பூமிகா அவனது கண்களை ஊடுருவி நோக்க,
“எதுவா இருந்தாலும் நான் தயார்… தண்டனை என்னனு சொல்லுங்க…” என்றான், அழுத்தம் திருத்தமாக.
"வெரி சிம்பிள். என்னை இப்பவே கல்யாணம் பண்ணிக்கோங்க.."
அவள் கூறியதைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தவன், பதில் பேசிட வார்த்தைகளைத் தேடி ஓய்ந்துபோனான்.
"என்ன ஹீரோ, இன்ப அதிர்ச்சியில வார்த்தை வரலையோ?"
"அதிர்ச்சி தான்… ஆனா இன்பமெல்லாம் இல்லை… இங்க பாரு, நீ சின்ன பொண்ணு… சும்மா…"
திக்கித் திணறி தவித்துப் போயின அவனும், அவனது வார்த்தைகளும்.
"ப்ச்… ப்ளீஸ் ஹீரோ மாம்ஸ், இந்த ஹீரோக்களுக்கு இருக்கற பெரிய குறையே இப்படி காதுல ரத்தம் வரவரைக்கும் அறிவுரை சொல்றது தான். தெரியாம தான் கேட்கறேன் என் அக்கா காதலுக்கு மட்டும் தான் உதவி செய்வீங்களா? என் காதலுக்கு உதவ மாட்டீங்களா?"
"காதலா?"
"ஆமா, ரெண்டு மணி நேரமா… உங்க மேல… எக்கச்சக்கசக்கச்சக்கமா லவ்ஸ், மிஸ்டர் ஹீரோ… அதான் உங்களுக்கு ஃபோன் போட்டு வரவச்சேன்… தாலியும் ரெடி, மாலையும் ரெடி… இன்னொரு நல்ல நாள் பார்த்து, மண்டபம் புடிச்சு, இந்த சொந்தக்காரங்களுக்கு பத்திரிக்கை வச்சு… ஷப்பா, எனக்கு அதுக்கெல்லாம் பொறுமையில்லை மாம்ஸ்… உங்கள மாதிரி மாப்பிள்ளையெல்லாம் மிக மிக அறிய வகை உயிரினம்!! இன்னைக்கு நடந்த சீன் மட்டும் வெளியே தெரிஞ்சுது, நீங்க மாஸ் ஹீரோ ஆயிடுவீங்க, பொண்ணுங்க ப்ரொபோஸ் பண்ண கியூ கட்டி நின்னுடுவாங்க, அப்புறம் நானும் என் காதலும் என்ன ஆகறது? யூ சீ நான் பேசிக்கலி பயங்கர உஷாரு..."
அவள் கூறியதை நம்பமுடியாமலும், ஏற்கமுடியாமலும் அவன் தவித்திருக்க, சபையினர் அதிர்ச்சியில் உறைந்திருக்க, பூமிகாவின் அப்பா ஏறக்குறைய மூர்ச்சையாகினார்.
“பூமிகா, நீ என்னமா அடுத்த குண்டை எங்க தலையில தூக்கிப்போடற?”
அதிர்ச்சியிலிருந்து தெளிந்த தாய்மாமன் வினவ,
“மாமா, நமக்கு கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை ஒரு பொண்ணோட வாழ்க்கை நல்லா அமையணும்னு நினைக்கற மனசு இருக்கே… அது தான் கடவுள். அப்படிப்பட்ட கடவுள் மனசுள்ள மாம்ஸ கல்யாணம் பண்ணிக்காம விட்டா அது தெய்வக்குத்தமாயிடும் மாமா…” என்று அசராமல் பதிலளித்தாள்.
“அதுசரி, நீ திடீர்னு உன் இஷ்டத்துக்கு முடிவு எடுக்க இது விளையாட்டில்ல, வாழ்க்கை…”
அவளின் அம்மா கண் கலங்கினாள்.
“ஆமாமா, நீங்க அக்கா வாழ்க்கையில விளையாட நினைச்சதை நான் தான் பார்த்தேனே… அதுவுமில்லாம நான் அப்போ சொன்ன மாதிரி இது திடீர்னு எடுத்த முடிவில்ல. ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி எடுத்தது. கல்யாணம் முடிஞ்சும் என் அருமை அக்கா அழறாளேனு சமாதானம் செய்யும் போது நடந்த உண்மையெல்லாம் என்கிட்ட சொன்னா. அப்பவே மாம்ஸ் மேல மரியாதை வந்து, மரியாதை உடனே காதலாவும் மாறிடுச்சு. சித்தி பையன தாலியும், மாலையும் வாங்கிட்டு வர அனுப்பிட்டு, மாம்ஸ்க்கு போன் போட்டு வரச்சொல்லிட்டு, உங்க எல்லாரையும் இங்க ஒண்ணுகூட வச்சேன். இப்போ அவர் மேல எந்தத் தப்பும் இல்லைனு தெரிஞ்சு போச்சுல?! அவர் செஞ்ச தியாகம் என்னனு புரிஞ்சுபோச்சுல?! அதனால எல்லாரும் அட்சதைய தூவி ஆசீர்வாதம் பண்ணுங்க...” என்றவள் அவனைக் கண்டு பிறைநிலா புன்னகை சிந்தினாள்.
சஞ்சய் பூமிகாவை முறைத்துவிட்டு வெளியேற எத்தனிக்க,
"டேய் ஒழுங்கு மரியாதையா அந்தப் பொண்ணு கழுத்துல தாலி கட்டுடா" என்று அவனை மீண்டும் இடைமறித்தார் தந்தை.
"அப்பா அவ…"
"ஒரு பொண்ணு சபைல வச்சு இவ்வளவு தூரம் மனசுல உள்ளத சொல்லிட்டா. இதுக்கு மேல என்னடா வேணும்?!" என்று அவனை அடக்கியவர், "அட்சதைய எடுத்துவாங்கப்பா…" என்றுவிட்டு ஆசிர்வதிக்க ஆயத்தமானார்.
"அப்பா என்ன விளையாடறீங்களா?" என்ற சஞ்சய், "இங்க பாரு எதாவது சினிமா பார்த்துட்டு, கதை புக்கு படிச்சுட்டு நீயே என்னென்னமோ கற்பனை பண்ணி சின்னபுள்ளதனமா பேசாத. இதெல்லாம் நடக்காது…" என்றான் பூமிகாவிடம், கண்டிப்போடு.
"ஏன் நடக்காது? கண்டிப்பா நடக்கும். நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?! நடத்திக் காட்டுவோம். உன் அருமை தெரிஞ்சு ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்னா, உடனே தாலி கட்டி அவள தலை மேல வச்சு கொண்டாட வேண்டாமாடா? " என்று வீரு கொண்டு எழுந்த சஞ்சய்யின் தாய் சீதாலட்சுமி, பூமிகாவின் பெற்றோரிடம், "சம்பந்தி, உங்க பெரிய பொண்ணுக்கு மனம் போல் மாங்கல்யம் அமைஞ்சுடுச்சு. உங்க ரெண்டாவது பொண்ணுக்கும் அவ இஷ்டப்படி தான் கல்யாணம் செய்யணும்னு நீங்க நினைப்பீங்கன்னு நம்பறேன். எங்களுக்கும் அதான் விருப்பம். நீங்க சம்மதிச்சா கையோட தாலி கட்டி, என் மருமகள வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவோம். என்ன சொல்றீங்க?"என்றாள், தடாலடியாக.
பூமிகாவின் அம்மா கைகளைப் பிசைந்து கொண்டு நிற்க, யோசனையாய் நின்றிருந்த தந்தை, தனது மைத்துனரிடம் "மாலையும், தாலியும் எடுத்துட்டு வரச் சொல்லுங்க மச்சான்" என்றார்.
சஞ்சய் சுதாரிப்பதற்குள் அவனது கையில் மாலை திணிக்கப்பட, கண்களில் மகிழ்ச்சி மின்ன அவன் எதிரே வந்து நின்றாள், பூமிகா.
"மாலையப் போடு சஞ்சய்" என்று அண்ணன் அவனை அவசரப்படுத்த, நடப்பவற்றை உணர்ந்துத் தெளியக்கூட அவகாசம் இன்றி, அவள் கழுத்தில் மாலையிட்டு மறுநொடி திருமாங்கல்யம் அணிவித்தான்.
அவள் அவனைக் கண்டு கண் சிமிட்டி காதலாய் சிரிக்க, அவனோ இதழோர முறுவல் சிந்தி, கஞ்சத்தனமாய் புன்னகைத்தான்.
"மாப்ள காலைல நடந்த குழப்பத்துல உங்கள மனசு நோகற மாதிரி பேசியிருந்தா என்னை மன்னிச்சிடுங்க… என் பொண்ண நல்லா பார்த்துக்கோங்க..."
சஞ்சய்யின் கையைப் பற்றி பூமிகாவின் தந்தை மனமுருகி கூற,
"அப்பா, அவர் ஒன்னும் அல்பம் இல்லை, இதையெல்லாம் மனசுல வச்சுகிட்டு பழிவாங்க…"
'பல்பம் மாதிரி இருந்துக்கிட்டு என்னை அல்பம்ங்கறாளே?' என்று எண்ணியபடி அவளை விநோதமாய் அவன் நோக்க, அவளோ "ஹீரோ" என்றாள் அவன் காதுகளுக்கு மட்டும் எட்டும் படி. 'இந்த ஒரு வார்த்தைய வச்சே என்னை கவுத்துட்டாளே!' என்றெண்ணியவன் அவளையே கூர்ந்து நோக்க, அவளும் சளைக்காமல் அன்பும், ஆசையும் வழிய அவனைப் பார்த்திருந்தாள்.
தம்பியை தன்னருகே அண்ணன் இழுத்து, "என்னடா ஒரே கண்ணும் கண்ணும் நோக்கியா? நேத்து அந்தப் பொண்ணு உன்னை கலாய்க்கும்போது நீ அமைதியா இருந்தப்பவே எனக்கு பயங்கர டவுட்டு… சரியான ஆளு தான் நீ…"
"யோவ் அண்ணா, நானே சூனியம் வச்ச மாதிரி ஒன்னும் புரியாம நின்னுக்கிட்டு இருக்கேன். நீங்க வேற…"
"டேய் டேய் டேய்… இது கூட உன் மாஸ்டர் ப்ளானோட ஃபினிஷிங் டச் தானே?"
"நீங்க ரெண்டு பேரும் என்னடா ரகசியம் பேசிக்கறீங்க?"
அவர்களின் எதிரே வந்து நின்றாள், சீதாலட்சுமி.
"ஒண்ணுமில்ல சித்தி, பூமிகா இன்னும் படிப்பு முடிக்கல, அதனால இந்த முதலிரவு சமாச்சாரம்’லாம் வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருந்தான்..."
மகனின் கைகளை தன் கைகளுக்குள் ஏந்திய சீதாலட்சுமி, "உன்னை பெத்ததுக்கு உண்மையாவே பெருமை படறேன். தெரியாம உன்னை திட்டிட்டேன்டா, அம்மாவ மன்னிச்சிடுடா" என்றாள், மனதார.
"என்னமா இதுக்கு போய்… நீங்கதான திட்டுனீங்க… இதுல என்ன இருக்கு?" என்று தாயிடம் கூறியவன், அண்ணனை முறைக்க, "என்னை பார்க்காத, அந்தப் பக்கம் ரியாக்ஷன் பாரு" என்று கண்ணால் பூமிகாவை சுட்டிக்காட்டி சிமிஞை செய்ய, "ரொம்ப தேங்க்ஸ் ஹீரோ மாம்ஸ்!!" என்றாள், இடப்புறம் தலை சாய்த்து, கண்கள் விரிய.
"இட்ஸ் ஓகே" என்று பணிவன்புடன் கூறியவன், “தேங்க்ஸ் அண்ணா” என்றான் அண்ணனுக்கு மட்டும் கேட்கும்படி.
சில மணி நேரத்திற்கு முன் அழுகையும், புலம்பலுமாய் இருந்த சஞ்சய்யின் இல்லம், தற்பொழுது புதுமணத்தம்பதியரை வரவேற்று பேச்சும் சிரிப்புமாய் இருந்தது. அனைவரிடமும் இயல்பாய் பேசிப்பழகிய பூமிகாவைக் கண்டு, சஞ்சய்க்கு உள்ளூர பெருமையாக இருந்தது. அவள் தன்னைக் காணும் நொடிகளில் நெஞ்சினுள் புளகாங்கிதம் கொண்டவன், அவள் அறியா வண்ணம் அடிக்கொருமுறை விழியால் அவளை வருடினான். சஞ்சய்யின் வீர தீர தியாகத்தை புகழ்ந்தோரெல்லாம், பூமிகாவின் அன்பினை மெச்சிடத் தவறவில்லை.
இரவு தனது அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி நேற்று இரவு முதல் சற்றுமுன் வரை நடந்த நிகழ்வுகளை மனதில் ஓட்டிப்பார்த்தான் சஞ்சய். பூமிகாவின் தடாலடி முடிவும், எதிர்பாரா திருமணமும் அவன் மனதை சூழ்ந்திருந்த கவலை மேகங்களைக் களைந்து, சில்லென மழைச்சாரல் தூவியது. தலைசாய்த்து விழி விரிய நோக்கிய அவள் திருமுகம் மனதில் தோன்றி, மேலும் அவளுக்கு குளிர் சேர்த்தது.
“என்ன ஹீரோ, ஆழந்த சிந்தனை போல?”
கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தவள், கட்டிலின் மேல் சென்று அமர்ந்துகொண்டாள். மறுபுறம் வந்து அமர்ந்தவன்,
“ஒண்ணுமில்ல… ஒரே நாள்ல என் வாழ்க்கையே டேக் டைவர்ஷன் எடுத்திடுச்சு… அதான் யோசிச்சுட்டு இருந்தேன்…”
அவள் முகம் சற்றே வாடக் கண்டவன்,
“என்னாச்சு?” என்றான் கவலையாக.
“மாம்ஸ்… அக்கா இடத்துல என்னை பொருத்திப் பார்க்க முடியலையா?”
அவள் கண்களில் மனதின் பரிதவிப்பைக் கண்டவன்,
“உன் அக்காவுக்கு கல்யாணம் முடிஞ்சுடுச்சு. இனி நீ சிந்திக்க வேண்டியது நம்ம ரெண்டு பேர் பத்தி மட்டும் தான். தேவையில்லாததை யோசிச்சு மனச குழப்பிக்காத. புரிஞ்சுதா?” என்றான் நிதானமாக.
மறுநொடி முகம் மலர்ந்தவள்,
“பக்கா ஹீரோ மாம்ஸ் நீங்க” என்று குரலில் குதூகலம் பொங்கக் கூறியவள், விழி விரித்து அவனைக் கண்டு சிரிக்க, மீண்டும் அவன் மனதில் சில்லென மழைச்சாரல் தூறியது.
“ஆமா நீ எந்த க்ளாஸ் படிக்கற?”
“ம்ம்… ஏழாம் வகுப்பு ஏழாவது வருஷம்…”
“என்ன?”
“பின்ன என்ன மாம்ஸ், ஸ்கூல் பிள்ளை கிட்ட கேட்கற மாதிரி எந்தக் க்ளாஸ்ன்னு கேட்கறீங்க… நான் பி.காம். தர்ட் இயர்…”
“ஓ! அப்போ கடைசி செமெஸ்டரா?”
“ம்ம்…”
‘நல்லவேலை… பள்ளியறைக்கும், பஞ்சணைக்கும் பல நாள் காத்திருக்கணுமோனு பயந்தேபோயிட்டேன்… பரவால்ல நாலஞ்சு மாசம் பொறுத்துப்போம்..’ என்றெண்ணிக்கொண்டு தனது சிந்தனையில் தொலைந்திருந்தான்.
“என்ன மாம்ஸ் அப்பப்போ ஏதோ யோசனைல டேக் ஆஃப் ஆயிடறீங்க?”
“ஒண்ணுமில்ல… நீ தூங்கு… நம்ம வீட்ல ரெண்டு பெட்ரூம் தான் இருக்கு… நீ இந்த ரூம்ல படுத்துக்கோ… நான் ஹால்ல படுத்துக்கறேன்…”
“ஏன் மாம்ஸ்? இங்கயே படுங்க… குட் நைட்…” என்றுவிட்டு அவள் படுத்துக்கொள்ள, விடிவிளக்கை எரியவிட்டு கட்டிலின் மறுகோடியில் அவன் படுத்துக்கொண்டான்.
திடீரென எழுந்து அமர்ந்தவள், தனது கைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைக்க, என்னவென்று புரியாமல் கேள்வியாய் எழுந்தமர்ந்தவன், விளக்கினை ஏரியவிட்டான்.
“ஹலோ அம்மா, நான் பூமிகா தான் பேசறேன்… என் புள்ளைக்கு சாப்பாடு கொடுத்தாச்சா?”... “சரி சரி… நாளைக்கு வரும்போது… சரி சரி…” என்று புதிராய் பேசிவிட்டு அழைப்பினைத் துண்டித்தவள், குழப்பமாய் அவளையே பார்த்திருந்த சஞ்சய்யை நோக்கி, “மாம்ஸ் நாளைக்கு என்னோட… சாரி நம்மளோட பப்புளூ வந்துடுவான்…” என்றுவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டாள்.
படாரென அவன் காதுகளுக்கு மட்டும் ஓர் சப்தம் கேட்க, சுற்றும் முற்றும் நோக்கியவன், இறுதியில் வெடித்தது அவனுடைய லிட்டில் ஹார்ட் என்று உணர்ந்தான்.
“பூமிகா… என்ன சொல்ற நீ?” என்றான் கடுங்கோபத்தோடு. அவனது குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தவள், புரியாமல் அவனையே பார்த்திருக்க, “மொத்த குடும்பமும் சேர்ந்து என்னை மாக்கான்னு முடிவு பண்ணி இதெல்லாம் பண்றீங்களா?”
அவன் கண்கள் உருட்டி முறைக்க, அவள் தொண்டைக்குழி அடைக்க, அவனைக் கண்டு மிரண்டுபோனாள்.
“மாம்ஸ்… என்ன சொல்றீங்க?”
“நீதான் பப்புளூ அது இதுனு என்னமோ சொல்ற… என்னை பார்த்தா இளிச்சவாயன் மாதிரி இருக்கா?”
கண்களில் கண்ணீர் வழிய அழத்தொடங்கியவள்,
“நீங்க ஹீரோனு நினைச்சு அவசரப்பட்டுட்டேன். காலம் முழுக்க உங்க நிழல்ல நானும், பப்புளூவும் இருந்துடலாம்னு நினைச்சேன். என் பப்புளூ தான் எனக்கு எல்லாம். அவன் இங்க இருக்கக்கூடாதுனா நானும் இங்க இருக்கமாட்டேன். விடிஞ்சதும் நான் போயிடறேன். நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கோங்க…” என்றுவிட்டு, மேலும் குரலெடுத்து அழத்தொடங்கினாள்.
அவள் அழுவதை தாங்க முடியாமல் அருகே சென்றவன்,
“பூமிகா… இன்னொரு தடவை அப்படி பேசாத… நமக்குக் கல்யாணம் முடிஞ்சு முழுசா ஒரு நாள் ஆகல, அதுக்குள்ள வீட்டை விட்டுட்டு போறேன்னு சொல்ற? இனி எப்பவும் நீ இப்படி பேசக்கூடாது… இந்த ஜென்மத்துல நான்தான் உன் ஹஸ்பண்ட், இதுதான் உன் வீடு…” என்றான் அவளை அமைதியாக்கிட.
கண்களைத் துடைத்துக்கொண்டு அவனை நோக்கியவள், “நிஜமாவா மாம்ஸ்?” என்றாள் ஆசையாக.
அவள் கழுத்தில் தென்பட்ட மஞ்சள் கயிறும், அனிச்சையாய் அவனது கரம் பற்றியிருந்த அவளது கரத்தின் வெதுவெதுப்பும் அவனை ‘ஆம்’ என்று கூற வைத்தது.
தலைசாய்த்து கண் விரிய சிரித்தவள், “மாம்ஸ் உங்ககிட்ட ஓப்பனிங் வில்லத்தனமா இருந்தாலும், ஃபினிஷிங்ல மரண மாஸ் ஹீரோ தான் நீங்க…” என்றவள், மீண்டும் அவனுக்கு ஸ்வீட் ட்ரீம்ஸ் கூறிவிட்டு உறங்கிப்போனாள்.
அவள் உறங்கியிருக்க, இவனோ துக்கத்தில் தூக்கத்தைத் தொலைத்திருந்தான். ‘ஹீரோ ஹீரோன்னு சொல்லியே என்னை காமெடியன் ஆக்கிட்டாளே… விடிஞ்சா அடுத்த அணுகுண்டு தயாரா இருக்கு… ஆளு அம்சமா இருக்காளேன்னு கொஞ்சம் கூட யோசிக்காம தாலிய கட்டுனா கூடிய சீக்கிரத்துல என்னை துவம்சம் பண்ணிடுவா போல…’ என்று அயர்ந்துகொண்டவன், விடிவிளக்கின் ஒளியில் அவளைக் காண, அவளோ சிறுகுழந்தையென உறங்கிக்கொண்டிருந்தாள். துவண்ட மனதிற்கு ஆறுதலின்றி தவித்திருந்தான், சஞ்சய்.
அன்பு ஒன்று தான் அநாதை!!
No comments:
Post a Comment