மூன்று நாட்களாகப் பாட்டியின் அருகிலேயே இருந்தான், சந்தோஷ்.
“சந்தோஷ், கொஞ்ச நேரம் வீட்டுக்குப் போயிட்டு வா… நானும், அப்பாவும் இங்க இருக்கோம்…”
அம்மா வற்புறுத்த, “இல்லை அம்மா, என்னால பாட்டிய விட்டுட்டு எங்கேயும் போக முடியாது…” என்று விடாப்பிடியாக இருந்துவிட்டான். மூன்றாம் நாளின் முடிவில் பாட்டியின் உடல்நிலை சற்றே தேறியிருக்க, சந்தோஷிற்கும் அவனது பெற்றோருக்கும் நிம்மதி துளிர்த்தது. இறுதிப் பரிசோதனைகளை சரிபார்த்த மருத்துவர், “அவங்களுக்கு வந்திருக்கறது மைல்டு அட்டாக் தான். இருந்தாலும், அவங்க உடல் நிலை பலவீனமா இருக்கறதால ரொம்பவே கவனமா பார்த்துக்கணும். மனம் வருந்தும்படியா எதுவும் சொல்லாதீங்க…” என்ற எச்சரிக்கையோடு அவர் வீடு திரும்பிட ஒப்புதல் தந்தார்.
வீடு திரும்பியதும் பாட்டியை விட்டுப் பிரிந்து ஊருக்குச் செல்ல விருப்பமில்லாமல் வீட்டில் இருந்தபடியே தனது மடிக்கணினியில் அலுவலகப் பணிகளைத் தொடர்ந்தான்.
ஏறத்தாழ ஒரு வாரம் ஆகிவிட்டிருந்த நிலையில், ஓர் இரவு சந்தோஷின் பெற்றோர் அவனிடம் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து, பாட்டி அறியா வண்ணம் அவனது அறைக்குச் சென்றனர்.
“பேசணும்னு சொன்னீங்க… ரெண்டு பேரும் எதுவும் சொல்லாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?”
தன் முன்னே மௌனமாய் அமர்ந்திருந்த பெற்றோரிடம் வினவினான்.
“என் அம்மாவுக்கு எதனால இப்படி ஆச்சுன்னு உனக்குத் தெரியுமா, சந்தோஷ்?”
கோபமும், வருத்தமுமாய் வினவினார், சந்தோஷின் தந்தை.
அவரது கேள்வியில் சற்றே பயம் கொண்டவன்,
“என்ன அப்பா சொல்றீங்க?” என்றான், குழப்பமாய்.
“நீ ஏன் சந்தோஷ் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல மாட்டேங்கற?”
அம்மாவும் தனது வருத்தத்தினைத் தெரிவித்தாள்.
“உனக்கு இருபத்தொன்பது வயசாகுது. நல்ல வேலை, கை நிறைய சம்பளம், காசு பணத்துக்குப் பஞ்சமில்லை. நம்ம வீட்ல வசதிக்கு குறைவில்லை. பலர் விரும்பி பெண் தர ஆசைப்படறாங்க. ஆனா நீ விருப்பம் இல்லனு சொல்லி தள்ளிப்போட்டுட்டே இருக்க. அதை நினைச்சே பாட்டிக்கு ரொம்ப கவலை. நீ ஏதோ மனசுல நினைச்சு குழம்பியிருக்கியோனு புலம்பிட்டே இருந்தாங்க. கல்யாணப் பேச்சு எடுக்கும்போதெல்லாம் நீ என்கிட்ட கோபப்படுறத பார்த்து அவங்க எத்தனை நாள் வருத்தப்பட்டிருக்காங்க தெரியுமா? உன் மனசுல என்ன இருக்குனு தயவு செஞ்சு சொல்லுப்பா…”
கோபம் கொண்ட அவனது அன்னை ஒரு கட்டத்தில் கண்கள் கலங்கினாள்.
தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தவன், ஆழப்பெருமூச்சு ஒன்றினை விடுத்து, தனது மனதில் உள்ளவற்றைக் கூறிவிடுவது என்று முடிவு கொண்டான்.
“அம்மா, நான்… நான் ஒரு பொண்ணை…”
கூறி முடிக்குமுன்னே அவன் கூற வந்ததை அவனது பெற்றோர் புரிந்துகொண்டனர் என்பதனை அவர்களின் வெளுப்பேறிய முகமே உரைத்தது.
“என்னப்பா சொல்ற?”
முதலில் மௌனம் உடைத்தாள் அவனது அன்னை.
“அம்மா… நான் செய்யக்கூடாத தப்பை ஒன்னும் செய்யலையே?!”
“ஏன்பா இத்தனை நாளா எங்ககிட்ட சொல்லல? எத்தனை முறை இதைப்பத்தி கேட்டிருப்பேன்?”
“அது… நானே ஒரு தெளிவான முடிவுல இல்லாத போது என்னனு சொல்ல…”
“யாரு அந்தப் பொண்ணு?”
“அவ ஒரு எழுத்தாளர். கதை, கவிதைனு நிறைய எழுதியிருக்கா. அவளுடைய எழுத்தை வாசிக்க ஆரம்பிச்ச பிறகு தான் எங்களுக்குள்ள அறிமுகம் ஆச்சு. எங்களோட நட்பு இன்னைக்கு புரிதலோடு ஒரு அன்பா மலர்ந்திருக்கு.”
“அதெல்லாம் இருக்கட்டும்… அவ அம்மா அப்பா யாரு? என்ன பண்றாங்க? எந்த ஊர்? எல்லா விவரமும் சொல்லுப்பா…”
அம்மா மட்டுமே கேள்விக்கணைகளைத் தொடுத்திருந்தாள். அப்பாவின் விருப்பமின்மை அவரது முகத்திலேயே பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.
“அம்மா… எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்க. நான் எல்லா விவரமும் கேட்டுச் சொல்றேன்…”
“என்ன? எந்த விவரமும் தெரியாம அப்படி என்னப்பா பழக்கம்?”
“அம்மா, நாங்க ரெண்டு பேரும் வெறும் ஈ-மெயில்ல தான் பேசியிருக்கோம்…”
“ஓ! இந்தக் காலத்து இன்டர்நெட் காதலா?”
அப்பாவின் கேள்வியில் புதைந்திருந்த பரிகாசம் அவனுக்கு விளங்கியது.
“அந்தப் பொண்ணோட நிஜப் பெயர் என்னனு தெரியுமா? அந்தப் பொண்ணு கருப்பா, சிவப்பா? இல்லை நெட்டையா குட்டையான்னு தெரியுமா?”
அவன் பதில் கூறாது தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தான்.
“எதுவுமே தெரியாம எப்படி உங்களுக்குள்ள காதல் வந்துச்சு?”
மற்றொரு பரிகாசம் அப்பாவிடமிருந்து, வெறுப்பு சற்று தூக்கலாக.
“அப்பா, இன்னும் நான் என் மனசுல உள்ளதை அவகிட்ட சொல்லல… ஆனா அவ விருப்பமும் இதுதான்னு எனக்குத் தெரியும்…”
துணிவைத் துணைகொண்டு தீர்க்கமாகக் கூறிமுடித்தான்.
“ஓ! காவியக் காதலா?”
அவனது பதிலுக்குக் காத்திராமல் சுவற்றினை நோக்கி பேசத்தொடங்கினார், அவனது தந்தை.
“என் அப்பா, நான் நாலு வயசு புள்ளையா இருந்தபோது என்னையும், என் அம்மாவையும் தெருவுல விட்டுட்டாரு. என் அப்பாவோட உறவுக்காரங்க யாரும் உதவல. பிறந்த ஊருக்குப் போய்டலாம்னு என் எம்மா இங்க திரும்பி வந்தாங்க. அப்பா, அம்மா இல்லாம அண்ணன், அண்ணி தயவுல வளர்ந்து கல்யாணம் பண்ணவங்க திரும்பவும் அவங்க கிட்டயே அடைக்கலம் தேடிப்போனாங்க. ஆனா அவரும் ஏத்துக்க மறுத்துட்டாரு. என்னை வச்சுக்கிட்டு தனியா காட்டுலையும், மேட்டுலையும் வேலை செஞ்சு, வாயக்கட்டி, வயத்தக்கட்டி என்னை ஆளாக்கினாங்க. நான் டிப்ளமோ முடிச்சு பத்து வருஷம் துபாய்ல சம்பாதிச்சப் பணத்தை வச்சு இங்க நிலம் வாங்கிப்போட்டு விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். தூக்கம், சாப்பாடு எல்லாம் மறந்து நானும், என் அம்மாவும் உழைச்சோம். என் அம்மா தான் உன் அம்மாவை எனக்குக் கட்டிவச்சாங்க. அவளுக்கும் இன்னொரு அம்மாவா இருக்காங்க. இப்போ நீ அனுபவிக்கற பகட்டு எல்லாம் என் அம்மாவோட உழைப்பு. நீ வியர்க்கக்கூடாதுனு ஓடவிட்டிருக்கற ஏ.சி. என் அம்மாவோட வியர்வை. இதெல்லாம் உனக்குத் தெரிஞ்ச கதைதான். இருந்தாலும் திரும்பவும் நான் உனக்கு ஞாபகப்படுத்தறேன். எனக்கு விவரம் தெரிஞ்சு என் அம்மா வாய் திறந்து இது வேணும், அது வேணும்னு என்கிட்ட கேட்டதே இல்லை. முதல் முறையா நேத்து என்கிட்டே உன்னோட கல்யாணத்தைப் பார்க்க விரும்பறதா சொன்னாங்க. தனக்கு ஏதோ ஆயிடுமோன்னு பயம் அவங்களுக்கு. எனக்கும் தான். அவங்க என்கிட்ட முதலும் கடைசியுமா கேட்கற விஷயத்தை நான் இல்லனு சொல்லமாட்டேன். சின்ன வயசுல, இந்த ஊருல என் அம்மாவுக்கு துணையா இருந்து உதவி செஞ்ச அவங்க ஸ்நேகிதியோட பேத்தியை உனக்கு கட்டி வைக்கணும்னு ஆசைப்படறாங்க. பொண்ணோட அப்பா எனக்கு நல்ல பழக்கம். நல்ல குடும்பம். வீட்டுக்கு ஒரே பொண்ணு. சென்னைல தான் இருக்காங்க. நாளைக்கு காலைல நானும் உன் அம்மாவும் சென்னைக்குப் போய் அவங்ககிட்ட பேசிட்டு வரப்போறோம். கொஞ்ச நாளைக்கு நீ இங்கயே இரு. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்துல உனக்குக் கல்யாணம். இன்டர்நெட்ல காதலிக்க நீ ஒன்னும் விடலைப்பய இல்லை. ஒழுங்கா பொறுப்பா நடந்துக்கோ..” என்று காரசாரமாக பேசியவர், விருட்டென அறையை விட்டு வெளியேறினார்.
மனதில் குடியிருப்பவளை எண்ணி இத்தனை நாட்களாக மனமகிழ்ச்சியில் தூக்கம் இழந்தவனுக்கு இன்று மனச்சோர்வில் தூக்கம் தூரம் ஆனது.
பிரிவின் முடிவில் காத்திருப்பது
மரணம் மட்டுமே!
உயிரைத் துறந்தால்
ஒரு முறை மரணம்
இல்லையெனின்
தினம் தினம் மரணம்...
அவளது கவிதையை அவனது மனம் நினைவூட்டியது. இக்கவிதையை சாதாரணமாய்க் கடந்து சென்றவனுக்கு இன்று அவனது வலி அதன் அர்த்தத்தை உணர்த்தியது.
அவனது பாட்டியின் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருப்பவன் தான். தந்தை அவனிடம் கூறியிருந்த பழங்கதைகளை அவ்வப்போது நினைத்துப் பார்த்து பாட்டியை எண்ணி பெருமைக் கொள்பவன் தான். தந்தையின் வார்த்தையே தாரக மந்திரம் என்றிருப்பவன் தான். அவர் கூறிய கல்லூரியில் படிப்பு, அவர் கூறிய நகரத்தில் பணி என்று அவனது அனைத்திலும் அவரின் சொல்லே முடிவாக இருந்தது. ஆனால், காதல் அனைத்து கட்டுக்கோப்புகளையும் நொடியில் கட்டவிழ்த்து விடுகின்றது. அது கொடுத்த குருட்டு தைரியத்தில் அவனது மனதின் எண்ணங்களைத் துல்லியமாய் அவன் கொட்டித்தீர்த்தாலும், நினைத்ததை சாதித்துக்காட்டும் துணிவு பிறக்குமா என்பது இவன் விஷயத்தில் கேள்விக்குறியே. ஏனெனில், அவளை நேசிக்கும் அதே இதயம் அவனது குடும்பத்தையும் நேசிக்கிறது.
மறுநாள் தாயும், தந்தையும் பெண்வீட்டாரினை சந்திக்கச் சென்றுவிட, நிம்மதியின்றி தவித்திருந்தான் சந்தோஷ். அவன் சுதந்திரமாகச் சுற்றித்திரிந்த ஊரும், வீடுமே கடுங்காவல் போடப்பட்ட அரணாகத் தோன்றியது. காலையில் அப்பா கிளம்பும் முன் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் கோபத்தினையும், கண்டிப்பையும் கண்களால் உமிழ்ந்துவிட்டுச் சென்றார். அம்மாவிற்குத் தெரிந்ததெல்லாம் இவனை சமரசம் செய்வது மட்டுமே. அப்பாவின் செய்கையில் எவ்விதக் குறையும் அவளது கண்களுக்குத் தட்டுப்படுவதில்லை. நிதானித்து, சிந்தித்து ஆலோசிப்பவர் பாட்டி மட்டுமே. அவரிடம் சரணாகதி அடைந்துவிட பாட்டியின் அறைக்குள் நுழைந்தான்.
“வா சந்தோஷ்!”
பாட்டியின் பொலிவிழந்த முகமும், வலுவிழந்த தேகமும் அவனது உள்ளத்தை நோகடித்தன.
“பாட்டி…”
அவரின் அருகே சென்று அமர்ந்துகொண்டான். சிறு வயதில் அப்பாவிடம் பூசை வாங்கும் நேரங்களில் பாட்டியின் மடியே அவனுக்குத் தஞ்சம். கனிவான குரலில் அவர் சொல்லும் அறிவுரைகளையும், சமாதானங்களையும் அமைதியாகக் கேட்டுக்கொள்வான்.
"அப்பா உன் கல்யாணத்தைப் பத்தி பேசினாங்களா சந்தோஷ்?"
"ஆமா…" என்றவனின் குரல் அடைத்துக்கொண்டு, கண்கள் ஈரம் கொண்டன. உடனே தன்னை சுதாரித்துக்கொண்டவன், பாட்டி அறியாவண்ணம் தன்னை சமன் செய்துகொண்டான்.
"பொண்ணு நல்ல அழகு. டிகிரி வாங்கியிருக்கா. உனக்கு நல்ல பொருத்தமா இருப்பா. அவளைப் பார்த்ததும் எனக்குப் பிடிச்சுப்போச்சு.”
பாட்டியின் முகத்தில் பூரிப்பினைக் கண்டவனுக்கு அழுவதா, சிரிப்பதா என்று புரியவில்லை.
“கல்யாணத்தைப் பொறுமையா நடத்தலாம்னு சொன்னேன்…”
அவர் கூறியதைக் கேட்டு சிறு நம்பிக்கை தலைத் தூக்கியது சந்தோஷிற்கு. பாட்டி கூறினால் அப்பா தட்டமாட்டார் என்பது அவன் அறிந்ததே.
“ஆனா, என் பேச்ச கேட்க மாட்டேன்னு சொல்லிட்டான் சந்தோஷ்…”
அவனுக்குத் துளிர்த்த நம்பிக்கை துவண்டு போனது.
“பத்திரிக்கை அடிச்சு, நிச்சயத் தாம்பூலம் மாத்தி, நாலு அஞ்சு மாசம் கழிச்சு பெரிய மண்டபம் எடுத்து சீரும் சிறப்புமா உனக்குக் கல்யாணம் செய்யணும்னு ஆசை. ஆனா, என்னை நினைச்சு இப்படி அவசர அவசரமா கல்யாண ஏற்பாடு பண்றான். நான் இருந்தா என்ன இல்லேனா என்ன? உனக்கு செய்ய வேண்டியத ஒழுங்கா செய்ய வேண்டாமா?”
“பாட்டி…”
இத்தனை நேரமும் அமைதி காத்தவன், வாய் மலர்ந்தான்.
“பாட்டி, எனக்கு நீங்க தான் முக்கியம். வேற எதுவும் வேண்டாம்.”
பாட்டியின் கைகளை அவன் மெல்லமாய்ப் பற்றிக்கொண்டான்.
“நீங்க உடல் தேறி வரணும் பாட்டி. எனக்குப் பிடிச்ச பால்கோவா செஞ்சு தரணும். என்னை வளர்த்தது போல என் பிள்ளையையும் வளர்க்கணும்…”
அவன் கூறியதைக் கேட்டு கண்கள் கலங்கிவிட்டார் அவனது பாட்டி.
பாட்டியை சமாதானம் செய்தவன், அவரை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு எழுந்து செல்ல, கதவு அருகே சென்றவனை மீண்டும் அழைத்தார் அவனது பாட்டி.
“சந்தோஷ், உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் தானே? நாங்க தான் ரொம்ப சந்தோதோஷமா இருக்கோம். மாப்பிள்ளை நீ முகத்துல செண்டிப்பே இல்லாம இருக்கியே?”
“அது ஒண்ணுமில்ல பாட்டி. நைட்டு ரொம்ப நேரம் கண் முழிச்சு ஆபிஸ் வேலை பார்த்தேன். அதான் கொஞ்சம் அசதியா இருக்கு… நீங்க தூங்குங்க...”
பாட்டியிடம் உண்மையைக் கூறவேண்டும் என்ற எண்ணத்தோடு சென்றவன், அவரின் நிலையைக் கண்டு நா எழாமல் தனது அறைக்குத் திரும்பினான். அறைக்குத் திருப்பியவன், கதவினை தாழிட்டுக்கொண்டு இரகசியமாய் அழுது தீர்த்தான். முகமறியா தேவதையின் மாயப்பிடிக்குள் சிக்கிக்கொண்டவன் அவளை நெருங்கவும் முடியாமல், நடப்பவற்றிலிருந்து தப்பிக்கவும் முடியாமல் தீயிலிட்டப் புழுவாய்த் துடித்தான்.
No comments:
Post a Comment