Monday, 6 January 2020

கா(த)லர் டியூன் - 15 (Final)




ஒரு வாரமாக பரீட்சை ஒரு புறம், பப்புளூவின் இழப்பு மறுபுறம் என்று அலைக்கழிக்கப்பட்ட பூமிகா, மனமும் உடலும் தேறி இயல்பு நிலைக்குத் திரும்பினாள். அன்று காலை மிடுக்காக அலுவலகத்திற்கு தயாரான சஞ்சு, இரவு உடை கூட மாற்றாமல் படித்துக்கொண்டிருந்த பூமிகாவை கேள்வியாய் நோக்கிக்கொண்டு நின்றிருந்தான்.
“பூமிகா, காலேஜுக்கு டைம் ஆச்சு, நீ இன்னும் கிளம்பல?”
“இன்னிலேர்ந்து எனக்கு ஸ்டடி ஹாலிடேஸ் மாம்ஸ்…”
“ஓ!”
“இன்டெர்னல்ஸ்ல மார்க் குறைஞ்சுடுச்சு… செமெஸ்டர்ல நல்ல மார்க் வாங்கணும். பயமா இருக்கு மாம்ஸ்…”
அவளது பரிதவிப்பை இவனோடு அவள் பகிர்ந்துகொள்ள, இவனது மனமும் இளகியது.
“என்ன பயம் உனக்கு? நீதான் நல்லா படிக்கற பொண்ணாச்சே?”
“ஆமா மாம்ஸ், மார்க் குறைஞ்சு ரொம்ப அவமானமா இருக்கு… செமஸ்டர்ல கண்டிப்பா டிபார்ட்மென்ட் டாப்பரா வந்தே ஆகணும்…”
“சரி நீ படி… நான் ஆஃபிசுக்கு போயிட்டு வந்துடறேன்…” என்றுவிட்டு கிளம்பிச் சென்றான்.

வண்டியின் பின்னிருக்கையில் அவள் அமர்ந்து வர, முன்னே கண்ணாடி வழியே அவளை அவ்வப்போது பார்த்துக்கொண்டும், ரசித்துக்கொண்டும் வண்டியை செலுத்துபவனுக்கு இன்று அவளின்றி மனம் கனத்தது. வெற்று இருக்கையை பார்த்துக்கொண்டே வண்டியை செலுத்தியவன் தான் எங்கு செல்கிறோம் என்பதைக் கூட கவனிக்காமல், மூடப்பட்டிருந்த கல்லூரியின் இரும்புக் கதவுகளை கண்ட பின்னே தான் வழக்கம் போல் கல்லூரிக்கு வந்திருப்பதை உணர்ந்தான். சிரித்துக்கொண்டு வண்டியைத் திருப்பி அலுவலகத்திற்கு சென்றவன், கைப்பேசியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அவளது புகைப்படங்களை அவ்வப்போது எடுத்துப் பார்த்துக்கொண்டான்.

“என்ன சஞ்சய், இன்னைக்கு லீவுக்கு அப்ளை பண்ணியிருந்தீங்க, இப்போ ஆஃபிஸ் வந்திருக்கீங்க?”
கேள்வியாய் அவன் முன்னே வந்து நின்றார் அவனது மேலாளர்.
“அது… பெர்சனல் விஷயமா லீவ் எடுத்திருந்தேன்… ப்ளான் மாறிடுச்சு… அதான் லீவ வீணாக்க வேண்டாம்னு ஆஃபிஸ் வந்துட்டேன். இன்னொரு நாள் எடுத்துக்கறேன் சார்…”
“ஓகே!”      
பரீட்சைகள் முடிந்துவிட்ட நிலையில் இன்றொரு நாள் பூமிகாவை கல்லூரியில் விடுப்பு எடுக்கச் சொல்லி, அவளை வெளியே அழைத்துச் சென்று தனது மனதின் அபிலாஷைகளை உரைத்திட எண்ணியவனுக்கு, இன்று காலை அவள் தனது படிப்பை எண்ணி இவனிடம் வருந்த, அவளது இறுதிப் பரீட்சைகள் முடியும் வரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்து, அலுவலகம் வந்துவிட்டான், சஞ்சு.

ஏறக்குறைய பத்து நாட்களாக அவளை அவன் சுற்றிச்சுற்றி வந்த பொழுதிலும், அவள் கவனம் சிதராமல் படிப்பில் தொலைந்திருந்தாள். இவன் பதினைந்து முறை காலர் டியூன் மாற்றிவிட்டும் ஒன்று கூட அவள் அறிந்துகொள்ளவில்லை. அவனது நீண்ட காத்திருப்புக்கு பின், இறுதித் தேர்வுகள் தொடங்கி, கடைசி பரீட்சையும் வந்தது.

அதிகாலை எழுந்து படித்துக்கொண்டிருந்த பூமிகாவிற்கு, அவளது அக்காவிடம் இருந்து அழைப்பு வந்தது.
“ஹலோ பூமிகா?”
“ஹலோ அக்கா… எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன்டி… பரீட்சைக்கு படிச்சுட்டு இருக்கியா?”
“கடைசி பேப்பர் இன்னைக்கு, அதான் ரிவைஸ் பண்ணிட்டு இருந்தேன்...”
“சரி எக்ஸாம் நல்லபடியா எழுது. இன்னைக்கு ஏஜென்சி தொடங்கறோம்ல, அந்த பூஜைக்கு எல்லாரையும் வரச்சொல்லு. அத்தை, மாமா வரேன்னு சொன்னாங்க, இருந்தாலும் நீயும் ஒரு வார்த்தை அவங்ககிட்ட சொல்லு …”
“அத்தை சொன்னாங்க அக்கா… கண்டிப்பா வருவாங்க… என்னால தான் வரமுடியல. நான் அப்புறமா வந்து பார்க்கறேன்…”                    
“நிச்சயம் நீ வரணும். சஞ்சு மாமாவால தான் எங்களுக்கு இந்த ஏஜென்சி கிடைச்சிருக்கு… ரொம்ப தேங்க்ஸ் டி…”
“இதுக்கு எதுக்கு கா தேங்க்ஸ் சொல்ற…”
“அப்புறம், இன்னொரு விஷயம் டி… சந்தோஷமான விஷயம் தான்…” 
“சொல்லு கா...”
“அது… அது…”
“நீ தயங்கறத பார்த்தா… குட்டி பாப்பாவா?”
மந்தமாய் பேசிக்கொண்டிருந்த பூமிகாவின் குரலில் உற்சாகம் துள்ளியது.
“ஆமாடி…”
“வாவ்… சூப்பர் அக்கா… இன்னைக்கு எக்ஸாம் முடிச்சுட்டு சாயந்தரமே நான் வரேன்…” என்றவள், மேலும் அக்காவின் உடல் நலத்தை விசாரித்துவிட்டு அழைப்பினைத் துண்டித்தாள். அதற்குள்ளாக, இன்று கல்லூரி இறுதி நாள் என்பதால் புடவையில் வரும்படி தோழிகளிடமிருந்து ஏகப்பட்ட குறுஞ்செய்திகள் வந்திருக்க, புத்தகங்களை எடுத்து வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள். 

இன்றுடன் அவளது பரீட்சைகள் முடியப்போகும் மகிழ்ச்சியில் சஞ்சு எப்பொழுதும் போல் கனவில் அவளோடு கைக்கோர்த்து, “ஒரு தேவதை வந்துவிட்டாள் என்னைத் தேடி…” என்று பாடிக்கொண்டிருக்க, குளித்து முடித்து வந்தவள், தனது அலமாரியில் புடவைகளை அலசத் தொடங்கினாள். ஒவ்வொன்றாக அவள் பார்த்துக்கொண்டே வர, அவள் கண்ணில் பட்டது அன்று அவள் எடுத்து வைத்த ஃப்ரேம் செய்யப்பட்டிருந்த கல்யாண பத்திரிகை. இவ்வளவு நேரம் அவளது மனதில் குடிகொண்டிருந்த மகிழ்ச்சி அனைத்தும் வற்றிப்போனது. ஈரமான கண்களோடு அவன் அருகே அவள் சென்று நிற்க, அவனோ முகத்தில் சிறு முறுவலோடு தலையணையை இறுகக் கட்டிக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தான். ‘ஏன் மாம்ஸ், என்னை எப்போ தான் ஏத்துக்க போறீங்க?’ என்று மனதுள் வருந்தியவள், கண்களை துடைத்துக்கொண்டு, தயாராகி, தனது புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்று அமர்ந்து கொண்டாள். 

மெல்ல கண் விழித்து எழுந்த சஞ்சு, அவளுக்கு கல்லூரிக்கு நேரமாகிவிட்டதை உணர்ந்து அவசர அவசர குளித்து முடித்து வந்தான்.
“பூமிகா…” என்று குரல் கொடுத்துக்கொண்டே அடுக்களைக்குள் வந்தவன், அவள் உணவருந்திக்கொண்டே பாடப்புத்தகத்தில் கவனம் செலுத்தியிருப்பதைக் கண்டான்.
‘என்ன இவ, புடவைல இருக்கா?!’ என்று யோசித்துக்கொண்டே வெளியே வந்தவன், வாயிலில் இருந்த ரோஜா செடியிலிருந்து ஒரு பூவைக் கிள்ளிக்கொண்டு அவள் எதிரே சென்று நின்றான். கையில் பூவுடன் தன்னெதிரே நிற்பவனைக் கண்டு ஒரு நொடி அவள் இன்பம் கொள்ள,
“உன்னோட பிங்க் புடவைக்கு மேட்சிங்கா இருக்கும்… வச்சுக்கோ...” என்று அவன் கூறக்கேட்டு மனம் வாடினாள். ‘ஆசைப்பட்டு கொடுக்கலயா? மேட்சிங்கா இருக்கும்னு தான் கொடுத்தீங்களா?’ என்று மனதிற்குள்ளே மன்றாடினாள்.

வாயிலில் அவன் காத்திருக்க, தனது பையை எடுத்துக்கொண்டு வந்தவள், 
“என்ன மாம்ஸ் ஜீன்ஸ்ல இருக்கீங்க?” என்றாள், கேள்வியாக.
“ஆமா, இன்னைக்கு விசேஷமான நாள் இல்லையா? அதான் லீவ் போட்டுட்டேன்…” 
‘சரி’ என்று தலையை ஆட்டிவிட்டு வண்டியில் ஏறி அவள் அமர, ஏதேதோ பாடல்களை முணுமுணுத்துக்கொண்டே கல்லூரிக்கு வந்து சேர்ந்தான். 
“எக்ஸாம் நல்லா எழுது… நேரம் ஆச்சு நான் கிளம்பறேன்…” என்றவன், அவள் ‘சரி’ என்றதும் மறுநொடி வண்டியை கிளப்பிக்கொண்டு மறைந்து போனான்.

வீட்டிற்குத் திரும்பியவன், 
“அம்மா நீங்க ரெண்டு பேரும் கிளம்பிட்டீங்களா இல்லையா?”
“நாங்க கிளம்பிட்டோம், நீயும் ட்ரெஸ் மாத்திட்டு வா. இப்பத்தான் உன் மாமனார், மாமியார் ஃபோன் பண்ணாங்க…”
“நான் வரல மா, எனக்கு முக்கியமான வேலை இருக்கு. நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க…”
“நீ வராம எப்படி டா?”
“அம்மா, பூமிகா இல்லாம நான் மட்டும் எப்படி வர்றது? நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க… நான் அவளை கூட்டிக்கிட்டு இன்னொரு நாள் அங்க போயிட்டு வந்துடறேன்…”
“சரி, வீட்டை பத்திரமா பாத்துக்கோ…” என்றுவிட்டு தீபிகா ஏஜென்சி விழாவிற்கு  சீதாலட்சுமியும், ராமநாதனும் கிளம்பிச் செல்ல, கையோடு வீட்டினை பூட்டிவிட்டு, தான் எண்ணியிருந்தவற்றை முடிக்க, வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றான், சஞ்சய்.

இரண்டு மணி நேரம் கழித்து வீட்டிற்குத் திரும்பியவன், தான் நினைத்த காரியங்கள் முடிந்துவிட்ட திருப்தியில் வரவேற்பறை சோபாவிலேயே தொப்பென்று விழுந்தான். தனது கைப்பேசிக்கு அழைத்தவன், ‘பூமி என்னை சுத்துதே… ஊமை நெஞ்சு கத்துதே…’ என்று ஒலித்த காலர் டியூனைக் கேட்டு சிலிர்த்துப்போனவன், ‘பூமி செல்லம் இந்தப் பாட்ட கேட்டா உனக்கு சகலமும் புரிஞ்சுடும்…’ என்று எண்ணியபடி கனவுலகில் மிதக்கத் தொடங்கினான். சிறிது நேரம் கழித்து, அவளை அழைத்துவர கல்லூரிக்கு விரைந்தவன், கல்லூரி வாயிலில் காத்திருக்கத் தொடங்கினான். 
“அண்ணா, என்ன இங்க நிக்கறீங்க? பூமிகா அப்போவே போயிட்டாளே…” என்றபடி அவன் எதிரே வந்து நின்றனர் பூமிகாவின் தோழிகள்.
‘எனக்கு ஃபோன் கூட பண்ணாம எங்க போனா?!’ என்று குழம்பிப்போனான்.
“இன்னைக்கு எக்ஸாம் முடிஞ்சு காலேஜு கடைசி நாளாச்சே, பிரெண்ட்ஸ் கூட பேசியிருந்துட்டு வர நேரமாகும்னு நான் கொஞ்சம் லேட்டா வந்தேன் மா…”
“ஆமா அண்ணா, ஆனா அவ ரொம்ப தலை வலிக்குதுன்னு எக்ஸாம் முடிஞ்சதும் கிளம்பிட்டா…”
“ஓ! அப்போ அவ வீட்டுக்குத்தான் போயிருப்பா. நான் பார்த்துக்கறேன்…” என்றவன் வண்டியைக் கிளப்ப எத்தனிக்க, எதிரே காவல்துறை ஆய்வாளரும், கல்லூரி முதல்வரும் வந்து நின்றனர்.
பூமிகாவின் தோழிகளை நோக்கி, “நீங்க மூணு பேரும் இந்தப் பொண்ணோட ப்ரெண்டஸா?” என்றார் ஆய்வாளர், பூமிகாவின் புகைப்படத்தை நீட்டி. 
“ஆமா சார், இவ எங்க ப்ரெண்ட் பூமிகா தான்…” என்ற அத்தோழிகள் குழப்பமாய் சஞ்சுவை நோக்க, பயம் கொண்ட சஞ்சு, “அவளுக்கு என்ன ஆச்சு சார்? நான்தான் அவளோட ஹஸ்பண்ட்…” என்றான், ஏறக்குறைய அழும் நிலையில்.
“நீங்க கூட வாங்க, சார்” என்று தனது ஜீப்பின் அருகே அவனை மட்டும் அழைத்துச் சென்ற ஆய்வாளர்,
“சார், சாரி டு சே, உங்க மனைவி கடத்தப்பட்டிருக்காங்க… காலேஜ் வெளியே இருக்கற பஸ் ஸ்டாப் எதிரே உள்ள இன்ஸ்டிடியூஷன்ல உள்ள சி.சி.டி.வி.ல ரெகார்ட் ஆகியிருக்கு…” என்று கூறிக்கொண்டிருக்க, சஞ்சய்யின் கைப்பேசியில் வந்த அழைப்பு ஒன்று இடைமறித்தது.
கைகள் நடுங்க நின்றிருந்த சஞ்சய்யிடம், “எடுத்து பேசுங்க, ஸ்பீக்கர்ல போடுங்க… அன்னோன் நம்பர்னா (unknown number) அந்த க்ரிமினல்சா தான் இருக்கணும்…” என்று ஆய்வாளர் கூற, தாமதிக்காது அழைப்பினை ஏற்றான்.
“மிஸ்டர் சஞ்சய்… உங்க மனைவி இப்போ என் கஸ்டடியில… ஐம்பது லட்சம் பணம் தரலனா, உங்க மனைவிய உயிரோட பார்க்க முடியாது… போலீஸ் கிட்ட போன, உன்னையும் பீஸ் பீஸாக்கிடுவோம்… ராத்திரி எங்க எத்தனை மணிக்கு பணம் எடுத்துட்டு வரணும்னு சொல்றேன்...”
அழைப்பு துண்டிக்கப்பட்டதும் அவன் அழத்தொடங்க,
“சஞ்சய், ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்செல்ப்… இப்படி போன் பண்ணி மிரட்றானுங்கன்னா எவனோ பழைய கிரிமினல் தான். இப்ப இருக்கற க்ரிமினல்ஸ் பயங்கரமா டெக்னாலஜி தெரிஞ்சவனுங்களா இருக்கானுங்க. நிச்சயம் இந்த குரூப்பை சீக்கிரம் பிடிச்சுடலாம்…” என்றார் ஆய்வாளர்.
“சார், வேண்டாம் சார்… நான் எப்படியாவது பணத்தை புரட்டி கொடுத்தடறேன்… ப்ளீஸ்... அவளுக்கு ஏதாவது ஆயிடுச்சுனா நான் செத்துடுவேன் சார்…”
ஆய்வாளரின் காலில்  விழுந்து சஞ்சய் அழ, அவனை ஒருவாறு சமாதானம் செய்து, தற்காப்பு அறிவரைகள் கூறிவிட்டு தனது தேடுதல் வேட்டையில் இறங்கினார்.

பித்து பிடித்தவன் போல் அழுது ஓய்ந்தவன், மெல்ல தன்னை சமன் செய்துகொண்டு கல்லூரி பேருந்து நிறுத்தத்தின் எதிரே இருக்கும் கணினி பயிற்சி மையத்திற்கு விரைந்தான்.
“சார், கொஞ்ச நேரம் முன்னாடி… பூமிகா…” 
அவளது பெயரை உச்சகரித்த நொடி அவன் கண்கள் கலங்கி அழத்தொடங்கினான். அவன் பருக நீர் கொடுத்த வரவேற்பாளர், அமர ஒரு நாற்காலியும் எடுத்துக்கொடுத்தார்.
“நீங்க யாரு சார்…”
“நான் அவளோட ஹஸ்பண்ட்…”
சஞ்சய்யை அவன் கேள்வியாக நோக்க, தனது கைப்பேசியில் இருந்த அவர்களின் திருமண புதைப்படத்தினை காண்பித்தான்.
“சார், எனக்குத் தெரிஞ்சதெல்லாம் செல்றேன். போலீஸ் கிட்டயும் அதைத்தான் சொன்னேன். எங்க இன்ஸ்டிடியூட் ரிசெப்ஷன் டெஸ்க்ல இருந்து பார்த்தா அந்த பஸ் ஸ்டாப் தெரியும். இங்க நிறைய பொண்ணுங்க படிக்க வர்ரதால நாங்க சி.சி.டி.வி. கேமரா வச்சிருக்கோம். இன்னைக்கு மதியம் உங்க வைஃப் தனியா பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு இருந்தாங்க. அப்போ ஒரு ஆம்னி வந்து நின்னுச்சு. அடுத்த சில நொடில பயங்கர வேகத்துல அந்த ஆம்னி கிளம்பிப் போயிடுச்சு. அங்க நின்னுட்டு இருந்த உங்க மனைவியையும் காணல. சந்தேகம் வந்து போலீஸ் கிட்ட சொல்லி சி.சி.டி.வி. வீடியோவையும் கொடுத்தேன். இதுக்கு முன்னாடி அந்த வண்டி இந்த பக்கம் வந்திருக்கானு பார்க்க மொத்த சி.சி.டிவி. ரெக்கார்டிங்கயும் வாங்கிட்டு போயிருக்காங்க. மன்னிச்சுடுங்க சார், அந்த நேரத்துல என்னால உங்க மனைவிய காப்பாத்த முடியல…”
தோற்றத்தில் தன்னை விட அவன் இளையவனாக இருந்தாலும் அவன் செய்த இமாலய உதவிக்கு அவன் காலில் விழாத குறையாக நன்றி கூறினான், சஞ்சய். 

அவ்விடத்தையே சுற்றிச்சுற்றி வந்தவன் மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் வேதனையின் உச்சத்தில் இருந்தான். அலைந்து திரிந்து மாலை வீடு வந்து சேர, அங்கு காத்திருந்த தாய், தந்தையைக் கண்டதும் நடந்தவற்றைக் கூறி அழுதிருந்தான். அவர்கள் அதிர்ந்தாலும், ராமநாதன் சுதாரித்துக்கொண்டு பணத்திற்காக முடிந்தளவு ஏற்பாடு செய்யத் தொடங்கினார். பூமிகாவின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களும் பதறியடித்துக்கொண்டு சஞ்சுவின் இல்லத்திற்கு வந்ததோடு, அவர்கள் பங்கிற்கு பணம் ஏற்பாடு செய்ய முயற்சித்திருந்தனர்.

அவ்வப்போது, ஆய்வாளர் சஞ்சய்யின் கைபேசிக்கு அழைத்து தனக்கு வேண்டிய தகல்வல்களை மட்டும் பெற்றுக்கொண்டார். கைபேசியை வெறித்தபடி அவன் வாயிலில் அமர்ந்திருக்க, பூமிகாவின் நிலை எண்ணி உள்ளே மெல்ல மெல்ல மடியத் தொடங்கினான்.

ஆய்வாளரிடமிருந்து அழைப்பு வர, அதை ஏற்றவன்,
“சார்… என் பூமிகா கிடைச்சுட்டாளா? சார் ப்ளீஸ் சொல்லுங்க… அவ இல்லனா நான் செத்துடுவேன் சார்… அவ மேல உயிரே வச்சிருக்கேன் சார். அவ என்னை குலசாமின்னு சொல்லுவா. ஆனா, அவ தான் சார் எனக்கு குலசாமி. சார், அந்த க்ரிமினல்ஸ் என்ன கேட்டாலும் நான் கொடுத்துடறேன் சார்… என் கழுத்தை கூட அறுத்துக்க சொல்லுங்க, ஆனா அவளை விட்டுட சொல்லுங்க சார்… ப்ளீஸ் சார்… ப்ளீஸ் சார்…” என்று அழுது ஓய்ந்தவன், நிமிடங்கள் கழித்தே அழைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தான். 
மீண்டும் அவன் ஆய்வாளருக்கு அழைக்க, அவரது கைப்பேசி இணைப்போ கிட்டாமல் போனது. வெறிகொண்டவன் போல் கத்திக்கொண்டு எழுந்தவன் தனது பைக்கில் ஏறி அமர, எதிரே ஆய்வாளரின் வாகனம் வந்து நின்றது. உள்ளிருந்து பூமிகா இறங்கி வர, அவளைக் கண்டதும் தடுமாறி ரோட்டிலேயே விழுந்தான், சஞ்சய். அவனை பூமிகா எழுப்பிவிட, குடும்பத்தினரும், அண்டை வீட்டாரும் அவர்களை சூழ்ந்து கொண்டனர். 

“ சார், உங்க மனைவிக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. கிட்டத்தட்ட அம்பது கிலோமீட்டர் தண்டி இவங்கள கடத்திட்டு போயிருக்காங்க. இவங்க சரியான நேரத்துல காவலன் SOS  ஆப் (Kavalan SOS App) பயன்படுத்தியதால தக்க சமயத்துல அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் ரெஸ்கியூ பண்ணியிருக்காரு. எங்க டீம் இவங்கள ஐடென்டிஃபை செஞ்சு உங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்துட்டோம்” என்றவர், “சரியான நேரத்துல நீங்க அந்த ஆப் உபயோகிச்சதால உடனே உங்கள காப்பாத்த முடிஞ்சுது. இதை உங்க பிரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் சொல்லி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துங்க. அந்தக் க்ரிமினல்ஸ நாங்க பாத்துக்கறோம்…” என்று பூமிகாவிடம் கூறிவிட்டு, அனைவரிடமும் விடைபெற்றுச்சென்றார், ஆய்வாளர். 

பூமிகாவை உள்ளே அழைத்து, அவளுக்கு பருக நீர் கொடுத்து, காபி கொடுத்து, திருஷ்டி கழித்து என அனைத்து ஆர்ப்பாட்டங்களும் அரங்கேற, அவள் எதிரே சுவரில் சாய்ந்தபடி நின்றிருந்த சஞ்சய், இமைக்கவும் மறந்து அவளையே பார்த்திருந்தான். முப்பொழுதும் மலர்ந்திருக்கும் அவளது பூ முகம் வாடியிருக்க, அழுதழுது கண்கள் வீங்கியிருக்க, புள்ளி மானென சுற்றுபவள் சோர்ந்து அமர்ந்திருந்தாள். அவளது இந்நிலையைக் காணக்காண அவனது நெஞ்சம் வீங்கி வெடிக்கும் ரணம் கொண்டது. 
“பூமிகா, பயப்படாத மா, தைரியமா போன்ல அந்த ஆப் போட்டு தப்பிச்சு வந்திருக்க… தைரியமா இரு மா...” 
பரிவாக பேசினார், ராமநாதன்.     
“எங்கிருந்துடி உனக்கு இதெல்லாம் தெரிஞ்சுது?”
கண்கள் கலங்கி , அவளுக்கு இட்டிலி ஊட்டிவிட்டபடியே வினவினாள், பூமிகாவின் தாய்.
“கொஞ்ச நாள் முன்னாடி காலேஜுல இந்த காவலன் ஆப் பத்தி பேச போலீஸ் கமிஷனரை வரவச்சிருந்தாங்க. அதை எப்படி பயன்படுத்தணும்னு அவர் சொல்லி தெரிஞ்சுக்கிட்டேன். நானும் என் பிரெண்ட்ஸும் அத போன்ல போட்டு வச்சிருந்தோம். ஆனா, ஆபத்துனு வந்தா முதல்ல கையில இருக்கற போன க்ரிமினல்ஸ் பிடிங்கிட்டா என்ன பண்றதுனு யோசிச்சு, ஒரு செகண்ட் ஹாண்ட் போன் வாங்கி அதுலயும் இந்த ஆப் போட்டு வச்சிருந்தேன். இன்னைக்கு திடீர்ன்னு ரெண்டு பேர் ஆம்னி வேன்ல வந்து, என்னை வலுக்கட்டாயமா வண்டிக்குள்ள இழுத்து ஸ்ப்ரே அடிச்சுட்டாங்க. அடுத்த நிமிஷம் நான் மயங்கிட்டேன். கண்ணு முழிச்சு பார்த்தப்போ ஏதோ ஒரு கோடௌன்ல இருக்கேன்னு மட்டும் புரிஞ்சுது. என்னோட கையும், காலும் கட்டப்பட்டிருந்தது. அவங்க ரெண்டு பேரும் குடிச்சிட்டு இருந்தாங்க. என் போன் அவங்க கைல இருந்தது… ‘உன் புருஷன் விதவிதமா காரு வச்சிருக்கான்…  பிசுக்கோத்து அம்பது லட்சம் கேட்டா கொடுக்கமாட்டானா’னு சொல்லி கண்டபடி திட்டிட்டும், பேசிட்டும் இருந்தாங்க. என் பக்கத்துல என் பேக் இருந்தது. முன்னாடி ஜிப்ப மெல்ல திறந்து அந்த இன்னொரு போன் எடுத்து ஆப்ல SOS அழுத்தினேன். கண்ணிமைக்கற நேரத்துல போலீஸ் வந்துட்டாங்க. அவங்க என்னை காப்பாத்தி ஒரு மணி நேரத்துல இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க…”
“பரவால்ல, இந்தளவுக்கு உஷாரா நீ செயல்பட்டிருக்கியே!! கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்”
அவளது கைகளை இதமாய் பற்றிக்கொண்டாள், சீதாலட்சுமி.

சஞ்சுவிற்கும், பூமிகாவிற்கும் தைரியம் கூறிவிட்டு வந்தவர் அனைவரும் களைந்து செல்ல, உடல் சோர்வில் தனது அறையில் சென்று படுத்துக்கொண்டாள், பூமிகா. மெல்ல அவள் அருகே வந்தமர்ந்த சஞ்சு, அவளது கைகளை தனது கைகளுக்குள் அள்ளிக்கொள்ள, அவளோ தனது கைகளை உருவிக்கொண்டு முகத்தினை மூடி அழத்தொடங்கினாள்.
“பூமிகா… பூமிகா அழாதமா… நான் இருக்கேன் உனக்கு… அழாதமா” என்றான், அவனும் அழுதபடி.
எழுந்து அமர்ந்தவள்,
“என்னை உங்களுக்கு பிடிக்குமா மாம்ஸ்?” என்றாள், கூராய் நோக்கியபடி. 
அவன் பதில் கூறும்முன்,
“நான் சொல்லட்டுமா மாம்ஸ்… ‘என் பூமிகா கிடைச்சுட்டாளா சார்? அவ இல்லனா நான் செத்துடுவேன் சார்… அவ மேல உயிரே வச்சிருக்கேன் சார். அவ என்னை குலசாமின்னு சொல்லுவா. ஆனா, அவ தான் சார் எனக்கு குலசாமி. சார், அந்த க்ரிமினல்ஸ என் கழுத்தை கூட அறுத்துக்க சொல்லுங்க, ஆனா அவளை விட்டுட சொல்லுங்க சார்’... சரியா மாம்ஸ்?”
“பூமிகா…”
“என்னை காப்பாத்திட்டத சொல்ல இன்ஸ்பெக்டர் உங்களுக்கு ஃபோன் பண்ணாரு. நான் பேசறேன்னு சொல்லி ஃபோன வாங்கினேன். நீங்க அவர்கிட்ட பேசறதா நினைச்சு… ஹ்ம்ம்… ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்ட இதெல்லாம் சொன்னீங்க… ஆனா இத்தனை நாள்ல ஒரு தடவை கூட என்கிட்ட சொன்னதில்லையே, ஏன்? உண்மையாவே மனசுல உள்ளத ஒரு எமோஷன்ல அவர்கிட்ட சொல்றதா நினைச்சு சொன்னீங்களா? இல்லை, போலீஸ் கேஸுன்னு பயந்து இப்படியெல்லாம் பேசினீங்களா?”
“பூமிகா ப்ளீஸ்… நான் எவ்வளவு வேதனைல இருந்தேன்னு எனக்குத்தான் தெரியும். என் மனசுல இருந்ததை தான் சொன்னேன்.”
“அப்போ, உங்களுக்கு என்னை பிடிக்குமா?”
விட்டேத்தியாய் வினவினாள். அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்தவன்,
“ஆமா… பிடிக்கும்… என் உயிருக்கும் மேல உன்னை பிடிக்கும்… ‘நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படறேன்’னு நீ சொன்ன அந்தத் தருணத்திலேர்ந்து உன்னை பிடிக்கும்… ‘ஹீரோ மாம்ஸ்’னு என்னை நீ சுத்திசுத்தி வர்றது பிடிக்கும்… நீ என் மேல வச்சிருந்த பொசெசிவ்னெஸ் பிடிக்கும்… என்கிட்ட கோவிச்சுக்கறது பிடிக்கும்… தலை சாய்ச்சு கண்ணு விரிச்சு சிரிக்கறது பிடிக்கும்… என் கனவுல நீ வரது பிடிக்கும்… நான் ஹீரோ இல்லனு தெரிஞ்சும் என்னை ஹீரோவா நினைக்கவச்ச உன் காதல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்…” என்றான் கண்களில் நீர் வடிய.
“மாம்ஸ்…”
“நான் ஹீரோலாம் இல்ல பூமிகா… இதோ இன்னைக்கு உனக்கு ஆபத்து வந்ததும் என்னால என்ன பண்ண முடிஞ்சுது? வண்டிய எடுத்துக்கிட்டு சுத்தினேன்… பைத்தியக்காரனாட்டம் அழுதேன்… வேற என்ன பண்றதுனே தெரியல பூமிகா… நீ நினைக்கற ஹீரோ நான் இல்லை…” என்றவன், தோள்கள் குலுங்க அழத்தொடங்கினான்.
அவன் அழுவதைத் தாளாமல் பதறி கட்டிலை விட்டு கீழே இறங்கியவள், அவனை இறுகக் கட்டிக்கொண்டு, “என்ன மாம்ஸ் நீங்க இப்படியெல்லாம் பேசறீங்க? என் மேல இவ்வளவு ஆசையா உங்களுக்கு?” என்றாள், கனிவாக.
“உன் மேல ஆசை மட்டுமில்ல மரியாதையும் ரொம்பவே உண்டு!! நான் ரொம்பவே சாதாரணமா வளர்ந்த பையன். படிப்புல சுமார் தான். ஸ்போர்ட்ஸ், பேச்சு போட்டி, ஓவியப் போட்டின்னு எதுலயும் கலந்துக்க மாட்டேன். ரொம்ப பிரெண்ட்ஸ் கிடையாது. தட்டுத்தடுமாறி B.Sc. சேர்ந்தேன். எல்லா பசங்கள மாதிரி எனக்கும் காலேஜு கனவுகள் இருந்தது. ரெண்டாவது வருஷம் படிக்கும்போது பர்ஸ்ட் இயர்ல ஒரு பொண்ண ரொம்பப் பிடிச்சிருந்தது. அவளை இம்ப்ரெஸ் பண்ண டம்பெல்ஸ் வாங்கி எக்சர்சைஸ் பண்ணேன். நல்லா ட்ரெஸ் பண்ணிக்க ஆரம்பிச்சேன். ஒரு நாள் என் பிரெண்ட்ஸ் அந்த பொண்ணுகிட்ட நான் அவள விரும்பறத சொல்லிட்டாங்க. அவ என்னை திட்டியிருந்தா கூட வருந்தியிருக்க மாட்டேன். ஆனா, என்னை பார்த்து, ‘நீங்க லவ் பண்றீங்களா? உங்களுக்கு அதெல்லாம் கூட என்னன்னு தெரியுமா? உங்களுக்கு அதெல்லாம் செட் ஆகாது. கொஞ்ச நாள் கழிச்சு உங்க வீட்ல பாத்து கட்டி வைக்கற பொண்ணையே லவ் பண்ணிக்கோங்க’னு சொல்லி விழுந்துவிழுந்து சிரிச்சா. எல்லா பசங்களும் சிரிச்சாங்க. நான் ரொம்ப கூனிக்குறுகி போயிட்டேன். அப்போ பரண் மேல போட்ட டம்பெல்ஸ். இப்பதான் தூசி தட்டி எடுத்திருக்கேன், உன்னை இம்ப்ரெஸ் பண்ண. 
தட்டுத்தடுமாறி எம்.பி.ஏ. முடிச்சு ஒரு வேலைல சேர்ந்தேன். இதுவரைக்கும் ஒரு அவார்டு கூட வாங்கினதில்ல. ஆனா, இந்த வருஷம் உன்னால வாங்கினேன்…” என்றான் அவளை ஏக்கத்தோடு பார்த்தபடி.
“என்னாலயா? என்ன மாமா சொல்றீங்க?”
“நீ எனக்குள்ள எவ்வளவு மாற்றத்தை கொண்டு வந்திருக்கனு, உனக்கு தெரியாது பூமிகா. நான் எது சொன்னாலும் ‘நீங்க ஹீரோ மாம்ஸ்’னு புகழ்ந்து பேசுவ. அதனால நான் ஒவ்வொண்ணும் யோசிச்சு தெளிவா பேசத் தொடங்கினேன். அதே போல ஆஃபிஸ்லயும் பேச ஆரம்பிச்சேன். அனாவசியமான பேச்சை குறைச்சேன். மரியாதை வந்தது. ஏனோதானோனு வேலைக்கு போயிட்டு வந்துட்டு இருந்தேன். நீ மேல படிக்கணும், முன்னேறணும்னு பேசறதை கேட்டு நாமும் முன்னேறணும்னு தோணுச்சு. வேலைல கவனம் செலுத்தினேன். பேர் கிடைச்சுது. என்னை ஒரு ஆளா மதிக்காதவங்க கூட, மதிக்க ஆரம்பிச்சாங்க. நான் பார்க்க ரொம்ப சுமாரா இருக்கேன்னு எனக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. ஆனா, நீ ஹீரோன்னு கூப்பிடும்போது, என்னை நானே ஹீரோவா நினைக்கும்போதும் நாமளும் நல்லா உடம்ப வச்சுக்கணும்னு எண்ணம் வந்துச்சு. உனக்கு புடிச்ச அந்த சினிமா ஸ்டார் மேல பொறாமை வந்துச்சு. தினமும் ஒர்க் அவுட் செஞ்சேன்.  

நீ சொல்ற ‘ஹீரோ’ங்கற ஒத்தை வார்த்தை என்னை தலை கீழா மாத்திடுச்சு. எனக்கு அந்த போதை தேவைப்பட்டது. எந்த பொண்ணும் நம்மள திரும்பிப்பார்க்காதுனு நினைச்ச என்னை நீ சுத்திச்சுத்தி வந்த. அதனால தான் ‘நான் நிச்சயம் உங்க மனச மாத்தறேன்’னு நீ சவால்விட்டும் நான் எதுவும் சொல்லாம அமைதியாவே இருந்தேன். 

பூமிகா, கதைகள்ல தான் ராஜகுமாரனுக்காக ராஜகுமாரி காத்துக்கிட்டு இருப்பா. அவன் வந்ததும் தான் தன்னை ராஜகுமாரியாவே உணருவா. ஆனா, நிஜத்துல என்னைப்போல பல ராஜகுமாரனுங்க ராஜகுமாரிக்காக காத்துட்டு இருக்காங்க. தானும் ஒரு ராஜகுமாரன்தான்னு அவன உணர வைக்க உன்னைப் போல ஒரு ராஜகுமாரியாலத்தான் முடியும்…”
அவனை கட்டிக்கொண்டு நெஞ்சுக்குள் முகம் புதைத்தவள்,
“நீங்க என் ஹீரோ தான் மாம்ஸ். யாரு என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை. எனக்குத் தெரியும் என் ஹீரோவ பத்தி...” என்றாள். 
“நான் தான் உன்னை காப்பாத்த வரலையே. உனக்கு ஏதாவது ஆயிடுச்சுனா தூக்க மருந்தை சாப்டுடலாம்னு முடிவோட இருந்த கோழை நான்…”
“என்ன மாம்ஸ் நீங்க? இப்படியெல்லாம் பயம் காட்டறீங்க?”
“ஏன்னா நீயில்லாம நான் வெறும் ஜீரோ…”
“இல்லை மாம்ஸ்… நீங்க ஹீரோதான்… சண்டை போட்டு, கம்பு சுத்தறவன் மட்டும் ஹீரோ இல்லை. ஒரு பொண்ணுகிட்ட கண்ணியமா நடக்கறவனும், அவ மனச, கனவை, உணர்வை புரிஞ்சுக்கறவனும் ஹீரோ தான். நீங்க என் ஹீரோ தான் மாம்ஸ்…” 
அவன் முகத்தை கையிலேந்தியவள், 
“கத்தி சுத்த வரலனாலும், நீங்க தான் என் திப்பு சுல்தான் மாம்ஸ்…” என்று அவள் கூற, அவனது அழுகை அனைத்தும் மறைந்து சிரிப்புகள் வெடித்தன.
அவளை தன் மடி மீது ஏந்திக்கொண்டவன், இதமாய் அணைத்து நெற்றி முத்தமிட்டான். 

அவள் அவனது விழிகளையே நோக்க, அவனும் சளைக்காமல் பார்த்திருக்க, காதலெனும் ஆல விதை வேரூன்றியது.
“இன்னைக்கு என்னென்னமோ ப்ளான் பண்ணேன்… ஆனா, நினைச்சுக்கூட பார்க்காததெல்லாம் நடந்து முடிஞ்சுடுச்சு…”
“என்ன ப்ளான் மாம்ஸ்? நீங்க தீபிகா வீட்டு விசேஷத்துக்கு போகத்தான் லீவு போட்டீங்கன்னு நினைச்சேன்...”
“நீயில்லாம, நான் மட்டும் எப்படி போவேன்? நான் வேற ஒரு முக்கிய வேலையா போயிருந்தேன்…”
“என்னது?”

எதிரே இருந்த மேஜையின் இழுப்பறையிலிருந்து வண்ணத்தாளால் சுற்றப்பட்டிருந்த ஒரு பரிசினை எடுத்தவன், “டு மை டார்லிங்!!” என்று கூறிக்கொண்டே அவளிடம் நீட்டினான். ஆர்வமாய் அதனை பிரித்தவள், உள்ளே கல்யாண பத்திரிகை வைக்கப்பட்டிருந்த அதே போட்டோ ஃப்ரேம், ஆனால் மணப்பெண் பூமிகா என்று பொறிக்கப்பட்டு, திருமண நேரம் மதியம் 1.40 என்று மாற்றப்பட்டிருந்தது. அதை நெஞ்சோடு அனைத்துக்கொண்டவள்,
“ரொம்ப தேங்க்ஸ் மாம்ஸ்…” என்றாள், கண்கள் ஈரமாக.
“தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு? நமக்கு கல்யாண பத்திரிகை இல்லையேன்னு ரொம்ப நாளா வருத்தம். அதான் இன்னைக்கு காலைல போய், இதே மாதிரி ஒரு பத்து பத்திரிகை அச்சடிச்சு வாங்கிட்டு வந்தேன். ஒன்னு ஃப்ரேம் போட்டாச்சு. மீதி பீரோவுல இருக்கு.”
“இன்னைக்கு காலைல தான் இதைப் பார்த்து ரொம்ப வருத்தப்பட்டேன். உங்க மேல ரொம்ப கோவம்…”
“கோவமா? எனக்கு போன் பண்ணியிருந்தா கோவமெல்லாம் போயிருக்கும்…”
“எப்படி?” என்றவள் அவனது கைப்பேசிக்கு அழைக்க, ‘பூமி என்னை சுத்துதே…’ எனும் பாடல் ஒலித்தது.
“டேமேஜ் ஆன பீசு நானு, ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்… புரிஞ்சுதா பூமிகா?”
“புரிஞ்சுது மாம்ஸ்… எப்பவும் போல காலேஜு விட்டு கிளம்பும்போது ஒழுங்கா உங்களுக்கு போன் பண்ணியிருந்தா விஷயம் புரிஞ்சு காலேஜுகுள்ள உங்களுக்காக காத்துட்டு இருந்திருப்பேன், அந்த ராஸ்கல்ஸும் என்னை கடத்தியிருக்க மாட்டாங்க… என்னால எல்லாருக்கும் டென்ஷன்… சாரி மாம்ஸ்…”
அவள் மீண்டும் கண்கள் கலங்க,             
“திரும்பவும் அழாதடா மா, இரு இப்போ உன் மூட மாத்தறேன்…” என்றுவிட்டு எழுந்தவன், அன்று அவள் பரிசளித்த கிட்டாரை கையிலேந்தி நின்றான்.
கண்களை துடைத்துக்கொண்டு ஆர்வமானவள்,
“வாசிக்க போறீங்களா மாம்ஸ்?” என்றாள்.
“ஆமா. உண்மைய சொல்லனும்னா எனக்கு வாசிக்கத் தெரியாது. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போட்டோக்கு போஸ் கொடுக்க என் ப்ரெண்ட் கிட்ட வாங்கினபோது தான் முதன்முதலா கிட்டார தொட்டுப்பார்த்தேன். நீ ஆசைப்படறங்கற ஒரே காரணத்துக்காக இப்போ நாலு மாசமா கத்துக்கிட்டிருக்கேன். இன்னைக்கு என் ஹார்ட்ட ஓபன் பண்ணி அப்படியே நாலு பாட்ட வாசிச்சுக்காட்டி உன்னை இம்ப்ரெஸ் பண்ணனும்னு நினைச்சுட்டு இருந்தேன்.”
“நிஜமாவா மாம்ஸ்?” என்றாள், தலை சாய்த்து, விழி விரிய.   
“நிஜமாதான்… சரி நான் வாசிப்பேனாம், நீ எந்த பாட்டுன்னு கண்டு பிடிப்பியாம்…”
“ஓகே மாம்ஸ்…” என்றவள் காதுகளைத் தீட்டிக்கொண்டு கவனிக்கத் தொடங்கினாள். வாசித்து முடித்தவன், புருவத்தை உயர்த்தி ‘என்ன?’ என்று கேட்க, “ம்ம்… தெரியலையே… நீங்களே சொல்லுங்க மாம்ஸ்…” என்றாள்.
“திரும்பவும் வாசிச்சு காட்டறேன்…” என்றவன் மீண்டும் வாசிக்க, அப்பொழுதும் அவளால் கண்டுபிடிக்க இயலாமல் போனது.
“விநாயகனே வினை தீர்ப்பவனே, வேழ முகத்தோனே, ஞான முதல்வனே… இந்தப் பாட்டு நீ கேட்டதில்லையா?”
“சாமி பாட்டா? நான் ஏதோ சினிமா பாட்டா இருக்கும்னு நினைச்சேன்…”
“எப்பவும் கடவுள் வாழ்த்தோட தானே ஆரம்பிக்கணும். அதான் நம்மள வாழ்க்கைல சேர்த்து வச்ச விநாயகருக்கு ஒரு டெடிகேஷன்… சரி அதை விடு அடுத்து ஒரு இங்கிலிஷ் பாட்டு வாசிக்கறேன்...” என்றுவிட்டு அவன் வாசித்துக் காட்ட, மிகவும் ஆழமாய் சிந்தித்தவள், “எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு. ஆனா, என்ன பாட்டுனே தெரியலையே…” என்று முழித்துக்கொண்டிருந்தாள்.
“இதுவும் தெரியலையா? ஹ்ம்ம்… ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்… ஹவ் ஐ வொண்டர் வாட் யு ஆர்…”
“மாம்ஸ்… இது தான் நீங்க சொன்ன இங்கிலிஷ் பாட்டா? இதெல்லாம் ரொம்ப ஓவர்…” 
மிகவும் பிரயத்தனப்பட்டு பொங்கும் சிரிப்பினை அவள் கட்டுப்படுத்திக்கொண்டாள். 
“பின்ன இது இங்கிலிஷ் பாட்டு தானே? இதை கத்துக்கறதுக்குள்ள அந்த மாஸ்டர் கிட்ட எவ்வளவு திட்டு வாங்கினேன்னு எனக்குத்தான் தெரியும்…”
“மை ஸ்வீட் மாம்ஸ்… எனக்கு ஒரு தமிழ் பாட்டு வாசிச்சு காட்டுங்களேன்…”
“அடுத்து அதான் செல்லம்…” என்றவன் வாசிக்கத் தொடங்கி தடுமாறி நிறுத்தியவன், “நோட்ஸ் கொஞ்சம் மறந்துட்டேன், ஒரு நிமிஷம்…” என்றவன் தான் எழுதி வைத்திருந்த கிட்டார் நோட்ஸ் எடுத்து விரிய வைத்து, அதைப் பார்த்துப்பார்த்து மெல்ல வாசிக்கத் தொடங்கினான்.
“என்னால இதையும் கண்டு பிடிக்க முடியல மாம்ஸ்…”
“கடவுளே, ஒரு கிட்டார் கலைஞனை இப்படியெல்லாமா சோதிப்ப?” என்று மேலே நோக்கி கூறியவன், அவளை நோக்கி, “ஆத்தி எனை நீ பார்த்தவுடனே காற்றில் வெச்ச இறகானேன்…” என்று பாடிக்காட்டினான்.
“காமெடி பண்றீங்களா மாம்ஸ்? அது எவ்வளவு வேகமா வரும், நீங்க இவ்வளவு மிதுவா வாசிக்கறீங்க? நான் ஏதோ பாகவதர் காலத்து பாட்டுனு நினைச்சேன்…”
“நான் இன்னும் முழுசா இந்தப் பாட்ட ப்ராக்டிஸ் பண்ணல…”
“பண்ணுங்க பண்ணுங்க. எனக்கு பிடிச்ச இன்னும் நாலு பாட்டு சொல்றேன். அதையும் கத்துக்கிட்டு வாசிச்சு காட்டுங்க…”
“ஆமா, இப்படியே பிராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருந்தா எப்பத்தான் நாம லவ் பண்றதாம்?”

கன்னங்கள் சிவந்து அவளும் நோக்க, அன்னலும் நோக்க… மன்மத லீலையை வென்றார் உண்டோ?!!


வாழ்க வளமுடன்!!

***** முற்றும் *****

No comments:

Post a Comment