உலகில் அலுவலகம் செல்லும் அனைவரும் வெறுப்பது ஞாயிறு மாலையை. மறுநாள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணமும், மேலாளரின் முகமும் போதுமான அளவு வருத்தத்தைக் கொடுத்துவிடுகிறது. இதற்கு சந்தோஷ் மட்டும் விதிவிலக்கா என்ன?! வெள்ளிக்கிழமை மாலை முடிந்திருக்க வேண்டிய சில பணிகள் நிறைவடையவில்லை. திங்கள் காலை அலுவலகம் நுழைந்ததும் முதற்கண் அதற்கான காரணங்களை எடுத்துக்கூறி மேலாளரை சமாதானம் செய்ய வேண்டும் என்ற பெருங்கடமை அவன் முன் விஸ்வரூபம் எடுத்து நின்றது. அலுவலகத்தைப் பற்றி யோசித்து யோசித்து இறுதியில் மண்டை காய்ந்து போனவன், சற்று நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள அலுவலக எண்ணங்களை ஒதுக்கிவிட்டு ஆர்த்தி என்ன செய்கிறாள் என்று நோட்டம் விட்டான். அவளோ உணவு மேஜையில் அமர்ந்து வெகு மும்முரமாக ஏதோ எழுதிக்கொண்டிருந்தாள்.
‘இந்த வாரம் நம்மள எப்டிலாம் வறுத்தெடுக்கலாம்னு நோட்ஸ் எடுக்கறாளோ?!’ என்று யோசித்தபடியே எழுந்து அவள் அருகே சென்று பார்க்க, அவளோ வரவு செலவு கணக்குகளை எழுதிக்கொண்டிருந்தாள். அவள் எழுதியவற்றை அமைதியாய் வாசித்தவன் பட்டியலின் இறுதியில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றான்.
“என்ன இது பி.பி.(B.P.) இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்’னு போட்டிருக்க? உனக்கு ப்ரெஷர் இருக்கா?” என்றான், அதிர்ச்சியாய்.
“என்னைப் பார்த்தா பேஷன்டு மாதிரி இருக்கா மிஸ்டர்.சந்தோஷ்?” என்றாள் அவள், எரிச்சலாக.
“சத்தியமா இல்லை. அதான் கேட்கறேன்…”
“பி.பி.(B.P.) னா பியூட்டி பார்லர்னு அர்த்தம்.”
“இது வேறயா?”
“ஏன் நாங்கெல்லாம் பார்லர் போகக்கூடாதா?”
“பெண்களுக்கு புற அழகு தேவை இல்லை. அக அழகு தான் தேவை.”
“இப்ப என்ன சொல்ல வர்றீங்க?”
“எனக்கு பி.பி.(B.P. - Blood pressure) ஏத்திவிட்டுட்டு நீ பி.பி.(B.P. - Beauty parlour) போய்ட்டு வரதால என்ன பலன்?”
“அப்போ, நீங்க கட்டின பொண்டாட்டி கிட்ட ஆம்பலு, தேம்பலுனு பொலம்பறதெல்லாம் பொறுமையா கேட்டுக்கிட்டு, ‘ஓ! மை பிராண நாதா...’னு கண்ண கசக்கிட்டு இருக்க சொல்றீங்களா?”
“நீ கண்ண கசக்க வேண்டாம். என்னை கடுப்பேத்தாம இருக்கலாம்ல?”
“அதுக்கு நீங்க என்னை கல்யாணம் பண்ணாம இருந்திருக்கலாம்ல?”
“ஆமா, சந்தர்ப்ப சூழ்நிலையால கல்யாணம் ஆயிடுச்சு. அதுல எனக்கும் ரொம்ப வருத்தம் தான். உன் வாழ்க்கையை கெடுக்கணும்னு பிளான் பண்ணி நான் செய்யல. என்னை மீறி இதெல்லாம் நடந்துடுச்சு.”
“ஒத்துக்கறேன். சந்தர்ப்ப சூழ்நிலையால கல்யாணம் நடந்ததாவே இருக்கட்டும். அதுக்காக உங்க கோபத்தையும், ஆதங்கத்தையும் என் மேல காண்பிச்சா என்ன அர்த்தம்?”
“அது சராசரி மனுஷனோட இயல்பு. அதுக்கப்புறம் நான் தவறை உணர்ந்துட்டேன். ஆனா, நீ ஒவ்வொரு விஷயமும் பிளான் பண்ணி செய்யற. எப்படி… எப்படி ஒருத்தரால திட்டம் போட்டு அடுத்தவங்களை நோகடிக்க முடியுதுனு தெரியல…”
“அப்படி என்ன நான் திட்டம் போட்டேன்?”
“இதோ இப்படி பேசறியே… இது தான். கல்யாணம் முடிஞ்சதும் ரொம்பப் பணிவா நல்ல பொண்ணாட்டம் இருந்த. அப்புறம் ஒவ்வொரு நாளும் என்னை எப்படியெப்படியோ கடுப்பேத்திட்டே இருக்க. இதுல எது உண்மையான நீ? பணிவா இருந்த அந்த ஆர்த்தியா இல்லை படுத்தி வைக்கற இந்த ஆர்த்தியா?”
“அப்படி இருந்த என்னை இப்படி மாத்தினது நீங்கதான். என் வாழ்க்கையை தொங்கல்ல விட்டீங்கல்ல? நீங்க என்ன அநியாயம் பண்ணாலும் வாய மூடிட்டு இருக்க என்னால முடியாது. என் மனவருத்தத்தை நான் எனக்குத் தெரிஞ்ச மாதிரி வெளிப்படுத்தத்தான் செய்வேன்.”
“சரி, நீ தான் மனவருத்தத்துல இருக்கல்ல?! என் அம்மா, அப்பா, பாட்டிக்கு பாயாசத்துல எலி மருந்து கலக்கற அளவுக்கு உன் மனசுல வன்மம் இருக்குல்ல?! அப்புறம் எதுக்கு ரொம்பப் பாசம் பொங்கற மாதிரி நடிக்கற? போன் பண்ணாலே என் அம்மாவும், பாட்டியும் உன் பெருமை தான் பேசறாங்க. எதுக்காக இந்த வேஷம்? இந்த லட்சணத்துல என் ஆம்பல் பத்தி கிண்டல் வேற. பொண்ணுனா அவளை மாதிரி இருக்கணும். சத்தியமா அவளை விமர்சனம் பண்ண உனக்கு எந்தத் தகுதியும் இல்ல.”
அவள் கண்கள் கலங்கி அவனை முறைத்துக்கொண்டிருக்க,
“என்ன முறைக்கற? புருஷன்னு சொல்லிட்டு நான் என்னைக்காவது தப்பா நடந்திருப்பேனா? இல்லை, என் பார்வை தான் என்னைக்காவது தப்பா இருந்திருக்கா? போனாப்போகுதுனு பார்த்தா வார்த்தைக்கு வார்த்தை கடுப்பேத்தற.”
“போனாப்போகுதுனு இருக்கீங்களா... இவ்வளவு நடந்தும் நான்தான் போனாப்போகுதுனு இங்க இருக்கேன்.”
“இருக்க வேண்டாம். போனாப்போகுதுனு நீ இங்க இருக்க வேண்டாம். நீ தாராளமா உன் வீட்டுக்குப் போகலாம். தாலி கட்டின பாவத்துக்கு என்ன பிராயச்சித்தம் பண்ணணுமோ அதை செஞ்சுடறேன். உன் தயவு எனக்குத் தேவையே இல்லை. நீ தாராளமா போகலாம்.”
விளையாட்டாய் ஆரம்பித்த விவாதம் கடுமையாகிப்போனது. பேசிமுடித்தவன் அறைக்குள் சென்று படுத்துவிட, அவளோ அவன் பேசியது அனைத்தையும் மீண்டும் மீண்டும் எண்ணிப்பார்த்து உணவு மேஜையிலேயே உறங்காமல் கலங்கியிருந்தாள்.
மறுநாள் காலை எழுந்தவனுக்கு முதல் நாள் இரவு நடந்தவை நினைவிற்கு வந்தது. கண்கள் கலங்கியிருந்த அவளது முகம் மனதில் நிழலாடியது. சுருக்கென குற்ற உணர்வுகள் ஊசி போல் பாய்ந்தன. மடமடவென அலுவலகத்திற்கு கிளம்பியவன், உணவு மேஜையில் வந்து அமர்ந்தான். மதிய உணவு பையில் எடுத்துவைக்கப்பட்டு, காலை உணவும் ஹாட்பேக்கில் வைக்கப்பட்டிருந்தது. அருகில் முன்தினம் அவள் வரவு செலவு கணக்கு எழுதிக்கொண்டிருந்த புத்தகமும் இருந்தது. அதில் இத்தனை நாட்களாகச் செய்த செலவு போக சேமித்த பணத்திற்கான கணக்கு குறிப்பிடப்பட்டு, சேமித்த பணமும் வைக்கப்பட்டிருந்தது. கலக்கத்துடன் எழுந்தவன் வீட்டில் அனைத்து இடத்திலும் அவளைத் தேடினான். இறுதியாய் வாயிலுக்கு வந்தவன் அவளது காலணி இல்லாததைக் கண்டான். நெஞ்சில் ஏதோ அடைத்துக்கொண்டு மூச்சுவிட முடியாமல் தவித்தவன், உள்ளே சென்று ஒரு சொம்பு நீர் பருகிவிட்டு, அலுவலகத்திற்கு விரைந்தான்.
அலுவலகப் பணிகளில் பிரயத்தனப்பட்டு கவனம் செலுத்தியும், அவனது மனம் நிம்மதி தொலைத்து தவித்தது. ஆர்த்தியின் மேல் கோபம் கொள்ளாமல் மாறாக வருத்தம் கொண்டான். ஒரு வருட காலத்திற்குப் பின் அவள் பிரிந்து செல்லப்போகிறாள் என்பது அவன் அறிந்ததே. இருப்பினும் அவளது மனதைப் புண்படுத்தியிருக்கக் கூடாது என்று தன் மீதும் வருத்தம் கொண்டான். குழம்பிக்குழம்பி இறுதியில் ஒரு முடிவிற்கு வந்தான். இனி ஆர்தியைப் பற்றிய சிந்தனைகளை விடுத்து ஆம்பலிடம் பேசிட வேண்டும் என்று முடிவு செய்தான். உடனே கைப்பேசி எடுத்து அவளுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினான்.
'அன்புடன் ஆம்பல், நான் உங்களை ஒரு முறை கூட பார்த்ததில்லை. அது எனக்குத் தேவையுமில்லை. உங்களை உளமார விரும்புகிறேன். உங்களின் கைப்பேசி எண்/முகவரி கிடைத்தால், நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன். திருமணம் செய்துகொள்ள விழைகிறேன். எனது கைப்பேசி எண்ணைக் கீழே குறிப்பிட்டுள்ளேன்’
என்று மின்னஞ்சல் ஒன்றை சற்றும் யோசிக்காமல் அனுப்பினான். அனுப்பிய பிறகு, தான் ஏதோ பெரும் பிழை செய்துவிட்டதாக அவனுக்குத் தோன்றியது. தான் திருமணம் ஆனவன் எனும் நிதர்சனம் அவனை அலைக்கழித்தது. இருப்பினும் தான் தனது எதிர்காலத்தைப் பற்றிய ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டிய தருணத்திற்கு வந்துவிட்டதாக எண்ணியவன், அவளது பதிலுக்காகக் காத்திருந்தான்.
அரை மணி நேரம் கழித்து அவளிடமிருந்து வந்த மின்னஞ்சலை அவசர அவசரமாகப் படித்தான்.
‘மன்னிக்கவும்! நான் திருமணம் ஆனவள்' என்று மட்டுமே அதில் எழுதியிருந்தது.
அவனால் அதை நம்ப முடியவில்லை.
'திருமணம் ஆகாதவர் என்று நீங்கள் கூறினீர்களே?! அதெல்லாம் பொய்யா?' என்று மீண்டும் யோசிக்காமல் பதில் அனுப்பினான்.
‘சமீபத்தில் தான் எனது அத்தை மகனோடு எனக்குத் திருமணம் முடிந்தது. திருமண ஏற்பாடுகளில் பிஸியாக இருந்த காரணத்தினால் தான் என்னால் எழுத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.'
'இல்லை. இது முற்றிலும் பொய். நாம் ஒருமுறை சந்தித்தால் நிச்சயம் உங்களுக்கு என்னைப் பிடிக்கும்...' என்று மற்றொரு அபத்தமான மின்னஞ்சலை அனுப்பினான்.
'நானும், எனது மாமாவும் காதலித்து, பெரியோர் சம்மதத்துடன் திருமணம் முடித்துள்ளோம். எனது கவிதைகளுக்கு யார் இன்ஸ்பிரேஷன் என்று ஒரு முறை கேட்டீர்கள், என் மாமா தான் இன்ஸ்பிரேஷன். எனது கவிதைகளுக்கும், கதைகளுக்குமான மூலதனம் என் நெஞ்சில் குடியிருக்கும் என் மாமா தான். தயவு செய்து இனி என்னை தொந்தரவு செய்யாதீர்கள். மின்னஞ்சல் அனுப்பாதீர்கள். Good bye!' என்று அவனது ஆசைக்கும், இத்தனை நாட்களாக மனதில் விழுதாகிய காதலுக்கு அவன் கொண்ட அற்பணிப்புக்கும் முழுவதுமாய் ஒரு முற்றுப்புள்ளி அவள் வைத்துவிட்டாள்.
அவனையும் மீறி அவனது கண்கள் கலங்கியது. உலகிலேயே தன்னைப் போன்ற ஒரு பைத்தியக்காரன் எங்கும் இருக்க முடியாது என்று அவனுக்குத் தோன்றியது. எத்தனை இரவுகள் அவள் நினைவுகளில் கழிந்திருக்கும்! எத்தனை மணித்துளிகள் அவள் எழுத்துக்களில் தொலைந்திருக்கும்! எத்தனை ரணங்கள் அவன் நெஞ்சம் சுமந்திருக்கும்! எத்தனை கனவுகள் அவன் கண்கள் வரைந்திருக்கும்! அத்தனையும் ஒரு நொடியில் குப்பையாகிப்போனது. அவனது காதல், அவனது இதயத்தைத் துளைக்கத் தொடங்கியது. இரத்தம் கசியத் தொடங்கியது. உயிர் உருகத் தொடங்கியது. உணர்வுகள் மரிக்கத் தொடங்கியது.
அவளது பதில்களை வாசித்தான். பலமுறை வாசித்தான். ஏதோ ஒன்று அவனை நம்பவிடாமல் தடுத்தது. உடனே தனது நண்பனைத் தேடி விரைந்தான்.
"என்ன மச்சான் சொல்ற, ஆம்பலோட விலாசத்தைக் கண்டு பிடிக்கறது எவ்வளவு ரிஸ்க் தெரியுமா?"
ஆம்பலின் மின்னஞ்சல்களை வைத்து அவள் எங்கிருந்து அவற்றை அனுப்புகிறாள் எனும் தகவல்களைக் கண்டு பிடித்து கொடுக்குமாறு நண்பனிடம் சந்தோஷ் வேண்ட, அவனோ அது தவறு என்று புரிய வைக்க முயற்சித்திருந்தான்.
"இங்க பாரு மச்சான், என்ன பிரச்சனை வந்தாலும் நான் சமாளிக்கறேன். எனக்கு அவ விலாசம் வேணும்."
"நீ ஐ.டி.ல தான வேலை செய்யற?! உலகத்துல என்ன நடக்குதுன்னு தெரியாதவனா நீ? ஃபேக் ஐடி ல எத்தனை ஃபிராடுங்க சுத்தறாங்கனு உனக்குத் தெரியாதா?"
"இவ நிஜம் மச்சான்."
"லூசு மாதிரி பேசாத. இந்த எழுத்தாளர் யாரா வேணும்னாலும் இருக்கலாம். வயசானவங்களா இருக்கலாம். இல்லை, ஆம்பளையா இருக்கலாம். இல்லை, எங்கோ யாரோ எழுதறது காபி பேஸ்ட் பண்ற ஆளா கூட இருக்கலாம். யாருக்குத் தெரியும்…"
"இல்லை மச்சான் அவ நல்லவ மச்சான்."
"டேய், பசங்கள மடக்கி காசு பிடுங்கற கோஷ்டி நெட்ல சுத்திக்கிட்டு இருக்கு… "
"மச்சான் இவளுக்கு ஃபேஸ்புக், ட்விட்டர்னு எதுவும் இல்லை. வெறும் ப்ளாக் மட்டும் தான் இருக்கு."
"உனக்குத் தெரியுமா? ஏதோ ஒரு பேர்ல ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கறது ஒரு விஷயமா? படிச்ச முட்டாள் மாதிரி, கண்மூடித் தனமா, யாரு எவர்னு தெரியாத ஒருத்திய நம்பி, கட்டின பொண்டாட்டிய மறந்துட்டு, காதல்னு பைத்தியக்காரத்தனமா சுத்தி உன் வாழ்க்கைய வீணடிச்சுக்காத."
"அவ போய்ட்டா மச்சான். அவ சாப்டர் க்ளோஸ்."
"யாரு, உன் மனைவியா?"
"ஆமா…"
"அடப்பாவி, எப்படி டா? இந்த ஆம்பல் கதைய எதும் சொன்னியா?"
"கல்யாணம் முடிஞ்சதுமே சொல்லிட்டேன் மச்சான். ஒரு வருஷம் கழிச்சு விவாகரத்து வாங்கிட்டு அவ போறதா இருந்தது… இப்போ நாலஞ்சு மாசத்துலையே போய்ட்டா... அவ வாழ்க்கைய அவ பார்க்கப் போய்ட்டா. இப்போ என் வாழ்க்கை எனக்கு முக்கியம் மச்சான்…"
"போடா லூசு… உன்னை அப்படியே கொன்னுடலாமான்னு தோணுது… பிரெண்டா போயிட்டியேன்னு பார்க்கறேன்…"
"சரி மச்சான் உன்னால முடியாதுன்னா விட்டுடு. நான் வேற யாராவது கிட்ட ஹெல்ப் கேட்டுக்கறேன்."
"அய்யோ, அப்படி எதும் பண்ணி வச்சுடாத. காசுக்காக உன்னை சிக்கல் மாட்டி விட்டுடுவாங்க… ஒரு ரெண்டு நாள் டைம் கொடு... என் பிரெண்ட் ஒருத்தன் இருக்கான். அவன் கிட்ட கேட்டு சொல்றேன்."
"ரொம்ப தேங்க்ஸ் மச்சான். உனக்கு என்னென்ன விவரம் வேணுமோ சொல்லு, எல்லாம் தரேன். அவ அட்ரஸ் மட்டும் வேணும் மச்சான்…"
"உனக்காக இந்த ரிஸ்க் எடுக்கறேன். திரும்பவும் சொல்றேன் இது மகா தப்பு."
"இல்லை மச்சான். அவ யாருனு தெரிஞ்சுட்டா எல்லாமே சரியாயிடும்" என்றவன், கண்கள் ஈரமாக நின்றான்.
நண்பனிடமிருந்து பதில் வேண்டி அடுத்த இரு தினங்கள் தவித்திருந்தான். வீட்டிற்குச் சென்றால், ஏதோ ஒரு இம்சை அவனைத் துரத்தியது. அலுவலகமும் நரமாகிப்போனது. காத்திருப்பு எனும் கொடும் நஞ்சினை வேறு வழியின்றி விழுங்கினான்.
"மச்சான்…" என்று அழைத்தபடி சந்தோஷிடம் வந்தான் அவனது நண்பன்.
"அட்ரஸ் கிடைச்சுருச்சா?" என்று ஆர்வமானான், சந்தோஷ்.
"இன்னும் பத்து நிமிஷத்துல என் பிரெண்ட் மெயில் அனுப்பறேன்னு சொன்னான் டா..." என்றவன், அவன் அருகே அமர்ந்துகொண்டு மின்னஞ்சலுக்காகக் காத்திருந்தான். அடுத்த பத்து நிமிடங்களில் அவர்கள் எதிர்பார்த்த மின்னஞ்சல் வந்து சேர்ந்தது. அதனைப் பிரித்துப் பார்த்த சந்தோஷிற்கு அதிர்ச்சியில் உயிர் உறைந்தது.
No comments:
Post a Comment