அன்று இரவு வீடு திரும்பிய சந்தோஷின் பெற்றோர், பாட்டியின் அறையில், அவனையும் உடன் இருக்கச் சொல்லி பேசத்தொடங்கினர்.
“அம்மா, பொண்ணு வீட்ல உடனே கல்யாணத்தை நடத்த சம்மதம் சொல்லிட்டாங்க. அவங்க கல்யாண மண்டபம் பாக்கறதா சொன்னாங்க. நான்தான் நம்ம வீட்லையே கல்யாணத்த வச்சுக்கலாம்னு சொல்லிட்டேன். முக்கியப்பட்ட விருந்தாளிங்க மட்டும் கூப்பிட்டா போதும்னு சொல்லிட்டேன். பொண்ணோட அப்பா முதல்ல யோசிச்சாலும் அப்புறம் சம்மதிச்சுட்டாரு. அடுத்த புதன் நாள் நல்லா இருக்கு. முகூர்த்தத்தை அன்னைக்கு வச்சுடுவோம். அவங்களும் இந்த தேதிக்கு சம்மதம் சொல்லிட்டாங்க…”
படபடவென கூறிமுடித்தார், தந்தை. கவலைத் தோய்ந்த முகமாய் பாட்டி இருப்பதைக் கண்டவர்,
“என்ன அம்மா, ஏன் கலக்கமா இருக்கீங்க? உடம்பு சரியில்லையா?” என்றார்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லபா. கல்யாணப் பொண்ணும், பிள்ளையும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கவே இல்லையே. அதுக்குள்ள பத்து நாள்ல முகூர்த்தத்துக்கு நாள் குறிச்சிட்டு வந்திருக்க?”
“அதுக்கெல்லாம் அவசியம் இல்லை. சம்மந்தி அவரோட பொண்ண எப்படி வளர்த்திருக்காரு தெரியுமா!! இன்னைக்கு காலைல அந்தப் பொண்ணு என்ன சொன்னா தெரியுமா?! ‘அப்பா, அம்மா விருப்பம் தான் என்னோட விருப்பம். நான் போட்டோ பார்த்து என்ன பண்ணப் போறேன்?!’னு இவனோட போட்டோவ கூட வாங்கிப் பார்க்கல. சம்மந்தி தான் பார்த்தாங்க. உங்களுக்காகத்தான் கண்ண மூடிட்டு அவர் பொண்ண கொடுக்கத் தயாரா இருக்கார்.”
தந்தை சந்தோஷைக் கண்டு முறைக்க, அவனோ ‘சென்னைல வளர்ந்த பொண்ணு கொஞ்சம் மாடர்னா இருக்கும், ஏதாவது பேசி கல்யாணத்தை நிறுத்திடலாம்னு பார்த்தா, சரியான பஞ்சாங்கமா இருப்பா போல’ என்று மனதிற்குள் மனைவியாகப் போகின்றவளை வசை பாடினான்.
“எல்லாம் சரி பா. இந்தக் காலத்துல முறையா பொண்ணு பார்த்து பேசிப்பழகித் தானே கல்யாணம் பண்றாங்க?!”
“நான் இவளைப் பார்த்ததே தாலி கட்டும்போது தான். நாங்க சந்தோஷமா இல்லையா?”
“அது அந்தக் காலம் பா…”
“எந்தக் காலம்? நான் என்ன டைனோசர் காலத்துலயா பொறந்தேன்?”
‘ஹ்ம்ம்… டைனோசர் காலத்துல பொறக்கல… ஆனா இப்போ டைனோசராவே வந்து பொறந்திருக்காரு…’ என்று இம்முறை தகப்பனாருக்கு வசவு பாடினான், மானசீகமாய்.
“அதுக்கில்ல பா, எப்படி பத்து நாள்ல இவ்வளவு ஏற்பாட்டை செய்ய முடியும்?”
“கல்யாண ஏற்பாட்டை நான் கவனிச்சுக்கறேன். இவ உங்கள கவனிச்சுப்பா. மாப்பிள்ளை சார் நல்லா சாப்பிட்டு தூங்கி எழுந்து சொல்லும்போது பொண்ணு கழுத்துல தாலி கட்டினா போதும். நீங்க எதைப் பத்தியும் யோசிக்காம தூங்குங்க. சிறப்பாவே இந்தக் கல்யாணம் நடக்கும்” என்றார்.
“ஏன் நீ இப்படி அவசரப்படற? பிள்ளைக்கு சீரும், சிறப்புமா கல்யாணம் பண்றது முக்கியமா? இல்லை, இந்தக் கிழவியோட உயிரு முக்கியமா?”
பாட்டி ஆதங்கமாய்க் கூற, “பாட்டி எனக்கு இந்த உலகத்துல நீங்க மட்டும் தான் முக்கியம். எதுவும் பேசாம அமைதியா தூங்குங்க” என்று திடமாய்க் கூறினான், சந்தோஷ்.
அவன் தனது தந்தையை நோக்க, அவரோ அவனை முறைத்தபடியே தனது அறைக்கு எழுந்துச் சென்றார்.
காதல் தேவதையோடு உடனே உரையாட வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. அழ வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. எங்காவது ஓடிவிட வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. அப்பாவை எதிர்த்து சண்டையிட வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. பாட்டியிடம் அனைத்து உண்மையையும் கூறிவிட வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. பாட்டியின் இஷ்டப்படி மணம் முடிக்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றியது அவனுக்கு.
குழம்பிக் குழம்பித் தவித்தான் ஒவ்வொரு நாளும். பெரிய கோவில் சென்று வந்தான். ஊழ்வினை ஓடிவந்து அவனை இறுகக் கட்டிக்கொண்டது போல் உணர்ந்தான். வீட்டில் நாளுக்கு நாள் ஏற்பாடுகள் அமர்க்களப்பட்டன. உறவினர் வருவதும் போவதும், தடபுடலாக உணவுகள் சமைப்பதும், எப்பொழுதும் பேச்சும், சிரிப்பும் என ஊர்த் திருவிழா அவன் வீட்டு முற்றத்தில் நடந்தேறுவது போல் இருந்தது. அனைத்தையும் அமைதியாய்க் கடந்தான்.
வீட்டு வாயிலில் தோரணம் ஆட, வாழை மரங்கள் பணிந்து நிற்க, இளசுகள் சிரித்தபடி வரவேற்பு கொடுக்க, சொந்தங்கள் பலரும் படையெடுத்தனர் சந்தோஷின் இல்லத்திற்கு. வெண்பட்டு வேஷ்டி, சட்டையில் தயாராகி வந்த சந்தோஷ் முதலில் பாட்டியின் காலில் விழுந்து வணங்கினான். அருகிலிருந்த தந்தையின் முகத்தில் மகிழ்ச்சி இருந்ததோ இல்லையோ, அவன் மீது கோபமோ, வருத்தமோ இல்லை.
கனக்கச்சிதமாய் அமைக்கப்பட்ட மணவறையில் அவன் சென்று அமர, கல்யாணச் சடங்குகள் தொடங்கின. சிறிது நாழிகை கழித்து மணப்பெண் அவன் அருகே வந்து அமர்ந்தாள். அவளை தலை நிமிர்ந்து பார்க்காது, தனது தந்தையை நோக்கினான். அவரோ, இமை கூட அசையாது அவனையே பார்த்திருந்தார். அருகில் நின்றிருந்த தனது தாயையும், நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டிருந்த பாட்டியையும் கண்டான். அவர்களின் முகத்தில் ஆனந்தத்திற்கு அளவில்லாமல் போயிருந்தது. தலைக்கவிழ்ந்து அவன் கீழே நோக்க, கண்ணில் பட்டது தங்கத்தாலி. அனிச்சையாய் தனது விரல்களைப் பின்னிக்கொண்டான். மேலும் இறுக்கமாய் பின்னிக்கொண்டான். தலை நிமிர்ந்து சுற்றத்தைக் கண்டான். எங்கு நோக்கினும் முகங்கள். அனைத்து முகங்களையும் கண்டான். ஆனால், அருகில் இருப்பவளின் முகத்தை மட்டும் காண அவன் விரும்பவில்லை. “கெட்டிமேளம், கெட்டிமேளம்” என்று கல்யாண புரோகிதர் கூறியவுடன் கெட்டிமேளம் வாசிக்கப்பட, அவன் காதுகளில் அந்த இசை வேறு மாதிரி விழுந்தது. பிரியமாட்டோம் என்று பின்னிக்கிடந்த விரல்களை மிகவும் பிரயத்தனப்பட்டு விலக்கியவன் திருமாங்கல்யத்தை எடுத்து அவளது மணிக்கழுத்தில் அணிவித்தான். அப்பொழுதும் அவளது முகத்தினை சரிவரக் காணாது திரும்பிக்கொண்டான்.
உறவுகள் அன்பளிப்பு கொடுக்க, அறிந்தோர் தெரிந்தோர் அவனை வாழ்த்த, நடப்பவை அனைத்தும் நிழற்படம் ஆக்கப்பட, எதிலும் மனம் கொள்ளாமல் அந்த மாபெரும் கூட்டத்தில் அவன் மட்டும் விலகி நின்றான். பெரிய துரோகம் ஒன்றை இழைத்துவிட்ட வலி அவனை வாட்டியது. ஒன்றல்ல இரண்டு துரோகம் இழைத்துவிட்ட பெரும் வலி. ஆம்பல் நித்தியமாய் அவனது மனதில் மலர்ந்துவிட்டதை அத்தருணத்தில் உணர்ந்தான். கல்யாண விருந்து முடிந்து உறவினர் மெல்ல களைந்து செல்ல, மனதளவிலும் உடலளவிலும் ஓய்ந்திருந்தவன் தனது அறைக்குள் சென்று கட்டிலில் சரிந்தான்.
அவளது நீல விழிகளில் கண்டேன்
ஒரு கோடி மின்னல்கள்
ஒவ்வொன்றும் எந்தன் இதயத்தில்
அவள் பெயரைக் கீரிச் சென்றன...
ஆம்பல் எழுதிய கவிதை ஒன்று அவனது நினைவிற்கு வந்தது. ‘உனது நீலவிழிகளை நான் இன்று வரை கண்டதில்லை. இருப்பினும் எந்தன் இதயத்தில் உனது பெயர் பச்சைக் குத்தப்பட்டுவிட்டது…’ என்று தனக்குள்ளே முனகிக்கொண்டான். கண்களின் ஓரம் நீர்த்துளியைச் சுண்டிவிட்டு கண்மூடிக்கிடந்தான். அன்று காலை வரை ஆம்பலிடமிருந்து மின்னஞ்சல் வரவில்லை என்பது அவனின் நினைவிற்கு வந்தது. தனது கைப்பேசியை எடுத்து உயிர்ப்பித்தான். மீண்டும் மீண்டும் தனது மின்னஞ்சல் உள்பெட்டியைச் சோதனை செய்தான். அவளிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.
தனது கைப்பேசியை எறிந்துவிட்டு கண்களை இறுக மூடிக்கொண்டான். நெஞ்சின் மீது ஏதோ பாரம் வைத்தது போல் உணர்ந்தவன், மூச்சு விட முடியாமல் இம்சிக்கப்பட்டிருந்தான். துக்கம் தொண்டையை அடைக்கும் பொழுது சிலருக்கு தூக்கம் அருமருந்தாகிவிடுகிறது. அவனும் கண்ணயர்ந்தான்.
ஏதோ குரல் கேட்டு கண்விழிக்க எதிரே அவனது அம்மா நின்றிருந்தாள்.
“முகம் கழுவிட்டு வா சந்தோஷ். குலதெய்வக் கோவிலுக்குப் போகணும்.”
“வரேன் மா, நீங்க போங்க…” என்றவன் தன்னை தயார் செய்துகொண்டு அறையைவிட்டு வெளியே வந்தான். நெருங்கிய உறவினர்கள் இங்கும் அங்குமாய் கூடிக் கதைத்துக்கொண்டிருந்தனர்.
சோபாவில் சென்றமர்ந்ததும் அவன் முன்னே தளிர் கரமொன்று காபியை நீட்டியது. தலை நிமிர்ந்து அவன் நோக்க காலையில் அவன் அணிவித்த பொன் தாலி மின்ன மணப்பெண் அங்கே நின்றிருந்தாள். வேண்டாவெறுப்பாய் பெற்றுக்கொண்டவன் வேறு வழியின்றி குடித்து முடித்தான்.
மாப்பிள்ளையையும், மணப்பெண்ணையும் அழைத்துக்கொண்டு அனைவரும் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வர, அவன் மீண்டும் அறைக்குள் சென்று புகுந்துகொண்டான். தான் விட்டெறிந்த கைப்பேசி அறையில் ஓர் மூலையில் அடுக்கப்பட்டிருந்த பைகளின் மீது விழுந்தது என்பது வரை அவனுக்கு நினைவில் இருந்தது. அந்தப் பைகளின் மத்தியில் அவன் தேடியும், கைப்பேசி எங்கும் கிடைக்காமல் போக, தனது தாயைத் தேடி அடுக்களைக்கு விரைந்தான்.
“அம்மா, என் போன் எங்க?” என்றான், தனது தாயிடம்.
“உனக்குத்தான் ஒருத்தி வந்துட்டால்ல, அவளைப் போய் கேளு. இனியாவது அம்மாவுக்கு ரெஸ்ட் கொடு” என்று உறவுக்காரப் பெண் ஒருவர் கூற,
“அது… அம்மாவுக்குத்தான் தெரியும்…” என்றான், தனது எரிச்சல்களை மறைத்துக்கொண்டு.
“இதுவா?” என்று வினவியபடி கைப்பேசியை நீட்டியபடி புதுப்பெண் வந்து நிற்க, அங்கே உறவினர் மத்தியில் சிரிப்பலை அடித்து ஓய்ந்தது.
“உன் அம்மாவுக்கு ஏத்த மருமக தான் சந்தோஷ். பொறுப்புல உங்க அம்மாவையே மிஞ்சிடுவா போல!!”
மீண்டும் உறவுக்காரப் பெண் பரிகசிக்க, மற்றொரு சிரிப்பலை எழுந்து அடங்கியது.
“ரூம்ல என் பேக் மேல இந்த போன் இருந்தது…”
தயங்கித்தயங்கி புதுப்பெண் வார்த்தைகளை உதிர்க்க, ‘ம்ம்’ என்று தலையாட்டிவிட்டு, மேற்கொண்டு என்ன கூறுவது என்று புரியாமல் அவ்விடம் விட்டுச் சென்றான்.
இரவு விருந்து முடிந்து முதலிரவிற்கான ஏற்பாடுகள் சந்தோஷின் அறையில் நடக்க, வெறுப்பும், வேதனையுமாய் தனது கைப்பேசியை நோண்டியபடி இருந்தான்.
“சந்தோஷ் இந்தப் புது வேஷ்டி, சட்டையை மாத்திட்டு வா…” என்று எதிரே அவனது தாய் வந்து நிற்க, தனது கண்ணாடி வழியே அவன் முறைப்பதை உணர்ந்தவள், “சரி, உன் ரூம்ல வைக்கறேன், மாத்திக்கோ…” என்றுவிட்டு எதுவும் தெரியாதவள் போல் நழுவிக்கொண்டாள்.
அலங்காரம் முடிந்து புதுப்பெண் பாவையென நின்றிருக்க, அவளைக் கண்டும் காணாமல் முகத்தினைத் திருப்பிக்கொண்டான், சந்தோஷ். பெண் வீட்டாரும், மற்ற உறவினரும் விடைபெற்றுச் செல்ல, கண்ணீருடன் அவள் நின்றிருக்க, கடமையே என்று இவன் நின்றிருந்தான். பாட்டியும், அம்மாவும் கண்கலங்குபவளுக்கு சமாதானங்கள் கூற, தன்னைச் சுற்றி எதுவும் நடக்காதது போல் மீண்டும் கைப்பேசியில் கவனமானான், சந்தோஷ்.
முதலிரவு அறைக்குள் அவன் செல்ல எத்தனிக்க, அவனை அழைத்த பாட்டி, தனது கையிலிருந்த கிண்ணத்திலிருந்து பால்கோவா எடுத்து அவனுக்கு ஊட்டினார்.
“கடவுள் அருளால உனக்கு எல்லா செல்வமும் வந்து சேரும்… நீ சந்தோஷமா இருப்ப!!” என்று வாழ்த்தினார்.
விட்டேத்தியாய் சிரித்தவன், அவரது காலில் விழுந்து வணங்கி தனது அறைக்குச் சென்றான்.
முதலிரவு அறைக்குள் அவன் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருக்க, அலங்கார மலர்களின் வாசம் மோகத்தைத் தூண்டாமல், கோபத்தைத் தூண்டியது. பெண்ணவள் கைகளில் பாலேந்தி பள்ளியறைக்குள் நுழைய, கண்ணாளன் இன்முகத்தோடு அவளை வரவேற்காமல், வேறெங்கோ முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றிருந்தான். உள்ளே நுழைந்தவள், அவனருகே சென்று பாலினை நீட்ட, அவன் முகம் திருப்பாது, “எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லை…” என்று சிறிதும் யோசிக்காமல் தனது மனதில் உள்ளதைப் போட்டுடைத்தான். அவன் கூறியதைக் கேட்டு அதிர்ந்தவள், நா எழாமல் கண்கள் கலங்கி நிற்க, மெல்ல தலைத் திருப்பி அருகில் நின்றிருக்கும் தனது மனைவியானவளின் முகம் கண்டான், முதன்முறையாக!!
No comments:
Post a Comment