பகுதி - 2
திருக்கோவிலில், மாப்பிள்ளை சஞ்சய், அவனது பெற்றோர், உறவினர் மற்றும் பெண் வீட்டார் குழுமியிருக்க, சிறப்புப் பூஜைகள் முடிந்து மாப்பிள்ளை ஊர்வலம் தொடங்கியது.
“மாப்பிள்ளை, நான் பொண்ணோட தாய்மாமா. மாப்பிள்ளை ஊர்வலத்துக்கு குதிரை ஏற்பாடு செஞ்சிருக்கோம். நான் தான் குதிரையை புக் பண்ணேன்” என்று சஞ்சய்யின் காதுக்குள் பெருமை ஓதிக்கொண்டு கோவிலை விட்டு வெளியே அழைத்து வந்தவர், வாயிலில் நிற்கவைக்கப்பட்டிருந்த குதிரையைக் காண்பித்தார்.
‘என்னங்கடா இது? மாப்பிள்ளை ஊர்வலத்துக்கு ரோஜாப்பூ ஒட்டின காரைத்தானே ஏற்பாடு செய்வாங்க. இவனுங்க குதிரையை நிறுத்தி வச்சிருக்கானுங்க?!’ என்று மிரண்டுபோனான் மாப்பிள்ளை. குதிரையின் அருகே நின்றிருந்த அதன் சொந்தக்காரன் அழுக்கு லுங்கியுமாய், புகையிலை வாயுமாய் “நமஸ்தே சாப்… ஆவோஜி” என்று வணக்கம் வைத்தான்.
‘இந்தக் குதிரையெல்லாம் வடநாட்டுல தானே கல்யாண அழைப்புக்கு வைப்பானுங்க?! அவனுங்க பானி பூரி விக்க வரும்போது கூடவே குதிரையையும் ஓட்டிட்டு வந்துட்டானுங்க போல. இறைவா… நான் பீச்சுல கூட குதிரை மேல போனதில்லை… கல்யாணத்துல இப்படி ஒரு சோதனையா எனக்கு...’ என்று துக்கப்பட்டு, துயரப்பட்டு, வேதனைப்பட்டு தனது தாயை நோக்க, அவள் மட்டுமின்றி அனைவருமே குதிரையையும் அவனையும் மாறிமாறி பார்த்திருந்தனர்.
“அண்ணே என்ன இது குதிரையெல்லாம்??” என்று அருகில் நின்றிருந்த அண்ணனிடம் கடுப்படித்தான், சஞ்சய்.
“இது கூட நல்லாத்தான் இருக்கு… சீக்கிரம் ஏறு மாப்பிள்ளை… மொத்த கூட்டமும் உன் சாகசத்தை பார்க்க பின்-ட்ராப் சைலன்ட்ல இருக்கு” என்று அண்ணன் பதிலளித்துவிட்டு நழுவிக்கொண்டான்.
“ஏறுங்க மாப்பிள்ளை, என்ன யோசனை?” என்று குதிரையை ஏற்பாடு செய்திருந்த தாய்மாமன் கூற,
“நான் கோட் சூட் போட்டிருக்கேன் மாமா, நீங்க சொல்ற மாதிரி தாவியெல்லாம் ஏற முடியாது. நான் நடந்தே வந்துடறேனே…” குரலைத் தாழ்த்தி பணிவன்போடு மன்றாடினான்.
“அட ஆமா, இதை நான் யோசிக்கவே இல்லை… இருங்க வரேன்” என்று சென்றவர் அருகில் பூக்கடையிலிருந்து ஒரு மர ஸ்டூலை இரவல் வாங்கி வந்தார்.
“இப்ப ஸ்டூல் மேல ஏறி, அப்படியே குதிரை மேல ஏறிடுங்க… நான் ஒரு கைய பிடிச்சுக்கறேன்” என்றவர் அவனது இடக்கையைப் பிடித்துக்கொள்ள, மர ஸ்டூலின் மீதேறி, இடது காலை சுதாரித்தபடி சஞ்சய் வலது காலைத் தூக்க, குதிரை வெடுக்கென எட்டு வைத்து சற்று முன்னே நகர்ந்து சென்றது. தூக்கிய காலை தூக்கியபடி குதிரையின் செயலால் உறைந்து நின்றவன், ‘நல்லவேளை உட்காரல… இந்நேரம் வாரிக்கிட்டு கீழ விழுந்திருப்பேன்...’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டான். தாய்மாமன் குதிரைக்காரனை கத்த, குதிரைக்காரன் குதிரையைக் கத்த, அதுவும் கனைத்தபடி மீண்டும் பொசிஷனில் வந்து நின்றது. இம்முறை கூட்டத்தில் இருந்து நான்கைந்து ஆண்கள் ஒன்று சேர்ந்து அவனை அலேக்காக தூக்கி குதிரையில் உட்கார வைத்தனர்.
நடப்பவற்றை நொடி தவறாது திருமண ஒளிப்பதிவாளர் படம் பிடிக்க, ‘ஐயோ இதெல்லாம் என் தீபு குட்டி பார்த்தா என்ன நினைப்பா… இவனுங்க இதையெல்லாம் தெரிஞ்சு செய்யரானுங்களா இல்ல தெரியாம செய்யறானுங்களா… மை டியர் இறைவா…' என்று நொந்துகொண்டான்.
சிறிது தூரம் ஊர்வலம் கடந்த பின், மாப்பிள்ளை முன் வழிமறித்து நின்ற பெரியவர் ஒருவர், “மாப்பிள்ளை, இந்த வீரவாளை கையில பிடிச்சுக்கிட்டு வாங்க. சும்மா வீராதிவீரனாட்டம் இருப்பீங்க!!” என்றுவிட்டு சஞ்சய் கையிலிருந்த பூச்செண்டை வாங்கிக்கொண்டு, இரண்டடி நீள வாளினை கையில் திணித்தார்.
சஞ்சய் கலவரமாகித் தயங்க, “இது நிஜம் கத்தியில்லை மாப்பிள்ளை, நாடகத்துக்கு வாடகைக்கு கொடுக்கற கடையிலிருந்து வாங்கிட்டு வந்தது… மொக்க கத்தி தான்” என்று அவர் கூற, ‘சரி’ என்றுவிட்டு ஒருவாறு சிரித்து வைத்தான்.
‘விநாயகா என்னை நல்லபடியா மண்டபத்துல கொண்டு போய் சேர்த்துடுப்பா’ என்று அவன் மானசீகமாய் வேண்டிக்கொண்டு வர,
“ஒரு கையில குதிரையை பிடிச்சுக்கிட்டு, மறு கையில வீரவாள ஏந்திக்கிட்டு நம்ம மாப்புள வர அழகை பார்த்தா திப்பு சுல்தான் வீதி உலா போற மாதிரி இருக்கு!!” என்று கூட்டத்திலிருந்து ஒலித்த குரல் கேட்டு அழுவதா சிரிப்பதா என்று புரியாமல் தவித்துப் போனான்.
‘அடேய்களா… திப்பு சுல்தான் எப்படா கோட் சூட் போட்டுக்கிட்டு குதிரைல வீதி உலா போனாரு… எல்லா பயலும் பிளான் பண்ணி கலாய்க்கறானுங்க… அவனவன் தன்னோட கல்யாணத்துல செஞ்சு பார்த்துக்க முடியாததையெல்லாம் அடுத்தவன் கல்யாணத்துல செய்ய வச்சு உயிர வாங்குறானுங்க’ என்று சஞ்சய் நொந்து, வெந்து, அவிந்து போக, ஒரு வழியாக மண்டபம் வந்து சேர்ந்தது, மாப்பிள்ளை ஊர்வலம்.
சஞ்சய்யின் வீரவாளை ஒருவர் வாங்கிக்கொள்ள, பெண்ணின் தாய்மாமன் குதிரையின் அருகே போட்டு வைத்த பிளாஸ்டிக் இருக்கையில் பதுவிசாக அவன் இறங்க, மறுநொடியே இருக்கையின் கால் முறிந்து தடுமாறி கீழே விழப்போனவனை தாங்கிப் பிடித்து நிறுத்தியது தளிர் கரம் ஒன்று. அவன் அவள் முகம் நோக்க, அவள் இன்முகம் காட்ட, பட்டென எழுந்து தன்னை சுதாரித்துக்கொண்டான், சஞ்சய்.
“என்னாச்சு மாப்பிள்ளைக்கு?” என்று வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் வினவ,
“சுல்தானுக்கு ஸ்லிப் ஆயிடுச்சு” என்றுவிட்டு அவள் தோழிகளோடு ஓடிச்சென்றாள்.
“உன் மச்சினி உன்னை கலாய்ச்சுட்டு போறா, நீ என்னடான்னா அமைதியா இருக்க?!”
அண்ணன் அவன் காதில் கேலி பேசினான்.
‘ஓ! இவதான் தீபு பேபியோட தங்கச்சி பேபியா…’ என்று எண்ணிக்கொண்டவன், ‘கொஞ்சம் என் பேபிய கண்ணுல காட்டுங்கடா’ என்று தன் காரியமே கண்ணானான்.
அடுத்த சில நிமிடங்களில், அலங்கரிக்கப்பட்ட மேடையின் மீது சஞ்சய் நிற்க, அவனருகே தோழிகள் புடை சூழ, ஒப்பனைகள் ஜொலி ஜொலிக்க, பெண்ணவள் வந்து நின்றாள். அவளை வஞ்சனையில்லாமல் கண்குளிர கண்டு ரசிக்க முடியாமல் அவன் தவிக்க, அவளைச் சூழ்ந்திருந்த இளசுகள் தங்களுக்குள் பேசிச் சிரித்துக்கொண்டிருக்க, அவனுக்கு சற்றே எரிச்சல் ஆனது. அவளைக் கண்டு சிறு புன்னகை கூட செய்ய முடியாமல் அவன் தவித்துக்கொண்டிருந்தான்.
பரிசு கொடுப்பதற்கு வரிசைக்கட்டி நின்ற உறவுகள் ஒருவர் மாற்றி ஒருவர் வந்துகொண்டிருக்க, அவ்வப்போது சிலபலரை அறிமுகம் செய்யும் இடைவெளியில் அவளது அழகை, குறுநகையை, வணக்கம் சொல்லும் நளினத்தை ரசித்து, நெஞ்சினில் நிறைத்துக் கொண்டான்.
பரிசு வழங்கும் படலம் ஒருவாறு ஓய்ந்தபின் சினிமாப் பாட்டு ஒலிக்க, மேடையில் இளஞ்சிட்டுகள் நடனத்தைத் தொடங்கினர். ஆடிக்கொண்டிருந்தவர்களின் மத்தியிலே அவனது கவனத்தை மட்டுமல்ல, அனைவரின் கவனத்தையும் தன்வசம் ஆக்கியிருந்தாள் அவனது மச்சினி. அவனுக்கும் உள்ளூர ஆடவேண்டும் என்று சிறு ஆசை இருப்பினும், அமைதியாய் நின்றிருந்த தீபிகாவைக் கண்டு அவனும் அமைதியாகிப் போனான். பலரும் அவனை ஆட அழைத்தும் மறுத்துவிட்டான்.
"சஞ்சய், நீயும் ஆட வேண்டியது தான?! அநியாயத்துக்கு வெட்கப்படற?"
மாப்பிள்ளைத் தோழனாய் நின்றிருந்த அண்ணன் காதுகடித்தான்.
"சும்மாவே வர்றவன் போறவனெல்லாம் என்னை கலாய்க்கறாணுங்க. இதுல டேன்ஸ் வேற நான் ஆடினா, 'அந்த நடராஜரே இறங்கி வந்து நடனம் ஆடற மாதிரி இருக்கு’னு சொன்னாலும் சொல்லுவானுங்க. எதுக்கு வம்பு?"
மாப்பிள்ளையும் பதிலுக்கு காது கடித்தான்.
"ஏன்டி, மாப்பிள்ளையை ஆட சொல்லுங்களேன்…" என்று அந்த இளவட்டங்களிடம் பாட்டிமார் ஒருவர் கூற,
"சுல்தானுக்கு கத்தி சுத்த மட்டுந்தான் தெரியுமாம்… ஆட வராதாம்..." என்று அவனது மச்சினி அவனைக் கண்டு நக்கலாக சிரித்துக்கொண்டே பதில் கூற, அதைக் கேட்டு அனைவரும் சிரிக்க, மாப்பிள்ளையின் நிலையோ, ஷேம் ஷேம் பப்பி ஷேமாகிவிட்டது.
'இவ என்னை இப்படி கிண்டல் பண்றா, ஆனா எந்த ரியாக்ஷனும் இல்லாம என் தீபுமா நிக்கறாளே…' என்று ஃபீலிங்க்ஸ் ஆஃப் இந்தியாவாகிவிட்டது சஞ்சய்க்கு. இருப்பினும் தன்னவள் மீது அவனுக்குத் துளியும் வருத்தம் எழவில்லை.
இரவு விருந்து முடிந்து, மாப்பிள்ளை தனது அறையில் மறுநாள் திருமணத்தை எண்ணி பரவசத்தில் தூக்கம் வராமல் புரண்டிருந்தான். அதைக் கலைக்கும் வண்ணம் கைப்பேசி அவ்வப்போது சிணுங்கி அடங்க, அதில் கவனம் கொண்டான்.
அனைவரும் தஞ்சம் கொள்ளும் முகப்புத்தகத்தில் அவனும் தஞ்சம் கொள்ள, அதில் இருந்த பதிவினைக் கண்டு ஏறத்தாழ கண்கள் கலங்கிவிட்டான். மாப்பிள்ளை ஊர்வலத்தில் குதிரையின் மீது ஏறுவதற்கு முன் ஒற்றைக் காலில் நின்று கொண்டு, மற்றொரு காலைத் தூக்கிய நிலையில் அவன் தடுமாறிய புகைப்படம் பகிரப்பட்டு திருமண வாழ்த்து செய்தியும் பதிவிடப்பட்டிருந்தது. அடுத்து அவன் கையில் வாளோடு பவனி வந்த புகைப்படம் பகிரப்பட்டு, 'தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா… வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாளா…’ என்ற வரிகளும் பதிவிடப்பட்டிருந்தது.
'எவன்டா இந்த வேலையை பார்த்தது?’ என்று கோபம் கொப்பளிக்கும் கனலாய் அவன் பதிவுகளைப் பார்த்துக்கொண்டிருக்க, ‘ஹாய் மாம்ஸ்… என்னோட பிரென்ட் ரிக்குவெஸ்ட் அக்செப்ட் பண்ணுங்க’ என்று முகப்புத்தக உட்பெட்டியில் குறுஞ்செய்தி ஒன்று வந்துவிழுந்தது.
‘யாரிது?!!’ என்று ஆர்வமான சஞ்சய், அனுப்புனரைப் பார்க்க, ‘பூமிகா’ என்ற பெயரில் அவனது மச்சினி முகப்புப் படத்தில் சிரித்துக்கொண்டிருந்தாள். ‘இவ இங்கயும் வந்துட்டாளா..’ என்று அயர்ந்துகொண்டவன் அவளது நட்பு விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள, உடனே அவனது கைப்பேசி எண்ணை வேண்டி இன்னொரு குறுஞ்செய்தி வந்தது. அவன் பதில் கூறியதும் உடனே புது இலக்கத்திலிருந்து அழைப்பு வர, அதனை ஏற்று “ஹலோ!” என்றான், மாப்பிள்ளை சஞ்சய்.
ஹையோ அணுகுண்டு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு ஓ ஓ மாப்ளே!!
No comments:
Post a Comment