வீட்டிற்கு வருகைத் தந்துள்ள சந்தோஷின் பாட்டி மற்றும் பெற்றோரை வரவேற்று இன்முகத்தோடு விருந்தோம்பினாள், ஆர்த்தி. சந்தோஷுடனான பிணக்கத்தை மறைத்துக்கொண்டு மிக இயல்பாக அவள் நடந்துகொண்டதில் சந்தோஷிற்கு பெரும் மகிழ்ச்சி. கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் அவளிடம் தனது கைவரிசைகளைக் காட்டினான்.
பாட்டிக்கு மிகவும் பிடித்த மெரினா கடற்கரைக்கு இளவெயில் மாலை நேரத்தில் அனைவரையும் அழைத்துச் சென்றான். அனைவரும் கடற்கரை மணலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, சந்தோஷ் பெரிய இதயம் ஒன்றை வரைந்து அதற்குள் ‘ஆர்த்தி சந்தோஷ்’ என்று இருவரது பெயர்களையும் எழுதினான்.
“என்ன சந்தோஷ் இது?” என்று பாட்டி கேட்க,
“லவ்வு பாட்டி… எக்கச்சக்க லவ்வு… இதோ உங்க பக்கத்துல உட்கார்ந்திருக்காளே, இவ மேல தான் லவ்வோ லவ்வு…” என்றான்.
அவளோ நெளிந்துகொண்டிருக்க, அவனோ தயக்கமின்றி அவளைக் கண்டு புன்னகை பூத்த வண்ணம் இருந்தான்.
“நாங்க ஊர்லேர்ந்து வந்தது உங்க ரெண்டு பேருக்கும் இடைஞ்சலா இருக்கா சந்தோஷ்?”
“இல்லை பாட்டி. காதலுக்கும், காதலிக்கறவங்களுக்கும் எதுவுமே இடைஞ்சல் கிடையாதாம் பாட்டி. காலம், பொழுது, பிறப்பு, இறப்பு, நெருக்கம், பிரிவு, இன்பம், துன்பம்னு இப்படி மனிதனோட கட்டுப்பாட்டுல இல்லாத சூழ்நிலைகளால கூட கட்டுப்படுத்த முடியாததாம் காதல்…”
“ரொம்ப அழகா பேசற சந்தோஷ்!!”
“பாட்டி இதை நான் சொல்லல… பெரிய எழுத்தாளர் ஒருத்தர் கதைல படிச்சது…” என்றவன், பிறர் அறியா வண்ணம் ஆர்த்தியைக் கண்டு கண் சிமிட்டினான். அனிச்சையாய் முறைத்தவள், சட்டென தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.
“நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு பிரியமா இருக்கறதப் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு சந்தோஷ்!!”
“ஆமா பாட்டி… அதுக்கு நான் அப்பாவுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும். எனக்கு சம்மந்தப்பட்ட எல்லா முடிவையும் அப்பா சரியா எடுத்திருக்காங்க, முக்கியமா என் கல்யாணம். ரொம்பவே சந்தோஷமா இருக்கேன் பாட்டி…” என்றான் ஆர்த்தியைக் கண்டு அன்பொழுக சிரித்தபடி. அவளோ, தலை கவிழ்ந்துகொண்டாள், அவளது மனத்தாங்கல் அவனால் உதாசீனப்படுத்தப்பட்டதனால்.
கடற்கரை விட்டு கிளம்புகையில்,
“சந்தோஷ், ஹோட்டல் போய் நாம எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. ஏதாவது ஒரு நல்ல ஹோட்டலுக்குக் கூட்டிட்டு போ!” என்றார், தந்தை.
தந்தை இத்தனை நட்புடன் பேசிப் பல காலம் ஆகியிருந்ததால், அவன் மனதில் மகிழ்ச்சியும், அவள் மீதான காதலும் பன்மடங்கானது.
அதற்குப்பின் வந்த நாட்களில், தனது இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்ட சந்தோஷின் தந்தை, மகனுடன் முன்பு போல் இனிதே பழக, இத்தனை நாட்களாகத் தந்தையைப் பற்றி சந்தோஷின் மனதை உறுத்திக்கொண்டிருந்த கவலை தீர்வு கண்டது.
“ஊருக்குப் போயே ஆகணுமா அத்தை?”
ஒருவாரம் மின்னலென கடந்துபோக, மனச்சுணக்கம் கொண்டாள், ஆர்த்தி.
“என்னமா பண்றது… வயல் வேலையெல்லாம் அப்படியே இருக்கு…” என்று பற்பல காரணங்களை எடுத்துக்கூறி மருமகளை சமாதானம் செய்துவிட்டு விடைபெற்றுக்கொண்டனர், சந்தோஷின் பெற்றோரும், பாட்டியும்.
அவர்களை விமான நிலையத்தில் வழியனுப்பிய பிறகு மிகுந்த உற்சாகத்துடன் வீடு திரும்பியவன், உடன் வந்திருந்த ஆர்த்தியின் கைகளைப் பற்றிக்கொண்டு அவசர அவசரமாக அறைக்குள் இழுத்துச் சென்றான்.
அவளை சுவற்றில் சாய்த்து அரணாய் இருபுறமும் தனது கைகளை வைத்து நெருங்கி நின்றவன், “இனி தினமும் எனது மன்மத அம்புகள் உன்னை நோக்கி படையெடுக்கப்போகின்றன. இந்த மன்மதப் போரில் வெற்றி இருவருக்குமே. இப்போரில் இரத்தம் இல்லை, சத்தம் இல்லை… முத்தம் மட்டுமே போர்க்களத்தின் நியதி…” என்றவன் அடுத்த நொடியில் அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.
அவள் கன்னத்தில் கைவைத்து அதிர்ந்து நிற்க,
“உனது மூச்சுக்காற்று தீண்டியதும்
தீப்பிடித்தது என் இதயம்...
சில்லென்று ஒரு முத்தம் தந்ததும்
என்னுள்ளே பனிப்பூக்களின் பெரும்மழை…” என்று அவள் என்றோ எழுதிய கவிதை ஒன்றைக் கூறியவன்,
“இப்ப என்னோட நிலையை அப்பவே சரியா புரிஞ்சு எழுதியிருக்க. நீ ஒரு தீர்க்கதரிசி!! இவ்வளவு நெருக்கத்துல நிக்கற உன்னோட மூச்சுக்காற்று பட்டு என் இதயத்துல காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரியுது. உடனே ஒரு முத்தம் கொடுத்து மனசுக்குள்ள மழையடிக்கச் செய்வியாம்…” என்றவன், தனது வலக் கன்னத்தைக் காட்டி, “கோன் ஐஸ்க்ரீம எப்படி ரெண்டு உதட்டால லாவகமா சாப்பிடுவோமோ அதே மாதிரி ஒரு உம்மா கொடு” என்றான், நிறுத்தி நிதானமாக காதலோடு.
அவளது இதழிலிருந்து சில மில்லிமீட்டர் தொலைவில் அவனது கன்னம் இருக்க, தான் வசமாக அவனிடம் சிக்கிக்கொண்டதை உணர்ந்தாள். மெல்ல அவளது இதழ்கள் அவனது கன்னத்தைத் தொட்டன. அடுத்த வினாடியே ‘ஆ…’ என்ற அலறலுடன் அவளிடமிருந்து இரண்டடி விலகிச்சென்று கன்னத்தில் கை வைத்துக்கொண்டு நின்றான்.
“எ… எதுக்குடி இப்போ கடிச்ச?”
“நான் ஐஸ்க்ரீம இப்படி கடிச்சுத்தான் சாப்பிடுவேன்.”
“அதுக்காக இப்படியா கடிப்ப? வலிக்குதுடி…”
“வலிக்கட்டும்… அப்பத்தான் இனியும் வாலாட்டாம ஒழுங்கா இருப்பீங்க… யாருகிட்ட!!” என்றவள், “என்ன சொன்னீங்க?! மன்மத அம்புகள் பாயப்போகுதா? வரட்டும் வரட்டும்… எல்லாத்தையும் நசுக்கு நசுக்குனு நசுக்கிடறேன்…” என்றுவிட்டு வரவேற்பறையில் சென்று அமர்ந்துகொள்ள, அடிபட்ட, மன்னிக்கவும், கடிபட்ட வேங்கையெனத் துடித்தவன், வலி தாங்காமல், குளிர்ந்த நீரினைக் கொண்டு பலமுறை முகம் கழுவினான். எண்ணெய், பவுடர், களிம்பு என்று கையில் கிடைத்தவற்றைத் தடவியவனுக்கு ஓரளவுக்கு வலி மட்டுப்பட, சோர்ந்து தன்னையும் அறியாமல் கண்ணயர்ந்தான்.
விழித்தெழுந்தவனுக்கு சற்று நேரத்திற்கு முன் நடந்தவை நினைவிற்கு வர, கன்னத்தை வருடிப்பார்த்தான். வலி மட்டுப்பட்டிருந்தாலும் முழுதும் மறையவில்லை. ‘படுபாவி’ என்று அவளை நொந்துகொண்டவன் கைப்பேசியில் செய்தி ஒன்று வந்து விழுந்ததும் அதில் கவனம் கொண்டான்.
பத்து நிமிடங்கள் கழித்து, அவளைத் தேடி அறையைவிட்டு வந்தவன் ஆசுவாசமாக சோபாவில் அமர்ந்திருப்பவளைக் கண்டு கொதித்துப்போனான்.
“என்ன இது?” என்றான் அவளது முகத்திற்கு நேரே தனது கைப்பேசியை நீட்டியபடி.
“என்னது?”
“என்னதா?! படிக்கறேன் கேளு…” என்றவன், கைப்பேசியில் ஒளிர்ந்ததை வாசிக்கத் தொடங்கினான்.
“கவிதை பெயர் - முதல் முத்தம்
கவிதாயினி - ஆஆஆம்பல்
அவனது பார்வை
என்னோடு மோகத்தைக் கூட்ட
அவனது தீண்டல்
என்மீது மோகனம் மீட்ட
இலைவருடும் காற்றாய்
அவனது சுவாசம் என்னைச் சீண்ட
இரு அதரங்கள் கொண்டு
கன்னத்தில் கையொப்பமிட்டான்!!
மென்னிதழ்கள் மின்சாரம் தொடுக்க
நரம்புகளில் நாணம் பெருக
பெண்ணவளின் கண்கள் சொருக
உணர்வுகளின் வேகத்தில்
தன்னைத் தொலைத்தாள்
புதுவித அலை சூழ
உலகம் மறந்தாள்!!”
வாசித்துமுடித்தவன் அவளை நோக்க, அவளும் சளைக்காமல் அவனையே பார்த்திருந்தாள்.
“என்னது இது?”
“கவிதை…”
“அது தெரியுது… யாரை ஏமாத்த இந்தக் கவிதையை எழுதின? ஒரு மனுசன கடிச்சுக்கொதறிட்டு கூச்சமே படாம நாணம் பொங்குச்சுனு எழுதியிருக்க?! அப்படின்னா என்னனு தெரியுமா உனக்கு? அதை விடு… கொஞ்சமாவது பீலிங்ஸ் இருந்ததா உனக்கு? எப்படிடி இப்படியெல்லாம் உன்னால முடியுது… சரி டா, கடிச்சதுதான் கடிச்சோம், அவருக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோனு கொஞ்சமாவது கரிசனம் இருக்கா… அதுவும் இல்லை… கவிதை கேட்குது… அதுவும் காதல் கவிதை… ‘கடைசியில் புருஷனைக் கடித்து வைத்தாள்’னு ஒரு வரிய சேர்த்து எழுது… உண்மை இந்த உலகத்துக்கே தெரியட்டும். இனிக்க இனிக்க கவிதையா எழுதி, இனிக்க இனிக்கப் பேசியே என்னை ஏமாத்திட்டடி… என்னமா மெயில் போடுவ… ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு மட்டுமே நான் கற்றுள்ள பாடம்’னு ஒருதடவை மெயில் போட்டிருந்தியே, அதைப் படிச்சுட்டு கட்டினா இவளைக் கட்டணும் இல்லனா செத்துடனும்னு நினைச்சேன்டி… ‘ஆம்பல், ஆம்பல்’ னு அரை லூசாவே ஆயிட்டேன்டி… ‘ஆம்பல்’ - அதை மறந்துட்டேனே… எப்படி எப்படி உங்க வீட்டுக்கு எதிர்க்க தாமரை குளம்… அங்க உங்கப்பா வெயிட்டிங்ல இருந்தாரு… பூ பூக்கும் போது நீ பொறந்ததால உனக்கு அப்படியே அந்தப் பூவோட பேர வச்சுட்டாங்க… அப்படித்தானே?! நீ பொறந்தப்போ பூ பூத்துச்சா இல்லை பூகம்பம் வந்துச்சா? நீ சொன்னதையும் நம்பி, ‘என்னடா இவ வீட்டுக்கு எதிரே குளத்தைக் காணோம், கார்ப்பரேஷன் குழாய் தான் இருக்கு’னு அந்தக் குளத்தைப் பத்தி விசாரிச்சேன். உங்க தெருவுல மட்டுமில்ல ஏரியாவுலையே ஒரு குளம் கூட கிடையாதாம்… எதுக்குடி அப்படி சொன்ன?” என்று மூச்சுவிடாமல் கொட்டித்தீர்த்தவன் மூச்சிரைக்க அவள் எதிரே சோர்ந்து அமர்ந்தான்.
“உன்னை தான் கேக்கறேன், எதுக்கு என் காதுல பூ சுத்துன?”
“நீங்க யாருனு எனக்கு அப்போ தெரியாது. மெயில் போட்டா உடனே நம்பி எல்லாத்தையும் சொல்லிடுவாங்களா?? அதான் அந்த நேரத்துல என் கற்பனைல வந்ததை அடிச்சுவிட்டேன்...”
“என்னது அடிச்சுவிட்டியா?!! கொஞ்சம் தப்பியிருந்தது என் அப்பா என்னை அடிச்சு துவைச்சு தொங்கவிட்டிருப்பாரு…”
அவள் அவனைக் கண்டு முறைக்க, “என்ன லுக்கு?” என்றான் ஆதங்கம் குறையாமல்.
“கம்பு சுத்தி முடிச்சுட்டீங்கன்னா கடைக்கு போய் பரோட்டா வாங்கிட்டு வாங்க.”
“என்ன?”
“என் கவிதைக்கு வந்த கமெண்ட்ஸுக்கு தாங்க்ஸ் எழுதியே டயர்ட் ஆகிட்டேன். நைட்டுக்கு என்னால டிபன் பண்ணமுடியாது. சீக்கிரம் பரோட்டா வாங்கிட்டு வாங்க. சாப்பிட்டு தூங்கணும்” என்றவள், சோபாவில் படுத்துக்கொண்டாள்.
சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பியவன், “ஆம்பல் ஆம்பல் னு சுத்தி கடைசில சாம்பல் பூசிக்கிட்டு சந்நியாசியாத்தான் போகப்போறேன்…” என்றான் கடுப்பில்.
“நோ ப்ராப்ளம். ஆனா பரோட்டா வாங்கி வந்து கொடுத்துட்டுப் போங்க. ‘சாம்பல் சந்நியாசி சந்தோஷ்’னு உங்க சரிதையை எழுதி புக்கு போட்டுடறேன்…” என்றாள் அசராமல்.
“பேசு பேசு, எல்லாம் என் நேரம். ஆபிஸ்ல நான் கதவை திறந்துட்டு உள்ள நுழைஞ்சா எல்லாரும் நடுங்குவாங்க…”
“ஏன்? உங்க ஆபிஸ்ல ஏசி ரொம்ப ஜாஸ்தியா இருக்குமா?”
பதில் பேசாமல் கடைக்கு கிளம்பிச் சென்றான்.
அந்தோ பரிதாபம், சூரப்புலி, சாம்பார் புளி ஆனது!!
அடுத்த இரண்டு நாட்களுக்கு அமைதி காத்தான். இருப்பினும் அவனது காதல் உள்ளம் நெஞ்சினில் முட்டிமோத, “சரி அன்னைக்கு ஏதோ கடுப்புல கடிச்சுட்டனு புரியுது. நான் அதெல்லாம் ஒன்னும் மனசுல வச்சுக்கல. பிராயச்சித்தமா கடிச்ச எடத்துல ஒரு உம்மா கொடுத்துடு…” என்று குழைந்துகொண்டே அவளருகே சென்று நின்றான்.
“அன்னைக்கு நடந்தத மனசுல வச்சுக்கல சரி… ஆனா ஆம்பல்’அ மனசுல வச்சுக்கிட்டு எனக்கு தாலி கட்டினீங்களே அதுக்கு என்ன பிராயச்சித்தம் செய்யப் போறீங்க?” என்றாள்.
அவள் முன்னே பரிதாபமாக நின்றிருந்தவன், “நீ ஒன்னும் கிஸ் கொடுக்க வேண்டாம்…” என்றவன், “நானே எனக்குக் கொடுத்துக்கறேன்” என்றுவிட்டு தனது கன்னத்தைக் கிள்ளி தனக்குத் தானே முத்தம் வைத்துக்கொண்டான்.
அவனது சேட்டைகள் எதற்கும் அவள் அசருவதாக இல்லை. அவளது கேள்விகள் எதுவும் இவனுக்கு விளங்குவதாக இல்லை. இருப்பினும் ஒருவரை ஒருவர் விட்டுவிடுவதாக இல்லை, ஏதோ ஒரு மாயம் நிகழும் என்ற எதிர்பார்ப்பில்!!
No comments:
Post a Comment