Monday, 11 May 2020

அன்புடன் ஆம்பல் - 4




பெண்ணவளின் கண்களில் நீர் பெருக, பாலினை ஏந்திய கைகள் நீட்டியபடியே சிலையாகிப்போனாள். அவளது கண்ணீர்த்துளிகள் ஒவ்வொன்றும் புதுப் பொன் தாலியை நனைத்துக்கொண்டிருந்தன. அவளது பரிதவிப்பினைக் காண முடியாமல் தனது முகத்தினைத் திருப்பிக்கொண்டான். 
“எனக்கு விருப்பம் இல்லனு நான் சொல்லியும் என்னைக் கட்டாயப்படுத்தி இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சாங்க. அவங்க சொன்ன காரணம் - ‘என் பாட்டி’. கல்யாணத்துக்கு முன்னாடி உன்னோட பேசிட முடிஞ்சா உண்மையை சொல்லிடலாம்னு நெனச்சேன். ஆனா அந்த சந்தர்ப்பமும் இல்லாம பண்ணிட்டாரு என் அப்பா. தாலி கட்டிட்டா எல்லாத்தையும் மறந்து மனச மாத்திட்டு வாழ்ந்துட முடியுமா? இது ஏன் யாருக்குமே புரியலனு தெரியல…”
சில நிமிடங்கள் அவன் அமைதி காக்க, அவளும் மௌனித்திருந்தாள். 

அதிர்ச்சியிலிருந்து மீண்டு, தன்னை மெல்ல சமன் செய்துகொண்டவள், 
“உங்களுக்கு பிடிக்கற மாதிரி நான்…” என்று அவள் பேசத்தொடங்கியதும் சினம் பொங்க அவளை நோக்கியவன், “நீ எப்படி நடந்துக்கிட்டாலும் எனக்கு உன்னைப் பிடிக்காது. என் மனசுல வேற ஒருத்தி இருக்கா” என்று அவள் தொடங்கிய வாக்கியத்தை இவன் நிறைவு செய்தான்.        
‘சரி’ என்பது போல் தலையசைத்தவள் அறையின் மற்றொரு மூலையில் சென்று அமர்ந்துகொண்டாள். ஒரு சாராசரிப் பெண்ணின் இயல்பான கல்யாணக் கனவுகள் அனைத்தும் அந்த நான்கு சுவர்களின் உள்ளே வர்ணம் தொலைத்தன. இருபத்து நான்கு மணி நேரத்தில், ‘செல்வி’, ‘திருமதி’ ஆகிய தருணத்தில், அவளது எதிர்காலம் கேள்விக்குறியாகிப்போனது. 

இவளைப் பற்றிய சிந்தனைகள் ஏதுமின்றி அவன் தனது மனக் குழப்பத்தில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தான். அவனை நோக்கினாள் அவள். அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள் அவள். ஏதோ ஒரு உந்துதலில் திரும்பியவன், அறையின் மூலையில் அமர்ந்திருந்தவளின் அருகே வந்தான். 
“நீ போய் படுத்துக்கோ…” என்றவன், “உன் பெயர் என்ன?” என்றான். 
பெயரைக் கூட தெரிந்துகொள்ளாமல் தாலி கட்டியவனைக் கண்டு சிரித்துக்கொண்டவள், “என் பெயர் ஆர்த்தி” என்றுவிட்டு, கட்டிலின் ஒரு புறத்தில் படுத்துக்கொண்டாள். 

கட்டிலில் அவள் உறங்கிக்கொண்டிருக்க, நாற்காலியில் அமர்ந்தபடி தனது கைப்பேசியில் ஆம்பலுக்கு இத்தனை நாட்களாக அவன் அனுப்பிய மின்னஞ்சல்களையும், அவளது பதில்களையும் வாசித்துக்கொண்டிருந்தான்.

“காதல் கவிதைகள் அனைத்தும் மிக அழகு… நீங்கள் காதலித்திருக்கிறீர்களா? இல்லை, காதலித்துக்கொண்டு இருக்கிறீர்களா?”
அவனது மின்னஞ்சல்கள் பெரும்பான்மையாக கேள்விகளையே தாங்கியிருந்தன.
“காதல் என்பது குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட மனிதர்களோடு பிறப்பதல்ல. என்னைப் பொறுத்தவரை அனைத்தும் காதலே. ‘எனக்குப் பிடிக்கும்’ என்ற சொற்றொடர் என் மொழியில், ‘காதலிக்கிறேன்’ என்றாகிப்போகிறது. அவ்வளவு தான். மிகவும் பிடித்த மலர் செடியிலிருந்து பறிக்கப்படுவதில்லை. அது அப்படியே ரசிக்கப்படுகிறது. உதிர்ந்து போனதும் மறக்கப்படுகிறது. எனது காதலானது, இறக்கும் தருவாயில் இருக்கும் அம்மலரைப் பறித்து புத்தகத்துள் பொத்தி வைக்கச் சொல்கிறது. அவ்வப்போது திருப்பித் திருப்பித் பதப்படுத்தப்பட்ட அம்மலரை எடுத்துப் பார்க்கச் சொல்கிறது. அதன் மாறிவிட்ட வாசனையைக் கூட முகர்ந்து பார்த்து மகிழச் சொல்கிறது என் காதல்!!”
“இப்படியும் கூட காதலிக்க முடியுமா?”
“திட்டமிடாமல், எதிர்பார்ப்பு நுழையாமல் காதலித்தால் நிச்சயம் முடியும்.”

‘இவளது வார்த்தைகள் அனைத்திற்கும் நான் ரசிகன். வார்த்தைகளைத் தேடிப்பிடித்துக் கோர்த்துத் தொடுக்கிறாள், வாக்கியத்தை!!’ என்று கண்கள் கண்டிராத காதலியின் மீது மேலும் காதல் பொங்கியது, அவனுக்கு.

கைப்பேசியை அணைத்து விட்டு நாற்காலியிலேயே தலை சாய்த்து அவன் அமர, கட்டிலில் உறங்கிக்கொண்டிருப்பவள் அவன் கண்களில் தென்பட்டாள். ‘உங்களுக்கு பிடிக்கற மாதிரி நான்…’ என்று அவள் கூறவந்தது அவனது நினைவிற்கு வந்தது. உடன் அவள் கண்கள் குளமாக நின்றிருந்த கோலமும் அவனது நினைவிற்கு வந்தது. அவள் மீது அவனது மனம் பெரும் பச்சாதாபம் கொண்டது. இறுதி நொடி வரை தான் போராடியிருக்க வேண்டும் என்று அவனது மனசாட்சி உரக்கக் கத்தியது. தனது எதிர்காலம் ஆம்பலுடனானது என்று முடிவு செய்துவிட்ட அவன் மனதில், ஆர்த்திக்கும் நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்றொரு பொறுப்புணர்வு எட்டிப் பார்த்தது. சூழ்நிலைக் கைதியாக அவன் நின்றிருக்க, அவளைத் துணைக் கைதியாக்கி வேடிக்கை பார்த்திருந்தது, காலம். 

மறுநாள் விடியலில் அவன் நாற்காலியிலேயே உறங்கிப்போயிருக்க, துயிலெழுந்தவள் அவனை வெறித்தபடியே அமர்ந்திருந்தாள். தனது பொன் தாலியினைக் கையிலேந்தி பார்த்திருந்தாள். இந்த மஞ்சள் கயிறு எத்தனை வாழ்க்கைகளைக் கட்டிப்போட்டு விடுகிறது. அதை அணிவித்தவன் மீதும் அணிந்துகொண்டவள் மீதும் உடனே இச்சமூகம் எத்தனை பொறுப்புகளைத் தோளில் ஏற்றிவிடுகிறது! நண்பர்களுடனான சிறுபிள்ளை பிணக்கங்களைக் கூட தனது தாயிடம் கூறுபவளுக்கு முன்தினம் அவன் கூறியதை யாரோடு பகிர்ந்துக்கொள்வது என்றொரு கவலை பிறந்தது. அவனும் அவளது வாழ்வில் முக்கியப்பட்டவனாகப் போய்விட்டான். யாருடனும் பகிர வேண்டாம் என்றொரு எண்ணம் மேலெழுந்தது. முகத்தினை அழுந்தத் துடைத்தவள், எழுந்து, குளித்து முடித்து அவனது பாட்டியின் முன் சென்று நின்றாள்.

“வா மா” என்று அவளை அழைத்து தன் அருகே அமர்த்திக்கொண்டவர், அவளது முகம் வருடி உச்சியில் முத்தமிட்டார்.
“நீ அப்படியே உன் பாட்டியை உரிச்சு வச்சிருக்க… இப்போ அவங்க உயிரோட இருந்திருந்தா, உன்னைப் பார்த்து உச்சி குளிர்ந்திருப்பாங்க… ஒருமுறை என் பிள்ளைக்கு ரொம்ப உடம்பு முடியாம போய்டுச்சு. ஆஸ்பத்திரியில சேர்த்தேன். அவனை காப்பாத்தறது கஷ்டம்னு டாக்டர் கைய விரிச்சுட்டாங்க. அப்போ உன் பாட்டி தான் தன் கைல இருந்த தங்க வளையல வித்து செலவு பண்ணி பெரிய பெரிய டாக்டர் கிட்ட வைத்தியம் பார்த்து என் புள்ளைய காப்பாத்தினாங்க. அதுமட்டுமில்ல, இன்னும் எவ்வளவோ எங்களுக்கு உதவி செஞ்சிருக்காங்க. அவங்க என் குலசாமி. அவங்க பேத்தி நீ, இந்த வீட்டு மருமக இல்லை, மகாராணி!!” என்று கண்கள் கலங்கக் கூறி முடித்தவர், தனது கைகளில் இருந்த வைர வளையல்களை அவளுக்கு அணிவித்தார். 

பாட்டியிடம் பேசிவிட்டு அடுக்களைக்கு அவள் செல்ல, அங்கே சந்தோஷின் அன்னை சுடச்சுட காபியோடு மருமகளை வரவேற்றாள். 
“எதுக்கு அத்தை நீங்க…”
அவள் தயங்க,
“நான் செய்யாம வேற யாரு செய்வா?!” என்று அவளும் பெருமிதம் கொள்ள, 
“அம்மா, காபி” என்று குரல் கொடுத்துக்கொண்டே அடுக்களைக்குள் நுழைந்தான், சந்தோஷ்.
ஆர்த்தியைக் கண்டதும் மறுநொடியே அவ்விடம் விட்டுச் சென்றான். 
அத்தை கலந்துகொடுத்த காபியை எடுத்துக்கொண்டு அவனிடம் சென்று நின்றாள். அவள் காபியை நீட்ட, “வச்சுட்டு போ!” என்றான் அவளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் இங்கிதம் மறந்து. ‘காபியைக் கூட வாங்கிக்க முடியாத அளவுக்கு என் மேல ஏன் இவ்வளவு வெறுப்பு…’ என்று மனம் நொந்தவள், அமைதியாய் அவன் அருகில் வைத்துவிட்டுச் சென்றாள். அவனது ஒதுக்கத்தை இந்த ஒரு சம்பவத்திலேயே உணர்ந்துகொண்டவள், அவினிடமிருந்து முடிந்த வரை விலகியிருக்கக் கற்றுக்கொண்டாள். 

திருமணம் முடிந்து மூன்றாம் நாள் ஆர்த்தியை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுவர அம்மா கூற, அவளுக்கு முதல் புடவை ஒன்று வாங்கிக்கொடுக்கும்படி பாட்டியும் கூற, அவர்கள் கூறியது உடனே நிறைவேற வேண்டும் என்பது போல் தந்தை முறைத்துக்கொண்டு நிற்க, வேறு வழியின்றி அவளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றான்.

முதலில் கோவிலுக்கு அழைத்துச்சென்றவன், வழி நெடுகிலும் ஓர் வார்த்தை கூட கதைக்காமல் அமைதியாய் இருந்தான். கோவிலுக்குச் சென்று திரும்பும் வழியில் கடைவீதிக் கடைகளைப் பார்த்ததுமே அவளுக்குப் புடவை வாங்கித்தரும்படி பாட்டி கூறியது அவனது நினைவிற்கு வந்தது. அருகில் இருந்த சிறு ஜவுளிக் கடைக்குள் நுழைந்தான். விற்பனையாளர் காண்பித்த புடவைகளில் மஞ்சள் நிறப் புடவையை அவன் கையிலெடுக்க, அவன் தேர்வு செய்வதற்கு முன்பே அவள் பச்சை நிறப் புடவையை கையில் எடுத்து வைத்திருந்தாள்.
“இதை பில் போடுங்க…” என்று தான் தேர்வு செய்த மஞ்சள் புடவையை விற்பனையாளரிடம் அவன் நீட்ட,
“எனக்கு… பச்சை கலர் தான் பிடிக்கும்…” என்றாள் பணிவான குரலில், அவனிடம்.
“ரெண்டு புடவைக்கும் பில் போட்டுடலாமா சார்?” என்று விற்பனையாளர் கேட்க,
“இந்தப் புடவைக்கு மட்டும் பில் போடறீங்களா இல்லை வேற கடைக்கு போகட்டுமா?” என்றான் கூராக.
“வேண்டாம் சார், இதுக்கு மட்டும் பில் போட்டுடறேன்” என்று விற்பனையாளர் மஞ்சள் புடவை எடுத்துக்கொண்டு பறக்க, தனது கையிலிருந்த பச்சைப் புடவையைக் கீழே வைத்தாள், கண்கள் ஈரமாக.    

வீடு திரும்பும் வழியில் கூட அவளிடம் ஓர் வார்த்தை பேசவில்லை. அவளுக்கும் பேசத் தோணவில்லை. அவள் கையிலிருந்த மஞ்சள் புடவையின் கனம் மிக அதிகமாக இருப்பது போல் உணர்ந்தாள். அவளது உணர்வுகளுக்கு சிறிதளவு கூட மதிப்பு அளிக்காத அவன் மீதான இவளது ‘கணவன்’ எனும் அன்பு குறையத் தொடங்கியது.

வீடு திரும்பியதும் சந்தோஷின் பாட்டிக்கும், அம்மாவிற்கும் புடவையைப் பிரித்துக்காட்டியவள், பல புடவைகளை அலசி ஆராய்ந்து இதனை சந்தோஷ் தேர்ந்தெடுத்ததாகக் கூறினாள். ‘எதற்காக இந்தப் பொய் உரைத்தேன்?’ என்று அன்றிரவு அவள் தூக்கமின்றி யோசித்திருந்தாள். ‘அமைதியாகக் காட்டிவிட்டு வந்திருக்கலாமே’ என்றும் யோசித்திருந்தாள். கணவன் தவறே செய்த போதிலும் அதனை மூடி மறைத்து பெருமை பேசும் சராசரி மனைவியாக தான் மாறிவிட்டதை உணர்ந்தாள். தன்னை ஒரு பொருட்டாக நினைக்காதவனின் பெருமையைப் பற்றி கவலைப்படும் தன்னை நினைந்து தானே சிரித்துக்கொண்டாள்.

அடுத்த சில நாட்களில், சந்தோஷும், ஆர்த்தியும் சென்னை திரும்புவதற்கான ஏற்பாடுகள் ஆயத்தம் ஆகின. மாமியார் கட்டிக்கொடுத்தப் பண்டங்களையும், பொடி வகைகளையும் பைகளில் எடுத்துக்கொண்டு, அவர்களை வழியனுப்ப ரயில் நிலையத்திற்கு உடன் வந்திருந்த மாமியார் மாமனாரை நோக்கி கண்ணீர்மல்க கையசைத்தபடி விடைபெற்றுக்கொண்டாள்.

‘சென்னைல சந்தோஷ் வேலைக்குச் சேர்ந்த கொஞ்ச நாள்லயே மாமா அவனுக்காக ஒரு தனி வீடு வாங்கிட்டாங்க. தஞ்சாவூர்ல தனி வீட்ல இருந்துட்டு அங்க இந்த பிளாட்ஸ் எனக்குப் பிடிக்கலனு சொல்லிட்டான். ஆறு மாசம் அவன் கூடவே தங்கி அலைஞ்சு திரிஞ்சு அந்த வீட்டை மாமா வாங்கினாங்க. இவ்வளவு நாள் ஒரு கட்டில், மெத்தை, சில பாத்திரம் பண்டம் தவிர வேற எந்தப் பொருளும் இல்லாம இருந்தது. இப்பத்தான் கல்யாணம் முடிஞ்சுடுச்சே. மாமா உங்களுக்குத் தேவையான எல்லா பொருளும் வாங்கி வைக்க ஏற்பாடு பண்ணிட்டாங்க.’ 
சென்னையில் அவனது வீட்டிற்குள் நுழைந்ததும் சில தினங்களுக்கு முன் தஞ்சையில் அத்தை அவளிடம் கூறியது அவளது நினைவிற்கு வந்தது. வீடு முழுதும் தரம் உயர்ந்த பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவர்களை ரயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்துவர உடன் வந்திருந்த அவளது பெற்றோரும் வீட்டில் செய்யப்பட்டிருந்த வசதிகளைக் கண்டு மகிழ்ச்சி கொண்டனர். சந்தோஷ் மட்டும் எதன் மீதும் நாட்டம் கொள்ளாமல், அவளது பெற்றோரிடம் பயணக் களைப்பு என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று உறங்கிப்போனான். இரவு உணவு அருந்திட எழுந்துவந்தவனிடம் விடைபெற்றுக்கொண்டு அவர்கள் செல்ல, இவன் உண்டு விட்டு மீண்டும் அறைக்குள் புகுந்துகொண்டான். விசாலமான வீட்டில் தான் மட்டும் தனியே மாட்டிக்கொண்டது போல் பயந்திருந்தாள், ஆர்த்தி.

No comments:

Post a Comment