பகுதி - 1
ஒரு மனிதனின் வாழ்வில் ஆகச்சிறந்த சந்தோஷங்கள் அத்தனையும் சேர்த்துக்கட்டி, ஒரு பெரிய உருண்டையாய் உருமாற்றி பரிசளித்தது போல் இருந்தது, அவனுக்கு. மூன்று நாட்களாக வீடு முழுதும் உறவினர்கள் சூழ்ந்திருக்க, அம்மாவும் அப்பாவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, தனது அறையில் கண்ணாடியின் முன் நின்றுகொண்டு தனது பிம்பத்தைக் கண்டு சிரித்துக்கொண்டிருந்தான்.
‘என்ன மச்சான்… அதுக்குள்ள…’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டவனுக்கு சிரிப்பு பொங்க, மகிழ்ச்சி தாளாமல் கீழுதட்டை மடித்துக் கடித்தபடி சிரிப்பினை அடக்க முயற்சித்திருந்தான். சராசரி உயரம், மாநிறம், விவரம் தெரிந்த நாள் முதல் மாற்றப்படாத சிகை, கனிவான கண்கள், பணிவான முகம் என்று சாதாரண தோற்றம் கொண்டிருந்தாலும், அவளின் நினைவுகள் அவனை அசாதாரண நாயகனாகவே உணரச் செய்தன. எப்பொழுதும் உரக்கச் சிரிப்பவன் ஏனோ இம்முறை அடக்கமாய் சிரித்து நின்றான். பெண்களின் வெட்கம் அழகென்றால் ஆண்களின் வெட்கம் பேரழகு! இம்சிக்கும் சிலிர்ப்புகளால் அவனால் அவன் முகத்தையே கண்ணாடியில் காண முடியாத அளவிற்கு ஒருவித கூச்சம் உடலெங்கும் பரவியது. தலையை உலுப்பிவிட்டு தனது சோபாவின் மேல் வந்தமர்ந்தான், புன்னகை குறையாமல். கைபேசியை எடுத்தான். எண்ணிக்கையில் அடங்கா வாழ்த்துச் செய்திகள் குவிந்திருந்தன. பொங்கும் பேரானந்தம் மூச்சு முட்ட, கண்கள் மூடி சோபாவின் மேல் சாய்ந்தான். மீண்டும் அவளது பிறைமுகம் அவனை வாட்டி வதைத்தது.
கண் திறந்தவன் தனது கைப்பேசியை நோண்டி, அதிலிருந்த அவளது நிழற்படத்தை இமைக்காது பார்த்திருந்தான். அவளது நிழற்படம் என்று இது ஒன்று தான் அவனிடம் இருந்தது. இதைப் பல கோடி முறைகள் பார்த்த பின்னும், அவளை ஒருமுறை நேரில் பார்த்த பின்னும், ஏனோ ஆசைக் குமிழிகள் மட்டும் மனதில் பொங்கிய காதல் வெள்ளத்தில் முளைத்துக்கொண்டு தான் கிடந்தன. மூன்று வாரங்களுக்கு முன் கண்ணில் பட்டவள் இன்று மூச்சு முட்டும் அளவிற்கு காதலைத் தருவாள் என்று அவன் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை. படிப்பு, வேலை என்று வாழ்வில் வேறு எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல், ‘காதல்’ போன்ற எந்தவித சாகசங்களிலும் ஈடுபடாமல், தெருமுனை ‘வினைதீர்க்கும் விநாயகர்’ அவனுக்கென பிறந்து வளர்ந்தவளை உரிய நேரத்தில் கண்ணில் காட்டுவார் என்று அசைக்க முடியாத நம்பிக்கையோடு, தினமும் அலுவலகத்திற்கு செல்லும் முன் பதினோரு முறை விநாயகரை வலம் வந்து, மற்றவர் முன் தோப்புக்கரணம் போடத் தயங்கி, நமஸ்கரித்துவிட்டுச் செல்வான்.
மூன்று வாரங்களுக்கு முன் அப்பா ராமச்சந்திரன் இவளது புகைப்படத்தை மின்னஞ்சலில் இவனோடு பகிர்ந்துகொள்ள, அலுவலகத்தின் தலையாய கடமைகளை புறந்தள்ளிவிட்டு அடுத்த ஐந்து நிமிடத்தில் தந்தையை கைபேசியில் அழைத்து திருமணத்திற்கு சம்மதம் கூறிவிட்டான். அவனது ஆர்வமிகுதியை புரிந்துகொண்ட தந்தையும் பெண் பார்க்க மறுநாள் ஏற்பாடு செய்ய, அவனுக்கு இன்ப அதிர்ச்சியாக அடுத்த மூன்று வாரங்களில் திருமணம் என்று முடிவானது.
அனைத்தையும் மனதில் ஓட்டிப்பார்த்தவன் மெல்ல எழுந்து தனது மேஜை மீது வைக்கப்பட்டிருந்த கல்யாண பத்திரிக்கையை கையிலெடுத்தான். ‘தீபிகா வெட்ஸ் சஞ்சய்’ என்று அட்டையில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்களை மெல்ல வருடினான். ‘தீபிகா… தீபு… தீபுமா… தீபு டியர்… ஹனி…’ விதவிதமாய் அவளை அழைத்துப்பார்த்தான். எப்படி அழைத்தாலும் அவனுள் இன்பம் பெருகத் தவறவில்லை.
ஒருமுறை கூட அவளிடம் பேசவில்லை. வாய்ப்பும் அமையவில்லை… கேட்டிட அவனுக்கு வாயும் எழவில்லை. பேசிப்பேசித் தீர்ப்பதற்கே பல நூறு கதைகளை அவன் இதயத்துள் சேர்த்து வைத்திருந்தான். அவள் கூறவிருக்கும் கதைகளுக்கும் ஆர்வமாக காத்திருந்தான்.
கைக்கடிகாரத்தை நோக்கினான். மணி மூன்று என்றது. ‘இன்னும் சிறிது நேரத்தில் மாப்பிள்ளை அழைப்பு. அதன் பின் மணமாகாத இளங்காளையாக வாழ்விலே கடைசி இரவு. நாளை காலை வாழ்விலே வசந்த காலத்தின் தொடக்கம். நாளை இரவு… நாளை இரவாவது மனம்விட்டு அவளோடு பேசிட வேண்டும்’ என்று எண்ணிக்கொண்டான். அவனது அதீத விருப்பமெல்லாம், ‘என்னை பிடிச்சிருக்கா?’ என்று அவன் வினவ வேண்டும், அவளும் தலை கவிழ்ந்தவாறு ‘ம்ம்…’ என்றிட வேண்டும். அவனது அபிலாஷைகள் அனைத்தும் அமைதிகொள்ள, அவளது ‘ம்ம்’ மிகவும் வேண்டியதாய் இருந்தது.
உடனே வேறொரு தொலைபேசியிலிருந்து தனது கைபேசிக்கு அழைப்பு விடுத்தவன், ‘ஓ! நெஞ்சாத்தியே… நெஞ்சாத்தியே… நீதானடி என் வாழ்க்கையே…’ என்று காலர் டியூன் ஒலிக்கக் கேட்டு அவனும் உடன் சேர்ந்து பாடினான். பாடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் கற்பனையில் அவளது கைகோர்த்து சுற்றிச் சுற்றிச் ஆடினான்.
குளித்து முடித்து வந்தவன், அன்னை எடுத்து வைத்திருந்த புது சட்டை, கால்சராயை உடுத்திக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தான். உறவுகள் அவனை சூழ்ந்துகொள்ள, புது மாப்பிள்ளைக்கே உண்டான பளபளப்பு அவன் முகத்தில் ஜொலித்தது. மாலையிட்டு, நலுங்கு வைத்து பெரியோர் அனைவரும் ஆசிர்வதிக்க, நெஞ்சை நிறைக்கும் பரவசத்தை அனுபவித்தபடி கல்யாண மண்டபத்திற்கு புறப்பட்டான்.
“வாங்க மாப்பிள்ளை! வாங்க மாப்பிள்ளை!!”
திருமண மண்டபத்தில் பெண்வீட்டார் எதிர்கொண்டு அழைக்க, ‘மாப்பிள்ளை’ என்ற விளிப்பு சற்றே அவனுக்கு கூச்சத்தைக் கொடுத்தது. விழா நாயகனன்றோ இந்த மாப்பிள்ளை!! அனைவரது கண்களும் அவன் மீதே இருந்தது. அவனது உள்ளமோ அவளைத் தேடியது.
“சஞ்சய் சீக்கிரம் கிளம்பு, நான் வந்தவங்கள போய் கவனிக்கறேன்” என்று விட்டு அவனது அம்மா சென்றுவிட, மாப்பிள்ளை அறையில் தனது பெரியப்பா, மற்றும் பெரியப்பா மகன்களான இரண்டு அண்ணன்களோடு கதைபேசியபடியே தயாரானான்.
“ஏண்டா, இப்போ பொண்ணுங்களுக்கு பியூட்டி பார்லர்’ல இருந்து ஆள் வந்து மேக் அப் போட்டு விடற மாதிரி பசங்களுக்கும் செய்யறாங்களாம். நீ அதெல்லாம் ஏற்பாடு செய்யலையா?”
“பெரியப்பா, நான் மூஞ்சிக்கு பவுடர் கூட அடிச்சதில்லை, இதுல பியூட்டி பார்லரா?!”
“அநியாயத்துக்கு நல்லவனா இருக்கியே… ஒரே புள்ளைன்னு உன்னை உலகம் தெரியாம வளர்த்துட்டான் என் தம்பி…”
பெரியப்பா கூறியதைக் கேட்டு, ‘எனக்கா ஒன்னும் தெரியாது?’ என்று தன்னுள்ளே சிரித்துக்கொண்டான்.
“டேய் சஞ்சு, மத்த விஷயம் தெரியலானாலும் பரவால்ல… தெரிய வேண்டியதெல்லாம் தெரியுமா இல்லை அண்ணன் க்ளாஸ் எடுக்கணுமா?”
அவனை சீண்டினான் அவனது அண்ணன்.
“ஏன் அண்ணே நீ வேற… நான் ஒன்னும் பால்வாடியில்லை… எல்லாம் தெரியும்…”
அவன் யதார்த்தமாய்க் கூற, அண்ணன்மார்களோ அவனை விடாப்பிடியாக கேள்விகள் கேட்டு, கேலிப் பேச்சுகள் பேசி ஒருவழியாக மாப்பிள்ளை அழைப்பிற்குத் தயாராகினர்.
போடி மாப்ள… உனக்கு அணுகுண்டு வெயிட்டிங்!!
No comments:
Post a Comment