எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்ட கேட்கும்…
பத்தணா இருந்தா பத்தூரு எம்பாட்ட பாடும்…
சஞ்சய்யின் கைப்பேசிக்கு அழைத்தவள் இந்தப் பாட்டைக் கேட்டு, “எப்பவும் நம்மள கடுப்பேத்தற பாட்ட வைப்பாரு, இன்னைக்கு என்ன சம்மந்தமே இல்லாம ஏதோ ஒரு பாட்ட வச்சிருக்காரு?” என்றபடி அவன் அழைப்பை ஏற்க காத்திருந்தாள்.
“ஹலோ..”
“ஹலோ மாம்ஸ், என்னது இது, எட்டணா, பத்தணா’னு பாட்டு வச்சிருக்கீங்க?”
“எல்லாம் காரணமாத்தான்… காலேஜு முடிஞ்சிடுச்சா?”
“ஆமா, அதான் போன் பண்ணேன்… நான் கிளம்பட்டுமா, இல்லை நீங்க வரமுடியுமா?”
“நான் காலேஜு வாசல்ல தான் இருக்கேன்…”
“அப்படியா?! இதோ டூ மினிட்ஸ் மாம்ஸ்…” என்றவள், அவனை நோக்கி விரைந்தாள்.
அவன் பைக்குடன் நின்றிருந்ததைக் கண்டு கேள்வியானவள்,
“என்ன மாம்ஸ் க்ளையண்ட்ட மீட்டிங் இருந்தாதத்தானே சீக்கிரம் வேலை முடிஞ்சு என்னை அழைச்சுட்டு போக வருவீங்க? காரும் இருக்கும்? இன்னைக்கு என்ன பெர்மிஷன் போட்டு வந்திருக்கீங்களா?” என்றாள்.
“ஆமா…”
“என்ன விஷயம் மாம்ஸ்?”
“சொல்றேன் வா…” என்றவன், அவளை அழைத்துக்கொண்டு வெகு தூரம் சென்றான்.
“மாம்ஸ் எங்க போறோம்?”
“எங்கயும் இல்லை… சும்மா ஒரு லாங் ட்ரைவ் போகணும்னு தோணுச்சு…”
எங்கெங்கோ அவளை அழைத்துக்கொண்டு சுற்றித்திரிந்தவன், இறுதியாய் ஒரு உணவகத்தில் வண்டியை நிறுத்தினான்.
“இப்போதாவது என்ன விஷயம்னு சொல்லுங்க மாம்ஸ்” என்றவள் இடுப்பை பிடித்துக்கொண்டு நெளிய,
“என்ன ஆச்சு பூமிகா?” என்றான் கவலையாக.
“ரொம்ப நேரம் பைக்ல உட்கார்ந்து வந்ததுல இடுப்பு வலிக்குது மாம்ஸ்…”
“கவலைப்படாத… கூடிய சீக்கிரம் கார் வாங்கிடறேன்…”
“??”
“உள்ள போய் பேசலாம்…”
உணவகத்திற்குள் அவளை அழைத்துச்சென்றவன், அவள் விருப்பப்பட்டவற்றை ஆர்டர் செய்துவிட்டு, ஒரு தாளினை அவளிடம் நீட்டினான்.
“வாவ் மாம்ஸ்! ப்ரோமோஷன் வந்திருக்கா? வாழ்த்துக்கள் மாம்ஸ்… இதுக்குத்தான் இப்போ எனக்கு ட்ரீட்டா?”
குரலிலும், கண்களிலும் குதூகலம் பொங்கக் கோரினாள்.
“ஆமா…” என்றான் புன்னகை பூக்க.
“என்ன மாம்ஸ் நீங்க, அத்தை மாமாவையும் கூட்டிக்கிட்டு நாம எல்லாரும் ஒண்ணா வந்திருக்கலாம்ல?”
‘எனக்கு கூட தோணல, ஆனா உனக்கு தோணியிருக்கே செல்லம்… மை ஸ்வீட் பேபி…’ என்று அவளை எண்ணி தன்னுள் பெருமை கொண்டவன்,
“அது… வீக்கெண்ட் போலாம்…” என்றான்.
“உனக்கு தேங்க்ஸ் சொல்லத்தான் தனியா கூட்டிட்டு வந்தேன்…” என்றான் மேலும்.
“எதுக்கு?”
“முந்தாநாள் நீ மீட்டிங்ல பேசினது என் எம்.டி.க்கு தெரியவந்திருக்கு. இன்னோவேஷன் அவார்ட் வாங்கினதும் நான்தான்னு தெரிஞ்சு எனக்கு ப்ரோமோஷன் கொடுத்திருக்காரு. அதோட, தனியா கூப்பிட்டு ரொம்ப பாராட்டினார் பூமிகா. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதான் பெர்மிஷன் போட்டு சீக்கிரம் வந்துட்டேன்… தேங்க்ஸ் பூமிகா…”
“ப்ச்… இதுல நான் என்ன பண்ணேன் மாம்ஸ்? உங்க திறமைக்கும், நல்ல குணத்துக்கும் கிடைச்ச பரிசு…”
‘இல்லை செல்லம்… உன்னால…’
மென்மையாய் சிரித்துக்கொண்டவன், “சரி, சாப்பிடு…” என்க, அவளது கவனம் முழுதும் கடிவாளம் கட்டிய குதிரையென உணவின் மேல் சூழ்ந்தது.
“என்ன ஒன்னும் பேசமாட்டேங்கற?”
“மாம்ஸ்… உங்கள நினைச்சு கவலையா இருக்கு…”
“என்ன கவலை?”
“அன்னைக்கு மீட்டிங்ல பார்த்தேன்… உங்க கூட வேலை செய்யற ரெண்டு பொண்ணுங்க சூனியம் வச்ச மாதிரி உங்களையே பார்த்துட்டு இருந்தாங்க. இப்போ ப்ரோமோஷன் வேற வந்திருக்கு…”
‘ம்கூம்… தீபாவளிக்கு செஞ்ச சுழனிய கூட நமக்கு திங்க கொடுக்கமாட்டாளுங்க… நம்ம முகராசி அப்படி… இதுல சூனியம் வச்ச மாதிரி பார்க்கறாளுங்களாம்… இவ வேற நேரம் கெட்ட நேரத்துல காமெடி பண்ணிக்கிட்டு…’
“என்ன மாம்ஸ் யோசிக்கறீங்க? நான் சொல்றதெல்லாம் உங்களுக்கு புதுசா இருக்கலாம்… நம்ப முடியாம கூட இருக்கலாம்… ஏன்னா நீங்க பச்சைமண்ணு. தயவுசெஞ்சு அந்த பொண்ணுங்க கிட்ட தள்ளியே இருங்க மாம்ஸ். என் ஹீரோ உங்கள எப்படித்தான் பொத்திப்பொத்தி பாதுகாக்கப் போறேனோ… ஹ்ம்ம்…”
அவள் உண்மையிலேயே அவனை எண்ணி கவலைகொள்ள, அவனுக்கோ அவளது அன்பை எண்ணி அலாதி ஆனந்தமாய் இருந்தது.
உண்டு முடித்து வண்டியைக் கிளப்பிக்கொண்டு செல்கையில்,
“ப்ரோமோஷன் வந்துடுச்சு… கூடிய சீக்கிரம் ஒரு கார் வாங்கிடலாம் பூமிகா…” என்றான்.
“எதுக்கு மாம்ஸ் வீண் செலவு? காசெல்லாம் சேர்த்து வைக்கலாம் மாம்ஸ்… நமக்கு குழந்தைங்க பொறந்தா ஆயிரம் செலவு இருக்குல்ல?!”
‘சரி’ என்று மனைவி கூறியதற்கு மறுவார்த்தை பேசாமல் தலையாட்டியவன், கட்டுக்கடங்கா சந்தோஷத்தில் தவழ்ந்திருந்தான்.
‘இருந்தாலும் என் செல்லம் இவ்வளவு பொறுப்பா இருக்கக்கூடாது… நமக்கு சும்மாவே ஹார்மோனெல்லாம் ஏடாகூடமா வேலை செய்யும்… இதுல குழந்தைகள்’னு பன்மைல வேற சொல்றா… எத்தனைனு சொன்னா சட்டுபுட்டுனு வேலைய ஆரம்பிக்கலாம்…’ என்று எண்ணிக்கொண்டே கண்ணாடி வழியே பின் இருக்கையில் அமர்ந்திருந்தவளை நொடிக்கொருமுறை ரசித்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தான்.
ஞாயிற்றுக்கிழமை காலை குளித்து முடித்து தயாரானவன், பூமிகாவைத் தேட, அவளோ அடுக்களையில் சீதாலட்சுமியுடன் ஆர்வமாக கதை பேசிக்கொண்டிருந்தாள். விறுவிறுவென அறைக்குள் நுழைந்தவன், “செல்லம் இன்னைக்கு மாம்ஸ் லவ்வ ஓபன் பண்ண போறேன்… வீட்ல வேண்டாம்… வெளிய எங்கயாவது போவோம்…” என்று அவளது புகைப்படத்திடம் அறிவுறுத்திவிட்டு, தன்னை ஒருமுறை காண்ணாடியில் பார்த்துவிட்டு, நேரே அடுக்களைக்குச் சென்றான்.
“அம்மா, கொஞ்சம் போர் அடிக்குது… நாங்க சும்மா அப்படியே எங்கயாவது போயிட்டு வரோம்…” என்றான் தாயிடம், மனைவியை விழுங்கும் பார்வை பார்த்தபடி.
“சஞ்சு, இப்பத்தான் தீபிகா போன் பண்ணா. அவளும், அந்தப் பையன்... பேரு என்ன… ஆங், ரமேஷ்… அவங்க ரெண்டு பேரும் வராங்களாம். நீ எங்கயும் போயிடாத..”
‘ச்ச… ஒரு மனுசன் நல்ல காரியத்துக்கு போகும் போதுதான் ஏதாவது சொல்லுவாங்க…’ என்று அலுத்துக்கொண்டே வாயில் வராந்தாவிற்கு வந்தவன், தனது கைப்பேசியை நோண்டியபடி அமர்ந்துகொண்டான். அவனை உரசிவிட்டு வாயிலுக்குச் செல்வதும், மொட்டை மாடிக்கு செல்வதும், அவன் அருகில் இருந்த பூந்தொட்டிகளுக்கு மட்டும் நீர் ஊற்றுவதும், சிறிது நீர் அள்ளி அவன் மீது தெளிப்பதும் என, அவளது சின்னச்சின்ன விளையாட்டுகள் கூட, அவனுக்கு பெரும் இம்சையாகிப் போனது.
‘மவளே, நானே நொந்து போய் உட்கார்ந்திருக்கேன்… உனக்கு கிண்டலா இருக்கா?! உங்கொக்கா வந்துட்டு போகட்டும், இன்னைக்கு இருக்கு கச்சேரி…’ என்று எண்ணிக்கொண்டவன், ‘வெளிய எங்கயும் போக வேண்டாம்… வீட்ல வச்சே சகல சமாச்சாரத்தையும் பேசித்தீர்த்து, நிலுவையில இருக்கற சடங்கெல்லாம் முடிச்சுடனும்…’ என்று தீர்மானித்ததோடு நில்லாமல், உள்ளே சென்று கை நிறைய பாதாம் பருப்புகளை எடுத்துக்கொண்டு வந்து மீண்டும் வராந்தா படிக்கட்டில் அமர்ந்துகொண்டான்.
தீபிகாவும், ரமேஷும் வருகை தர, அவர்களை உள்ளே அழைத்து அமரச் செய்தவன், அறையிலிருந்த பூமிகாவைத் தேடிச் சென்றான். அவள் பின்னே சென்று நின்றவன், சிறு சப்தமின்றி அமைதியாய் நின்றிருக்க, அவளோ, இவன் வந்ததை உணராது சிந்தனையில் தொலைந்தவளாய் அலமாரியை அடுக்கிக்கொண்டிருந்தாள்.
“பூமிகா…”
அவன் கிறக்கமும், மயக்கமுமாய் அழைக்க, அவளோ திடுக்கிட்டு திரும்பினாள்.
“அய்யோ, மாம்ஸ் நீங்களா?! நான் ஏதோ பிசாசு வந்து என்னை கூப்பிடுதோனு பயந்தே போயிட்டேன்…”
“பிசாசா? என்னை பார்த்தா பிசாசு மாதிரியா இருக்கு?”
“உங்கள சொல்லல… நீங்க கூப்பிட்டத சொன்னேன்…”
‘ஹ்ம்ம்… ஒருத்தன் ரொமான்டிக்கா ஹஸ்கி வாய்ஸ்ல கூப்பிட்டா பிசாசு கூப்பிட்ட மாதிரி இருக்கா உனக்கு? எல்லாம் என் நேரம்…’ என்று எண்ணியபடி முகம் வாடியவன்,
“தீபு வந்திருக்கா, அதை சொல்லத்தான் வந்தேன்…” என்றுவிட்டு மறுநொடி அறையை விட்டுச் சென்றான்.
தீபிகா, ரமேஷுடன் ராமநாதனும், சீதாலட்சுமியும் பேசிக்கொண்டிருக்க, அவர்களோடு சஞ்சய்யும் வந்து இனைந்து கொண்டான்.
“சார், உங்கள முன்னாடியே நேர்ல சந்திச்சு நன்றி சொல்லணும்னு நினைச்சுட்டு இருந்தோம். மன்னிச்சுடுங்க வர முடியல.”
“என்ன தம்பி நீங்க சகலைய சாரு, மோருங்கறீங்க? ‘சகலை’னு கூப்பிடுங்க…”
ராமநாதன் கூற, ‘சரி’ என்று தலையசைத்த ரமேஷ்,
“கல்யாணத்தை நிறுத்தி எங்க கல்யாணம் நடக்க காரணமா இருந்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல சகல…” என்று நெகிழ்ந்தான், ரமேஷ்.
“அதான் ‘சகல’னு சொல்லிட்டீங்க… அப்புறம் நமக்குள்ள எதுக்கு இந்த தேங்க்ஸ் எல்லாம்?”
அவர்கள் பருக காபி எடுத்துக்கொண்டு வந்த பூமிகா,
“நியாயமா நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும் ரமேஷ் மாமா. எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைய நீங்க தானே காரணம்!!” என்று பெருமிதம் கொள்ள, சஞ்சய்யின் முகத்திலோ பெருமை, பொங்கோ பொங்கென்று பொங்கி வழிந்தது.
“நீங்க ஏற்கனவே ரொம்பப் பெரிய உதவி பண்ணியிருக்கீங்க. இப்போ நாங்க வந்திருக்கறதும் இன்னொரு உதவி கேட்டுத்தான். மறுக்காம செய்வீங்கன்னு நம்பி வந்திருக்கோம்…”
வாய் மலர்ந்தாள், தீபிகா.
“என்ன உதவி மா? இவன் ஏதாவது கல்யாணத்தை நிறுத்தணுமா?” என்றுவிட்டு சீதாலட்சுமி சிரிக்க, “அப்புறம் கூட்டத்துல ஒரு பொண்ணு வந்து நான் கட்டினா இவரைத்தான் காட்டுவேன்’னு வம்பு பண்ணா என் நிலைமை என்ன ஆகிறது அத்தை?!” என்றபடி பூமிகாவும் சிரிக்க, ‘இது ஒன்னும் அவ்வளவு பெரிய நகைச்சுவை இல்லையே!’ என்று கடுப்பானான் சஞ்சய்.
இத்தகைய அரிய நகைச்சுவைக்கு அனைவரும் சிரித்து ஓய்ந்த பின்,
“நீங்க சொல்லவந்ததை சொல்லுங்க…” என்றான் சஞ்சய், ரமேஷிடம்.
“நான் சின்ன சின்னதா பிசினெஸ் பண்ணிட்டு இருக்கேன்னு உங்களுக்கு தெரியம். அதுல வர்ற வருமானம் போதாது. அதான் நானும் தீபிகாவும் சேர்ந்து முடிவு பண்ணி ஒரு ஏஜென்சி ஆரம்பிக்கலாம்னு இருந்தோம். நீங்க வேலை செய்யற கம்பெனில எங்க ஏரியாவுக்கு டீலர்ஷிப் வந்திருக்கு. நாங்க லீகலா எல்லா டாகுமெண்ட்ஸும் கொடுத்துட்டோம். எல்லா போர்மாலிடீசும் செஞ்சுட்டோம். ஆனா, அந்த டீலர்ஷிப்க்கு ரொம்ப போட்டியிருக்கு. அதான்… நீங்கி ரெகமண்ட் பண்ணா… இது அந்த அப்பிளிக்கேஷன் ஜெராக்ஸ்… தப்பா எடுத்துக்காதீங்க... எங்களுக்கு இது ரொம்பப் பெரிய உதவியா இருக்கும்…”
ஒருவாறு தயங்கித்தயங்கி கூறி முடித்தான், ரமேஷ்.
“அவ்வளவுதானே?! இதுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்? நிச்சயம் நான் பேச வேண்டிய இடத்துல பேசறேன். இது உங்களுக்குத்தான் கிடைக்கும்னு என்னால நூறு சதவிகிதம் உறுதியா சொல்ல முடியாது. ஆனா, என்னால முடிஞ்ச வரைக்கும் இந்த டீலர்ஷிப் உங்களுக்கே கிடைக்க முயற்சி பண்றேன்.”
“ரொம்ப தேங்க்ஸ்ங்க…”
தீபிகாவும் அவள் பங்கிற்கு நன்றி கூற, “இதுக்கு எதுக்குங்க இத்தனை தேங்க்ஸ்? உங்களுக்கு செய்யாமலா!” என்றான், விரைவில் டண்டணக்கா டனக்குணக்கா அவனுக்காக ஏற்பாடாகிக்கொண்டிருப்பதை அறியாமல்.
சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு தீபிகாவும், ரமேஷும் கிளம்பிச் செல்ல, ‘மணி பதினொன்றை ஆகுது. பன்னெண்டு மணிக்கு எமகண்டம் வந்துடும். அதுக்குள்ள ‘ஐ லவ் யூ’ சொல்லிடுவோம்…’ என்று விறுவிறுப்பாக தனது அறைக்குச் சென்றான், சஞ்சய். பூமிகா பாதியில் விட்டுவிட்டு வந்த வேலையை தொடர்ந்திருக்க, இவன் மீண்டும் அவள் பின்னே சென்று நின்றான். திரும்பியவள் அவனைக் கண்டு திடுக்கிட்டு, முறைத்தபடியே மீண்டும் திரும்பிக்கொண்டாள்.
“பூமிகா…” என்றான், இம்முறை ஹஸ்கி வாய்ஸ் வித்தைகளை முயற்சிக்காமல்.
“என்ன?” என்றாள், குரலில் உணர்வின்றி.
“இந்த பேப்பர்ஸை பத்திரமா வை. தீபு கொடுத்தது. நாளைக்கு ஆபிசுக்கு எடுத்துட்டு போகணும்.”
“ஆமாமா, இப்போ இந்த உலகத்துல இதுதான் உங்க தலையாய கடமை, இல்லை?”
“என்ன சொல்ற பூமிகா? ஒன்னும் புரியல...”
“ஊரறிய உங்கள அவமானப் படுத்தினவள தீபு, சோப்புனு செல்லப்பேர் வச்சு கூப்பிடுவீங்க. ஆனா, உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டு கட்டிக்கிட்டு வந்தவளை ‘பூமிகா’னு நீளமா கூப்பிடுவீங்க… அப்படித்தானே?”
“ஏதோ வாய் தவறி சொல்லிட்டேன். இது ஒரு குத்தமா?”
“ஏதோ ஒரு தடவ தவறினா குத்தமில்ல. ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் கூப்பிடறீங்க… அப்புறம் என்ன சொன்னீங்க… ஆங், ‘உங்களுக்கு செய்யாமலா’னு வசனம் வேற...” என்றவள், ‘ஓ!’ என்று அழத்தொடங்கினாள்.
“இங்கப்பாரு அவங்க என்னை சூரியவம்சம் சரத் குமாரா நினைச்சு உதவி கேட்டு வந்தாங்க. நான் செய்யறேன்னு சொன்னேன். அவ்வளவுதான். நீ என்னை சரத் குமாரா நினைக்கலனாலும் பரவாயில்லை, நான் உன்னை தேவையா (லொக்கு லொக்கென்றுஇருமிவிட்டு) னி’யாத்தான் நினைக்கறேன்…”
அவள் அழுதாலும் அதில் புதைந்துள்ள அவளது காதலையும், காதலினால் உண்டான உடைமை நோயையும் உணர்ந்தவனுக்கு சந்தோஷம் பெருகியது.
“ஆமா, நீங்க ஹீரோ தான். நான் இல்லனு சொல்லல. ஆனா, நான் உங்களுக்கு தேவை இல்லாதவ தான்…”
“என்ன? நான் எப்போ அப்படி சொன்னேன்…”
“அதான் கேப் (gap) விட்டு சொன்னீங்களே… நமக்குள்ள இருக்கற கேப்’அ சொல்லாம சொல்றீங்களா?”
“நமக்குள்ள எங்க கேப் இருக்கு? நான் உன் பக்கத்துல தான நிக்கறேன்?”
“பக்கத்துல நின்னாலும் நீங்க தூரமாத்தான் இருக்கீங்க.”
“நீயே என்னென்னமோ கற்பனை பண்ணிக்கற...”
“நான் கற்பனை பண்ணிக்கறேனா? நீங்க தான் ‘தேவையா… லொக்கு லொக்கு… னி’னு சொன்னீங்க. உங்க மனசுல எதுவும் இல்லனா, ‘தேவையா… லொக்கு லொக்கு… தேவையானி’னு சொல்லியிருக்கணும்… எனக்கு எல்லாம் புரிஞ்சுபோச்சு…” என்று மீண்டும் அழத்தொடங்கினாள்.
‘ச்ச… அந்தப் படத்துல எவன்டா தேவையானிய ஹீரோயினியா போட்டது?! சிம்ரன், ஜோதிகா’னு யாரையாவது போட்டிருந்தா இந்நேரம் எனக்கு இந்தப் பிரச்சனையே வந்திருக்காது…’ என்றபடி அவளை சமாதானம் செய்திடும் வழி தேடி பலவாறாக யோசித்தவன், ‘ஓவரா பேசறா… பதிலுக்கு பேசி புரிய வைக்க முடியாது… மேல பாய்ஞ்சுட வேண்டியதுதான்…’ என்று முடிவுடன் கைகளுக்குள் முகம் பொத்தி அழுபவளிடம் மேலும் அவன் நெருங்கி நிற்க, பட்டென கைகளை விலக்கி, முகத்தினை அழுந்தத் துடைத்தவள்,
“இதுக்கு மேல நான் உங்களுக்கு பாரமா இருக்க விரும்பல. எனக்கு விவாகரத்து கொடுத்துடுங்க” என்றாள், தீர்க்கமாக.
அவள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியானவன், திடுக்கிட்டு பின்னே இரண்டடி சென்றான்.
“ஏ… என்ன பேசற நீ?”
“நான் யோசிச்சுத்தான் பேசறேன்…”
“என்னத்த யோசிச்சு கிழிச்ச? அவசர அவசரமா காதல், அவசர அவசரமா கல்யாணம், இப்போ அவசர அவசரமா விவாகரத்து… வெட்டி விடறதுக்காகவா உன்னை கட்டிக்கிட்டு வந்தேன்?”
“கட்டிக்கிட்ட பாவத்துக்காக நீங்க உங்க வாழ்க்கைய வீணடிச்சுக்கவேண்டாம்… நான் போறேன்…”
“சும்மா லூசு மாதிரி பேசாத… என் மனசுல என்ன இருக்குனு நீ புரிஞ்சுக்கலனாலும் பரவாயில்லை, ஆனா நீ நினைக்கற மாதிரி உன் அக்காவை பத்தியோ கல்யாணம் நின்னதை பத்தியோ நான் யோசிக்கறது இல்லை…”
“நீங்க ரொம்ப நல்லவர் தான்… நான் தான் ரொம்ப மோசம்… எனக்கு விவாகரத்து கொடுத்துடுங்க, நான் போறேன்…”
“அப்படியெல்லாம் கேட்ட உடனே கொடுத்திட முடியாது. ஒரு வருஷம் ஆகட்டும்… அடுத்த வருஷம் இதே நாள் இதே நேரம் உன் மனசு மாறாம விவாகரத்து தான் வேணும்னு உன் மனசு சொன்னா, அப்போ பார்த்துக்கலாம்… அது வரைக்கும் நீ மிஸஸ் பூமிகா சஞ்சய் தான்” என்று தடாலடியாகக் கூறியவன், அவளை அறையில் தனிமையில் விட்டுவிட்டு வெளியேறினான்.
என்ன ஒரு புத்திசாலித்தனம்!!
No comments:
Post a Comment