பகுதி- 3
"என்ன மாம்ஸ் இன்னும் தூங்கலயா?"
"இல்ல… தூங்கணும்…"
"விடிஞ்சா கல்யாணம்… எப்படி தூக்கம் வரும்?"
பரிகாசமாய் அவள் கேட்டுவிட்டு சிரிக்க, அவளோடு சேர்ந்து ஒரு கோரஸ் சிரிப்பொலியும் கேட்க,
"நீங்களும் ஏன் இன்னும் தூங்காம இருக்கீங்க? விடிஞ்சா உங்களுக்கும் கல்யாணமா?" என்றான். அவளைப் பழிகுப் பழி வாங்கிவிட்டு சந்தோஷத்தில் அவன் உரக்கச் சிரிக்க,
"வொய் நாட் மாம்ஸ்? உங்களை மாதிரியே ஒரு ஸ்பேர் (spare) மாப்பிள்ளை இருந்தா சொல்லுங்க, ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா முடிச்சுடுவோம்" என்றவள் மீண்டும் கோரசுடன் சிரிக்க, அன்று மாலை அவன் ஏந்தி வந்த வாளைக் காட்டிலும் மிக மோசமாக மொக்கைப்பட்டான்.
'இந்த பாடி சோடாவை அநியாயத்துக்கு இந்த லேடி தாதா கலாய்க்கறாளே…’ என்று வெளியே சத்தம் கேட்காத அளவிற்கு உள்ளுக்குள் குமுறியவன், அவளிடமிருந்து தப்பிக்கும் பொருட்டு, "எனக்கு தூக்கம் வருது…" என்று நழுவிக்கொள்ள முயல, "இருங்க மாம்ஸ் உங்ககிட்ட பேச இங்க ஒரு கியூவே நிக்குது" என்றவள் அருகிலிருந்த மற்றொரு உறவுக்காரப் பெண்ணிடம் கைப்பேசியைக் கொடுக்க, 'திரும்பவும் முதல்லேர்ந்தா?!' என்று கண்கள் வியர்த்துவிட்டான்.
"சஞ்சய் எழுந்து குளிச்சுட்டு வா… நேரம் ஆகுது… இன்னும் என்ன தூக்கம்?"
அண்ணன்மார்கள் உலுக்கியதில் மெல்ல கண்விழித்து எழுந்த மாப்பிள்ளை, உள்ளங்கைகளை உரசி வெப்பம் கூட்டி, கண்கள் மூடி இமை மீது வைத்து ஒத்தடம் கொடுத்தான்.
"என்ன மாப்ள, ராத்திரியெல்லாம் தூங்காம கண்ணை திறந்துக்கிட்டே கனவா? இப்படி சிவந்து போயிருக்கு?"
"அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணே…" என்றவன், எழுந்து குளித்து முடித்து முகூர்த்தத்திற்கு தயாரானான். வெண்பட்டு சட்டை வேஷ்டியில் கண்ணாடி முன் யோசனையாய் நின்றிருந்தவனை கலைத்தது, அவனது கைப்பேசி அழைப்பு.
கைப்பேசி அழைப்பினை ஏற்று சற்று தனிமையில் உரையாடிவிட்டு தனது அறைக்குத் திரும்பியவனைக் கண்டு,
“எங்கப்பா போயிட்ட? உன்னைக் காணோம்னு நாங்க பதறிட்டோம்…” என்று தந்தை ராமநாதன் பதற, தாய் சீதாலட்சுமி ஏறக்குறைய அழும் நிலையில் தவித்திருந்தாள்.
“எங்கெல்லாம் உன்னை தேடுறது? ஒழுங்கா உன் ரூம்ல இருக்க மாட்ட?”
அம்மாவும் தன் பங்கிற்கு கோபித்துக்கொண்டாள்.
“தொலைஞ்சுபோக நான் என்ன சின்ன புள்ளையா? ஒரு முக்கியமான ஆபிஸ் கால் வந்தது. அதான் மண்டபத்துக்கு கீழ இருக்கற கார் பார்க்ல பேசிட்டு இருந்தேன்…”
இவர்களின் தேடுதல் ஆரவாரத்தைக் கண்டு மாப்பிள்ளை சிடுசிடுத்தான்.
“என்ன சஞ்சய், முகூர்த்தத்துக்கு நேரம் ஆகுது, இப்போ போய் ஆபிஸ், வேலைனு சொல்லிக்கிட்டு இருக்க?” என்று பெரியப்பாவும் தன் பங்கிற்கு வருத்தம் தெரிவிக்க,
“ரொம்ப முக்கியமான போன் கால் பெரியப்பா…” என்று அவன் விளக்கம் கொடுக்க முயற்சிக்க, அதற்குள்ளாக நல்ல நேரம் தொடங்கிவிட்டிருந்ததால், மாப்பிள்ளை உடனே மணமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
முன்தினம் அவனிடம் இருந்த பரவசங்கள் இன்று முற்றிலுமாய் வற்றியிருந்தன. ஏதோ ஒன்று அவனை அலைக்கழித்துக்கொண்டிருந்தது. அவனை சிரிக்கச் சொல்லி அண்ணன்மார்கள் கூறியும், மென்னகை சிந்த மறுத்தான். மணப்பெண் தீபிகா அழகிய பதுமையென அவனருகே வந்தமர, அவனோ தனது சிந்தனையில் தொலைந்திருந்தான். அவளைக் கண்டிடும் எண்ணம் அவனுள் தொலைந்திருந்தது. அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து, அவனிடம் கல்யாண குருக்கள் மாங்கல்யம் வைத்திருந்த மங்களத் தட்டினை நீட்ட, ஒருவித மிரட்சியுடனும், வெறுப்புடனும் அதனை நோக்கினான்.
“திருமாங்கல்யத்தை எடுங்கோ” என்று குருக்கள் கூற, தாலியைக் கையிலெடுத்தவன் தலை நிமிர்ந்து அவள் முகம் காண்டான். ஆயிரம் கண்கள் நோக்கிக்கொண்டிருந்த அந்தத் தருணத்தில், கையிலெடுத்த தாலியை தட்டில் வைத்துவிட்டு மணவறையில் எழுந்து நின்றவன்,
"எனக்கு பத்து லட்சம் ரொக்கம் எடுத்து வச்சா தான் நான் தாலி கட்டுவேன்" என்றான், திடமாக.
பெண் வீட்டார் மட்டுமல்ல, மாப்பிள்ளை வீட்டாரும், அவனது பெற்றோரும் கூட அதிர்ந்தனர்.
“சஞ்சய் என்னடா ஆச்சு உனக்கு? நீயா இப்படியெல்லாம் பேசறது?”
ராமநாதன் தனது மகன் பேசியவற்றையும், நின்றிருந்த தோரணையையையும் கண்டு மனம் குழம்பித் துவண்டார்.
“டேய் சஞ்சய், நீ ஒரு நாளும் இப்படி பேசினதில்லையே? இப்போ எதுக்கு காசு பணம்னு ஏதேதோ பேசற?”
கண்கள் கலங்கியிருந்தாள், அன்னை சீதாலட்சுமி.
“நீங்க பேசவேண்டியதெல்லாம் பேசியிருந்தா நான் ஏன் இப்போ இதைப் பத்தி பேசப்போறேன்?”
தாயிடம் சீறினான்.
“மாப்பிள்ளை, எதுவா இருந்தாலும் கல்யாணம் முடிஞ்சதும் பேசிக்கலாம். நேரம் ஆகுது… நீங்க தாலி காட்டுங்க…”
தீபிகாவின் தந்தை அவனிடம் மன்றாடினார்.
“கல்யாணம் முடிஞ்சுட்டா எப்படி பேச முடியும்? பொண்ண கட்டிக்கொடுத்தாச்சுனு கைய கழுவிட்டு போயிடுவீங்க. அதுக்குத்தான மூணே வாரத்துல அவசர அவசரமா கல்யாண ஏற்பாடு பண்ணீங்க?”
“அப்படியெல்லாம் இல்லை மாப்பிளை, தீபிகா ஜாதகப்படி அவளுக்கு இந்த மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணனும்னு ஜோசியர் சொல்லிட்டாரு. இதை நான் ஏற்கனவே உங்க அம்மா, அப்பா கிட்ட கூட சொல்லியிருந்தேனே?!”
“காசு கொடுத்தா ஜாதகத்தையே மாத்தி எழுதிக்கொடுக்கற ஃப்ராடு ஜோசியக்காரனுங்க நிறைய பேரு இருக்கானுங்க. கேவலம் ஒரு பொய் சொல்லமாட்டானுங்களா என்ன?”
“இங்க பாருங்க தம்பி, நீங்க கேட்கறத என்ன எதுன்னு கல்யாணம் முடிஞ்சதும் பேசிக்கலாம். பொண்ண பெத்தவர் நிறைவாவே உங்களுக்கு செய்வாரு. நீங்க முதல்ல தாலிய காட்டுங்க…”
மாப்பிள்ளையுடன் சமாதானம் பேச முயற்சித்தார் பெண் வீட்டார் ஒருவர்.
“பேச்சு வார்த்தைக்கெல்லாம் இங்க இடம் இல்லை.”
கராராகக் கூறியவன், கழுத்தில் அணிந்திருந்த மணமாலையைக் கழற்ற எத்தனித்தான். அவனது கையை இறுகப்பற்றி தடுத்து நிறுத்திய அவனது தாயோ, “சஞ்சய், மாலையைக் கழட்டாத, உன் கால்ல வேணும்னா விழறேன்… ஒரு பொண்ணோட சாபம் உன்னை வாழவிடாது… மேடை வரைக்கும் வந்துட்டு அந்தப் பொண்ண இப்படி கலங்கடிக்குறியே இது மகாபாவம் டா… நான் சொன்னா கேளு… நமக்கு எதுக்குடா காசு பணமெல்லாம்? போதுங்கற அளவுக்கு கடவுள் நமக்குக் கொடுத்திருக்காரு. வேண்டாம் சஞ்சய். இந்த அம்மா சொல்றபடி கேளு. முதல்ல தாலிய கட்டுடா… ப்ளீஸ் டா” என்று கதறியவள், தன்னால் முடிந்த மட்டும் அவனது எண்ணத்தை மாற்ற முயற்சித்தாள்.
“என் ஆபிஸ்ல வேலை செய்யற சாதாரண அக்கவுண்டண்டுக்கு அம்பது சவரன் நகை, சீர் செனத்தியோட தடபுடலா நேத்துதான் கல்யாணம் ஆச்சு. அதே ஆபிஸ்ல சேல்ஸ் ஹெட்’ஆ இருக்கற எனக்கு இது ஒரு ப்ரெஸ்டீஜ் இஷியூ. எனக்கு என்ன குறைச்சல்? வீட்டுக்கு ஒரே பையன். M.B.A. படிச்சிருக்கேன். சொந்த வீடு இருக்கு. நியாயமா நூறு பவுன் நகை போட்டு, ஒரு கார் வாங்கிக்கொடுத்து ஜாம்ஜாம்னு நடத்திருக்கணும். கல்யாணமாம் கல்யாணம்… கைய விடுமா” என்று வெறுப்பினையும், கோபத்தையும் உமிழ்ந்தவன், தனது தாயின் கைகளைத் தட்டி விட்டு மாலையைக் கழற்றி கீழே வீசினான்.
அவனது செய்கையைக் கண்டு மாப்பிள்ளை வீட்டார் வெட்கித் தலைகுனிய, பெண்வீட்டாரிடம் ஆரவாரம் அதிகமானது.
“இங்க பாருங்க தம்பி, வரதட்சணை வாங்கறது சட்டப்படி குற்றம்னு உங்களுக்குத் தெரியாதா?”; “இது வாழ்க்கை பிஸினெஸ் இல்ல..”; “இவ்வளவு காசு கொடுத்து உங்களுக்கு கட்டிக்கொடுக்கறதுக்கு பதிலா, அந்தப் பொண்ணு கல்யாணம் ஆகாமலே இருந்திடலாம்”; “படிச்சு என்னை பிரயோஜனம்? நாகரீகம் இல்லை…” என்று ஒவ்வொருவரும் அவனை சொல்லெனும் ஈட்டி கொண்டு தாக்க, அவனோ எதற்கும் அசரவில்லை.
“எல்லாரும் பேசிமுடிச்சுட்டீங்களா? நான் வரதட்சணை வேணும்னு கேட்டா தப்பு, ஆனா உங்க பொண்ணுக்கு மட்டும் சொத்து சுகத்தோட, படிச்சு நல்ல வேலைல இருக்கற மாப்பிள்ளை வேணும். அப்படித்தானே? குணம் தான் முக்கியம்னா, எவனாவது யோக்கியன தேடிப்பிடிச்சு காசு இல்லாதவனா இருந்தாலும் பரவால்லனு கட்டிக்கொடுக்க வேண்டியதுதானே?”
இதற்கு மேல் பொறுமை இழந்த பெண்ணின் தாய்மாமா, “இங்க பாருப்பா, எங்க பொண்ண எவனுக்கு வேணும்னாலும் கட்டிக்கொடுப்போம் ஆனா உனக்கு மட்டும் கட்டித்தரமாட்டோம். தாலி கட்டற நேரத்துல கலாட்டா பண்ணா கால்ல விழுந்துடுவாங்கன்னு நினைச்சு மிரட்டுறியா? ஒழுங்கு மரியாதையா இடத்தை காலி பண்ணு, இல்லை போலீஸ்ல சொல்லி முட்டிக்கு முட்டி தட்ட சொல்லிடுவேன்.”
“மச்சான், என் பொண்ணு நிலைமை என்ன ஆகறது? ஏன்யா இப்படியெல்லாம் பேசற?” என்று தீபுவின் தந்தை கண்கள் கலங்கி பதற, “இந்தாளுக்கு கட்டிக்கொடுக்கறதுக்கு பதிலா பொண்ண கிணத்துல பிடிச்சு தள்ளிடலாம்” என்றவர், கூட்டத்திலிருந்த ஒரு வாலிபனை மேடைக்கு வரும்படி சிமிஞை செய்ய, அவனோ பதட்டத்தோடு அங்கு வந்து நின்றான்.
சஞ்சய்யின் பெற்றோர் பெண்வீட்டாரிடம் மன்னிப்பு கோர, அவனோ கடுங்கோபத்தோடு அந்த வாலிபனை ஏளனமாய் பார்த்தபடி கீழே இறங்கி நின்றான்.
“அய்யா, அவசரப்படாதீங்க... நான் என் பிள்ளை கிட்ட பேசறேன்…” என்று ராமநாதன் மன்றாட, சஞ்சய்யோ, “அங்க என்ன கெஞ்சிக்கிட்டு இருக்கீங்க? இவர் பொண்ணு பெரிய உலக அழகி… வாங்க…” என்று பற்களைக் கடித்துக்கொண்டு தீபுவை நோக்க, அவளோ உப்பிடப்பட்ட தவிப்புகளைக் கண்ணீராய் சிந்திக்கொண்டிருந்தாள். வெடுக்கென முகத்தைத் திருப்பிக்கொண்டவன், வசை மொழிகளின் மத்தியில் சலனமின்றி நின்றிருந்தான்.
மேடையின் அருகிலே நின்றிருந்த வாலிபனை வரச்சொல்லி, அவன் கழுத்தில் மாலையிட்டு அமரச் செய்த தாய்மாமன், “சாமி தாலியைக் கொடுங்க” என்று கல்யாண குருக்களிடம் கூற, அடுத்த நிமிடம் தீபுவின் திருக்கழுத்தில் அந்த வாலிபன் திருமாங்கல்யம் அணிவித்தான்.
ஓ நோ… வடை போச்சே...
No comments:
Post a Comment