Monday, 6 January 2020

கா(த)லர் டியூன் - 4




வீட்டில் குழுமியிருந்த நெருங்கிய சொந்தங்கள் வசை பாட, அன்னை சீதாலட்சுமி ஒரு மூலையில் அழுதுகொண்டிருக்க, யாருடனும் பேச விரும்பாமல் தனது அறைக்கு சென்றான், சஞ்சய்.

படாரென கதைவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த தந்தை ராமநாதன், தனது கையிலிருந்த வங்கிக் கணக்கு புத்தகங்களை அவன் மீது வீசியவர், “காசு தான வேணும் உனக்கு? என் பேர்ல இருக்கற எல்லா காசையும் எடுத்துக்க. நானும், உன் அம்மாவும் உன்னை பெத்த பாவத்துக்கு உச்சி குளிர்ந்து போயிருக்கோம். நான் அவளை கூட்டிக்கிட்டு எங்கயாவது போயிடறேன்… நீ எங்க போட்டோவுக்கு மாலை மாட்டிடு” என்று வார்த்தைகளால் அவனை சுட்டுவிட்டுச் சென்றார்.

தந்தை கூறியதைக் கேட்டு கண்களில் நீர் துளிர்க்க, கட்டிலில் சரிந்து கண் மூடினான், சஞ்சய். கைப்பேசி ஒலிக்க அழைப்பினை எடுத்தவன், பதறியடித்துக்கொண்டு வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனத்தை நோக்கி ஓடினான். அவனது பரபரப்பைக் கண்டு தந்தை துணுக்குற, மற்றவர் கேள்வியாய் நோக்க, கவலையும் கோபமுமாய் அவன் முன்னே சென்று நின்றார், ராமநாதன்.
“இப்போ எங்க அவசரமா கிளம்பற?” என்றபடி அவனை வண்டியை கிளப்ப விடாமல் வழிமறித்து நின்றார்.
"அப்பா, தீபிகாவுக்கு ஏதோ பிரச்சனையாம், அவ தங்கை இப்போ தான் ஃபோன் போட்டு சொன்னா. நான் பார்த்துட்டு வந்துடறேன்."
"பிரச்சனையே உன்னால தான், இப்ப நீ எந்த பிரச்சனைய தீர்த்து வைக்க கிளம்பிட்ட?"
"அப்பா, ப்ளீஸ் நான் உடனே வந்துடறேன்" என்றவன், தந்தையின் சொல்லையும் மீறி திருமண மண்டபத்திற்கு விரைந்தான்.
“அவன் எங்க போயிருக்கான்?” என்று வினவிக்கொண்டு சீதாலட்சுமி வாயிலில் வந்து நிற்க,
“அந்த தீபிகாவுக்கு ஏதோ பிரச்சனையாம், போன் வந்ததுன்னு கல்யாண மண்டபத்துக்கு போயிருக்கான்…” என்று பற்கள் நறநறக்க கூறிமுடித்தார்.
“சித்தப்பா, அந்த பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டு வந்தவன் இப்போ அவளுக்கு பிரச்சனை’னு எதுக்கு ஓடணும்?” 
ராமநாதனின் அண்ணன் மகன் வினவ, அனைவருக்குமே சஞ்சய்யின் நடவடிக்கை புதிராகத் தான் இருந்தது.  
“அப்போவே போலீஸ் கேஸுன்னு மிரட்டுனாங்க. இவனை பேசி வரவழைச்சு ஏதாவது ஆபத்து உண்டு பண்ணிடுவாங்களோனு பயமா இருக்கு...” 
மகனை எண்ணி, தரையில் சரிந்து அமர்ந்த சீதாலட்சுமி குரலெடுத்து அழ, ராமநாதனுக்கும் ஒருவித கலக்கம் பிறந்தது. தனது மனைவியையும், நெருங்கிய சொந்தங்களையும் அழைத்துக்கொண்டு அவர் மண்டபத்திற்கு உடனே விரைந்தார்.

அடித்து பிடித்து மண்டபத்திற்குள் சென்ற சஞ்சய், தீபிகா கண்கள் கலங்கியிருக்க, அவள் அருகில் அவளது கணவன் கவலையாய் நின்றிருக்க, உறவுகள் இவனது வருகையை எதிர் நோக்கியது போல காத்திருக்கக் கண்டு கண்களில் கொக்கிகள் மின்ன அவர்களின் எதிரே சென்று நின்றான்.
“டேய் சஞ்சய், என்ன பிரச்சனை?” என்று குரல் கொடுத்துக்கொண்டே அவனருகே அவனது அண்ணனும், உறவுகளும் வந்து நின்றனர்.

“இப்போ எதுக்கு எல்லாரையும் வரவழைச்ச பூமிகா? என்ன நடக்குது இங்க?”
தாய்மாமன் பொறுமை இழந்தார். 
சஞ்சய்யை ஆழ்ந்து நோக்கிய பூமிகா, தனது அக்காவை நோக்கி,
"அவர் மட்டுமில்ல, அவர் வீட்டு ஆளுங்களும் வந்திருக்காங்க… ரொம்ப நல்லதா போச்சு... இப்பவாவது உண்மைய சொல்றியா?" என்று கண்டிப்பான குரலில் அக்காவை கூராய் நோக்கியபடி, வினவினாள்.
"அவ… அவர் மேல…"
வார்த்தைகளை மென்று முழுங்கினாள், தீபிகா.
"இப்ப எதுக்கு தேவை இல்லாதத பேசிக்கிட்டிருக்கீங்க?"
அவள் கூறவந்ததை கூறி முடிக்கும் முன், சஞ்சய் இடைமறித்தான்.
"உங்களுக்கும் பேச வாய்ப்பு வரும். அப்ப நீங்க பேசலாம். இப்ப என் அக்கா சொல்ல வந்ததை சொல்லட்டும்" என்று பூமிகா அவனை நோக்கி திடமாய்க் கூற, இவன் நா அமைதியானது.

குற்ற உணர்வுகள் கண்களில் ததும்ப சஞ்சய்யை நோக்கிய தீபிகா, மறுநொடி தனது தலையை தாழ்த்திக்கொண்டு முடக்கி வைக்கப்பட்டிருந்த உண்மைகளை கூறத் தொடங்கினாள். 
"அவர் மேல எந்தத் தப்பும் இல்லை. என் விருப்பத்துக்கு மாறா இந்தக் கல்யாணம் நடக்கயிருந்தது. என்னை பெத்தவங்க என் மனசை புரிஞ்சுக்கல, ஆனா இவர் புரிஞ்சுக்கிட்டார். சின்ன வயசுல எனக்கும் ரமேஷ் மாமாவுக்கும் தான் கல்யாணம்னு எல்லாரும் பேசி சிரிப்பீங்க. ஆனா அது விளையாட்டில்லனு எத்தனை பேர் உணர்ந்தீங்க? நீங்க பேசிப்பேசியே எங்களுக்குள்ள ஆசைய விதைச்சுட்டீங்க… திடீர்னு வந்து இவர் தான் மாப்பிள்ளை’னு இன்னொருத்தர கைகாட்டினா எப்படி ஏத்துக்க முடியும்? அப்பா… உங்க கிட்டையும், மாமா கிட்டையும் வெளிப்படையா என் விருப்பத்தை சொல்லியும், வசதிய காரணம் காட்டி நீங்க மறுப்பு தெரிவிச்சீங்க. அப்போ தான் நேத்து இவரோட பேச எனக்கு வாய்ப்பு கிடைச்சுது…”

நேற்றிரவு…
“எல்லாரும் இப்படி மாறிமாறி பேசி ஏன் என் தூக்கத்தை கெடுக்கறீங்க?” 
பூமிகா மற்றும் அவளது வானரப் படையின் பரிகாசத்திலிருந்து தப்பிக்க வழி தெரியாமல், விழி பிதுங்கியிருந்தான், சஞ்சய். நள்ளிரவு நெருங்கியும் அவனை விடுவேனா என்று கைப்பேசியின் வழியே அவர்கள் ரகளைகள் செய்துகொண்டிருந்தனர்.
“மாம்ஸ், எல்லார்கிட்டயும் பேசினீங்க, ஆனா முக்கியமான ஒருத்தர் கிட்ட பேசவே இல்லையே?!” என்ற பூமிகா தனது அக்காவை நோக்க, அவளோ கட்டிலில் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு, பேசும் வாய்ப்பிற்காக காத்திருந்தாள்.

சஞ்சய்க்குள்ளும், அடுத்து பேசவிருப்பது தீபிகாவாக இருக்க வேண்டும் என்றொரு எதிர்பார்ப்பும், ஆசையும் முட்டி முளைத்தது. தங்கையிடமிருந்து கைப்பேசியை பெற்றுக்கொண்ட தீபிகா, உடனே அறையை விட்டு வெளியே வந்து தனிமையில் நின்று பேசத் தொடங்கினாள்.
“ஹலோ… நான் தீபிகா பேசறேன்...”
அவளது குரலைக் கேட்டவனுக்கு அன்றைய பொழுதின் அலுப்புகள் நீங்கி, உற்சாகம் சுரந்தது.    
“ஹாய் தீபிகா… எப்படி இருக்கீங்க?” 
வார்த்தைகளுக்கு வலிக்கா வண்ணம் மென்மையாய் வினவினான்.
“ம்ம்… உங்ககிட்ட… உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்… நீங்க மண்டபத்து மாடிக்கு வரமுடியுமா?” என்றாள், அவசரஅவசரமாக. அவளது குரலே ஏதோ வில்லங்கம் காத்திருப்பதை போட்டுடைத்தது.
“சரி வரேன்…” என்றுவிட்டு அழைப்பினைத் துண்டித்தவனின் மனம் கனத்தது.   

மொட்டை மாடியில் நிலவொளியும், ஒரு மஞ்சள் பல்ப் ஒளியும் மட்டுமே அவளுக்குத் துணையாக இருக்க, இருள் படர்ந்திருந்த வெளியைக் கண்டு அச்சம் கொள்ளாது, அதைக் குறித்த நினைவு கூட இல்லாது, தனது சிந்தனையில் தொலைந்திருந்தாள். 
“தீப்… பிகா…” 
‘தீபு’ என அழைக்க நினைத்து ‘தீபிகா’ என்றான், சஞ்சய்.    
அவனைக் கண்டதும் கண்கள் தாழ்த்திக்கொண்டவள், 
“என்னை மன்னிச்சுடுங்க…” என்றாள், அவன் குழம்பும்படியாக.
“ஏதாவது பிரச்சனையா?” என்றான் சஞ்சய், பரிவாக.
‘ஆம்’ என்று தலையசைத்தவள், “நீங்க தான் உதவி செய்யணும் ப்ளீஸ்..” என்றாள் குரல் தழுதழுக்க.
“எந்தப் பிரச்சனையா இருந்தாலும் சரி பண்ணிடலாம். ப்ளீஸ் அழாதீங்க…”
“எனக்கு இருக்கற கடைசி நம்பிக்கை நீங்க தான்…” என்றவள் விழிவழியே அவனது உதவியை யாசிக்க,
“நிச்சயம்… நிச்சயம் செய்யறேன். நீங்க எதுவா இருந்தாலும் சொல்லுங்க…” என்றான் ஆறுதலாக.
அவளது கண்ணீர், அவனது இதயத்தைச் சுட்டது.
“எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லை…”
அவள் நிதானமாய்க் கூறினாலும், அவள் கூறியது அவன் தலையில் இடியென இறங்கியது. தொண்டை அடைத்துக்கொள்ள, கண்கள் ஈரம் கொள்ள, பதில் என்ன சொல்வதென்று புரியாமல் பேரதிர்ச்சியில், பரிதவித்து நின்றான். அவன் எதுவும் கூறும் முன், தீபிகா தன் மனதை மொழியத் தொடங்கினாள்.
“என்னுடைய அம்மா வழி முறைப்பையன் ஒருத்தர விரும்பறேன். சின்ன வயசுல அவருக்கும் எனக்கும் தான் கல்யாணம்னு பேசிப்பாங்க. அந்த நினைப்பு என் மனசுல விதையா விழுந்து, மரமா வளர்ந்து நின்னதை நான் உணர்ந்ததே உங்களோட எனக்கு நிச்சயம் ஆன பிறகு தான். அவரும் பொண்ணு கேட்டு வந்தாரு. ஆனா, அப்பா மறுத்துட்டார். உடனே இந்தக் கல்யாணத்தை ஏற்பாடு செய்தார். என் விருப்பம் என்னனு அவங்க கேட்கவே இல்லை. நானா வெளிப்படையா பேசியும், அதை புரிஞ்சுக்கல. அப்பாவுக்கு பயந்து அம்மாவும் கூட என் விருப்பத்துக்கு தடை சொல்லிட்டாங்க. உங்ககிட்ட எப்படியாவது பேசணும்னு முயற்சி பண்ணேன். இப்ப தான் வாய்ப்பு கிடைச்சுது. நீங்க தான் எப்படியாவது இந்தக் கல்யாணத்தை தடுத்து நிறுத்தணும். ஒருவேளை இந்தக் கல்யாணம் நடந்தா நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல மனைவியா என்னால இருக்க முடியாது. எவ்வளவு காலம் ஆனாலும் என் மனசையும் என்னால மாத்திக்க முடியாது. என்னை மன்னிச்சுடுங்க…” என்று மனதில் உள்ளவற்றைக் கூறி முடித்தவள், கைகளுக்குள் முகம் புதைத்து அழத்தொடங்கினாள். 
அவள் கூறியவற்றை உள்வாங்கிக்கொள்ள முடியாமல் தவித்திருந்தவன், சில நிமிடங்கள் அமைதியாய் நின்றிருந்தான், தனது மனதின் ஆர்ப்பரிப்பு சற்றே அடங்கும் வரை. 
அழுது ஓய்ந்தவள் அவனை நோக்க, அவனோ எங்கோ வெறித்தபடி இருந்தான். “நான் கிளம்பறேன்…” என்றவள், அவனது பதிலுக்கு காத்திராமல் தனது அறைக்கு விரைந்தாள்.


நடந்தவற்றை கூறிமுடித்தவள், “நீங்க யாரும் என்னை புரிஞ்சுக்கல, இவராவது புரிஞ்சுப்பாரான்னு முயற்சி செஞ்சு பார்ப்போம்னு தான் நேத்து ராத்திரி மண்டபத்து மொட்டை மாடில இவரை சந்திச்சு எல்லா உண்மையையும் சொன்னேன். அவர் என் உணர்வுக்கு மதிப்பு கொடுத்ததும் இல்லாம, ஒரு படி மேல போய், பொய்ப் பழிய தன் மேல ஏத்துக்கிட்டு, இந்தக் கல்யாணத்தை நடத்தி வச்சாரு…" என்றாள் தனது பெற்றோரை நோக்கி. கண்ணீர் மல்க கூறி முடித்தவள், பட்டென சஞ்சய்யின் காலில் விழுந்தாள்.
அவளை எழுப்பியவன், “கவலை படாதீங்க தீபிகா, அழுவறதால எந்தப் பிரயோஜனமும் இல்லை… நல்லா வாழ்ந்துகாட்டுங்க!!” என்று மனதார வாழ்த்தினான்.

“வாழ்த்தறது இருக்கட்டும் தம்பி, எங்க பொண்ணு உங்ககிட்ட வந்து இப்படி பேசினா, நீங்க எங்ககிட்ட வந்து சொல்லியிருக்க வேண்டாமா? இப்படித்தான் கல்யாணத்துல குழப்பத்தை உண்டு பண்ணுவீங்களா?” 
கடிந்துகொண்டார் தாய்மாமன்.
“டேய் எங்கக்கிட்டயாவது சொல்லியிருக்கலாமேடா?” 
அண்ணனும் முறைத்துக்கொண்டான்.
“இன்னைக்கு விடிஞ்சதும் முதல்ல அப்பா, அம்மா கிட்ட சொல்லணும்னு தான் நினைச்சேன். ஆனா அவங்களுடைய ரியாக்ஷன் என்னவா இருக்கும்னு என்னால ஊகிக்க முடியல. இந்தக் கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்லைங்கறது ஒரு பக்கம் இருந்தாலும், இத்தனை பேர் கூடியிருக்கற சபைல நான் ஏதாவது செய்யப்போக என் அம்மா அப்பா தலை குனியும்படி ஆகிடுமோனு ஒரு பயம். எல்லாருக்கும் இந்த விஷயம் தெரியவந்தா, ஒரு பொண்ணு அவமானப்படவேண்டி வருமே’னு ஒரு தயக்கம். அப்பத்தான் ரமேஷ்கிட்டயிருந்து கால் வந்தது. 
‘சார் நாங்க பார்க்கு, பீச்சுன்னு சுத்தினது இல்லை. போன்ல மணிக்கணக்கா கதை பேசினதில்ல. ஏதாவது ஒரு விழாவுல இல்லை பொது இடத்துல சந்திச்சுக்கும்போது ஒருத்தரை பார்த்து ஒருத்தர் சிரிச்சுப்போம், அவ்வளவுதான். மனசு ஒத்துப்போன பிறகு பேச்செதுக்குனு நினைச்சேன். உங்ககூட தீபிகாவுக்கு கல்யாணம் முடிவு பண்ணின விஷயம் தெரிஞ்சு என் அம்மா, அப்பாவ அழைச்சுட்டு போய் பொண்ணு கேட்டேன். சரியான தொழில் அமைஞ்சு போதிய வருமானம் இல்லாததால பொண்ணு கொடுக்க முடியாதுனு சொல்லிட்டாங்க. பெத்தவங்களா அவங்க முடிவு சரிதான். ஆனா அவளுக்கும் மனசு இருக்குல்ல?! அவளும் என்னை விரும்பறதா வாய்விட்டுச் சொன்ன பிறகும் என்னால அமைதியா இருக்க முடியல. முன்னேறணும்ங்கற வெறியோடத்தான் ராத்திரியும், பகலும் உழைக்கறேன். சில வருஷத்துல நான் நல்ல நிலைமைக்கு நிச்சயம் வந்துடுவேன். ஆனா, அப்போ நான் இழந்த என்னோட காதல் திரும்பக்கிடைக்குமா சார்? இல்லை, மனசுல என்னை நினைச்சு புழுங்கிபுழுங்கி அவ உங்களோட வாழற வாழ்க்கை தான் இனிக்குமா?’ னு சொன்னார். அவர் பேசினது ஒவ்வொண்ணும் அவங்க ரெண்டு பேருக்குமான ஆழமான காதல எனக்கு உணர்த்துச்சு. என்னால சேர்த்த வைக்க முடியலைனாலும், அவங்க பிரிய நான் காரணமா இருக்கக்கூடாதுனு தான் பத்து லட்சம் பணம் கேட்டு நான் கல்யாணத்தை நிறுத்தினேன். எந்த பணத்துக்காக அவரை வேண்டாம்னு சொன்னீங்களோ, அதே பணம் நான் கேட்டதும் நான் கெட்டவனாகிட்டேன், அவர் நல்லவராகி கல்யாணமும் முடிஞ்சுது. எனக்கு இதுல வருத்தமோ, குற்றவுணர்வோ இல்லை. ஒரு நல்ல விஷயம் நடக்க காரணமாயிருந்த திருப்தி தான்.”
“இப்படியெல்லாம் இனிக்க இனிக்க பேசி, உங்களோட செயல நியாயப்படுத்த பார்க்கறீங்களா?”
அவனை பாராட்டாது, வினா விடுத்து இறுக்கினர், சிலர்.
"கட்டாயக் கல்யாணம் பண்றது, உயிரோட இருக்கற பொண்ணுக்கு கருமாதி பண்றதுக்கு சமம். தப்பு பண்ணவன விட தப்புக்கு துணை போனவனுக்கு தான் தண்டனை அதிகம். தாராளமா என்ன தண்டனை வேணும்னாலும் எனக்குக் கொடுங்க. ஆனா தப்பெல்லாம் உங்களோடது தான்னு ஒரு நாள் உணருவீங்க…" என்று சபையினரை நோக்கி உணர்ச்சிப்பொங்கக் கூறி முடித்தவன், மூச்சிரைக்க அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான். 

"உங்களுக்கு ஆயுள் தண்டனை தயாரா இருக்கு" என்ற குரல் கேட்டு தலை நிமிர்ந்தவன், அவன் எதிரே, நெஞ்சின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்த பூமிகாவைக் கண்டு கேள்வியாய் நோக்கினான். 
"என்ன தண்டனை?" என்றான், ‘எதற்கும் தயார்’ என்பதைப்போல.




அந்த வானத்தை போல மனம் படைச்ச நல்லவனே… போ மாப்பு கண்ணு வேர்த்துடுச்சு…

No comments:

Post a Comment