மின்னஞ்சலில் இரண்டு விலாசங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைப் பார்த்த சந்தோஷின் நண்பன்,
"மச்சான் இது உன்னோட அட்ரஸ் டா… ஆனா அந்த இன்னொரு அட்ரஸ்??" என்றான், யோசனையாக.
"அது என் மாமனார் வீட்டு அட்ரஸ் டா…" என்றான் சந்தோஷ் அதிர்ச்சி குறையாமல்.
"மச்சான்…"
குதூகலமான அவனின் நண்பன், "மச்சக்காரன் டா நீ!! முதல்ல கையக் கொடு!!" என்றவன் அவனது கைகளைக் குலுக்கினான்.
"என்னடா மச்சான் இப்படி உட்கார்ந்திருக்க? அதான் உன் மனைவி தான் ஆம்பல்’னு தெரிஞ்சுபோச்சுல… வாட் எ கோஇன்சிடென்ஸ்!! லக்கி பெல்லோ டா நீ" என்றான்.
"டேய், எல்லாம் ஓகே, ஆனா அவ தான் தான் ஆம்பல்’ங்கற உண்மைய எதுக்கு டா மறைச்சா? கல்யாணம் ஆன கொஞ்ச நாள்லயே அவளுக்கு ஆம்பல் பத்தி எல்லா விவரமும் தெரியும். ஒரு வார்த்தை அது நான் தான்னு சொல்லல. ஒரே வீட்ல இருந்துக்கிட்டு எனக்கு மெயில் அனுப்பி கண்ணாமூச்சி ஆடியிருக்கா. இந்த உண்மை தெரியாம நானும் ஆம்பல் பத்தி பெருமை பேசிக்கிட்டு இருந்தேன்… ஏன் அவ இப்படி பண்ணா’னு புரியவே இல்லை மச்சான். எனக்குத் தெரிஞ்சு ஆம்பல் பத்தி சொன்ன பிறகு தான் என்னை ரொம்ப சோதிக்க ஆரம்பிச்சா. எப்படியெல்லாம் என்னை வருத்தெடுக்க முடியுமோ அது அத்தனையும் செஞ்சா. ஒரே குழப்பமா இருக்கு…"
"எதுவா இருந்தா என்ன? உன் மனைவி’னு தெரிஞ்சுபோச்சு. அதுவே பெரிய நிம்மதி. நீ நேர்ல பார்த்து பேசு."
"மச்சான், நீ என் வாழ்க்கைய காப்பாத்தறேன்னு உள்ள புகுந்து எந்த கோக்குமாக்கு வேலையும் பண்ணலல?"
"டேய், என்ன நக்கலா? உன் கல்யாணத்துக்குக் கூட நான் வரல. உன் மனைவியைப் பார்த்ததில்லை. உன் மாமனார் அட்ரஸ் எனக்கு எப்படித் தெரியும்? அதுவுமில்லாம நானா அட்ரஸ் ட்ராக் பண்ணேன்? என் பிரெண்ட் ஆந்திரால இருக்கான். அவன் பண்ணது, மச்சான். இது உண்மையாவே மிராகில். எப்படியாவது நீ அந்த ஆம்பல்’அ மறந்துட்டு உன் மனைவி கூட சேரணும்னு நினைச்சேன். கடவுளே ரெண்டு பேரும் வேற இல்லை, ஒன்னுனு காமிச்சுட்டாரு…"
"ஆனா… அவ ஏன் என்கிட்ட சொல்லல?"
"என்னைக் கேட்டா எனக்கு எப்படித் தெரியும்? உடனே கிளம்பிப் போய் உன் மனைவிய பாரு" என்றான்.
தாமதிக்காது உடனே அவ்விடம் விட்டுக் கிளம்பிய சந்தோஷ், நேரே மாமனார் வீட்டிற்கு விரைந்தான். ‘இனிக்க இனிக்க பேசற என்னோட ஆம்பல் இந்தக் குட்டிப் பிசாசு தானா! எப்படியெல்லாம் கலங்கடிச்சுட்டா… ச்ச கொஞ்ச நாள் முன்னாடி இந்த யோசனை வந்திருக்கலாம். அவளை… அவளை என்னென்னமோ பண்ணியிருக்கலாம்… அவசரப்பட்டு திட்டிட்டேன்… சமாதானம் பண்ணி மேடத்தை கையோட கூட்டிட்டு வந்துடணும். என்னை எப்படியெல்லாம் படுத்திவச்சாளோ அதுக்கெல்லாம் சேர்த்து எக்கச்சக்க கிஸ் கொடுக்கணும், ராட்சசி…’ என்று அவனது மனம் இறக்கை கட்டிப் பறந்தது. வெகு நாட்கள் கழித்து அவன் முகம் புன்னகையில் மலர்ந்திருந்தது. மகிழ்ச்சி தாளாமல் மூச்சு முட்டியது. மாமனாரின் வீட்டை அடைந்ததும் கண்ணாடியில் தன்னை ஒருமுறை பார்த்துக்கொண்டான். தலையைக் கோதி, சட்டையைச் சீர் செய்தவன், அழைப்பு மணியை அடித்துவிட்டு மிகுந்த உற்சாகத்துடனும், பரபரப்புடனும் நின்றிருந்தான். ‘சீக்கிரம் கதவை திறங்கப்பா, என் செல்லத்தை நான் அள்ளிட்டு போகணும்’ என்று அவன் முணுமுணுத்துக்கொண்டிருக்கையில் வாயிற் கதவு திறக்கப்பட்டது.
“வாங்க மாப்பிள்ளை!”
அன்போடு அழைத்தார், ஆர்த்தியின் அம்மா.
‘என் செல்லக்குட்டி மேட்டர இன்னும் ஓப்பன் பண்ணல போல. இவ்வளவு பாசமா கூப்பிடறாங்க. உண்மை வெளிய தெரியும் முன்னே அவ கைல கால்ல விழுந்தாவது கூட்டிட்டுப் போயிடணும்’ என்று எண்ணிக்கொண்டே அவளைத் தேடினான்.
“ஆர்த்தி, மாப்பிள்ளை வந்திருக்காங்க” என்று அவளது அறையின் கதவை அவள் அம்மா தட்ட, உடனே கதவு திறக்கப்பட்டது. அவளைக் கண்டவுடன் அவன் முகம் மறுநொடி பிரகாசமானது.
“அத்தை நான் ஆர்த்திக்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்…” என்றான், ஆர்த்தியினின்று பார்வையை மீட்காது.
“பேசுங்க மாப்பிள்ளை” என்றுவிட்டு அவளின் அம்மா சென்றுவிட, குடுகுடுவென அவள் நின்றிருந்த அறைக்குள் ஓடிச்சென்று கதவினைத் தாழிட்டான்.
“எப்படி இருக்க ஆம்பல் அலைஸ் ஆர்த்தி?” என்றான், இதழோரப் புன்னகையோடு அவளை ஊடுருவி நோக்கியபடி.
அவள் கேள்வியாய் நோக்க,
“நீதான் ஆம்பல்னு கண்டு புடிச்சுட்டேன். நீ அனுப்பின மெயில் வச்சு ட்ராக் பண்ணி கண்டு பிடிச்சாச்சு.”
“ஓ!”
“என்ன ‘ஓ!’?? எதுக்கு மேடம் உண்மைய சொல்லாம மறைச்சீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?”
“உங்களுக்குத்தான் என்னைப் பிடிக்கலையே…”
“ஹே உன்னைத்தான நான் விழுந்து விழுந்து காதலிக்கறேன்…”
“என்னை இல்லை…”
“ப்ச்… இங்கப்பாரு நீதான் ஆம்பல்னு தெரிஞ்சதும் நான் எவ்வளவு சந்தோஷமாயிட்டேன்னு தெரியுமா… அன்னைக்குத் திட்டிட்டேன்னு ரொம்ப மனசு கஷ்டமாயிடுச்சு… வா நம்ம வீட்டுக்கு போகலாம்…”
“நான் வரல…”
“இப்போ எதுக்கு உனக்கு இந்தக் கோவம்? நீ உண்மைய சொல்லாம மறைச்சதுக்கு நியாயமா நான்தான் கோபப்படணும். வா போகலாம்...”
“நான் வரல…”
அவளது பிடிவாதத்தின் காரணம் புரியாமல் அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தவன்,
“உன் கோவத்துக்கான காரணம் என்னனு சொல்லு…” என்றான்.
“உங்களுக்கு என்னை பிடிக்கல. வீட்டைவிட்டு போகச் சொன்னீங்க. நானும் வந்துட்டேன். இப்போ எதுக்கு என்னை தொந்தரவு பண்றீங்க?”
“என்ன பேசற நீ?”
“சரி நேரடியாவே கேட்கறேன். ஒருவேளை நான் வேற, ஆம்பல் வேறையா இருந்திருந்தா என்னைத் தேடி இந்நேரம் இங்க வந்திருப்பீங்களா? இல்லைல?! ஏன்னா உங்களுக்கு இந்த ஆர்த்தியைப் பிடிக்காது. இப்போ நான்தான் ஆம்பல்’ங்கற ஒரே காரணத்துக்காகத்தான் என்னை வீட்டுக்கு வரச்சொல்லி கூப்பிடறீங்க. நீங்க தாலி கட்டினதாலோ, நான் உங்க மனைவி’ங்கறதாலோ, பிடிச்சோ பிடிக்காமலோ இத்தனை நாள் ஒரே வீட்ல கணவன் மனைவியா வாழ்ந்ததாலோ நீங்க என்னைக் கூப்பிடல. சரியா?”
“ஆர்த்தி…”
“எதுவும் சொல்ல வேண்டாம்… நீங்க கிளம்பலாம்…”
“என்ன ஆர்த்தி இது என்னென்னமோ பேசற. நான் விரும்பினவளும், தாலி கட்டினவளும் ஒண்ணுனு தெரிஞ்சதும்…”
“அதே தான் நானும் சொல்றேன். நீங்க விரும்பினவ வேற. தாலி கட்டினவ வேற. உங்களுக்கு தாலி கட்டினவ மேல விருப்பம் இல்லை. அதான் உண்மை.”
“அப்படியெல்லாம் இல்லை ஆர்த்தி…”
“ஹ்ம்ம்… திங்கட்கிழமை காலைல கிளம்பி வந்தேன். இப்போ புதன்கிழமை சாயங்காலம் ஆயிடுச்சு. சொல்லாம கிளம்பிப் போனாளே, எங்க போனாளோ, என்ன ஆனாளோ’னு ஒரு போன் பண்ணீங்களா? இல்லை. ஏன்னா உங்களுக்கு என்னை பிடிக்கல. ஒருவேளை ஆம்பல் வேற ஒரு பொண்ணா இருந்து, நான் மனசு நொந்து தப்பான முடிவு எடுத்திருந்தா கூட நீங்க வருத்தப்பட்டிருக்கமாட்டீங்க. ஏன்னா நீங்க என்னை விரும்பல. ஒருதடவை கூட பார்க்காத காதலியை என்னோட ஒப்பிட்டு, அவளை உயர்வாவும் என்னை தாழ்வாவும் பேசினீங்க. ஆயிரம்தான் இருந்தாலும் இவளும் ஒரு பொண்ணு தானே, இவ மனசும் வருத்தப்படுமேனு உங்களுக்குத் தோணல. ஏன்னா நீங்க என்னை மனைவியா இல்லை, ஒரு மனுஷியாக்கூட நினைக்கல…” என்றவள் சோர்ந்து ஒரு மூலையில் சென்றமர்ந்தாள்.
“தயவு செஞ்சு போய்டுங்க. இதுக்குமேல என்னை நோகடிக்காதீங்க ப்ளீஸ்…” என்றவள், கைகளுக்குள் முகம் புதைத்து அழத்தொடங்கினாள்.
அவளது மனதில் எத்தனை எத்தனை ரணங்கள் என்று அவன் உணர்ந்தானோ தெரியவில்லை, ஆனால் அதற்குமேல் அவனால் ஓர் வார்த்தை கூட பேச முடியவில்லை. அவளை அள்ளி அணைத்திட ஆசை இருந்தும், தயங்கி நின்றான். தான் பெரும் பிழை செய்துவிட்டதை உணர்ந்தான். மௌனமாய் அவ்வறையை விட்டு வெளியே சென்றான். எதிர்பட்ட ஆர்த்தியின் தாயிடம் கூட எதுவம் பேசாமல் அவ்விடம் விட்டு புறப்பட்டான். அறையினுள்ளே சென்ற அவளது தாய், அழுதுகொண்டிருக்கும் மகளை தொந்தரவு செய்யாமல் அவள் போக்கில் விட்டுவிட்டாள்.
மனமுடைந்து வீடு திரும்பியவன், ‘ஐ லவ் யூ ஆர்த்தி… மிஸ் யூ…’ என்றொரு குறுஞ்செய்தியை, கனத்த இதயத்தோடு அவளுக்கு அனுப்பினான். எவ்வித பதிலும் இல்லை. மீண்டும் அதையே அனுப்பினான். அவனது ஆதங்கம் அடங்கும்வரை மீண்டும் மீண்டும் அதே குறுஞ்செய்தியை அனுப்பினான்.
மறுநாள் மாலை அலுவலகம் முடிந்து அவளைக் காணச் சென்றான்.
“நான் என்ன பண்ணா உன் கோவம் குறையும்னு சொல்லு ஆர்த்தி…”
“நீங்க எதுவும் மெனக்கெட வேண்டாம்…”
“போன் பண்ணா எடுக்கல. மெசேஜுக்கும் பதில் இல்லை.”
“அதுக்கெல்லாம் அர்த்தம் இருக்கறதா எனக்குத் தோணல…”
“எதுக்கு அர்த்தம் இல்லை - உன் மேல நான் வச்சிருக்கற பாசத்துக்கா? இல்லை நம்ம உறவுக்கா?”
“பாசம் வெறும் பாசாங்குனு தெரிஞ்ச பிறகு அந்த உறவே பொய்யாகிடுது…”
“உன் எழுத்தாளர் திறமை எல்லாம் என்கிட்ட காட்டாத… நான் சராசரி மனுஷன்…”
“நானும் சராசரி உணர்வுகள் உள்ள எழுத்தாளர் தான்…”
“நான் என்ன பண்ணனும்னு சொல்லு…”
“எனக்குத் தனிமை வேணும்.”
“எனக்குத் தனிமை வேண்டாம்… வேண்டவே வேண்டாம்…”
“அப்போ என்னை விட்டுட்டு தூரமா போயிடுங்க… என்கிட்ட தனிமை மட்டும் தான் இருக்கு…”
“துணையா நான் இருக்கும்போது உனக்கு தனிமை எதுக்கு?”
“துணை என்னைக் காயப்படுத்துது… தனிமைக்கு காயப்படுத்தத் தெரியாது… அது குழந்தை மாதிரி…”
“உன் துணையும் குழந்தை மாதிரி தான்… என்ன வேணும்னு தெரியும், ஆனா அதைக் கேட்க மொழி தெரியாம தவிக்குது…”
“குழந்தை மண் குதிரை வச்சு விளையாடணும்னு ஆசைப்படலாம், தப்பில்ல. ஆனா, அதுல சவாரி செய்யணும்னு ஆசைப்பட்டா அது அபத்தம்.”
“குழந்தையினுடைய ஆசை அபத்தமா இருந்தாலும் அந்த மண் குதிரை தான் அந்தக் குழந்தையோட உலகம்… இந்த உண்மை எனக்கு முன்னாடி நிக்கற இந்த வளர்ந்த குழந்தைக்கு புரியும் வரை நான் காத்திருப்பேன்...”
அன்றிரவு அவனது கனத்த இதயத்திற்கு, கண்ணீர்த் துளிகள் சிவரஞ்சனி ராகம் வாசித்தன.
அதற்கும் மறுநாள் மாலை மீண்டும் அவளைக் காணச் சென்றான். மனதில் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி அவள் முகம் காணச் சென்றான். அவனைக் கண்டவள் கோபமும், அழுகையுமாய் நின்றிருந்தாள். அவனும் மௌனத்திருந்தான். அவளுடைய தர்க்கங்கள் அன்று அரங்கேறவில்லை. அவனிடமும் விளக்கங்களும், விடைகளும் இல்லை. அவளது விசும்பலும், அதற்கு பதிலளித்தபடி இவனது கனத்த மூச்சு மட்டுமே சம்பாஷணையின் சாரம் ஆனது.
சனிக்கிழமை காலை அவளைக் காண கிளம்பியவன், முன்தினம் அவள் சாதித்த மௌனத்தின் பேரொலியில் மனம் சோர்ந்து கட்டிலின் மேல் சரிந்தான். குறுஞ்செய்திகள் அனுப்பினான். எவ்வித பதிலும் இல்லை. இது தன் மீதான வெறுப்பின் முன்னுரையோ என்று அவனது மனதில் பெரும் பயமொன்று அச்சுறுத்தியது. அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அவளது புடவைகள் இரண்டினை எடுத்து அதனை தன் மீது போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டான். கண்களில் தெரிவதெல்லாம் அவளைப் போன்றே இருந்தது. இமைகள் மூடினாலும் அவளின் உருவே மிளிர்ந்தது. புரண்டு புரண்டு படுத்தவன், துக்கம் தந்த தூக்கத்தில் உறங்கிப்போனான். அழைப்பு மணியின் ஓசைக் கேட்டு கண்விழித்தவன் தன் மீது போர்த்தியிருந்த அவளது புடவைகளை விலக்கிவிட்டு, எழுந்துச்சென்று கதவினைத் திறந்தான். வாயிலில் ஆர்த்தி, அவளது தந்தையோடு நின்றிருந்தாள்.
No comments:
Post a Comment