Saturday, 9 May 2020

அன்புடன் ஆம்பல் - 6



இரண்டு நாட்கள் கடந்துவிட்ட நிலையில், ஆர்த்தியை சந்தோஷ் சட்டை செய்யவில்லை. அவளும் அதற்கு அயர்ந்து போகவில்லை. அன்று அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவன் சோர்வின் மிகுதியால் சோபாவில் வந்தமர்ந்தான். எதிரே அமர்ந்திருந்தவள் கொய்யாப்பழங்களை நறுக்கி, உப்பு - மிளகாய்ப்பொடி கலவையைத் தொட்டுத்தொட்டு சப்புக்கொட்டி மென்று முழுங்கிக்கொண்டிருந்தாள். வழக்கத்திற்கு மாறாக அவன் முன்னமே வீடு திரும்பியிருப்பதைக் கண்டு அவள் அலட்டிக்கொள்ளவில்லை. 
‘ஒரு மனுசன் இங்கிருக்கேனே… இவ கண்ணுக்குத் தெரியுதா இல்லையா?! மூணு நாள் முன்னாடி வரை அம்மாஞ்சி மாதிரி இருந்தா, இப்போ அல்சேஷன்… இல்லையில்ல ஆதிசேஷன் மாதிரி ஆயிட்டா’ என்று எண்ணியவன், அவள் உண்பதைக் கண்டு, ‘இவ சாப்பிடறத பார்த்தா எனக்கு எச்சி ஊறுது…’ என்று உள்ளுக்குள் புலம்பிக்கொண்டவனுக்கு, உண்மையிலேயே வாயில் கடலலைகள் பொங்கின. 
சில நிமிடங்கள் அமைதி காத்தவன், ‘இதற்கு மேல் தாங்கமுடியாது’ என்றொரு தருணத்தைத் தொட்ட பின்,
“எனக்குப் பசிக்குது” என்றான், முந்தைய தினங்களில் எதுவும் நடவாதது போல்.
“அதுக்கு?” என்றாள் சளைக்காமல்.
“சாப்பாடு எடுத்து வை…” 
“உங்க ஹோட்டல் என்னாச்சு?”
பெருமூச்சு விட்டவன்,
“எனக்கு வெளில சாப்பிட்டா ஒத்துக்காது. மூணு நாளா ஹோட்டல்ல சாப்பிட்டு ஒரே வயித்துவலி. இத்தனை நாளா எனக்கு சமைச்சுப்போட அம்மா ஒரு குக் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க…”
“இப்போ கல்யாணம் பண்ணி வச்சு குக்’குக்கு பதிலா என்னை ஏற்பாடு பண்ணிட்டாங்க. அப்படித்தானே?!”
“நான் அப்படியெல்லாம் சொல்லல…”
“வேற எப்படி?”
அவளை ஊடுருவி நோக்கியாவின்,
“உன் பாட்டி ரொம்ப நல்லவங்க’னு என் பாட்டி கதைகதையா சொல்லியிருக்காங்க. ஆனா நீ…”
“ஓ! உங்கக் குடும்பத்துல என் வம்சமே ஏமாந்த சோணகிரி முடிவு பண்ணிட்டீங்களா?”
“என்ன? அப்படியெல்லாம் இல்ல… அன்னைக்கு ஏதோ டென்ஷன்ல திட்டிட்டேன்...”
“அதுசரி… கம்பெல்ஷன்ல கல்யாணம் பண்ணுவீங்க; டென்ஷன்ல திட்டுவீங்க; வெக்சேஷன்ல விவாகரத்து செய்வீங்க; ஆனா, நான் மட்டும் டெடிகேஷன் குறையாம டின்னர் செஞ்சு வைக்கணும். இல்லை?”
அவள் கேட்ட கேள்வியில் வாயடைத்துப் போனான்.
“மிஸ்டர்.சந்தோஷ்…”
“என்னது சந்தோஷா?” என்று அடுத்து ஒரு அதிர்ச்சியில் உறைந்தான்.
“அதான உங்க பேரு? ‘கல்யாணத்துல என் புள்ளைக்கு முழு சம்மதம்’னு உங்க அம்மா என் அம்மாகிட்ட புருடா விட்ட மாதிரி, பேருலயும் ஏதாவது?”
“இங்க பாரு… இப்படி ஒரு கல்யாணம் நடந்திருக்கக் கூடாது. ஆனா, சந்தர்ப்ப சூழ்நிலையால இப்படி ஆயிடுச்சு. நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் என் அம்மாவும், அப்பாவும் கேட்கல. போதாத குறைக்கு என் பாட்டியோட உடல்நிலை வேற ரொம்ப மோசமா இருந்துச்சு. அவங்களுக்காக நான் இதை செய்யவேண்டியதா போய்டுச்சு…”
“உங்க பாட்டிக்காக நீங்க எது வேணும்னாலும் செய்ங்க மிஸ்டர்.சந்தோஷ். அதுல ஒரு நியாயம் இருக்கு. சம்மந்தமே இல்லாத என்னை எதுக்கு உள்ள இழுத்துவிட்டீங்க? அதுல என்ன நியாயம் இருக்கு?”
“அது நியாயம் இல்லை தான். என் தப்பு தான். எல்லாமே என் தப்பு தான். நான் கல்யாணமும் பண்ணியிருக்கக்கூடாது, தேவையில்லாம கோவமும் பட்டிருக்கக்கூடாது. ஆனா… ஆனா… உன் எதிர்காலத்தை நல்லபடியா அமைச்சுக்கொடுக்க வேண்டியது என் கடமை.”
“இந்தக் ‘கடமை’ கல்யாணத்துக்கு முன்னாடி காத்து வாங்கப் போயிருந்துதா?”
ஏற்கனவே பசி மயக்கத்தில் சோர்வுற்றிருந்தவனுக்கு, இவளது கேள்விக்கணைகளால் கண்கள் இருண்டு போகத் தொடங்கியது.
“ப்ளீஸ்… சாப்டுட்டு பேசுவோமா? மத்தியானத்துலேர்ந்து நான் பட்டினி… வயிறு சுருங்கி போச்சு…” என்று சரணடைந்தேவிட்டான், இறுதியாக.
இருக்கையிலிருந்து எழுந்தவள், “இதுக்கு மேல பேச எதுவும் இல்லை. இனிமேல் என்கிட்ட உங்கக் கோவத்தைக் காட்டக் கூடாது” என்று திட்டவட்டமாகக் கூற, குறுகுறுக்கும் அவனது குற்றம் செய்த நெஞ்சம் “சரி” என்று கூறச்செய்தது.

அவளது அதிரடியில் அடங்கிப்போனவன், அன்று முதல் தனது கையாலாகதத்தனத்தை கோபங்களாக வெளிக்காட்டாமல் பார்த்துக்கொண்டான். இரவு உணவு முடித்துவிட்டு அறையில் மடிக்கணினியில் ‘அன்புடன் ஆம்பல்’ வலைப்பூவினைப் படிப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தான்.
“லைட் அணைச்சுடட்டுமா?”
“இல்லை நான் படிக்கறேன்…”
“நான் தூங்கணும்…”
“நான் படிக்கணும்…”
எரிச்சலோடு பாயை விரித்து அதில் படுத்தவள், ‘இந்த மொக்க ப்ளாகையே முன்னூறு தடவை படிக்கவேண்டியது’ என்று முணுமுணுக்க, அது அழகாய்க் காற்றில் தவழ்ந்து சென்று அவனது காதுகளில் பாய்ந்தது.
வெகுண்டெழுந்தவன்,
“மொக்க ப்ளாகா? என் ஆம்பலோட எழுத்து உனக்கு அவ்வளவு கிண்டலா இருக்கா?” என்று சீறினான்.
“உங்களுக்கு பிடிக்கும்ங்கறதால என்னுடைய கருத்தை மாத்திக்க முடியாது.”
“அடடே கருத்து சொல்றீங்களோ? தெரியாமத்தான் கேட்கறேன், அவளை மாதிரி உனக்கு எழுதத் தெரியுமா? பக்கம் பக்கமா எழுதவேண்டாம். குறைஞ்சது ஒரு நாலு வரி எழுதத் தெரியுமா? அதுகூட வேண்டாம், ‘ஆம்பல்’ அப்படினா என்னனு தெரியுமா?”
அவனை உற்று நோக்கியவள்,
“காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா (தேமாம்பூ), மணிச்சிகை, உந்தூழ், கூவிளம், எறுழ் ( எறுழம்பூ), சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, குடசம், எருவை, செருவிளை, கருவிளம், பயினி, வானி, குரவம், பசும்பிடி, வகுளம்,  காயா, ஆவிரை, வேரல், சூரல், சிறுபூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், கோங்கம், போங்கம், திலகம், பாதிரி, செருந்தி, அதிரல், சண்பகம், கரந்தை, குளவி, மாமரம் (மாம்பூ), தில்லை, பாலை, முல்லை, கஞ்சங்குல்லை, பிடவம், செங்கருங்காலி, வாழை, வள்ளி, நெய்தல், தாழை, தளவம், தாமரை, ஞாழல், மௌவல், கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, வழை, காஞ்சி, கருங்குவளை (மணிக் குலை), பாங்கர், மரவம், தணக்கம், ஈங்கை, இலவம், கொன்றை, அடும்பு, ஆத்தி, அவரை, பகன்றை, பலாசம், பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாய், தோன்றி, நந்தி, நறவம், புன்னாகம், பாரம், பீரம், குருக்கத்தி, ஆரம், காழ்வை, புன்னை, நரந்தம், நாகப்பூ, நள்ளிருணாறி, குருந்தம், வேங்கை, புழகு” என்று ஒரே மூச்சில் பெரிய பட்டியல் ஒன்றை வாசித்து முடித்தாள்.
அவனால் பேச முடியும் என்பதை மறந்தே போனான். திறந்த வாய் மூடாமல் திகைத்து நின்றான்.
“நான் சொன்னது என்னனு தெரியுமா?” என்றாள்.
அவன் ‘இல்லை’ என்று தலையசைக்க,
“குறிஞ்சிப்பாட்டுல வர 99 மலர்களோட பெயர்கள். ஆம்பலாம் பெரிய ஆம்பல்” என்று நொடித்துக்கொண்டவள், பாயில் படுத்து உறங்கிப்போனாள். 

தனது மடிக்கணினியை மூடியவன், மின் விளக்கினை அணைத்துவிட்டு மூச்சுவிடும் சப்தம் கூட வெளியே தெரியா அளவிற்கு அமைதியாகிப்போனான். அன்றிலிருந்து அவள் முன்னே ‘அன்புடன் ஆம்பல்’ படிப்பதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டான்.               

திருமணம் முடிந்து இரு மாதங்கள் கடந்திருந்த நிலையில், சந்தோஷின் பெற்றோரும் பாட்டியும் சென்னை வர திட்டமிட, சந்தோஷின் வீட்டில் தடபுலாக ஏற்பாடுகள் நடந்தன. 
காலையில் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் அவர்களை அழைத்துக்கொண்டு பாட்டியின் உடல் பரிசோதனைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறந்த மருத்துவமனைக்குச் சென்றான். சோதனைகள் முடிந்து மருத்துவரை சந்தித்துவிட்டு வீடு திரும்ப நண்பகல் ஆகியிருந்தது. அவர்களை வரவேற்று உபசரித்த ஆர்த்தி, இன்முகம் மாறாதிருந்தாள்.
அனைவரும் வரவேற்பறையில் பேசிக்கொண்டிருக்க, அவள் மட்டும் அடுக்களையில் எதோ வேலையாக இருந்தாள். மெல்ல எழுந்து வந்த சந்தோஷ், ஆர்தியிடம் சென்று,
"ரொம்ப தேங்க்ஸ் பா…" என்றான்.
"எதுக்கு?"
"இல்லை, பாட்டி உடம்பு முடியாதவங்கன்னு புரிஞ்சுக்கிட்டு நீ மனசுல எதுவும் வச்சுக்காம பிரியமா நடந்துக்கிட்டியே அதுக்கு…"
"எனக்கு ஒரு டவுட்…"
"என்ன?"
"உண்மையாவே உங்க பாட்டிக்கு ஹார்ட் அட்டாக்’ஆ?"
"ஆமா… ஏன் திடீர்னு இப்படி ஒரு சந்தேகம்?"
"ரெண்டு தடவ சாம்பார், ஒரு தடவ ரசம், ரெண்டு காய், கூட்டு, மோர்’னு ஃபுல் கட்டு கட்டறாங்க. ஹார்ட் பேஷண்டு சாப்பிடற மாதிரி இல்லையே. இப்பக் கூட பாயசத்துக்குத் தான் வெயிட்டிங்’ல இருக்காங்க..."
"ஹே, இப்போ என்ன சொல்ல வர?"
"உங்க பாட்டி போய் சேர்ந்துடுவாங்கனு தான அவசர அவசரமா என்னை புடிச்சு தாலி கட்டினீங்க. ஆனா அதுக்கான அறிகுறி ஒன்னு கூட அவங்கக்கிட்ட இல்ல?!!"
"என் பாட்டி நல்லா இருக்கறது உனக்குப் பிடிக்கலையா?"
"உங்க பாட்டி நல்லா இருக்காங்க… ஆனா நான் நல்லா இல்லையே…"
"இங்க பாரு நீ என்ன வேணும்னாலும் என்னை தண்டிச்சுக்கோ… என் பாட்டி பாவம்..."
பதில் கூறாமல் முந்திரிகளை வறுத்து பாயசத்தில் போட்டவள், அவனை முறைத்தபடியே எலி மருந்தினைக் கையிலெடுத்தாள். 
"எதுக்கு இப்போ இந்த எலி மருந்தை எடுக்கற?"
"ஒரு பெருச்சாளி என்னை நிம்மதியாவே இருக்க விடமாட்டேங்குது."
"அடிப்பாவி. என்ன பண்ணப் போற?"
"பாயாசப் படையல்…" என்று சிரித்துக்கொண்டே அவள் எலி மருந்தினைப் பிரிக்க, அதற்குள்ளாகப் பாட்டி அழைக்கும் குரல் கேட்டு அவளைக் கலக்கத்துடன் பார்த்தபடியே வரவேற்பறைக்குச் சென்றான், சந்தோஷ்.

பத்து நிமிடங்கள் கழித்து அனைவருக்கும் கிண்ணத்தில் பாயசம் எடுத்து வந்தவள், பாயசத்தை முதலில் பாட்டிக்குக் கொடுத்துவிட்டு அவனைக் கண்டு சிரித்துவிட்டு மற்றவர்களுக்கும் பரிமாறிவிட்டுச் சென்றாள்.
‘இவ என்ன இவ்வளவு பெரிய வில்லியா இருக்கா… பாயசத்தை மறந்தும் தொடக்கூடாது... உடனே ஆஸ்பத்திரிக்கு ஓட தயார் நிலையில இருக்கணும்' என்று எண்ணிக்கொண்டவன், பாட்டியையும், தனது பெற்றோரையும் மாறி மாறி பார்த்திருந்தான். 
"என்ன சந்தோஷ் சாப்பிடாம அப்படியே வச்சிருக்க?" என்று பாட்டி கேட்க,
"அது… எனக்கு இதுல தேன் ஊத்த மறந்துட்டா… இதோ வந்துடறேன்" என்றவன், கையில் பாயசக் கிண்ணத்தோடு அடுக்களைக்குச் சென்றான். சந்தேகமாய் குப்பைத்தொட்டிக்குள் அவன் நோக்க, அதில் எலி மருந்து அட்டை மட்டும் கிடந்தது.
"தேன் ஊத்தணுமா இல்லை பால் ஊத்தணுமா?" என்று அவள் வினவ,
"எலி மருந்து எங்க?" என்றான், அச்சத்தோடு.
"பெருச்சாளிக்கு படையல் வச்சாச்சு" என்றாள்.
"உண்மைய சொல்லு…"
"நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை மை லார்ட். இது சாகாம இருக்கற உங்க பாட்டி மேல சத்தியம்!" என்றாள்.
கையிலிருந்த பாயசத்தை அடுப்பு மேடையிலேயே வைத்துவிட்டு வரவேற்பறைக்கு அவன் வர, அனைத்து பாயசக் கின்னங்களும் காலியாகக் கிடந்தன.

அடுத்த இரு நிமிடங்களில் அவனுக்கு வியர்த்துவிட்டது. 
"ஏன் சந்தோஷ் உனக்கு இப்படி வியர்க்குது?" என்றார், பாட்டி.
"அது…" என்று அவன் இழுக்க,
"அது வந்து பாட்டி அவங்க ஏ.சி.ல இருந்தே பழகிட்டாங்க. கொஞ்ச நேரம் ஏ.சி. இல்லைனாலும் அவங்களுக்கு வியர்த்துடுது" என்று அவனை இடைமறித்தவள், அவனுக்கு மட்டும் காற்று வீசும்படி பெடெஸ்டல் ஃபேன் பொருத்தினாள்.
"உன்னைக் கல்யாணம் பண்ணிக்க, என் பேரன் கொடுத்து வச்சிருக்கான்" என்று பாட்டி கூறியதும், பக்கென்று தனது நெஞ்சினைப் பற்றிக்கொண்டான்.
அவளோ, துளியும் அசராது, "இல்லை பாட்டி… நான் ஏழு ஜென்மமா செஞ்ச தவம் இவர் எனக்குக் கிடைச்சது…" என்றாள்.
அவனுக்கு இதயம் வெடித்தேவிட்டது!!

ஊருக்குத் திரும்பிட சந்தோஷின் பாட்டியும், பெற்றோரும் கிளம்பிட, "என்ன பாட்டி அதுக்குள்ள அவசரம்? ஒரு பத்து நாள் தங்கியிருந்து என் கையால சாப்பிட்டுட்டு போகக்கூடாதா?" என்றாள் பரிவாக.
‘என்னது பத்து நாளா? இவ என் குடும்பத்தைப் பொட்டலம் கட்டாம விடமாட்டா போலிருக்கே…' என்று தனக்குள்ளே பயம் கொண்டான்.
"இல்லமா, இப்போ அறுவடை நேரம். இங்க பெரிய டாக்டர்கிட்ட அம்மாவ காட்டிட்டு வரச் சொல்லி ஊர்ல நம்ம ஃபேமிலி டாக்டர் லெட்டர் கொடுத்தாரு. அதான் ஒரே நாள் வந்துட்டு போய்டலாம்னு வந்தோம். அறுவடை முடிஞ்சு அம்மாவுக்கு உடம்பு தேறியதும் பத்து நாள் வந்து இருக்கோம்…"
என்று சந்தோஷின் தந்தை கூற "சரிங்க மாமா" என்றாள், பவ்யமாக.
"சந்தோஷ் நீ வர வேண்டாம். நாங்க சம்மந்தி வீட்டுக்குப் போய்ட்டு அப்படியே ஏர்போர்ட் போயிடுவோம்" என்று இத்தனை நாட்கள் கழித்து தந்தை அவனிடம் பேச, அதில் உச்சி குளிர்ந்தவன் உடனே ‘சரி’ என்றான்.

அவர்கள் சென்ற பின், 
"உண்மைய சொல்லு அந்த எலி மருந்தை என்ன பண்ண?" என்றான் அவளிடம்.
"அதான் சொன்னேனே…"
"ப்ளீஸ் ஆர்த்தி…"
அவனைப் பின்புறம் அழைத்துச் சென்றவள், "அந்தக் கொட்டாங்குச்சி’ல பாயாசம் இருக்கே அதுல மருந்து கலந்திருக்கேன்… பெருச்சாளி சிக்காமலா போய்டும்…" என்றாள்.
அதைக் கண்ட பின்பு தான் அவனுக்கு உயிரே திரும்பியது. ஆசுவாசத்தில் நின்றிருந்தவனிடம், 
"ஒண்ணே ஒண்ணு மட்டும் ஞாபகத்துல வச்சுக்கோங்க" என்றாள் பீடிகையாய்.
"என்ன? நான் உன்மேல கோபமே படக்கூடாது. அதுதான?"
"இல்லை… கொலையும் செய்வாள் பத்தினி!!"

No comments:

Post a Comment