Monday, 6 January 2020

கா(த)லர் டியூன் - 7




போட்டோ ஃப்ரேமினை பூமிகா இமைக்காது பார்த்துக்கொண்டிருக்க, சஞ்சய்யின் ரத்த அழுத்தம் உச்சத்தைத் தொட்டது. அவளது கண்கள் குளமாக அவனை நோக்கியவள்,
“எல்லாரும் கல்யாண போட்டோவை தான் ஃப்ரேம் போட்டு வச்சிருப்பாங்க, நீங்க பத்திரிக்கையவே ஃப்ரேம் போட்டு வச்சிருக்கீங்க?” என்றாள் கோபமும், ஏமாற்றமுமாய்.
“அது… அது…” என்று நெளிந்தவன், “இங்கக் கொடு” என்று அவள் கையிலிருந்த பறித்து மேஜையின் கீழிருந்த இழுப்பறையைத் திறந்து அதனுள் வைத்து மூடி மீண்டும் அவளை நோக்க, அவளோ இரு கைகளைக் கொண்டு தனது வாயினைப் பொத்தி நின்றிருந்தாள்.
“என்ன ஆச்சு?”
அவன் பதறினான்.
“எனக்கும் அடுத்தவங்களை நோகடிக்கறது பிடிக்காது. இப்போ தான் நான் இனிமேல் அழக்கூடாதுனு சொன்னீங்க. அதான் குறைஞ்சபட்சம் உங்க முன்னாடி அழாம இருக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றவள், மீண்டும் கைகளால் இம்முறை முகத்தினை மூடிக்கொண்டு வெளியே ஓடிச்சென்றாள். 

‘எத்தனை பஞ்சாயத்து?’ என்று சோர்ந்து கட்டிலின் மேல் சரிந்தவன், உறக்கமின்மையால் சோர்ந்திருந்தவன், அவளை எண்ணியபடியே உறங்கியும் போனான். ஆற்றங்கரையருகே, சலசலக்கும் நீரோடை தவழ்ந்து செல்ல, அருகே அவள் தங்க நகைகள் பூட்டி, மகுடம் தரித்து, மெல்லிடை அசைத்து நடை பழகிச் செல்ல, இவனோ மன்னாதி மன்னன் வேடம் பூண்டு கையில் வீரவாளுடன் குதிரையின் மேல் அமர்ந்துகொண்டு (அன்று மாப்பிளை அழைப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்ட அதே குதிரை!!) அவளை தொடர்ந்திருந்தான். இவனை அடிக்கொருமுறை அவள் திரும்பிப்பார்த்து முறைத்துவிட்டுச் சென்றுகொண்டிருக்க, அவனோ “பூமி… பூமி பேபி… பூமி டியர்…” என்று அழைத்தபடி சென்றிருந்தான். திரும்பிப்பார்த்தவள் குரலை ‘க்கும்… க்கும்…’ என்று சரிசெய்துகொள்ள, “பேசு கண்ணே… பேசு…” என்றான் இவன். இம்முறை குதிரை கழுத்தைத் திருப்பி, “சாப்பாடு ரெடி, எழுந்திரிங்க…” என்றதும் பதறி குதிரையிலிருந்து கீழே விழுந்தவன் கண் விழித்துப் பார்க்க, கட்டிலின் மேல் கிடந்தான். “ச்ச கனவா?” என்றுவிட்டு முகத்தினை அழுந்தத்துடைத்துவிட்டு தலை நிமிர்ந்து பார்க்க, எதிரே பூமிகா நின்றிருந்தாள். 
“நிம்மதியா தூங்கினதும் இல்லாம, பகல்லயே கனவா?” என்றவளுக்கு மீண்டும் கண்களில் நீர் கோர்தது நிற்க, கீழ் உதட்டினை கடித்து தன்னை அரும்பாடு பட்டு கட்டுப்படுத்திக்கொண்டாள். 
“இல்ல… அது…”
“சாப்பாடு ரெடி” என்றவள், அடுத்த நொடியே அறையைவிட்டு ஓடிச்சென்றாள்.
‘பேசுனது இவ தானா?! குதிரை தான் பேசுச்சோனு பயந்தே போயிட்டேன்...’ என்று முணுமுணுத்துக்கொண்டவன், அடுக்களைக்குச் சென்றான்.

“அம்மா, இன்னைக்கு என்ன சமையல்?”
“ஏன் மெனு சொன்னாதான் சாப்பிடுவியா?”
“இல்ல, எது கொடுத்தாலும் சாப்பிடுவேன். இதுதான் வேணும், அதுதான் வேணும்னு நான் என்னைக்கு கேட்டிருக்கேன்?!”
பூமிகா தான் கூறியதைக் கேட்டு மெய் சிலிர்த்தாளா இல்லையா என்று அவன் நோக்க, அவளோ அமைதியாய் நின்றிருந்தாள்.
“அப்போ, இன்னைக்கு மட்டும் எதுக்கு கேட்குற?”
“அது…” 
அவன் மேற்கொண்டு பேசுவதற்குள் வரவேற்பறையிலிருந்த ராமநாதன் தன்னை அழைக்கும் குரல் கேட்டு சீதாலட்சுமி, “பூமிகா நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க. மாமா கொஞ்சம் லேட்டாதான் சாப்பிடுவாங்க. நான் அவங்களோட சாப்பிட்டுக்கறேன்…” என்றுவிட்டு செல்ல, பூமிகா உணவு மேஜையின் மீது சமைத்தவற்றை எடுத்துவைக்கத் தொடங்கினாள்.
“பயங்கர பசி…” என்றபடியே வந்து அமர்ந்தவன் அவளை நோக்க, அவளோ காரியமே கண்ணாய், பரிமாறும் வேலையை மட்டும் செய்திருந்தாள். 
“நீயும் சாப்பிடு…”
“வேண்டாம்…”
“பரவால்ல சாப்பிடு…”
“வேண்டாம்… அழுதுடுவேன்…”
“ஏன், நீ சமைச்சியா? சாப்பிட சொன்னா அழுதுடுவேன்ங்கற?”
அவன் ஹாஸ்யம் கூறியதுபோல் சிரித்து, அவளையும் சிரிக்க வைக்க முயல, அவளோ அடுக்களைக்குள் ஓடிச்சென்று நின்றுகொண்டாள்.

பெருமூச்சு விட்டபடி எழுந்து கையலம்பியவன், அடுக்களைக்குள் அவளைத் தேடிச் சென்றான்.
“பூமிகா, இப்போ என்ன ஆச்சுன்னு கோவிச்சுக்கற?”
“எனக்கு கோவமில்ல… வருத்தம்…”
தலை நிமிர்ந்து அவனை நோக்காது பதிலளித்தாள்.
“ம்ம்… புரியுது… நானும் சராசரி மனுஷன் தானே. கல்யாணம்னு சொன்னதும் எனக்கும் சந்தோஷமாத்தானே இருக்கும்?! அந்த சந்தோஷத்துல தான் கல்யாண பத்திரிக்கையை ஃப்ரேம் போட்டு வச்சேன். இது தப்பா?”
“ப்ரேம் போட்டு வச்சது தப்பில்லை, அதை தூக்கிப்போடாம வச்சது தான் தப்பு.” 
“நேத்து மதியம் வீட்டுக்கு வந்ததும் எல்லாரும் மாறிமாறி என்னை திட்டித்தீர்த்துட்டாங்க. கடுப்புல ஃப்ரேமை திருப்பி வச்சேன். நீ கால் பண்ணதும் மண்டபத்துக்கு ஓடி வந்துட்டேன். இதெல்லாம் என் கவனத்துலயே இல்ல…”
“நான் உங்க கவனத்துக்கு கொண்டுவந்த பிறகும் அதை தூக்கிப்போடாம பத்திரமா எடுத்து உள்ளே வச்சீங்களே, அதுக்கு என்ன அர்த்தம்?”
“போட்டோ ஃப்ரேம் விலை ஆயிரத்து முன்னூறு ரூபாய்’னு அர்த்தம்.”
அவள் அவனை விளங்காத பார்வை பார்க்க,
“இங்க பாரு பூமிகா, நேத்து சொன்ன தான். நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு, இனி நம்ம எதிர்காலத்தை பத்தி மட்டும் யோசிப்போம். புரிஞ்சுதா? இப்போ சாப்பிட வா…” என்று அவன் அழைக்க, ‘சரி’ என்று தலையாட்டியவள், தனக்கான தட்டினை எடுத்துக்கொண்டு மேஜையை நோக்கிச் சென்றாள். ‘மூச்சுக்கு முன்னூறு தடவ ஹீரோ ஹீரோன்னு சொல்லுவா, இப்ப ஒன்னும் சொல்லலையே?!’ என்று சிந்தனையாய் அவனும் சென்று அமர்ந்தான்.
மதியம் முதல் அமைதி காத்தவளிடம் மேலும் மேலும் அதைப்பற்றி பேசாமல் அவளது கவனத்தை மாற்ற வெளியே அழைத்துச்செல்ல எண்ணியவன், அருகிலிருந்த தனது இஷ்டதெய்வமான விநாயகரின் கோவிலுக்கு அழைத்துச்சென்றான். அமைதியாய் உடன் இருந்தவள், ஏதோ ஆழ்ந்த யோசனையால் களவாடப்பட்டிருந்தாள். 

பொது இடத்தில் அல்லாது, வீட்டிற்குச் சென்று, அவளோடு இதைப்பற்றி பேசி, அவளை சமாதானம் செய்யும் முடிவோடு இருவரும் வீடு திரும்ப, மாலை முழுதும் புதுமணத் தம்பதியரை சந்திக்க விருந்தினர் பலர் வந்தவண்ணம் இருந்தனர். அயர்ந்துகொண்டவன், பொறுமையை கையாள முடிவெடுத்தான்.

இரவு உணவு முடித்து தனது அறையில் சஞ்சய் காத்திருக்க, வெகு நேரம் கழித்து பூமிகா வந்தாள். அவளது ஒதுக்கம் ஒருவித வருத்தத்தை அவனுக்குக் கொடுத்தாலும், அவளது மனத்தாங்கலும் அவனுக்குப் புரியாமலில்லை. 
மேஜையின் கீழிருந்த இழுப்பறையிலிருந்து ஃப்ரேம் செய்து வைக்கப்பட்டிருந்த கல்யாண பத்திரிக்கையை கையில் எடுத்தவள், அவன் எதிரே சென்று நின்றாள்.
“மாம்ஸ், நான் ரொம்ப யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்.”
அவள் குரலில் இருந்த உறுதி அவனுக்கு அச்சத்தை ஊட்ட, சற்றே நடுக்கத்துடன் “என்ன?” என்றான்.
“நீங்க அக்காவ விரும்பியிருக்கலாம். கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழணும்னு கனவு கண்டிருக்கலாம். தப்பில்லை. யாராயிருந்தாலும் அப்படிப்பட்ட எண்ணத்தோடயும், மனநிலையோடயும் தான் இருந்திருப்பாங்க. நீங்க எதிர்பாராவிதமா, உங்களுக்கு என்னோட கல்யாணம் நடந்திடுச்சு. இந்தக் கல்யாணம் நடந்ததுக்கு முழு பொறுப்பும் நான்தான். உங்க மனச மாத்தி உங்களுக்கு என்மேல விருப்பம் வர மாதிரி செய்யவேண்டியது என் கடமை. தாலி கட்டிட்டதால உங்களுக்கு உடனே என் மேல காதல் வரணும்னு எதிர்பார்க்கறது என்னோட முட்டாள்தனம்னு புரிஞ்சுக்கிட்டேன். இந்த போட்டோ ஃப்ரேம என் கப்போர்ட்ல வைக்கப்போறேன். கொஞ்சம் கொஞ்சமா உங்க மனசுல இடம் பிடிக்கப்போறேன். உங்க மனசு முழுக்க நான் நிறைஞ்சதும் நீங்களே இந்த போட்டோ ப்ரேமை மாத்திடுவீங்க’னு நம்பறேன். எனக்கு நம்பிக்கை இருக்கு!!” என்றவள், அந்த போட்டோ ப்ரேமை அலமாரியில் வைத்துவிட்டு “குட் நைட் மாம்ஸ்” என்றுவிட்டு கட்டிலில் ஒருபுறம் படுத்துக்கொண்டாள். 

‘அட லூசே, நீ லேசா சிரிச்சு, ‘ஹீரோ மாம்ஸ்’னு சொல்லியிருந்தாலே இந்நேரம் தொபுக்கடீர்னு உன் கால்ல விழுந்திருப்பேன். என்னென்னமோ வசனமெல்லாம் பேசற?! கேட்க நல்லாத்தான் இருக்கு. நீ என்னதான் செய்ய இருக்கனு பார்க்கறேன்… உன் மாம்ஸ் வெயிட்டிங் பேபி’ என்று தனக்குள் எண்ணியபடி அவளை நினைத்து சிரித்துக்கொண்டவன், விடிவிளக்கு ஒளியில் உறங்குபவளை ரசித்தபடி உறங்கிப்போனான். 


அட்றா… அட்றா… அட்றா… இனி சின்ராச கைல பிடிக்க முடியாது…

No comments:

Post a Comment