப்பா. நீ கவலைப்படாத. நான் இருக்கேன்.”
அவனிடம் அமைதி மட்டுமே பதிலாக இருந்தது.
“உனக்கு தொக்கு, புளிக்காய்ச்சல் எல்லாம் செஞ்சு வைக்கறேன். ஊறுகாய் எடுத்துட்டு போகலாமா?”
மீண்டும் அவளே அவனது மௌனத்தை உடைத்தாள்.
“அதெல்லாம் வேண்டாம் சித்தி. எடை அதிகமாயிடும். வெறும் முப்பது கிலோ தான் எடுத்துட்டு போகலாம்.”
“முப்பது கிலோவுக்குமா துணிமணி எடுத்து வச்சிருக்க?”
“இல்லை சித்தி. கைல ஏழு கிலோ எடுத்துக்கலாம். அதுல என்னோடது வச்சுட்டேன். மீது முப்பது கிலோவும் தங்கச்சிக்கு தேவையான பொருளெல்லாம் அவங்க எடுத்து வச்சிருக்காங்க.”
“அடிப்பாவி… அவ இவ்வளவு அநியாயம் பண்ணறாளா?! உன் அப்பா ஒண்ணுமே சொல்லலையா? ஆறு மாசம் ஊருக்கு போற புள்ளைக்கு எவ்வளவோ தேவை இருக்கும்னு அவருக்குக் கூட தெரியாதா. ஏண்டா நீ இவ்வளவு அப்பாவியா இருக்க?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல சித்தி. நீங்க தேவை இல்லாம எதையும் நினைச்சு மனசு வருத்தப்படாதீங்க. நாளைக்கு காலைல நானே வீட்டுக்கு வந்து உங்கள பார்க்கறேன். நீங்க நடு ராத்திரி ஏர்போர்ட்டெல்லாம் வரவேண்டாம்.”
அழைப்பினைத் துண்டித்துவிட்டு தனது லண்டன் வருகையைப்பற்றி தங்கையின் கணவனுக்கு மின்னஞ்சல் அனுப்பினான்.
அன்னையின் புகைப்படத்தின் எதிரே நின்று ஒருமுறை பார்த்துவிட்டு, அப்பாவிடமும், அன்னையாக வந்தவளிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான்.
“பணத்தையெல்லாம் விரயம் பண்ணாம ஒழுங்கா சேர்த்து வை. கிரவுண்ட் ஒன்னு வாங்க பேசி வச்சிருக்கேன்” என்று மேலும் ஒரு சுமையை அவனது தோளில் ஏற்றினார், தந்தை. இதை அவர் கூறியிருக்கத் தேவையில்லை. செல்வத்தை எப்படி செலவழிப்பது என்பதனை அவன் அறிந்து வைத்திருக்கவில்லை. அவனுக்கென்று எந்த வித தேவைகளும் இருப்பதாக அவனுக்குத் தோன்றியதே இல்லை.
விமானத்தில் தனது ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவன், தனது லெதர் ஜாக்கெட்டுக்குள் பாஸ்போர்ட் வைக்கப்பட்ட சிறு தோள் பையினை சொருகிக்கொண்டான். விமானம் மேலே உயர, பிரம்மாணட நகரம் மெல்லச் சுருங்கியது வியப்பாக இருந்தது அவனுக்கு. ஒரு கைப்பிடி மின்மினிப்பூச்சிகளைச் சிதறவிட்டதுபோல் ஜொலித்தது. சிறிது நேரத்தில் இருள் சூழ்ந்துவிட, கண்கள் மூடி சாய்ந்து அமர்ந்தவன், நினைவு வந்தவனாய் மீண்டும் தனது பாஸ்போர்ட்டை சரிபார்த்துக்கொண்டான். தோள் பையில் மடித்து வைக்கப்பட்டிருந்த தங்கையின் விலாசம் கண்ணில் பட்டது. ‘ஹீத்ரு ஏர்போர்ட்டுக்கு வந்துடறேன்’ என்று தங்கையின் மாப்பிள்ளை அனுப்பியிருந்த மின்னஞ்சல் நினைவிற்கு வந்தது. தங்கையின் முகமும் நினைவிற்கு வந்தது. இத்தனை வருடங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே அவன் தங்கையோடு ஓரிரு வார்த்தைகள் பேசியுள்ளான். சிறு வயதில் விளையாடியிருக்கக் கூடும். ஆனால் அந்த நினைவுகள் பனி சூழ் காட்சியென மங்கிக்கிடந்தன. அவன் விவரம் தெளிந்த பின் தங்கை பூப்பெய்த, அவனுக்கு அவசரஅவசரமாக மாடியில் தனி அறை கட்டிக்கொடுக்கப்பட்டு அவனது ஜாகை மாற்றப்பட்டது. பெரும்பாலும் உணவு உண்ண மட்டுமே கீழே வருபவன், அவள் தலை கவிழ்ந்தபடி உணவருந்திவிட்டு எழுந்து செல்வதையே கண்டிருக்கிறான். அடுத்த சில மணி நேரத்தில் அவன் அவளை சந்திக்கப்போகிறான். நலம் விசாரிப்புகளையும் தாண்டி வேறென்ன பேசுவது என்றொரு பெருந்தயக்கம் அவனுள்.
லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தவன், தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளிப்பட, அங்கே தங்கையின் கணவன் மட்டும் காத்துக்கொண்டிருந்தான்.
“வாங்க மச்சான்! வெல்கம் டு லண்டன்!!” என்று அவன் கைகுலுக்க, இவனும் அமைதியான புன்னகையோடு கைகுலுக்கினான்.
“இருவது நிமிஷத்துல வீட்டுக்கு போயிடலாம், மச்சான். உங்க தங்கச்சிய தடபுடலா சமைக்கச் சொல்லிட்டு தான் வந்தேன்.”
பணி நிமித்தமாய் உரையாடியபடி வீட்டை அடைந்தனர்.
மூன்று அடுக்கு அடுக்குமாடி குடியிருப்பில், வாயிலில் புல்வெளி படர்ந்திருக்க, ஆங்காங்கே டாஃபோடில் மலர்கள் சிரித்திருக்க, தலையாட்டியபடி அவனை வரவேற்றது ஜப்பான் செர்ரி மரங்கள்.
தரைத்தளத்தில் இருந்த வீட்டின் வாயிலில் அவனது தங்கை காத்து நிற்க, இரு பெட்டிகள், கைப்பை, மடிக்கணினி பை என்று அனைத்தையும் தூக்கிக்கொண்டு இருவரும் உள்ளே நுழைந்தனர்.
“வாங்க!” என்று மெலிதாய் சிரித்து அவனை வரவேற்றவள், அடுக்களைக்குள் புகுந்துகொண்டாள்.
“ரெண்டு பெட்ரூம், கிச்சன், ஹால்… இவ்வளவுதான் மச்சான் வீடு இங்கெல்லாம். ஏதோ அட்டைப்பெட்டிக்குள்ள வாழறமாதிரி இருக்கும். நம்ம ஊர்ல நல்ல விசாலமான வீட்ல வாழ்ந்துட்டு இங்க இந்த மாதிரி வீட்ல இருக்கணுமேன்னு நினைக்கும்போது முதல்ல கஷ்டமாத்தான் இருந்தது. அப்புறம் பழகிடுச்சு. முன்னாடி ஒரு சிங்கிள் பெட்ரூம் வீட்ல தான் இருந்தோம். இவ டெலிவரி நேரத்துல ஊர்லேர்ந்து அத்தை மாமா வந்திருந்ததால வசதி பத்தாதுனு இந்த வீட்டுக்கு மாறிட்டோம்…”
தங்கைக் கணவன் பேசி முடிக்க, அவர்கள் இருவரும் பருக கோப்பைகள் ஏந்தியாடி எதிரே வந்து நின்றாள், தங்கை. காப்பியை எடுத்துக்கொண்டவன்,
“எனக்கு காபி கொடுத்துட்டு, மச்சானுக்கு என்ன எடுத்துட்டு வந்திருக்க?” என்றான் அவளது கணவன் யோசனையாய்.
“அண்ணனுக்கு ஹார்லிக்ஸ்” என்றவள் அண்ணனின் கையில் கோப்பையைக் கொடுத்துவிட்டு அடுக்களைக்குள் சென்றுவிட்டாள்.
“அய்யோ… அடிக்காதீங்க… எனக்கு ஹார்லிக்ஸ் ரொம்பப் பிடிக்கும். அதான் எடுத்து சாப்பிட்டேன். அடிக்காதீங்க... வலிக்குது… வலிக்குது…”
“ஏண்டா என் பெண்ணுக்காக வாங்கி வச்சிருக்கற ஹார்லிக்ஸை நீ தின்னு தீர்க்கப்பார்க்கறியா? உன்னை வீட்ல வச்சிருக்கறதே பெரிய விஷயம். இந்த வயசுலயே திருட்டுத்தனமா?” என்று வசைபாடியபடியே அவனை முதுகிலும், கையிலும் அம்மா அடிப்பதை, சிறு குழந்தையாய் இவள் கதவோரம் நின்று வேடிக்கை பார்த்தது இவளது நினைவிற்கு வந்தது. தேம்பியபடி, கண்களைக் கசக்கிக்கொண்டு இவளைக் கடந்து சென்ற அண்ணனின் அழுகையும் நினைவிற்கு வர, இன்று இவளது விழிகள் ஈரம் கொண்டன.
குளித்து முடித்து உடைமாற்றிக்கொண்டு வந்தவன், தூக்கக் கலக்கத்தில் தங்கையின் மடியில் அமர்ந்திருந்த அவளது பிள்ளையைக் கண்டான்.
“இப்பத்தான் சார் தூங்கி எழுந்திரிச்சாரு. முழிச்சு ஒரு கால் மணிநேரம் ஆகும் அவர் நிதானத்துக்கு வர. அதுவரைக்கும் இப்படித்தான் அவன் அம்மாவை விடமாட்டான்.”
தங்கையின் கணவன் கூறக்கூற, விரல் சூப்பியபடி அமர்ந்திருந்த எட்டு மாதக் கைக்குழந்தையை இமைக்கவும் மறந்து பார்த்திருந்தான், தாய்மாமன். பிறகு யோசனை வந்தவனாய், தனது கைப்பையைத் திறந்து சிறு நகைப்பெட்டி ஒன்றினை எடுத்து மாப்பிள்ளையிடம் நீட்டினான்.
“இது குழந்தைக்கு…”
“நீங்களே உங்க தங்கச்சி கிட்ட கொடுங்க மச்சான்.”
பெட்டியைத் திறந்து தங்கச்சங்கிலி தெரிய தங்கையின் முன் அவன் நீட்ட, அவளோ குழந்தையை அண்ணன் கையில் கொடுத்தாள். பஞ்சுப்பொதியென சந்தன வெண்மைக் குழந்தையைக் கையில் ஏந்தியதில் அவனுக்குப் பேரானந்தம் பொங்கியது. வாயில் வைத்திருந்த விரலை எடுத்துவிட்டு குழந்தை சிரிக்க, உணர்ச்சிப் பரவசத்தில் கண்கள் ஈரமானவன், அதன் உச்சியில் முத்தம் வைத்தான். கையில் வைத்திருந்த நகையை அவன் மீண்டும் தங்கையிடம் நீட்ட,
“நீங்களே போட்டுவிடுங்க…” என்றாள் பரிவாக.
“ஆமா மச்சான். தாய் மாமன் சீரு ரொம்ப ஸ்பெஷல். நீங்களே போட்டுவிடுங்க” என்று தங்கையின் கணவனும் கூற, உளமார இறைவனை வேண்டி, குழந்தைக்கு நகை சூட்டி, ‘தாய் மாமன்’ ஆசிர்வதித்தான். முதன்முறையாகத் தானும் முக்கியப்பட்டவனாகிப்போன மகிழ்ச்சி அவனுள்!!
இந்திய நாட்டு நடப்புகளையும், இங்கிலாந்து நாட்டு நடப்புகளையும் பேசியபடி இருவரும் உணவு மேஜையில் ஆஜராகினர்.
உணவு பரிமாறியவள், வெள்ளை சாதத்தின் மீது வத்தக்குழம்பு ஊற்ற, சற்றே கடுப்பான அவளது கணவன்,
“ஏன்மா முதன்முதல்ல உன் அண்ணன் நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க. சாம்பார் வைக்காம இதென்ன வத்தக்குழம்பு போய் வச்சிருக்க?” என்று சிடுசிடுத்தான்.
“அண்ணனுக்கு வத்தக்குழம்புனா ரொம்பப் புடிக்கும்” என்றவள், அண்ணனை நோக்க, அவனோ தங்கையின் பதிலைக் கேட்டு ஆச்சரியத்தில் விறைத்திருந்தான்.
வெடுக்கென விலகிச் சென்று அடுக்களைக்குள் புகுந்துகொண்டவள் இமையோரம் துளிர்த்த கண்ணீர்த்துளியை துடைத்துவிட்டாள்.
அன்றொருநாள் மதியம், இவள் உணவு உண்டு முடிக்கும் தருவாயில் அண்ணன் வந்து அமர்ந்தான். தட்டில் அம்மா வெள்ளைச்சோறு இட்டுக் கொடுக்க, அருகிலிருந்த வத்தக்குழம்பினை எடுக்க எத்தனித்தான்.
“டேய், அது அவளுக்கு…” என்ற அன்னை, குழம்பினை அவளின் தட்டில் கவிழ்த்துவிட்டு, மோரினை அவனது தட்டினில் ஊற்றினாள்.
கடுங்கோபத்தோடு மடமடவென உண்டு முடித்தவள், எழுந்து அடுக்களைக்குள் சென்று,
“ஏன் அம்மா என் தட்டிலே குழம்பை கொட்டுனீங்க? என்னால சாப்பிட முடியாம மீதம் வச்சுட்டேன். அண்ணனாவது சாப்பிட்டிருக்கும். அண்ணனுக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று பொரிந்து தள்ளினாள்.
“இங்கப்பாருடி உன்னால சாப்பிட முடியலைன்னா கீழ கொட்டு. பரவாயில்லை. அவனுக்கும் பிடிக்கும்னு இரக்கப்பட்டா, இடத்தைக் கொடுத்தா மடத்தைப் பிடிங்கிக்கற கதை தான் ஆகும். இனி வத்தக்குழம்பு செஞ்சா தானே. அவனுக்கு எப்பவும் புளிச்ச மோரு தான்.”
முகத்தினை திருப்பிக்கொண்டு அவள் அடுக்களை விட்டு வெளியே வர, கதவருகே கலங்கிய கண்களோடு அண்ணன் நின்றிருந்த நினைவு, இன்றும் அவளை கலங்க வைத்தது.
முகத்தினை அழுந்தத் துடைத்துவிட்டு அடுக்களையை விட்டு வெளியே வந்தவள் கணவனுக்கும், அண்ணனுக்கும் மீண்டும் அன்னமிட்டாள். அண்ணனுக்கு அவள் வத்தக்குழம்பு நீட்ட, அவளது கணவன் ரசத்தை நீட்ட, அண்ணனோ அவளது கைகளையே இமைக்காது பார்த்திருந்தான்.
புரிந்துகொண்ட அவளது கணவன் ரசத்தினை கீழே வைத்துவிட்டு,
“என்ன வேணுமோ கூச்சப்படாம சாப்பிடுங்க மச்சான்…” என்றபடியே தனது தட்டில் கவனம் கொள்ள, அவனோ மீண்டும் வத்தக்குழம்பு இட்டு வயிறார உண்டு முடித்தான்.
உண்டு முடித்து கையில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவனை கொஞ்சிக்கொண்டே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களைக் கண்டான். தங்கையின் கல்யாண புகைப்படங்கள் சில மாட்டப்பட்டு இருந்தன. குடும்ப போட்டோ எடுப்பதற்காக மணமக்களோடு தாய் தந்தையர் நிற்க, இவனும் அருகில் வந்து நின்றான். அச்சமயம் அவனுக்கு ஏதோ ஒரு பணியை கொடுத்து அவ்விடம் விட்டு அனுப்பப்பட்டு மீண்டும் புகைப்படம் எடுக்கப்பட்டது. அந்த நினைவு எதிர்பாராமல் அவனுள் வர, புகைப்படத்தைக் காணாது தயக்கத்தோடு முகத்தைத் திருப்பிக் கொண்டான். மீண்டும் படத்தினைக் காண வேண்டும் என்று ஆவல் தலைதூக்க, அருகே சென்று அதனை நோக்கினான். அங்கே அவனும் நின்றிருந்த குடும்பப் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. அவனுள் ஏராளமான சந்தோஷங்கள் பொங்க, கையில் வைத்திருந்த குழந்தைக்கு ஆசை தீர முத்தமிட்டான்.
மாலை அவன் தன் ஜாகைக்குக் கிளம்பிட தயாரானான்.
“மச்சான் நீங்க இங்க எங்கக்கூட தங்கிக்கலாமே?!”
“இல்ல மாப்பிள்ளை, கம்பெனில ஆபிஸ் பக்கத்துலயே கெஸ்ட் ஹவுஸ் ஏற்பாடு பண்ணியிருக்காங்க. கூட இரண்டு பிரண்ட்ஸ் இருக்காங்க. அதனால நான் அங்கேயே தங்கிக்கறேன்.”
“நீங்க கிட்டத்தட்ட லண்டன்ல ரொம்ப மெயினான இடத்துல தங்கப்போறீங்க. அங்கிருந்து ட்ரபால்கர் ஸ்கொயர், பக்கிங்ஹம் பேலஸ், மார்பில் ஆர்ச், தேம்ஸ், லண்டன் அய், பிக் பென், பார்லிமென்ட், லார்ட்ஸ் ஸ்டேடியம், வெஸ்மின்ஸ்டர், துஸ்ஸாட் வாக்ஸ் மியூசியம்னு எல்லாமே ரொம்ப ஈசியா சுத்தி பார்த்துடலாம். அப்பிடியே டியூப் புடிச்சா ஈஸ்ட் ஹாம் போயி முருகனையும், மஹாலட்சுமியையும் கும்பிட்டுட்டு, சரவண பவன்ல நல்லா சாப்பிடலாம். வார கடைசில எதையும் மிஸ் பண்ணாம கண்டிப்பா சுத்தி பாருங்க. நாம ஒரு தடவை பிளான் பண்ணி வேல்ஸ், ஸ்காட்லாந்து போயிட்டு வருவோம்.”
‘சரி’ என்று தலையை அசைத்தபடி அழகாய் சிரித்துக் கொண்டான்.
தனது கைப்பேசியை சரிபார்த்த தங்கையின் கணவன்,
“மச்சான் டாக்சி வந்துருச்சு” என்றதும் தனது கைப்பையையும், மடிக்கணினி பையையும் மட்டும் கையில் எடுத்துக் கொண்டான்.
“இந்தப் பெட்டி இரண்டும்?!”
“உங்களுக்குத்தான்…” என்றவன் மீண்டும் ஒருமுறை தன்னுடைய பாஸ்போர்ட்டை எடுத்து சரிபார்த்துக் கொண்டு மடிக்கணினி பையில் வைத்தான்.
“இங்கே எல்லாமே கிடைக்கும் அதனால கவலைப்படாதீங்க…” என்று தனது தர்மசங்கடத்தை சூசகமாய்க் காட்டிக்கொண்டான், தங்கையின் கணவன். அவசர அவசரமாக அடுக்களையில் இருந்து கையில் ஒரு நெகிழிப் பையோடு வெளியே வந்த தங்கை,
“இதல வத்தக்குழம்பு இருக்கு. ஹார்லிக்ஸ் வச்சிருக்கேன். புளிக்காய்ச்சல், தோசை மாவு, இட்லி பொடி கொஞ்சம் வச்சிருக்கேன். ரெண்டு மூணு நாளைக்கு வரும்னு நினைக்கிறேன். நான் வீட்டுல செஞ்ச பட்சணம் கொஞ்சம் வச்சிருக்கேன்” என்று வாழ்வில் முதல்முறையாக மிக நீளமாக பேசி முடித்தாள், அண்ணனிடம்.
அவன் பதில் கூறுவதற்கு முன், தாய்மாமனிடம் தாவிக் கொண்டு வந்த குழந்தையை கையில் அள்ளி கொண்டவன் குழந்தையை விட மனமில்லாமல் வாயிலில் நின்றிருந்த டாக்ஸி வரை ஏந்திக்கொண்டு வந்தான். பிரிய மனமின்றி குழந்தைக்கு ஒரு முத்தம் வைத்து விட்டு தங்கையிடம் கொடுத்தவன் அவளைக் கண்டு ஒரு மென்னகை சிந்திவிட்டு வண்டியில் ஏறி அமர்ந்தான்.
“மச்சான், உங்க பை சீட்டுக்கு கீழே இருக்கு. இந்தாங்க உங்க லேப்டாப் பை. பாஸ்போர்ட் ரொம்ப ரொம்ப முக்கியம். ஜாக்கிரதையா போய்ட்டு வாங்க” என்ற தங்கையின் கணவன் அவனது மடிக்கணினி பையை நீட்ட அதை வாங்கி கொண்டவன், தங்கை கொடுத்த நெகிழிப்பை கீழே இருந்ததைக் கண்டு, அதனை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு மடிக்கணினி பையை கீழே வைத்தான். வண்டி புறப்பட,
“அண்ணா, ஊரெல்லாம் பொறுமையா சுத்தி பார்த்துக்கலாம். நீங்க வெள்ளிக்கிழமை சாயங்காலம் வேலை முடிஞ்சதும் நேரா இங்க வந்துடுங்க. திங்கட்கிழமை காலையில இங்கிருந்தே ஆபிஸ் போயிக்கலாம்” என்றாள், அண்ணன் கிளம்பும் பரிதவிப்பில் கண்களில் ஈரம் சேர்த்தபடி.
“சரிம்மா! போயிட்டு வரேன்மா!!” என்றபடி விடைபெற்றுக்கொண்டான், நீண்டதொரு புன்னகையை முகத்தில் படரவிட்டபடி.
லண்டன் மாநகரத்து இளவெயில் மாலையின் இளந்தென்றல் காற்றில், தங்கையின் வத்தக்குழம்பு வாசம் அவனுக்கு மட்டும் வீசியது. மனதில், பெற்றவளின் முகம் தோன்ற, தனது கையிலிருந்த நெகிழிப்பையை மேலும் இறுகப் பற்றிக் கொண்டான், புன்னகை குறையாமல்.
*** முற்றும் ***
No comments:
Post a Comment