Sunday, 10 May 2020

அன்புடன் ஆம்பல் - 5




அடுத்து வந்த நாட்களில் அதிகாலையிலேயே பணிக்குச் சென்றவன், இரவு வெகு நேரம் கழித்தே வீடு திரும்பினான். அவன் மீது வருத்தம் இருந்தாலும் ருசிகர உணவு படைத்திட அவளும் தவறவில்லை, அவளை ஒதுக்கியவன் அவள் படைத்த பதார்த்தங்களை ஒதுக்கவில்லை. வார்த்தை பேசாமல் அமைதியாக இருப்பவனிடம் இவளே முன்வந்து ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசத்தொடங்கினாள். அவனிடம் இருந்த மௌனத்தின் கனத்தை அசைத்துப்பார்க்க எண்ணினாள். 

வார இறுதி விடுமுறையின் போது தனக்கு சில பொருட்கள் வாங்கிட கடைக்கு அழைத்துச் செல்லும்படி அவள் வினவ, மறு நொடி எங்கோ கிளம்பிச் சென்றவன் அரை மணி நேரத்தில் வீடு திரும்பியதும் ரொக்கத்தை அவள் கையில் திணித்துவிட்டு, ‘வீட்டுச் செலவுகளுக்கு’ என்றுவிட்டுச் சென்றான். அவளது கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தையே பதிலாகத் தந்தான். 

தனது அறையில் மிகவும் தீவிரமாக தனது மடிக்கணினியில் அவன் ஏதோ வாசித்துக்கொண்டிருக்க, உள்ளே நுழைந்தவள் அவன் அருகே சென்று 
“இன்னைக்கு முருங்கைக்காய் சாம்பார் வைக்கட்டுமா இல்லை வெண்டைக்காய் சாம்பார் வைக்கட்டுமா?” என்றாள்.
“ஏதோ ஒன்னு” என்றவன், தலைத்திருப்பி அவள் முகத்தைக் கூட காணவில்லை.
“உங்களுக்கு வாழைக்காய் கறி பிடிக்குமா இல்லை உருளைக்கிழங்கு செய்யட்டுமா?”
“ஏதோ ஒன்னு”
“பாயசம் செய்யலாம்னு நினைச்சேன். ஆனா, சர்க்கரை உடம்புக்குக் கெடுதல். அதனால சர்க்கரைப்பொங்கல் பண்ணலாம்னு நினைக்கறேன். கருப்பட்டி வெள்ளம் அத்தை கொடுத்துவிட்டாங்க. இல்லனா...”
“தயவு செஞ்சு நிறுத்தறியா?”     
அவள் பேசிக்கொண்டே போனதில் எரிச்சலானவன் குரலை உயர்த்திக் கத்த, விக்கித்து வாயடைத்து நின்றாள், அவள்.
“நான் எவ்வளவு முக்கியமானது படிச்சுக்கிட்டு இருக்கேன். பார்த்தா தெரியல? எதுக்கு தொனத்தொனனு பேசிக்கிட்டே இருக்க? நானே நொந்து போயிருக்கேன். தயவு செஞ்சு எரிச்சல கிளப்பாத” என்றவன், மீண்டும் மடிக்கணினியில் ஆர்வமானான். 

அவன் வாசித்துக்கொண்டிருப்பதை எதேச்சையாகக்  கண்டவள்,
“அன்புடன் ஆம்பல் தான் படிக்கறீங்களா?” என்றாள், சற்றுமுன் அவன் சீரியதையும் மறந்து.
“உனக்கு இந்த ப்ளாக் பத்தி தெரியுமா?” என்றான் மென்மையான குரலில், மிகுந்த ஆர்வத்தோடு.
அவனது ஒரு நொடி மாற்றத்தைக் கண்டு குழம்பித்தான் போனாள், அவள்.
“நான் நிறைய ப்ளாக் படிப்பேன். இதுவும் எனக்குத் தெரியும்.”
“நான் படிக்கறது இது ஒன்னு மட்டும் தான்.”
“இது கொஞ்சம் சுமாராத்தான் இருக்கும். நீங்க வேற எழுத்தாளர் படிச்சுப்…” 
அவள் கூறி முடிப்பதற்குள் ‘நிறுத்து’ என்று தனது கையைத் தூக்கி அவளை அமைதியாக்கியவன், 
“உனக்கு ஆம்பல் பத்தி எதுவும் தெரியாது. அவளோட ஒவ்வொரு வார்த்தையும் விலைமதிப்பில்லாதது. ஒவ்வொரு கவிதையையும் பல ஆயிரம் தடவை படிச்சிருக்கேன். அதெல்லாம் என் மூளைல பதியில, என் இதயத்துல பதிஞ்சிருக்கு. தேவையில்லாம அவளைப் பத்தி இன்னொரு வார்த்தை பேசின, நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்.”
அவனது வார்த்தைகள், அவனது முகம் போன்று மிகக் கடுமையாக இருந்தது. பயத்தில் கண்கள் கலங்கிவிட்டிருந்தவள், “ஒரு சாதாரன ரைட்டர் தான அவங்க…” என்றாள் தட்டுத் தடுமாறி.
“சாதாரண ரைட்டர் ஆனா என்னுடைய அசாதாரண காதலி. மறந்தும் என் முன்னாடி அவளைத் தப்பா பேசிடாத. என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.”
மீண்டும் கடுமையாக எச்சரித்தான்.
அவள் கண்கள் கலங்கியவாரே நின்றிருக்க, அவனோ தனது வண்டிச்சாவியை எடுத்துக்கொண்டு எங்கோ கிளம்பிச் சென்றான்.           

தூரமாக… வெகு தூரமாக… காரை விரட்டியடித்துக்கொண்டு சென்றவன், ஒரு கட்டத்தில் வேகம் குறைந்து விவேகம் பெற்று ஓர் மரத்தடியில் நிறுத்தினான். ஓட்டுநர் இருக்கையைப் பின்புறம் சாய்த்து கண்மூடி தலை சாய்த்தான். அவனது மனக்கிடங்கில் நிரம்பியிருந்த ஆம்பலின் மணமிகு நினைவுகள் அவனது மனத்திரையில் வரிசைக்கட்டின.      

அன்று அலுவலகத்தில் தனது மடிக்கணினியில் பழுது ஏற்பட்டு அலுவலக வலைப்பின்னலில் தகவல் பரிமாற்றம் செய்ய முடியாமல் தவித்திருந்தவன், ‘நெட்வொர்க்கிங்’ துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த நண்பனிடம் பலமுறை கூறியும் அவன் கண்டுகொள்ளாததால், தனது மடிக்கணினியை எடுத்துக்கொண்டு அவனிடமே சென்றான். 
“டேய் மச்சான், காலைலேர்ந்து என்னோட லேப்டாப் சரி செய்யச் சொல்லி சொல்றேன். ஆனா நீ காதுலையே வாங்க மாட்டேங்கற. அப்படி என்னடா உலக மகா பிசி நீ?” என்று சந்தோஷ் கூறுவதைக் காதில் வாங்காமல் தனது கைப்பேசியில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தான், அவனது நண்பன்.
“டேய்…” என்று அவன் மீண்டும் அவனது தோள் பற்றி குலுக்கியவுடன் நினைவிற்கு வந்தவன், 
“வா மச்சான் எப்ப வந்த?” என்று சந்தோஷின் வருகையை அப்போதே உணர்ந்த அவனது நண்பன், நலம் விசாரித்தான்.
“என்னடா மச்சான் போன்ல வறுவலா?”
“நீ வேற… அதெல்லாம் ஒன்னும் இல்லடா…”
“டேய் என்கிட்டயேவா ? அந்த ஹெச்.ஆர். பொண்ணு தான?”
“அதில்ல மச்சான்... அந்தப் பொண்ணுகிட்ட சும்மா மெசேஜ் பண்ணேன்… கதை படிச்சுக்கிட்டு இருக்கேன்னு சொன்னா. என்ன கதைனு கேட்டேன். லிங்க் கொடுத்தா. சரி சும்மா படிப்போம்னு ஆரம்பிச்சேன். கதை நல்ல சுவாரசியமா இருக்கு மச்சான். கதை படிச்சதுல கடலை போட மறந்துட்டேன்னா பார்த்துக்கயேன்…”
“அப்படிங்கற??”
“ஆமா, நான் படிச்சுட்டேன்… லிங்க் அனுப்பறேன்… ஒரு அரைமணி நேரம் டீ குடிச்சுட்டு வா, அதுக்குள்ள உன் லேப்டாப் சரியாகிடும்…”

அன்று ஆரம்பமானது ‘அன்புடன் ஆம்பல்’ வலைப்பூ மூலமாக ஆம்பலுடனான அறிமுகம். அடுத்து வந்த நாட்களில் கிடைத்த நேரங்களிலும், இரவின் பொழுதுகளிலும் வலைப்பூவின் அனைத்துப் பதிவுகளையும் வாசித்திருந்தான். கதைகளை விட, அவளது கவிதைகளே அவனை வெகுவாக ஈர்த்தது.           

‘செய்வோமா வேண்டாமா’ என்று பெரும் குழப்பத்துடன் தயங்கித் தவித்தவன், ‘செய்வோம்’ என்று மனம் தெளிந்த பின், அதனைச் செய்தான். ‘வணக்கம்! நான் உங்கள் வாசகன். கவிதைகளின் ரசிகன்.’ என்றொரு மின்னஞ்சலை அவளுக்கு அனுப்பினான். அடுத்த அரைமணி நேரத்தில் ‘நன்றி’ என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே அவளிடமிருந்து வந்தது. ‘முகப்புத்தகம்??’ என்று அவனது பதில் வினா சென்றது. ‘அதில் கணக்கு இல்லை…’ என்று இம்முறை மூன்று வார்த்தை பதிலால் அவளது கஞ்சத்தனம் குறைந்திருந்தது. அன்று தொடங்கிய மின்னஞ்சல் பரிவர்த்தனை பல மாதங்களாக ஓர் நாள் கூட நிற்காமல் தொடர்ந்தது. காதல் கதை ஒன்றை எழுதத் தொடங்கும்படி கோரிய போதுதான் அவள் சில நாட்கள் குலதெய்வக் கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பியதும் தொடங்குவதாகக் கூறியிருந்தாள். அன்றிலிருந்து இன்று வரை அவளிடமிருந்து பதில் இல்லை.

‘ஆம்பல்’ என்று அவன் ஒருமுறை கூறினான். ‘ஆம்பல்… ஆம்பல்…’ என்று இருமுறை கூறினான். ஆசை தீரும் வரை பலமுறை கூறினான். மீண்டும் மனம் நினைவலைகளை வீசியது.

‘உங்கள் இயற்பெயர் என்ன?’ என்று கேள்வி எழுப்பினான் ஒருமுறை.
‘ஆம்பல் தான். ஏன் இந்தச் சந்தேகம்?’ என்று பதில் கேள்வி வந்தது அவளிடமிருந்து.
‘இப்பெயரை சில கவிதை வரியில் மட்டுமே நான் கண்டதுண்டு… யாருக்கும் சூட்டப்பட்டு நான் கேள்வி பட்டதில்லை… ஒருவேளை எனக்குத்தான் தெரியவில்லையோ?!’
‘என் வீட்டின் எதிரே ஒரு தாமரைக்குளம் உண்டு. வீட்டின் வாயிலில் அமர்ந்தபடி அவிழும் அல்லியைக் கண்டு ரசிப்பது என் அப்பாவின் வழக்கம்… அன்று என் தாய் வலியில் கத்திக்கொண்டிருக்க, என் தந்தை குளத்தின் கரையில் நின்றுகொண்டிருந்தார். மருத்துவச்சி ஓடிவந்து சொன்னாளாம், ‘மகராசி பிறந்திருக்கா’ என்று. சிலிர்த்த என் தந்தை கலங்கியிருந்த கண்களைத் துடைத்துக்கொண்டு நோக்க, அல்லி மலர்ந்திருந்ததாம். ‘அல்லி’ என்று அழைப்பதை விட ‘ஆம்பல்’ எனும் பெயரில் ஈர்க்கப்பட்ட என் தந்தை, என் முகத்தினைக் காணும் முன்னே அப்பெயரை எனக்குச் சூட்டினார்.’

‘உன்னைப் பார்க்கறதுக்கு முன்னாடி உன் அப்பா பெயர் தான் வச்சார்… ஆனா நான் உன் மேல உயிரே வச்சுட்டேன்… ஆம்பல்… நீயும் நானும் அந்தத் தாமரைக்குளத்தில் கைக்கோர்த்து அமர்ந்தபடி அல்லி அவிழும் நாழிகைகளில் தொலைந்து போவது எப்பொழுது?’ என்று மானசீகமாய் அவளிடம் மருகினான்.        

*****************

காலையில் சென்றவன் அந்தி நெருங்கியும் வீடு திரும்பவில்லை. கைப்பேசியில் இவள் அழைத்தும் பதில் இல்லை. கோபம் ஒருபுறம், துக்கம் மறுபுறம் என அழுதழுது ஓய்ந்து போனாள். இரவு வீடு திரும்பியவன் தனது அறைக்குள் புகுந்துகொண்டு கட்டிலில் கிடக்க, அவன் எதிரே சென்று நின்றவள், 
“சாப்பிட வாங்க…” என்றாள், தனது மனவாட்டத்தை மறைத்துக்கொண்டு. 
“நான் வெளிய சாப்டுட்டேன்” என்றான் கண்கள் திறவாமல்.
காலையிலிருந்து அவனுக்காகக் காத்திருந்து உண்ணாமல் உறங்காமல் கிடந்தவளுக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது. அவன்மீது கோபமும் வந்தது.
“நான் போன் பண்ணேன், நீங்க எடுக்கவே இல்லை. எங்க போயிருந்தீங்க?” என்றாள்.
கண்கள் சிவக்க எழுந்து அமர்ந்தவன்,
“நான் எங்க வேணும்னாலும் போவேன். அதைக் கேட்க நீ யாரு?” என்று கோபத்தைக் கக்கினான்.
“நான்… நான் உங்க மனைவி!” என்றாள் தட்டுத்தடுமாறி, தனது பயத்தை மறைத்துக்கொண்டு.
“மனைவியா? யாரு நீயா? அதை நான் சொல்லணும்… காலைல தான் நான் யாரை நேசிக்கறேன்னு சொல்லிட்டுப் போனேன். திரும்பவும் ‘மனைவி’னு சொல்லிக்கிட்டு உன்னால எப்படி என் முன்னாடி வந்து நிக்க முடியுது?” என்றவன், “ஆங்… எங்க போனேனு கேட்டல்ல… விவாகரத்துக்கு வக்கீலைப் பார்த்துட்டு வரேன்… கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகியிருக்கணுமாம். அப்பத்தான் விவாகரத்து கிடைக்குமாம். இன்னும் ஒரு வருஷம்… ஒரே ஒரு வருஷம் தான் நீ இந்த வீட்ல இருக்கப்போற… அதனால மனைவி, அது, இதுனு சொல்லிக்கிட்டு என்கிட்ட வராத…” என்று உறுதியாய்க் கூறிமுடித்தவன், மீண்டும் கட்டிலில் படுத்து கண்களை மூடிக்கொண்டான்.

அவ்விடம் விட்டு விறுவிறுவென அடுக்களைக்கு வந்தவள், அவள் சமைத்து வைத்திருந்ததை அள்ளி தட்டினில் இட்டு உண்ணத் தொடங்கினாள். கண்கள் நீர் கசிந்துகொண்டிருக்க, அதைப் பொருட்படுத்தாமல் மளமளவென உணவு உட்கொண்டாள். காலையிலிருந்து பட்டினி கிடந்து நொந்திருந்த வயிறு சற்று அமைதி பெற, அவளது கண்களில் உயிர் வந்தது. நீரை அள்ளித்தெளித்து மூன்று நான்கு முறை முகம் கழுவியவள் அழுவதை விட்டுவிட்டு இறுதியாய் ஒரு தீர்மானத்திற்கு வந்தாள்.

மறுநாள் காலை அலுவலகத்திற்குத் தயாராகி வந்தவன், உணவு மேசையின் மீது அமர்ந்து காலை உணவிற்காகக் காத்திருக்க, அவளோ அங்கு இல்லை. அடுக்களைக்குள் சென்றவன் அங்கும் அவள் இல்லாததை உணர்ந்தான். அறைக்குள் தேடிவிட்டு யோசனையாய் வீட்டின் பின்புறம் செல்ல, அங்கே அவள் துணிதுவைக்கும் கல்லின் மீது சாவதானமாக அமர்ந்துகொண்டு தேநீர் பருகிக்கொண்டிருந்தாள். 
“க்கும்…” 
அவன் குரலை சரி செய்வதுபோல் அவளது கவனத்தை ஈர்த்தான்.
அவள் இவன் புறம் திரும்பியதும்,
“எனக்கு ஆபிசுக்கு டைம் ஆச்சு” என்றான்.
அவள் பதில் கூறாது மீதமிருந்த தேநீரைக் குடித்து முடித்தாள்.
கோபப்பட்டு  ஏதேனும் கூறப்போக அண்டை  வீட்டாரின் காதுகளுக்கு அது எட்டிவிடுமோ என்று தயங்கியவன், பதுவிசாக,
“ஒரு நிமிஷம் உள்ள வா” என்றான்.
அவள் உள்ளே சென்றதும், மீண்டும்,
“எனக்கு ஆபிசுக்கு டைம் ஆச்சு” என்றான்.
“டைம் ஆச்சுன்னா கிளம்பிப் போங்க. நான் என்ன நேரத்தை நிறுத்தியா வைக்க முடியும்?” என்றாள் எள்ளலோடு.
தன்னிடம் தயங்கித்தயங்கி நிற்பவள், வார்த்தைகளை நிதானித்துப் பேசுபவள் இன்று எவ்வித அச்சமும், தயக்கமுமின்றி நின்றிருந்த தோரணையைக் கண்டு விக்கித்துப்போனான். 

“சாப்பாடு?!” என்றான் தயங்கியபடி.
“நேத்து எங்க சாப்பிட்டீங்க?”
“ஹோட்டல்ல…”
“இன்னைக்கு எல்லா ஹோட்டலையும் பூட்டிட்டு ஓனருங்க ஊர விட்டு ஓடிட்டாங்களா என்ன?” என்றாள் பரிகாசமாக.
‘இல்லை’ என்று அவன் தலையசைக்க,
“அப்போ அங்கேயே போய் சாப்பிட்டுக்கோங்க” என்றாள் திடமாக.
“நீ… நீ சமைக்கலயா?”
“இல்லை”
“ஏன்?”
“அதையேத்தான் நானும் கேட்கறேன் நான் ஏன் சமைக்கணும்?”
“எனக்கு சமைச்சுப்போடறத விட உனக்கு வேற என்ன வேலை?”
“உங்களுக்கு சமைச்சுப்போடறது தான் என் வேலையா?”
“அப்புறம் எதுக்கு இருக்க நீ இந்த வீட்ல?”
“விவாகரத்துக்காக”
அவனது கேள்விகளுக்கு உடனுக்குடன் அவள் பதில் அளிக்க, அதற்கு மேல் அவளோடு பேச திராணி இன்றி, கலக்கத்துடனும், குழப்பத்துடனும், பசியுடனும் அலுவலகத்திற்கு விரைந்தான்.

No comments:

Post a Comment