மறுநாள் காலை கல்லூரி தொடங்குவதற்கு சற்று முன்னதாகவே அவளை அழைத்துக்கொண்டு வந்தவன், அவளை விட்டுச் செல்ல மனமில்லாமல் (அதை பக்குவமாய் வெளியே காட்டிக்கொள்ளாமல்) நின்றிருந்தான்.
“நீங்க சூப்பர் மாம்ஸ்…”
அவன் நெற்றி சுருங்கி அவளை கேள்வியாய் நோக்க,
“நேத்து கொஞ்சம் லேட் ஆயிடுச்சுனு இன்னைக்கு சீக்கிரம் கூட்டிட்டு வந்துட்டீங்களே… சூப்பரோ சூப்பர்!!”
“வாழ்க்கைல நாம நினைச்சத சாதிக்க பங்க்சுவாலிட்டி ரொம்ப முக்கியம் இல்லையா?!”
“ஆமா மாம்ஸ்… கரெக்ட்!!!” என்றவள் தலைசாய்த்து விழி விரிய அவனைக் கண்டு புன்னகைக்க, அவனோ தவித்துப்போனான்.
“சர்க்கரை, தேன், கல்கண்டு, சாக்லேட்… இதெல்லாம் எப்படி ருசிக்கும் மாம்ஸ்?”
அவளைப் புதிராய் நோக்கியவன், “தித்திப்பா இருக்கும்… ஏன்?” என்றான்.
“நீங்க பேசறதும் அப்படித்தான் தித்திப்பா இருக்கு… சிங்கக்குட்டி ஹீரோவும் நீங்கதான்! சக்கரக்கட்டி ஹீரோவும் நீங்கதான்!!”
அவள் கூறியதைக் கேட்டவனுக்கு சிறிகின்றி உயரப் பறக்கும் பரவசம். அவனது தொண்டைக்குழியிலேயே வார்த்தைகள் அனைத்தும் வாபஸ் வாங்கிக் கொள்ள, என்ன செய்வதென்று புரியாமல் தவித்திருந்தான்.
இவர்களின் தனிமையை குலைப்பதற்கென்றே பூமிகாவை அழைத்தபடி அவள் அருகே வந்து நின்றனர் அவளது தோழிகள். சஞ்சய்யை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த பூமிகாவின் முகத்தில் பெருமை நிரம்பியிருந்தது.
“எதிர்பாரா விதமா உங்க கல்யாணம் நடந்திருந்தாலும் எங்களுக்கு ட்ரீட் வேணும்னு உங்க பொண்டாட்டி கிட்ட கேட்டா, கான்டீன்ல சமோசாவும், டீயும் வாங்கிக்கொடுத்துட்டு இதான் ட்ரீட்டுன்னு சொல்றா. அதெல்லாம் எங்களால ஏத்துக்க முடியாது அண்ணா…”
பூமிகாவின் தோழி சஞ்சய்யிடம் முறையிட்டாள்.
“கூடிய சீக்கிரமே உங்களுக்கு ட்ரீட் உண்டு” என்று சஞ்சய் கூற,
“அயோ நாங்க சும்மா தான் சொன்னோம்” என்று தோழிகள் பின்வாங்க,
“ச்ச ச்ச… நீங்க கேட்டீங்கனு நான் இதை சொல்லல, பூமிகாவுக்கும் உங்களுக்கு ட்ரீட் கொடுக்கணும்னு ஆசை இருக்கும். அதனால சொன்னேன். நான் எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டு சொல்றேன்” என்றான் சஞ்சய், பணிவாக.
“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா” என்ற தோழிகள் அவ்விருவரையும் மீண்டும் தனிமையில் விட்டுவிட்டு விடைபெற்றுச் சென்றனர்.
அவர்கள் சென்றபின் சில நூறு ரூபாய் நோட்டுகளை அவளிடம் நீட்டியவன், “இதை செலவுக்கு வச்சுக்கோ…” என்றான்.
“எதுக்கு மாம்ஸ்? என்கிட்ட கார்ட் இருக்கு…”
“அது உன் அப்பா கொடுத்த கார்ட் தானே? இனி நீ அதை உபயோகிக்க கூடாது. அப்பாகிட்ட திரும்பக்கொடுத்துடு. கூடிய சீக்கிரம் நான் உனக்கு கார்டுக்கு ஏற்பாடு பண்றேன். அதுவரைக்கும் பணமா வாங்கிக்கோ. இனிமேல் உனக்கு குண்டூசி வேணும்னாலும் நீ என்னைத்தான் கேட்கணும். சரியா?”
தலைசாய்த்து அவனைக் கண்டு சிரித்தவள்,
“என்னை கொலையா கொல்றீங்க மாம்ஸ்… இன்னைக்கு நான் க்ளாஸ் கவனிச்ச மாதிரி தான்… கண்ண திறந்துக்கிட்டே என் ஹீரோவ பத்தி கனவு காணப்போறேன்…” என்று அவனை வார்த்தையாலே வசியம் செய்தாள்.
“ப்ச்… ஒழுங்கா க்ளாஸ் கவனி. படிப்பு முக்கியம்” என்றவன், இதற்குமேல் அங்கிருந்தாள் அவளை அள்ளிக்கொண்டு தூர தேசம் ஓடிச்சென்றாலும் சென்றுவிடுவேன் என்று பயந்தவன், அலுவலகம் புறப்பட ஆயத்தமானான்.
“இன்னைக்கு சாயங்காலம் வரமுடியுமானு தெரியல… நீ எதுக்கும் போன் பண்ணு. ஒருவேளை மீட்டிங்ல இருந்தா போன் எடுக்க மாட்டேன். எடுக்கலேனா மெஸேஜ் பண்ணு.”
“ஓகே ஹீரோ… நீங்க பத்திரமா ஆபிஸ் போயிட்டு வாங்க…”
அவள் குழைய, இவன் நெளிந்துகொண்டே அவ்விடம் விட்டு புறப்பட்டான்.
அன்று மாலை, பணிச்சுமை காரணமாக தாமதமாகவே வீடு திரும்பிய சஞ்சய், அவள் பரிமாற வயிறு புடைக்க உண்டுவிட்டு உறங்கியும் போனான். நள்ளிரவு, அளவிற்கு அதிகமாக உண்டதனால் ஏற்பட்ட நெஞ்செரிச்சல் காரணமாக கண்விழித்தவன், அருகே அமைதியாய் உறங்குபவளைக் கண்டு வாஞ்சையோடு நோக்கினான். சில நிமிடங்கள் அவளை மெய்மறந்து ரசித்தவன், மெல்ல எழுந்து அடுக்களைக்குச் சென்றான். ஒரு மிடறு ஜெலுசில் பருகிவிட்டு, சொம்பு நிறைய நீரை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவனின் கண்ணில் பட்டான், பப்புளூ. ஏனோ சஞ்சுக்கு நேற்று இருந்த கோபம், இன்றில்லை.
பப்புளூ அருகே சென்று அமர்ந்தவன்,
“டேய் பப்புளூ, இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டா. என் டார்லிங் இன்னைக்கு காலைல மாமனை எப்படியெல்லாம் கொஞ்சினா தெரியுமா? நான் சிங்கக்குட்டியாம், சக்கரக்கட்டியாம்… என்னை நினைச்சு இன்னைக்கு நாள் முழுக்க கனவுல மிதக்கப்போறேன்னு சொன்னா… மூச்சுக்கு முன்னூறு தடவ ஹீரோ, ஹீரோன்னு சொன்னா… மாமனுக்கு சும்மா சில்லுனு இருந்தது… டேய் பப்புளூ, நீ இல்ல உன் பரம்பரையே வந்தாலும் என் பேபிய அசைக்கமுடியாது... என் மேல அவ்வளோ லவ்ஸ்… அப்படி என்னதான் பண்ணி அவளை இம்ப்ரெஸ் பண்ணேன்னு தெரியல, என் மேல அவளுக்கு இவ்வளவு காதல்… என் மேலயும் ஒரு பொண்ணு இவ்வளவு காதல வச்சுக்கிட்டு, தலை மேல வச்சு கொண்டாடுவானு நினைச்சு கூட பார்க்கல… எப்பவுமே மிதக்கற மாதிரியே இருக்கு… அவ கண்ணு இருக்கே, அதுல அவ்வளவு காதல் தெரியுது. அழகு தேவதை… பௌர்ணமி நிலவை எடுத்து, மீன் மாதிரி ரெண்டு கண்ணு வச்சு, மீன்னு சொன்னதும் உன்னை நினைச்சுக்காத. நான் சொல்றது அழகான மீன், நீயில்லை. அப்புறம் அந்த உதடு செர்ரி பழம். அவ பேசினா தேனா சொட்டுது… மை டார்லிங் டா அவ… சீக்கிரமே அவகிட்ட என் ஹார்ட்ட ஓபன் பண்ண போறேன்டா!” என்றவன், “என் சந்தோஷத்தை கொண்டாட இந்தா உனக்கு ட்ரீட்” என்றுவிட்டு பப்புளூ உண்ண, கடுகு போன்றதொரு மீன் உணவை தொட்டியில் தூவினான்.
பப்புளூ உண்பதை சஞ்சய் பார்த்துக்கொண்டிருக்க, “மாம்ஸ் தூங்காம என்ன பண்றீங்க?” என்றபடி கண்களை கசக்கிக்கொண்டு அவன் எதிரே வந்து நின்றாள், பூமிகா.
அவளைக் கண்டு திடுக்கிட்டவன், “நீ எப்போ வந்த?” என்றான் சந்தேகமாய்.
“இப்போ தான் முழிச்சேன், உங்கள காணோமேன்னு தேடிட்டு வந்தேன்…”
“சும்மா தான் தண்ணி குடிக்க வந்தேன்…”
“நான் தான் பாட்டில்ல தண்ணி பிடிச்சு ரூம்ல வச்சிருக்கேனே.”
“அப்படியா! சாரி பூமிகா நான் கவனிக்கலை.”
“இட்ஸ் ஓகே மாம்ஸ்…” என்றவள், “ஏன் டா பப்புளூ, நீயும் தூங்காம, அவரையும் தூங்க விடாம, இந்த நேரத்துல உனக்கு என்ன விளையாட்டு?” என்றுவிட்டு கண்ணடித் தொட்டியை நங்கென கொட்டினாள்.
“நீங்க வாங்க மாம்ஸ்…”
“நீ போ, நான் லைட்டெல்லாம் ஆப் பண்ணிட்டு வரேன்…”
“நான் பண்றேன் மாம்ஸ்…”
“ப்ச்... நீ போ பூமிகா”
“சரி” என்றவள் அறைக்குள் சென்ற பின், இத்தனை நேரமாக கட்டுப்படுத்தி வைத்திருந்த சிரிப்பினைக் கொட்டித் தீர்த்தான். கண்ணில் நீர் வர சிரித்து ஓய்ந்தவன், “டேய் பப்புளூ ஆணவத்துல ஆடுனா இப்படித்தான். நல்லா வேணும்… நங்குன்னு கொட்டிட்டா என் ஆளு...” என்றுவிட்டு மீண்டும் சிரித்து ஓய்ந்து அறைக்குத் திரும்பியவன், நிம்மதியான உறக்கம் கொண்டான்.
பூமிகாவை தினமும் கல்லூரிக்கு அழைத்துச்சென்றவன், கல்லூரி தொடங்குவதற்கு பத்து பதினைந்து நிமிடங்களுக்கு முன்பே சென்று அவளை இறக்கிவிட்டுவிட்டு சிறிது நேரம் கதைப்பதை வாடிக்கையாக்கினான். அவனது ஒவ்வொரு தினமும் அன்று காலை அவளுடன் பேசியவற்றை அசைபோட்டபடி நகர்ந்தது.
“பூமிகா, ஞாயிற்றுக்கிழமை நான் ரெஸ்டாரண்ட்டுல லஞ்சுக்கு ஏற்பாடு செய்திருக்கேன். உன்னோட பிரெண்ட்ஸை கண்டிப்பா இன்வைட் பண்ணிடு…”
“நிஜமாவா மாம்ஸ்? ரொம்ப தேங்க்ஸ்… ஆமா, யாரெல்லாம் வராங்க?”
“நீ, நான், உன்னோட பிரெண்ட்ஸ்… அவ்வளவுதான்…”
“என்னோட பிரெண்ட்ஸ்காக தனியா ட்ரீட்டா?! ரொம்ப ஹாப்பி மாம்ஸ்… ஆமா, கேட்கணும்னு நினைச்சேன், அதென்ன உங்க காலர் டியூன் ‘நான் கவிஞனும் இல்லை, நல்ல ரசிகனும் இல்லை, காதலெனும் ஆசையில்லா பொம்மையுமில்லை…’னு பழைய சிவாஜி பாட்டு வச்சிருக்கீங்க? நான் என்ன அந்த ஹீரோயினி மாதிரி கோவிச்சுக்கிட்டா இருக்கேன். உங்க மேல ஆசையாத்தானே இருக்கேன்?!”
அவள் கோபித்துக்கொண்டு குழைய, ‘ஆமாம்டி என் செல்லமே…’ என்று மனதிற்குள் அவளை கொஞ்சினான்.
“அப்பா சின்ன வயசுல நிறைய சிவாஜி பாட்டு கேட்பாங்க. நானும் கேட்டிருக்கேன். இந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதான் காலர் டியூனா வச்சிருக்கேன்…”
அவனது நா ஏதேதோ கூறி சமாளிக்க, அவனது மனமோ, ‘மாமாவ இன்னும் கொஞ்சம் கண்டுக்கோ செல்லம்… அதுக்குத்தான் இந்தப் பாட்டு’ என்று ஏங்கியது.
“ஓ! அப்படியா மாம்ஸ்? நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்… பை ஹீரோ!”
அவள் விடைபெற்றுச்செல்ல, அவன் மனமோ அவ்விடம் விட்டு நகரவிரும்பாமல் முரண்டு பிடித்தது. அவள் பின்னே உருண்டோடும் மனதினை இழுத்துப்பிடித்து அலுவலகம் செல்வதற்குள் தினம் தினம் போராட்டம் தான்.
சஞ்சய், பூமிகா தோழிகளுக்காக விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த நாளும் வந்தது. மிகவும் பரபரப்பாக அலங்காரம் செய்து கொண்டு கிளம்பியவளை இமைக்கவும் மறந்து ரசித்திருந்தான். ‘இவ சாதாரணமா காலேஜுக்கு போகும்போதே பார்த்து ரசிக்க ரெண்டு கண்ணு போதலையேனு தோணும். இன்னைக்கு கேட்கவே வேண்டாம்… இப்பவே மூச்சுமுட்டுதே… டிசைன் டிசைனா இம்சிக்கறாளே…’ என்றபடி புலம்பிக்கொண்டே அவளை உடன் அழைத்துச்சென்றான்.
உணவகத்தில் தோழியர் அனைவரும் பூமிகா சஞ்சய் வருவதற்கு முன்பே வந்து குழுமியிருந்தனர்.
“சாரி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுட்டேனா?”
பூமிகாவின் தோழிகளிடம் பரிவோடு கூறினான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல அண்ணா… நீங்க ரெண்டு பேரும் எங்கயோ டூயட் பாட போயிட்டீங்கனு நினைச்சு நாங்க சாப்டுட்டு கிளம்பலாம்னு நினைச்சோம், அதுக்குள்ள வந்துட்டீங்க…”
தோழி ஒருத்தி பரிகசிக்க, அவளது கையில் நறுக்கென்று கிள்ளினாள், பூமிகா.
“ஏன் பூமி என்ன இன்னைக்கு இவ்வளவு மேக் அப்? காலைல நாலு மணிக்கே அலாரம் வச்சு எழுந்து மூஞ்சில ஏகப்பட்ட லேயர் ஏத்திருக்க போல?!”
“அயோ சும்மா இருங்களேன் டி… முதல்ல சாப்பாடு ஆர்டர் பண்ணுவோம்”
கலகலப்பாய் கதை பேசியபடி உணவருந்தி முடித்துவிட்டு, தோழிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இரு பரிசுகளை வழங்கினர். ஒன்று சிறிதாகவும், மற்றொன்று மிகப்பெரிதாகவும் இருக்க அவை என்னவென்று ஆர்வமானான் சஞ்சய்.
“அண்ணா, இந்த சின்ன கிப்ட் எங்களோடது. இந்த பெரிய கிப்ட் உங்க மனைவி உங்களுக்காக சர்ப்ரைஸா ஏற்பாடு பண்ணது” என்றனர் தோழிகள்.
“என்னது இது பூமிகா?”
“நீங்களே பாருங்க…”
ஆர்வமாய் அவன் பிரிக்க உள்ளே கிட்டார் இருந்ததைக் கண்டு யோசனையானான்.
“எனக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கறீங்களா? எங்க வீட்ல கல்யாணம் பேசும்போது மாப்பிள்ளை போட்டோன்னு நீங்க கிட்டார் வாசிக்கற போட்டோவை தானே கொடுத்தீங்க… அதை வச்சுதான் கண்டுபிடிச்சேன். வீட்ல தேடிப்பார்த்தேன் கிட்டார் இல்லை, அதான் புதுசா ஒன்னு வாங்கிட்டேன்.”
அவள் கூறியதைக் கேட்டு மின்சாரம் பாய்ந்ததுபோல் அதிர்ச்சியானவன், மெல்ல தன்னை நிதானப் படுத்திக்கொண்டான்.
“அண்ணா, எங்களுக்காக ஒரு பாட்டு வாசிச்சு காட்டுங்க…”
தோழிகள் கோரஸ் பாட, அவர்களோடு பூமிகாவும் உடன் கோர, சமாளிக்கும் வழி தேடி தீவிரமாய் ஆராய்ந்தான்.
“எனக்கு ரொம்ப டச் விட்டு போச்சு. திடீர்னு என்னால வாசிக்க முடியாது. அதுவுமில்லாம இது பொது இடம் வேற. அடுத்தவங்களுக்கு தொந்தரவா இருக்கும். இன்னொருநாள் வாசிக்கறேனே ப்ளீஸ்…” அவன் பணிவன்போடு கேட்க, மறுக்க எவருக்கும் நா எழவில்லை.
கதை பேசி களித்துவிட்டு தோழிகள் கிளம்பிய பின்,
“என்ன மாம்ஸ் நீங்க, ரெண்டு பாட்டு வாசிச்சு காமிப்பீங்கனு பார்த்தா முடியாதுனு சொல்லிட்டீங்களே… எனக்கு கிட்டார்னா ரொம்பப் பிடிக்கும். உங்க போட்டோவ பார்த்ததும், ‘அக்கா இந்த மாப்பிள்ளைக்கு கிட்டார் வாசிக்கத் தெரியும், அதுக்காகவே ஓகே சொல்லு’னு அவளை படாதபாடு படுத்தினேன். போங்க மாம்ஸ்… நான் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா?”
பெருமூச்செடுத்தவன், “நீ சொல்றதெல்லாம் சரி தான், ஆனா எல்லாருக்கும் ஆசைப்பட்டதெல்லாம் கிடைச்சுடுதா இல்ல நடந்துடுதா? அப்படி நினைச்சுக்கோ… அது சரி, கிட்டார் வாங்க ஏது காசு?”
“அது… அது… கார்ட்ல…”
“உன் அப்பா கொடுத்த கார்ட உபயோகப்படுத்தாதனு சொல்லியிருக்கேன்ல?”
“ஆமா… ஆனா அந்தப் பணமெல்லாம் என்னோட பாக்கெட் மணிய சேத்துவச்சது...”
“பாக்கெட் மணி உன் அப்பா கொடுத்தது தானே?”
“மாம்ஸ்…”
“இனிமே பண்ணாத…”
“ஓகே…”
‘அப்புறம் நான் எதுக்கு சம்பாதிச்சு சேர்த்து வச்சிருக்கேன்… எல்லாம் உனக்குத்தானடி... உரிமையா மாமன் கிட்ட கேளு செல்லம்…’ என்று, மனதிற்குள் வாழ்பவளிடம் மனதிற்குள்ளேயே அறிவுரை கூறியபடி வீடு திரும்பினான்.
“என்ன பூமிகா, பிரெண்ட்ஸ் கூட நல்லா என்ஜாய் பண்ணியா?”
“ஆமா அத்தை”
வீட்டிற்குத் திரும்பியதும் சீதாலட்சுமி விசாரிக்க, சுரத்தே இல்லாமல் பதில் கூறினாள், பூமிகா.
“என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?”
“ரொம்ப தலை வலிக்குது அத்தை…”
“கொஞ்ச நேரம் படுத்துக்கோ” என்று சீதாலட்சுமி கூறியதும், தனது அறைக்குள் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டாள். கையில் கிட்டாரோடு அறைக்குள் வந்தவன், அதனை பத்திரமாய் வைத்துவிட்டு அவளை உறங்கும்படி கூறிவிட்டு வெளியே சென்றான்.
‘ஏன் மாம்ஸ், ஆசைப்பட்டது கிடைக்கலன்னு இன்னும் வருத்தப்படறீங்களா? அக்காவை பத்தி பேசாதனு என்னை சொல்லிட்டு, நீங்க மட்டும் நடந்ததை நினைச்சு வருத்தப்படறது என்ன நியாயம்? உங்கள சுத்தி சுத்தி வர என் மனசு புரியவே இல்லையா? எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா...’ என்று மாலையும் கழுத்துமாக அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைக் கண்டு மனதில் உள்ளவற்றை கொட்டித் தீர்த்தவள், அழுதுகொண்டே உறங்கிப்போனாள்.
சஞ்சய்யோ, அடுக்களையில் ஆர்வமாக ஏதேதோ தேடிக்கொண்டிருந்தான்.
“என்னடா பண்ற?”
“அம்மா , பூமிகா தலை வலிக்குதுன்னு சொன்னாள்ல… அதான் சுக்கு காப்பி போட சுக்கு தேடறேன்…”
“உனக்குத்தான் வெந்நீர் வைக்கவே தெரியாதே…”
“அதெல்லாம் யூடியூப் பார்த்து சிறப்பா செய்வோம்…”
“அது சரி, உனக்குத்தான் வயலின் வாசிக்கத் தெரியாதே, அப்புறம் எதுக்கு வாங்கிட்டு வந்த?”
“எனக்கு வாசிக்கத்தான் தெரியாது. உங்களுக்கு பேரே தெரியலையே… அது வயலின் இல்லை கிட்டார். நான் வாங்கல, பூமிகா எனக்கு கொடுத்த கிப்ட்…”
“அதை வச்சுக்கிட்டு என்னடா பண்ணப்போற?”
“இன்னொரு போட்டோக்கு போஸ் கொடுக்கப்போறேன்… அம்மா, தயவு செஞ்சு எனக்கு வாசிக்கத் தெரியாதுங்கற உண்மைய அவ கிட்ட சொல்லிடாதீங்க. ப்ளீஸ் மதர்…”
“இது வேறயா? சரி போ… நல்லா இரு… அப்பாகிட்டயும் உண்மைய உளறிட வேண்டாம்னு சொல்லி வைக்கறேன்...” என்றுவிட்டு சீதாலட்சுமி சென்றுவிட, பூமிகாவின் மனவாட்டத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்காது, அதி சிரத்தையாய், மிக அதிக கவனத்துடன் அவளுக்காக தலைவலி நிவாரணியை தயார் செய்தான், சக்கரக்கட்டி சஞ்சு.
சஞ்சு… சிம்ப்ளி வேஸ்ட்… நோ கமெண்ட்ஸ்!!
No comments:
Post a Comment